இன்றைய (16 ஏப்ரல் 2021) நற்செய்தி (யோவா 6:1-15)
புல்தரையாய்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு வழங்கும் நிகழ்வை (யோவானின் பதிவின்படி) வாசிக்கின்றோம். இந்த நிகழ்வில் அப்பங்கள் பலுகுவதற்கு முன் இன்னொரு அற்புதம் நடக்கிறது. அதுதான், புல்தரை.
நிகழ்வு நடக்கின்ற இடம், திபேரியக் கடலின் மறுகரை. மறுகரையில் உள்ள உயர்வான பகுதியில் இயேசு அமர்கிறார். கடற்கரையை ஒட்டி புற்கள் வளர்வதில்லை. ஆனால், இந்தப் பதிவின்படி, 'அப்பகுதி முழுவதும் புல்தரையாய்' இருக்கிறது.
புல்தரை எங்கிருந்து வந்தது?
கடலின் உப்புக் காற்றையும், அதையொட்டி நிலவும் வெப்பமான சூழலையும் எதிர்கொண்டு புல் எப்படி வளர்ந்தது?
புல்தரைக்கும், நற்செய்தியின் இறுதியில் வரும், 'அவர்கள் தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள்' என்ற வாக்கியத்திற்கும் தொடர்பு இருக்கிறது.
திருப்பாடல் 23இல் ஆண்டவரை தன்னுடைய ஆயன் என அழைக்கின்ற தாவீது, 'பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்' (23:2) எனப் பாடுகின்றார். தாவீது காட்சியில் காணும் அல்லது தாவீது தன் அனுபவத்தில் உணர்ந்த ஒன்று இங்கே நடந்தேறுகிறது.
ஆக, கடவுள் இருக்கும் இடத்தில் பசும்புல் தரையும், இளைப்பாறுதலும் இருக்கும்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 5:34-42), கமாலியேல் என்னும் கதைமாந்தரை எதிர்கொள்கிறோம். திருத்தூதர்களைப் பற்றிய விசாரணையில் குரல் கொடுக்கின்ற இவர், 'இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது. நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்' என சக உறுப்பினர்களை எச்சரிக்கின்றார்.
தானாகவே ஒன்று முடிந்துவிட்டால் அது மனிதரிடமிருந்து வருவது.
அப்படி முடியாதது எதுவும் கடவுளிடமிருந்து வருவது.
'இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கலாம்' என்னும் பிலிப்பின் திட்டம் மனிதரிடமிருந்து வருகிறது. ஆக, அது தானாகவே அழிந்துவிடுகிறது.
ஆனால், 'மக்களை அமரச் செய்யுங்கள்' என்னும் இயேசுவின் திட்டம் கடவுளிடமிருந்து வருகிறது. ஆகையால்தான், அங்கே நின்றுகொண்டவர்கள் தங்கள் கால்களுக்கு அடியில் முளைத்திருந்த பசுமையான புற்களைக் கண்டுகொள்கின்றனர்.
அங்கேயே தொடங்குகிறது அற்புதம்.
இன்று நம் வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் பல முடிவுக்கு வரவில்லை என்றால் அவை நம் திட்டங்கள் என நினைத்துக்கொள்ளலாம். ஏனெனில், கடவுளின் திட்டம் அனைத்தும் இனிய முடிவிற்கு வரும்.
ஆஸ்கர் ஒயில்ட் சொல்வார்: 'தொடங்கிய அனைத்தும் நல்ல முடிவுக்கு வரும். நல்ல முடிவுக்கு வரவில்லை என்றால் அது இன்னும் முடியவில்லை'.
வாடி நின்ற திருத்தூதர்களுக்கு புல்தரையாய் வந்து நிற்கின்றார் கமாலியேல்.
நம் வாழ்வின் புல்தரையை நாம் கண்டுகொண்ட பொழுதுகள் எவை?
“ பசும்புல் தரை மீது என்னை அவர் இளைப்பாறச் செய்வார்” எனும் திருப்பாடலின் செயலாக்கத்தைத் தருகிறது இன்றைய பதிவு.” தானாகவே ஒன்று முடிந்து விட்டால் அது மனிதரிடமிருந்து வருகிறது; அப்படி முடியாதது எதுவும் கடவுளிடமிருந்து வருகிறது.”..... இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்க மனமிருந்தும் பிலிப்பின் திட்டம் இல்லையென்றாகி,” மக்களை அமரச்செய்யுங்கள்” எனும் இயேசுவின் திட்டம் செயல் வடிவம் பெறுகிறது.
ReplyDeleteநம் திட்டம் நிறைவேறாதபோது சோர்ந்து நின்ற பொழுதுகள் பல. ‘பின்னாலேயே வரும் கடவுளின் திட்டம் என்ற ஒன்று’ என்பதை உணரும் பொழுதுகளும் நம் வாழ்வில் வரும் என்று காத்திருப்போம். நம் வாழ்வின் புல்தரையை முதலில் கண்டுகொள்வோம்; அடுத்து புல் தரையைத் தேடிநிற்கும் நம்மவர்க்கு “ கமாலியேலாய்” மாறுவோம்.
அதிகம் பேசப்படாத பெயர் ‘ கமாலியேல்.’ நானும் அவராக மாறலாம் என்ற உணர்வைத் தூண்டிவிட்ட தந்தைக்கு நன்றிகள்!!!
Very excellent reflection dear Fr.
ReplyDeleteAn extraordinary thinking.. Congrats.
Very excellent reflection dear Fr.
ReplyDeleteAn extraordinary thinking.. Congrats.