Thursday, April 8, 2021

இடுப்பில் ஆடை

இன்றைய (9 ஏப்ரல் 2021) நற்செய்தி (யோவா 21:1-14)

இடுப்பில் ஆடை

இயேசு தன்னுடைய உயிர்ப்புக்குப் பின் மூன்றாம் முறை தன் சீடர்களுக்குத் தோன்றும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

நிகழ்வின் தொடக்கத்தில், 'நான் மீன் பிடிக்கப் போகிறேன்' என்கிறார் சீமோன் பேதுரு. தான் மனிதர்களைப் பிடிக்க வேண்டும் என்பதை மறந்ததால் அப்படிச் செய்தாரா? இல்லை என்று நினைக்கிறேன். தான் தன்னுடைய தலைவரை மறுதலித்தது பேதுருவின் ஆன்மாவில் விழுந்த அம்மைத் தழும்பாய் குற்றவுணர்வாக உருத்திக்கொண்டே இருந்திருக்கலாம். ஆக, தான் மனிதரைப் பிடிக்கத் தகுதியற்றவன் என்ற நிலையிலோ, அல்லது தன்னுடைய சோகம் அல்லது தன்மேல் உள்ள கோபத்தை வடிகாலாக்க மீன்பிடிக்கச் சென்றிருக்கலாம்.

மீன் ஒன்றும் சிக்கவில்லை. கரையிலிருந்து ஒரு குரல்: படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள். வலை நிறைய மீன்கள் அகப்பட்டவுடன், யோவான் பேதுருவிடம், 'அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்' என அடையாளம் காட்டுகின்றார்.

இதற்குப் பின் பேதுரு செய்யும் செயல்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். மூன்று செயல்களைச் செய்கின்றார் பேதுரு.

அ. தம் ஆடையைக் களைந்திருந்த பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதிக்கின்றார்.

ஒன்று, பேதுரு நிர்வாணமாக இருந்திருக்க வேண்டும். அல்லது, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அணியும் மிகச் சிறிய அல்லது குறைவான ஆடையை அணிந்திருக்க வேண்டும்.

ஆ. படகு கரைக்குச் செல்லுமுன் தண்ணீரில் நீந்தி இயேசுவை நோக்கிச் செல்கின்றார்.

இ. 'மீன்கள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்' என்று இயேசு சொன்னவுடன், படகில் ஏறி, வலையிலிருந்து மீன்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு வருகின்றார்.

பேதுருவின் குற்றவுணர்வு இங்கே படிப்படியாக மறைகிறது. எப்படி?

முதலில், நாம் தவறு செய்யும்போது, நம்முடைய பார்வையில் மிகச் சிறியவர்களாக மாறிவிடுகிறோம். அல்லது நாம் ஆடையின்றி நிர்வாணமாக இருப்பது போல கூனிக் குறுகுகின்றோம். ஏனெனில், பாவம் செய்தவுடன் நம் முதற்பெற்றோர் பெற்ற முதல் உணர்வே நிர்வாண உணர்வு அல்லது வெட்க உணர்வுதான். இயேசுவின் உடனிருப்பு, பேதுருவை உடுத்துகிறது. பேதுரு ஆடையை அணிந்துகொள்கின்றார்.

இரண்டாவதாக, இயேசுவை நோக்கி நீந்திச் செல்கின்றார். இவருக்கும் தண்ணீருக்குமான இறுதி நெருக்கம் இது. 'மீன்பிடிக்கப் போக விரும்பிய' பேதுருவை இறுதியாக, கடல்நீரில் நீந்த வைக்கின்றார் இயேசு. இப்போது நீந்திய இவர் இனி நீந்தப் போவதில்லை. இவர் இனி மனிதர்களைப் பிடிப்பாரே அன்றி, மீன்களைப் பிடிக்க மாட்டார். ஆக, தானே தன்னுடைய பழைய தொழிலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்விதமாக இறுதியாக தண்ணீர் தன் உடலைத் தொட அனுமதிக்கின்றார். இதைக் கொஞ்சம் உருவகமாகச் சொன்னால், தன்னுடைய தவற்றை எண்ணி தான் வடித்த கண்ணீர்த்துளிகளை இத்தண்ணீர் சுட்டிக்காட்டுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

மூன்றாவதாக, படகைக் கரைக்கு இழுத்து மீன்களை இயேசுவிடம் கொண்டுவருகின்றார். படகு என்பது திருச்சபையையும், கரை என்பது இறையாட்சியின் நிறைவேறுதலையும் குறிக்கிறது. ஆக, திருச்சபை என்னும் படகை இறையாட்சி என்னும் கரையில் சேர்த்து, மீன்கள் என்னும் நம்பிக்கையாளர்களை இயேசுவிடம் கொண்டுவருவதே பேதுருவின் வேலை.

இந்த மூன்று படிகளில் பேதுருவின் குற்றவுணர்வு களையப்பட்டு, பொறுப்புணர்வு ஊட்டப்படுகிறது.

இந்த நற்செய்திப் பகுதி நமக்குச் சொல்வது என்ன?

நாமும் பல நேரங்களில் தவறு செய்கின்றோம். ஆனால், இயேசுவின் உடனிருப்பு நம் தவற்றை நமக்கு உணர்த்தி, நம் நிர்வாண உணர்வை அகற்றி நம்மை உடுத்துகிறது. இரண்டாவதாக, தண்ணீரில் நீந்துதல் நம் திருமுழுக்கையும், அல்லது ஒப்புரவு அருளடையாளத்தில் நாம் சிந்துகின்ற கண்ணீரையும் குறிக்கிறது. திருமுழுக்கின் தண்ணீர் மற்றும் ஒப்புரவின் கண்ணீர் வழியே நாம் தூய்மை அடைகிறோம். மூன்றாவதாக, அப்பமும் மீனும் நற்கருணையைக் குறிக்கிறது. இந்த நற்கருணை வழியாக நாம் இயேசுவோடு பந்தி அமர்கிறோம். நம் உறவு புதுப்பிக்கப்படுகிறது.
தொடர்ந்து, இயேசு, இங்கே, மனித ஏமாற்றத்தையும், பசியையும் அறிந்தவராக இருக்கின்றார். 'பிள்ளைகளே, மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா!' என்றும் 'உணவருந்த வாருங்கள்' என்றும் வாஞ்சையோடு பேசுகின்றார். சீடர்களைக் கடிந்துகொள்ளவில்லை. நம் உடல் ஏற்றதால் அவருக்கு மனித வாழ்வின் ஏமாற்றமும் பசியும் நன்றாகத் தெரியும்.

ஆக, அவரைக் கடவுளாக அந்நியப்படுத்துவதைவிட, மனிதராக அருகில் வைத்துக்கொள்தல் நலம்.

1 comment:

  1. தன் தலைவரை மறுதலித்த குற்ற உணர்வு, தன்னை அம்மைத் தழுவாய் உருத்திக்கொண்டிருக்க.... அவரின் குற்ற உணர்வகற்றி “ நீ மனிதர்களைப் பிடிக்கப்பிறந்தவன்” என்பதை பேதுருவுக்கு நினைவூட்டுகிறார் இயேசு.நாமும் குற்றம் புரிந்து அவரிடமிருந்து தள்ளி நிற்கையில் அவரது உடனிருப்பால் நம் திருமுழுக்கு,ஒப்புரவு மற்றும் நற்கருணையை நமக்கு நினைவு படுத்துகிறார்.

    பிள்ளைகளின் பசியுணர்ந்த ஒருதாயாக “ பிள்ளைகளே மீன் ஒன்றும் கிடைக்கவில்லை எனினும் பரவாயில்லை; என்னுடன் உணவருந்த வாருங்கள்” என வாஞ்சையுடன் அழைக்கிறார்.அனைத்தும் அறிந்த புனிதனுக்கு மனித வாழ்வின் பசியும்,ஏமாற்றமும் தெரியாதா என்ன?

    ஆம்! அவரை விண்ணுறையும் இறைவனாக ஓரங்கட்டி அந்நியப்படுத்தாமல்...மண்ணுறையும் மனிதனாக நம் அருகிலேயே வைத்துக்கொள்வோம்! ஐடியா தருகிறார் தந்தை! அதற்கு செவிமடுப்போமே! தந்தைக்கு என் உளங்கனிந்த நன்றிகள்!!!

    ReplyDelete