Friday, April 30, 2021

யோசேப்பு - தொழிலாளர்களின் பாதுகாவலர்

இன்றைய (1 மே 2021) திருநாள்

யோசேப்பு - தொழிலாளர்களின் பாதுகாவலர்

இன்று புனித யோசேப்பை தொழிலாளர்களின் பாதுகாவலர் என நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். தன்னுடைய தொழிலால் அடையாளம் காணப்படுகின்ற மிகக் குறைவான விவிலியக் கதைமாந்தர்களில் இவர் முதன்மையானவர்.

தமிழில், 'ழ' 'ல' 'ள' என மூன்று எழுத்துகளும் அடுத்தடுத்து வரும் ஒரே வார்த்தை தொழிலாளர். நாம் அனைவரும் தொழிலாளர்களே. தொழில் அல்லது உழைப்பே நம் அடையாளமாக இருக்கிறது. தொழில் வழியாகவே நாம் கடவுளின் கரம் பிடிக்கிறோம்.

இந்த ஆண்டை நாம் புனித யோசேப்பு ஆண்டு எனச் சிறப்பித்து மகிழ்கின்றோம். 

வாழ்வின் உறுதியற்ற நிலைகளை அப்படியே ஏற்றுக்கொண்டார் யோசேப்பு. இதுவே இன்று நாம் அவரிடம் கற்க வேண்டிய பாடமாக இருக்கலாம். 

தனக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மரியா கருத்தாங்கி நிற்கிறார்.

தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மனைவி கருத்தாங்கி நிற்கும் மகன் மெசியாவாக இருக்கிறார். ஆனால், சத்திரத்தில் அவருக்கு இடமில்லை.

பிறந்த குழந்தையை எகிப்துக்குத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய கட்டாயம்.

மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் சொந்த மண்ணுக்கு வர வேண்டிய நிலை.

இப்படியாக, வாழ்க்கை தனக்கு அடுத்தடுத்த உறுதியற்ற நிலையைத் தந்தாலும் எந்தவொரு முணுமுணுப்பும் முறையீடுமின்றி வாழ்வின் எதார்த்தங்களை அப்படியே எடுத்துக்கொள்கின்றார் யோசேப்பு.

'கடவுளே பார்த்துக்கொள்ளட்டும்' என அவர் ஓய்ந்திருக்கவில்லை.

'நாளை பார்த்துக்கொள்ளலாம்' என அவர் தள்ளிப்போடவில்லை.

இன்று பல நேரங்களில் நாம் அனைத்திலும் உறுதித்தன்மையை எதிர்பார்க்கின்றோம். நான் நினைப்பது போல, நினைத்த நேரத்தில் அனைத்தும் நடக்க வேண்டும் எனவும், நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் நான் எதிர்பார்ப்பது போல இருக்க வேண்டும் எனவும் நினைக்கிறோம். வாழ்க்கையின் இனிமையே அதன் உறுதியற்ற நிலையில்தான் இருக்கிறது என்பதை நாம் அறிதல் நலம்.

இந்த நிலையை நாம் அடைய மூன்று விடயங்களைக் களைய வேண்டும்:

(அ) மறுதலிப்பு

'என் வாழ்வில் எனக்கு இது நடக்கவில்லை' என்று நடந்த ஒன்றை நடக்காத ஒன்று போல நினைத்துக்கொள்வது மறுதலித்தல். இந்த நிலையில் நாம் எதார்த்த நிலையிலிருந்து தப்பி ஓடுகின்றோம்.

(ஆ) பலிகடா மனநிலை

'நான் இப்படித்தான். எனக்கு இப்படித்தான் நடக்கும். என்னை எல்லாரும் பயன்படுத்துவார்கள். மற்றவர்களால்தான் நான் இப்படி இருக்கிறேன்' என்று நம் வாழ்வியல் எதார்த்தங்களுக்கு மற்றவர்களை நோக்கி விரலைச் சுட்டும்போது நாம் பலிகடா மனநிலை கொண்டிருக்கின்றோம்.

(இ) உரிமம் கோரல்

'நான் நல்லவனாக இருப்பதால் என்னை அனைவரும் நல்ல முறையில் நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பது, நான் வெஜிடேரியன் என்பதற்காக என்னை மாடு முட்டக் கூடாது என்று நினைப்பதற்குச் சமமாகும்.' நான் இப்படி நடக்கிறேன். ஆகவே எனக்கு இப்படித்தான் நடக்க வேண்டும் என்று உரிமை கொண்டாடும்போது நாம் ஏமாந்துவிடுவதோடு, சோர்ந்தும் விடுகிறோம்.

நிற்க.

இன்று புனித யோசேப்பை நாம் தொழிலாளர்களின் பாதுகாவலர் எனக் கொண்டாடுகின்ற வேளையில், பெருந்தோற்றால் துன்புறும் நம் அன்பிற்கினியவர்களை புனித யோசேப்பின் பரிந்துரையில் வைப்போம். பொதுமுடக்கத்தால் வருந்தும் அனைத்துத் தொழிலாளர்களுக்கு நம் உதவிக்கரம் நீட்டுவோம். 

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த வேண்டிய மானுட நிர்பந்தம் ஓர் இனிய அனுபவமே.

1 comment:

  1. புனித யோசேப்பு...தொழிலாளரின் பாதுகாவலர்! வாழ்க்கை தனக்கு அடுத்தடுத்து உறுதியற்ற நிலையைத் தந்தாலும்,எந்த முணுமுணுப்பும், முறையீடுமின்றி வாழ்வின் எதார்த்தங்களை அப்படியே எடுத்துக் கொண்டவர். அவரிடம் இருந்த உறுதியான மனத்தை நான்பெற தந்தை குறிப்பிட்டிருக்கும் வாழ்வின் எதார்த்தங்களை என்னாலும் பின்பற்ற முடிந்தால் எத்துணை நலம்! தொழிலாளருக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் இந்தப் பெருந்தொற்று நாட்களில் அவர்களை யோசேப்பின் பரிந்துரையில் வைத்தால் போதாது ...அவர்களுக்கு உதவிக்கரமும் நீட்ட வேண்டுமெனும் தந்தையின் யோசனையைக் கட்டளையாக எடுத்துச் செய்வோம்.

    இந்த புனித யோசேப்பு தொழிலாளரின் பாதுகாவலர் மட்டுமல்ல... நல் குடும்பங்களுக்கு..நற்படிப்பிற்கு..... நல்ல துணை கிடைப்பதற்கு...நற்படிப்பிற்கு....இறுதியாக நல் மரணத்திற்கென்று அனைத்திற்கும் நம்மருகில் நிற்பார்..நாம் கூப்பிட்டால்! நெற்றி வியர்வை நிலத்தில் சிந்துவதை வாழ்வின் நிர்ப்பந்தமாக அல்ல...பாக்கியமாக க் கருதுவோம்.

    இவரை எம் பங்கின் பாதுகாவலராகப் பெற்றிருக்கும் நாம் அவரின் துணையைத் தேடி ஓடுவோம். தந்தைக்கும் மற்றும் அனைவருக்கும் திருவிழா வாழ்த்துக்கள்!

    தமிழில் ‘ழ’,’ல’,’ள’ என மூன்று எழுத்துக்களும் அடுத்தடுத்து வரும் ஒரே வார்த்தை ‘தொழிலாளர் ‘......தந்தையின் observationக்கு ஒரு salute! புனித யோசேப்பின் புகழ்பாடும் ஒரு பதிவிற்கு நெஞ்சம் நிறை நன்றிகள்! தந்தைக்கு!!!

    ReplyDelete