Saturday, April 10, 2021

நம்பிக்கையின் கனிகள்

பாஸ்கா காலம் 2ஆம் ஞாயிறு

I. திருத்தூதர் பணிகள் 4:32-35 II. 1 யோவான் 5:1-6 III. யோவான் 20:19-31

நம்பிக்கையின் கனிகள்

ஈஸ்டர் பெருவிழா அன்று நாம் முட்டையை அடையாளமாகப் பரிசளிப்பதுண்டு. முட்டை அல்லது முயல் உயிர்ப்பின் அடையாளமாக உள்ளது. முயல் என்பது வளமை அல்லது வசந்தத்தைக் குறிக்கிறது. முட்டை இரு நிலைகளில் உயிர்ப்பின் அடையாளமாகத் திகழ்கிறது: ஒன்று, ஓர் உயிர் முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வருவதுபோல இயேசு கல்லறையை உடைத்துக்கொண்டு வெளியே வருகின்றார். இரண்டு, திருத்தூதர்கள் பூட்டிய கதவுகள் என்னும் முட்டையிலிருந்து வெளியே வருகின்றனர். முதல் செயலை இயேசு செய்கின்றார். இரண்டாம் செயலையும் இயேசுவே செய்கின்றார். ஒரு தாய்க்கோழி தன் முட்டைகளைச் சில நேரங்களில் மெதுவாகக் கொத்தி தன் குஞ்சுகள் முட்டைகளிலிருந்து வெளியேற உதவி செய்வது போல, இயேசுவும் உதவி செய்கின்றார். இன்றைய ஞாயிறு, 'இறை இரக்கத்தின் ஞாயிறு' என்றும் அழைக்கப்படுகின்றது. ஆண்டவராகிய கடவுள், நம் முட்டைகளிலிருந்து நாம் வெளியே புத்துயிர் பெற்றவர்களாக வர உதவுகிறார். இதுவே அவர் நம்மேல் காட்டும் இரக்கம். முட்டைக்குள்ளே இருப்பது சுகம்தான். ஆனால், காலப்போக்கில் அதுவே ஆபத்தாகிவிடும். முட்டையை விட்டு வெளியே வருவது துன்பம்தான். ஆனால், அந்தத் துன்பம்தான் வாழ்வைச் சாத்தியமாக்குகிறது. 

இன்றைய மூன்று வாசகங்களிலும் நம்பிக்கை என்ற வார்த்தை முக்கியமான வார்த்தையாக இருக்கிறது. முதல் வாசகத்தில், 'நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் உள்ளனர்.' அனைத்தையும் பொதுமைப்படுத்தும் வாழ்க்கை முறையைக் கொண்டு கிறிஸ்துவின் உயிர்ப்புக்குச் சான்று பகர்கின்றனர். இரண்டாம் வாசகத்தில், 'உலகை வெல்வது நம்பிக்கையே' எனத் தன் குழுமத்துக்கு எழுதுகின்ற யோவான், 'இயேசுதான் மெசியா என ஏற்று அறிக்கையிடுவதே' நம்பிக்கை என வரையறுக்கிறார். மேலும், நம்பிக்கை கொண்டவர்கள் அன்புக் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் வழியாக தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்த அல்லது அறிக்கையிட வேண்டும் என அறிவுறுத்துகின்றார் யோவான். நற்செய்தி வாசகத்தில், இரு நிகழ்வுகள் உள்ளன. முதல் நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு நாளன்றும், இரண்டாம் நிகழ்வு எட்டாம் நாளன்றும் நடக்கிறது. முதல் நிகழ்வில் உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தாலும் திருத்தூதர்கள் தங்கள் பயத்திலிருந்து வெளியேறவில்லை. முன்பை விட இரண்டாம் முறை இன்னும் அதிகக் கவனத்துடன் கதவுகளைப் பூட்டுப் போட்டுப் பூட்டிக்கொள்கின்றனர். அங்கே மீண்டும் அவர்களுக்குத் தோன்றுகிற இயேசு, தோமாவுக்குத் தன்னையே நெருக்கமாகக் காட்ட முன்வர, அவரும், 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!' என இறைவனிடம் சரணாகதி அடைகின்றார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்களுக்கு மூன்று கொடைகளை வழங்குகின்றார்:

ஒன்று, அமைதி.

இயேசு தன் சீடர்களுக்குச் சொல்லும் முதல் வார்த்தையே 'அமைதி' என்பதுதான். எபிரேயத்தில் 'ஷலோம்' என்றால் 'கீறல் இல்லாத பானை' என்பது அடையாளப் பொருள். கீறல் இல்லாத பானை போல, எந்தவொரு ஆற்றல் வெளியேற்றமும் இல்லாமல் நம் உள்ளம் இருக்கும்போது அங்கே அமைதி குடிகொள்கிறது. அமைதியின் முக்கியமான எதிரி நம்பிக்கையின்மை. நம்பிக்கையின்மை குணமாக வேண்டுமெனில் நாம் இயேசுவின் காயங்களைத் தொட வேண்டும். தன் காயங்களை இயேசு தோமாவுக்குக் காட்டுகின்றார். அவற்றைத் தொட அனுமதிக்கின்றார். அமைதியின் முரண் என்னவென்றால், நம் வாழ்வு கீறலற்ற பானை போல இருக்க வேண்டும் என்பதற்காக, ஆண்டவராகிய இயேசு தன் உடலில் அனைத்துக் கீறல்களையும் ஏற்றுக்கொண்டார். 

இரண்டு, மகிழ்ச்சி.

'ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்' என எழுதுகின்றார் நற்செய்தியாளர். மகிழ்ச்சி மிகுதியால்கூட நம்மால் சில நேரங்களில் வாழ்வின் நிகழ்வுகளை நம்ப முடிவதில்லை. லாக்டவுனில் சிக்கிக்கொண்ட தன் கணவர் திடீரென்று தன் கண்முன் வந்து நின்றபோது மகிழ்ச்சி மிகுதியால், அதை நம்ப முடியாமல் மயங்கிப் போன மனைவி ஒருவரைப் பற்றிக் கடந்த வருடம் செய்தித்தாளில் நாம் வாசித்தோம். பயம், குற்றவுணர்வு, மற்றும் மன்னிக்க இயலாத நிலை நம் மகிழ்ச்சிக்குத் தடைகளாக இருக்கின்றன. ஆகையால்தான், 'மன்னிப்பு' பற்றி தன் சீடர்களுக்குச் சொல்கின்றார் இயேசு.

மூன்று, பணி.

'தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்' என்கிறார் இயேசு. இயேகவின் உயிர்ப்பு அனுபவம் பெற்ற ஒருவர் தன் ஒளியைத் தனக்குள்ளோ, தன் கூடைக்குள்ளோ, தன் கட்டிலுக்குக் கீழேயோ வைத்துக்கொள்ள இயலாது. அவர் அதை மற்றவர்களுக்குப் பயன்படுமாறு ஏற்றி வைத்தல் வேண்டும். அப்படி ஏற்றி வைக்கும் நிகழ்வாகவே இன்றைய முதல் வாசகம் அமைகின்றது. நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் நிறைவுமனம் கொண்டவர்களாக அனைத்தையும் அனைவரோடும் பகிர்ந்துகொள்கின்றனர். 

இயேசுவின் உயிர்ப்பு நம் நம்பிக்கையின் அடித்தளம்.

அந்த நம்பிக்கை, 'அமைதி,' 'மகிழ்ச்சி', மற்றும் 'பணி' எனக் கனிந்தால், இன்றைய திருப்பாடலின் ஆசிரியர் போல, 'என்றென்றும் உள்ளது ஆண்டவருடைய பேரன்பு' (காண். திபா 118) என்று நாமும் அறிக்கையிட முடியும்.

1 comment:

  1. அருமை! உயிர்த்த இயேசுவைக் கொஞ்சம் மறக்கடிக்கும் “ இரக்கத்தின் இயேசுவின் வாரிவழங்கும் வரங்களோடு” தொடங்கும் இன்றைய மறையுரை! உயிர்த்த இயேசுவும் இன்னும் நம்மைச் சுற்றியே இருக்கிறார் என்பதை ஞாபகமூட்டும் முயல் மற்றும் முட்டை. வளத்தைக் குறிக்கும் முயல்.... விடா முயற்சி மற்றும் நம்பிக்கையை நமக்குள் ஏற்றும் கோழி முட்டை. மறையுரை முழுக்க “ நம்பிக்கை” யின் இழைகள் இழைந்தோடுகின்றன. “ நம்பிக்கை”... அது உயிர்த்த இயேசு நம்மில் விதைத்தது...கடந்த ஞாயிறுக்கு மட்டுமல்ல...நம் வாழ்நாள் முழுவதற்கும்.அனைத்து வாசகங்களும் நம்பிக்கையை முன்வைக்கின்றன. உயிர்த்த இயேசுவில் இல்லாத சீடர்களின் நம்பிக்கையை, இயேசு மறுமுறை பூட்டிய வீட்டிற்குள் வரும்போது பார்க்க முடிகிறது. இயேசுவை “ ஆண்டவரே! என் தேவனே!” என இவ்வுலகத்திற்கு அறிக்கையிட்ட தோமாவையும் காண முடிகிறது.

    இன்றைய வாசகங்கள் தரும் கொடைகள்....” கீறல் இல்லா பானை “ என்று பொருள் கொள்ளும் “ அமைதி”, ஆண்டவரின் உடனிருப்பு தரும் மகிழ்ச்சி, ஒருவர் இயேசுவிடமிருந்து பெற்ற ஒளிக்கு ஈடான பணி வாழ்க்கையை தன் உடன் பயணிப்பவரோடு பகிர்த்து கொள்தல் போன்றவையே அக்கொடைகள்.

    இயேசுவின் உயிர்ப்பின் அடித்தளமான நம்பிக்கையில் நாம் திடம் கொண்டால் நம்மாலும் “ என்றென்றும் உள்ளது ஆண்டவருடைய பேரன்பு” என்று அறிக்கையிட முடியும்.

    “நம் உடலில் எந்தக் கீறலும் இருக்கக் கூடாது என்பதற்காக அனைத்துக் கீறல் களையும் அவர் ஏற்றார்”.... மற்றும் “ மகிழ்ச்சி மிகுதியானால் கூட நம்மால் வாழ்வின் நிகழ்வுகளை நம்ப முடிவதில்லை”..... போன்ற தந்தையின் வரிகள் நம் நம்பிக்கைக்கு இன்னும் உரமேற்றுகின்றன.

    தந்தைக்கும்,அனைவருக்கும் “ இரக்கத்தின் இயேசு” வின் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete