Thursday, April 29, 2021

உங்களுள் யாராவது

இன்றைய (29 ஏப்ரல் 2021) முதல் வாசகம் (திப 13:13-25)

உங்களுள் யாராவது

நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்கள் நடித்த 'உலகம் சிரிக்கிறது' என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. 'சீட்டு ஆடாதீர்கள்' என்று புத்தகம் போட்டு விற்பனை செய்த ஒருவனை ஊரார் சேர்ந்து அடிப்பர். 'ஏன் அடிக்கிறீர்கள்?' என்று நடிகவேள் கேட்க, 'சூதாடாதீர்கள் என்று புத்தகம் விற்கும் இவனே சூதாடுகிறான். அதான் அடிக்கிறோம்!' என்பார்கள். அவர் சொல்வார், 'நல்ல விஷயத்தை சொல்றதுக்கே இப்போ உலகத்துல நாலஞ்சு பேருதான் இருக்காங்க. அவங்களையும் அடிச்சு கொன்னுடுங்கடா! ஒருத்தன் அறிவுரை சொன்னா அவன் யாரு என்னான்னு பார்க்காத. அவன் சொல்றது உனக்குப் புடிச்சிருந்தா எடுத்துக்கோ. அல்லது விட்டுரு. சூதாட்டத்தில் தான் ஏமாறுவதுபோல யாரும் ஏமாறக்கூடாதுனு அவன் அறிவுரை சொல்றானே அதை எடுத்துக்கோ. அவன் விளையாடுறானா இல்லையானு பாக்காத. நீ அவனை மதிக்கிற என்றால் அவனுடைய புத்தகத்தை வாங்கி அவனை ஊக்குவி!'

இப்படிச் சொல்லிவிட்டு வழிநடப்பார்.

நிற்க.

இன்றைய முதல் வாசகத்தில் மிக அழகானதொரு நிகழ்வு நடக்கிறது. பவுல் தன் முதல் தூதுரைப் பயணத்தைத் தொடங்குகிறார். பவுலும், பர்னபாவும், அவரோடு இருந்தவர்களும் பெருகை நகர் வந்து, அங்கிருந்து பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியா வருகின்றனர். ஓய்வுநாளன்று தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு 'அமர்ந்திருக்கிறார்கள்.'

இங்கே ஒரு விடயம்.

'நாங்கதான் நற்செய்தி அறிவிப்பாளர்கள். எங்களுக்கு எல்லாம் தெரியும். நாங்க கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட திருத்தூதர்கள்' என்று சொல்லிக்கொண்டு எல்லாருக்கும் முன்னால் போய் நிற்கவில்லை. மாறாக, கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருக்கிறார்கள்.

'கூட்டத்தோடு கூட்டமாக அமர' நிறைய தாழ்ச்சியும் எளிமையும் அவசியம்.

'நல்லவனாய் இருப்பதன் கஷ்டம்' (ஆங்கிலத்தில்) என்ற நூலில் ஆசிரியர் குருசரன் தாஸ் ஒரு நிகழ்வைப் பதிவு செய்கிறார். அவர் மருத்துவமனை ஒன்றிற்கு உடல் பரிசோதனைக்குச் செல்கிறார். 'உங்கள் பெயர் என்ன?' என்று அங்கிருந்த பெண் கேட்க, இன்றைய 'டைம்ஸ் ஆஃப் இண்டியா - பக்கம் 14ஐ பார்' என்கிறார் இவர். அந்தப் பெண் பக்கத்தை எடுத்துப் பார்த்துவிட்டு, இவர் எழுதிய கட்டுரையின் கீழ் இருந்த பெயரை நோட்டில் பதிவு செய்துவிட்டு, சின்னப் புன்முறுவலோடு, 'அங்கே போய் உட்காருங்க! உங்க நம்பர் வரும்போது கூப்பிடுறேன்!' என்றார் பெண். 

'என் வாழ்வில் இனி இவளை நான் பார்க்க மாட்டேன் என்று தெரிந்தும், இவளிடம் நான் யார் என்று காட்டவும், இவளின் அப்ரூவலைப் பெறவும் என்னைத் தூண்டியது எது?' என்று அவரே கேட்டுவிட்டு, நம் எல்லாரிடமும், 'நான் ஒரு முக்கியமானவன்-ள்' என்ற உணர்வு இருக்கிறது. இந்த உணர்வுதான், 'நம்மை எல்லாரும் பார்க்க வேண்டும்' என்று எண்ணத் தூண்டுகிறது என்கிறார்.

ஆனால், பவுலிடம் இப்படி ஒரு உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக அமர்கின்றார். 

கூட்டத்தில் நாம் பேசாமல் அமர்ந்தாலே வாழ்வில் பாதிப் பிரச்சினை முடிந்துவிடும் என நினைக்கிறேன்.

தொடர்ந்து, அமர்ந்திருந்த திருத்தூதர்களிடம் ஆளனுப்புகின்ற தொழுகைக்கூடத் தலைவன், 'சகோதரரே, உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்!' எனக் கேட்கிறார்.

இன்று யாராவது என்னிடம் ஆளனுப்பி, 'ஏதாவது அறிவுரை கூற விரும்பினால் கூறலாம்' என்று சொன்னால், நான் என்ன சொல்வேன்? நான் தயாராக இருக்கிறேனா? வாழ்வில் நாம் கற்கும் ஒவ்வொரு பாடத்தையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம். அது சிறிய பஸ் பயணத்திலிருந்து பெரிய இன்வெஸ்ட்மென்ட் முடிவாகக் கூட இருக்கலாம். இன்னொன்று, பிறர் கேட்காமல் நாம் எந்த அறிவுரையும் கூறக் கூடாது. அது எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும்!

என்னுடைய நண்பர் சில நாள்களுக்கு முன், 'உடல் வலி. சளி. தும்மல்' என்று வாட்ஸ்ஆப்பில் ஸ்டேடஸ் போட்டார். உடனே நிறைய அறிவுரைகள் அவருக்கு வந்து சேர்ந்தன. 'இதைக் குடியுங்கள். அதைச் செய்யுங்கள்.' மனித மூளை, குறிப்பாக ஆண்களின் மூளை, உடனே தீர்வைத் தேடுகிறது. கொஞ்சம் பொறுத்தால் எல்லாம் சரியாகிவிடும். இல்லையா?

இறுதியாக, பவுல் உடனடியாக தனக்கு வந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார். எப்போதும் தயார்நிலையில் இருக்கிற ஒருவரே வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும், மிக அழகான உரையையும் ஆற்றுகிறார் பவுல். பவுலின் தயார்நிலையும் அறிவும் நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எபிரேயம் பேசுகின்ற ஒருவர் கிரேக்க மொழியில், புதிய மக்கள் நடுவில், புதிய கருத்து ஒன்றைப் பேசுவதற்கு நிறைய துணிச்சல் தேவைதானே!

1 comment:

  1. உண்மைதான்! கூட்டத்தோடு கூட்டமாக அமர நிறைய தாழ்ச்சியும் எளிமையும் வேண்டும் தான். இது ஒருவருக்கு இல்லாதபோது அவர் எத்தனை சிறுமைக்கு ஆளாகிறார் என்பது ஆங்கில நூலாசிரியர் “ சரண் குருதாஸ்” வாழ்க்கைக் குறிப்பிலிருதந்து கற்றுக்கொள்ள முடிகிறது..

    தனக்கு வந்த வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளும் ஒருவரும் போற்றலுக்குறியவர்தான்..... பவுல் போல.எப்பொழுதுமே தயார்நிலையில் இருந்த இவர்.... எபிரேயத்தைப் பேசும் மொழியாக வைத்திருந்த இவர் கிரேக்கம் பேசும் மக்கள் மத்தியில் புதிய கருத்தைப் பேசத் துணிச்சல் தேவை தான். இந்த இடத்தில் பவுல் எந்த நேரத்திலும்...எதையும் செய்யக்கூடிய.....பேசக்கூடிய “நம் தந்தையை” நினைவூட்டுகிறார். என்னளவில் அவர் “இக்காலப் பவுல்” என்றால் மிகையில்லை.இறைவன் இவரை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete