உயிர்ப்புக் காலம் 4ஆம் ஞாயிறு
I. திப 4:8-12 II. 1 யோவா 3:1-2 III. யோவா 10:11-18
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!
இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 118) ஹல்லேல் (புகழ்ச்சி) பாடல் வகையைச் சார்ந்தது. இங்கே பாடலாசிரியர், தன் வாழ்வின் எதார்த்தங்களைக் காண்கிறபோது, 'ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று' என அக்களிக்கின்றார். தன் வாழ்க்கையை நம்பிக்கைக் கண்கள் கொண்டு பார்க்கும் ஒருவரே இப்படிப் பாட முடியும்.
முதல் வாசகத்தில், நாம் பேதுரு மற்றும் யோவானின் விசாரணை நிகழ்வை வாசிக்கின்றோம். 'நாங்கள் செய்த நற்செயல்' என்று தாங்கள் மாற்றுத்திறனாளி ஒருவருக்குச் செய்த நலன் குறித்துப் பேசுகின்றார் பேதுரு. 'நற்செயல்' என்பது இயேசுவின் செயலைக் குறிப்பதாக திப 10:38இல் வாசிக்கின்றோம். இயேசுவின் பெயரால் இப்போது திருத்தூதர்கள் நற்செயல் செய்யத் தொடங்கியுள்ளனர். மேலும், நலம் பெறுவதற்கும் (மீட்பு பெறுவதற்கும்) இயேசுவின் பெயரைத் தவிர வேறு பெயர் இல்லை என்றும் அறிக்கையிடுகின்றனர். இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்திற்குப் பின்னர், அனைத்தையும் புதியனவாகப் பார்க்கத் தொடங்குகின்றனர் திருத்தூதர்கள்.
இரண்டாம் வாசகத்தில், 'நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள்' என்று கடவுளின் அன்பு பற்றித் தன் குழுமத்திற்கு நினைவூட்டுகின்றார் யோவான். மேலும், கடவுளுக்கு எதிராக இருக்கின்ற உலகம் அவரை அறிந்துகொள்ளவில்லை என்றும் சொல்வதன் வழியாக, அறிதல் வழியாகவே அன்பு செய்யவும், அன்பு செய்யப்படவும் முடியும் என்கிறார் யோவான்.
நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் 'நானே' வாக்கியங்களில் ஒன்றை வாசிக்கின்றோம். 'நல்ல ஆயன் நானே' என்று தன்னை முன்வைக்கின்றார் இயேசு. தன்னை நல்ல ஆயன் என்று மூன்று நிலைகளில் முன்னிறுத்துகின்றார் இயேசு:
(அ) தன் ஆடுகள் உயிர் பெறுவதற்காக ஆயன் தன் உயிரைக் கையளிக்கத் தயாராக இருக்கின்றார். உயிரைக் கையளித்தல் என்பது இயேசுவின் வாழ்வில் வெறும் வாக்குறுதியாக நில்லாமல், சிலுவையில் அரங்கேறும் மேலான செயலாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட அர்ப்பணம் 'கூலிக்கு மேய்ப்பவர்களிடம்' இருப்பதில்லை. ஏனெனில், அவர்களுக்கு ஆடுகளின்மேல் உரிமை இல்லை. ஆடுகளுக்கும் அவர்களுக்குமான உறவு அவர்களை மையமாக வைத்து அல்ல, மாறாக, ஆடுகளை மையமாக வைத்தே அங்கு நிகழ்கிறது. ஆனால், ஆயன்-ஆடுகள் உறவில், ஆடுகளும் ஆடுகளின் நலனுமே முதன்மை பெறுகின்றன.
(ஆ) கடவுளுக்கும் இயேசுவுக்கும் சீடர்களுக்கும் இருக்கின்ற இணைப்பின் அடிநாதமாக இருப்பது அறிதல். எபிரேய விவிலியத்தில், 'அறிதல்' என்றால் 'உறவு கொள்தல்' என்பது பொருள். தந்தைக்கும் இயேசுவுக்கும் இடையே இருக்கும் அறிதல் என்னும் வலைப்பின்னல் நீண்டுகொண்டே போகிறது. ஆக, இந்த வலைப்பின்னலில் அல்லது செடி-கொடி போன்ற இணைந்திருத்தலில் ஆடுகள் வாழ்வு பெறுகின்றன.
(இ) இயேசு தன் உயிர்ப்பு பற்றிப் பேசுகின்றார்: 'நான் உயிரைக் கொடுக்கிறேன். அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவே. கொடுக்கிறேன்'. இயேசுவின் வாழ்வின் இலக்காக இருந்தது அவருடைய உயிர்ப்பே. இந்த இடத்தில் இயேசு தன் உயிர்ப்பைப் பற்றிப் பேசுவதன் வழியாக, தான் இறப்பின்மேல் கொண்டிருக்கின்ற வெற்றியைப் பற்றிக் குறிப்பிடுவதோடல்லாமல், தன்னோடு இருக்கும் அனைவருக்கும் என்றும் வாழ்வு என்று உறுதியளிக்கின்றார்.
பல நேரங்களில், நாம் நல்லாயன் போல இருக்க விரும்புகின்றோம். இன்று சற்று மாற்றாக, நல்லாயன் கழுத்தில் கிடக்கும் ஆடு போல இருக்க முயற்சி செய்வோம். அவரின் கழுத்தில் படுத்திருக்கும் ஆடு, அனைத்தையும் ஆண்டவரின் கண் கொண்டே பார்க்கும். அவரின் பாதுகாப்பையும், உடனிருப்பையும், அவர் தரும் நலத்தையும் பெற்றுக்கொள்ளும்.
உயிர்ப்புக் காலம் 4ஆம் ஞாயிற்றை, 'நல்லாயன் ஞாயிறு' என்று சிறப்பிக்கும் நாம், இறையழைத்தலுக்காகவும் இன்று சிறப்பாக செபிக்கின்றோம். இறைவன் தன் இதயத்துக்கேற்ற நல்ல தலைவர்களைத் தேர்ந்துகொள்ளுமாறு அவரிடம் மன்றாடுவோம். மேலும், தேர்ந்துகொள்ளப்பட்ட தலைவர்கள் நல்லாயனின் தோள் தவழும் ஆடுகளாய் அவரோடு தங்களை இணைத்துக்கொள்ளவும் மன்றாடுவோம்.
அவரே ஆயன். அவராலேயே இது நிகழ்ந்துள்ளது. 'நம் கண்களுக்கு வியப்பாயிற்று!'
“ எல்லாமே ஆண்டவரால் நிகழ்ந்துள்ளது; இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று” என்ற பதிலுரைப்பாடலின் வரிகள் கொண்டு ஆரம்பிக்கும் ஒரு மறையுரை! நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்ட வரிகள் நம்மை நிமிர்ந்து அமரச்செய்கின்றன..
ReplyDeleteஇயேசுவின் உயிர்ப்பு அனுபவத்திற்குப் பின்னர் அனைத்தையும் புதிதாகப் பார்க்கின்றனர் திருத்தூதர்கள் எனும் முதல் வாசகம்...
தன்னை சரியாக அறிந்து கொள்ளாத மக்களையும் கூட நிறைவாய் அன்பு செய்கிறார் இறைவன் என்று “ தந்தையின் அன்பு” பற்றிச் சொல்லும் யோவானின் வார்த்தைகளைக்கொண்ட இரண்டாம் வாசகம்....”நல்ல ஆயன் நானே!” என்ற புரிதலை முன்வைக்கும் நற்செய்தி வாசகம்....
ஆயன்- ஆடுகள் உறவில் ஆடுகளின் நலனே முதன்மை பெறுகின்றன எனும் வார்த்தைகள் “ஆடுகள் பற்றிய ஆயனின் அறிதலே இதை சாத்தியமாக்குகின்றன” என்ற புரிதலைத் தருகின்றன.
ஆயனாய் இருப்பதை விட அவரின் கழுத்தைச்சுற்றிக் கௌவி இருக்கும் ஆடாக இருக்க அழைப்பு விடுக்கிறார் தந்தை.அனைத்தையும் அவரின் கண்கொண்டு பார்க்கவும்,அவர் தரும் பாதுகாப்பு, உடனிருப்பு மற்றும் அவர் தரும் நலத்தையும் பெற்றுக் கொள்ள அவர் கழுத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதே நலம் என்று புரிகிறது.
நல்லாயனை நம் தலைவர்களோடு முடிச்சுப்போடுதல் நலமே அவர்களுக்கு அந்த தகுதி இருப்பின்.இருப்பினும் “நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள் நல்லாயனின் தோள்தவழும் ஆடுகளாய் அவரோடு தங்களை இணைத்துக்கொள்ள மன்றாடுவோம்” எனும் தந்தையின் வரிகள் அருமை! இன்றைய நாளின் தேவையும் கூட.
“ என் ஆயனாய் இறைவன் இருக்கின்ற போது என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?” இவ்வரிகள் நமக்கு ஆயனின் அருகாமையையும்...பாதுகாப்பையும் உணர்த்தட்டும்! அழகானதொரு ......அர்த்தமுள்ள மறையுரைக்காகத் தந்தைக்கு நன்றியும்.... ஞாயிறு வாழ்த்துக்களும்!!!