Sunday, April 18, 2021

இனிய ஈராறு ஆண்டுகள்

இன்று நான் என் அருள்பணி வாழ்வுப் பயணத்தில் நான் இனிய ஈராறு ஆண்டுகளை நிறைவு செய்கின்றேன். இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.

கடந்த இரண்டு மூன்று நாள்களாக, நான் உரோமையில் புனித யூதா ததேயு பங்குத்தளத்தில் பணியாற்றிய நினைவுகளே என்னைச் சுற்றி சுற்றி வருகின்றன. 2012ஆம் ஆண்டு என் குருத்துவ அருள்பொழிவை நாளன்று, காலைத் திருப்பலி நிறைவேற்றிய பின் நான் சந்தித்த நபர்தான் திருமதி கர்மேலா க்வாட்ஸோ (மேல்காணும் படத்தில் இருப்பவர்). பார்த்த நொடிகளில் சிலரைப் பிடித்துவிடும், சிலர் பார்த்த நொடிகளில் நம்மைப் பிடித்துவிடுவார்கள். அப்படிப் பிடித்துப் போனவர்தான் இவர். 

என் அன்றாட இத்தாலிய மறையுரைச் சிந்தனைகளைத் திருத்தி வழங்கியவர்.

உரோமை நகரில் ஸ்ட்ரைக் நேரங்களில் என்னைக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றவர்.

பங்குத்தளத்தின் அடுப்பு அணைந்த நாள்களில் தன் வீட்டில் அடுப்பெரித்தவர்.

மருத்துவமனையில் உதவியாளர் பணி நான் செய்ய என்னை அறிமுகம் செய்து பயிற்றுவித்தவர்.

இவரை எங்கும் பார்க்கலாம்.

யாராவது ஒருவர் தேவையில் இருந்தால் அங்கே அவரைப் பார்க்கலாம்.

இவரை நான் மீண்டும் பார்க்க வேண்டும் போல உள்ளது.

நிற்க.

விருதுநகர் மாவட்டத்தின் வரைபடத்தில் மங்கிப் போய் நிற்கின்ற ஜமீன் நத்தம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த என்னை இவருக்கும், இவரை எனக்கும் அறிமுகமாக்கியது என் குருத்துவம் மட்டுமே.

என் குருத்துவம் இல்லை என்றால், இன்று நான் என்னவாகி இருப்பேன் என்றுகூட என்னால் நினைக்க இயலவில்லை.

என் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொருவரும், நீதித்தலைவர்கள் நூலில் வரும் மீக்கா போல, 'நீர் எனக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருப்பீர்' என்றே கேட்கின்றனர் (காண். நீத 17:10).

ஆசிரியர் தொடர்கின்றார்: '... அவ்விளைஞர் அவருடைய புதல்வருள் ஒருவர் போல இருந்தார்'

தந்தையாகவும், குருவாகவும் என்னை என் மக்கள் அணுக, நான் அவர்களுக்குப் புதல்வன் போல இருந்தால் போதும், என் அருள்பணி வாழ்வு சிறக்கும்.

இந்த ஆண்டு பெரியதாக வாழ்க்கைப் பாடங்கள், தீர்மானங்கள் எதுவும் இல்லை.

'அவரோடு' (மாற் 3:14) என்ற விருதுவாக்கோடு நான் தொடங்கிய என் பயணம், 'அவரில்' நிறைவுறும் வரை தொடர்ந்து பயணிப்போம் இணைந்த கரங்களாய்.

3 comments:

  1. “அருமையான...இனிய ....ஈராறு ஆண்டுகள்!”.......’ வாழ்த்துக்கள்’ என்பது மிகச்சாதாரண வார்த்தை... நான்றிந்த தந்தைக்கு. ஆமாம்! “ நீர் எனக்குத் தந்தையாகவும்,குருவாகவும் இருப்பீர்” என்று கேட்பவர்களில் நானும் ஒருத்தி.

    சந்தேகம் வேண்டாம்...நீங்கள் எனக்குத்தெரிந்த அளவில் ஒரு “ புதல்வனே!” விண்ணகத்தந்தையும் தங்களைப்பார்த்து “ இவரே என் அன்பார்ந்த பிள்ளை! இவரில் நான் பூரிப்படைகிறேன்!” என்று சொல்வார் என்பதில் வியப்பில்லை.

    உரோமை நகரை நினைக்கும் போதெல்லாம் அவரை ஆட்கொள்ளும் “நன்றிப்பிரவாகம்” இன்றும். திருமதி. கர்வாலோ க்வாட்ஸோ அவர்களை நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறார்.சாதாரணமாக தங்களின் கடந்த காலத்தை நன்றியுடன் நினைத்துப்பார்ப்பவர்கள் வாழ்க்கையில் உயரம் காணுவர். தந்தையும் அவர்களில் ஒருவர். இவர் என் வாழ்க்கையிலும் புரிந்துள்ள நன்மைகள் ஏராளம்.இறைவனுக்கு இவருக்காக நன்றி கூறும் வேளையில் இறைவன் வரப்போகும் நாட்களிலும் இவரைத் தன் கண்ணின் கருவிழியாக வைத்துக் காக்க வேண்டுகிறேன்.

    தந்தைக்கு அனைத்து வாசகர்கள் பேராலும் வாழ்த்துக்கள்! அன்புடன்!!!

    ReplyDelete
  2. Congratulations fr. Yesu. May God continue to be with him and give you the grace to be with Him until you are totally in Him.
    I am Sr Lydia fmm. Your daily reflections nurture me in my daily life. I draw many inspirations for my spiritual life and to help others in theirs as I am a formator. God bless you and fill you with His love

    ReplyDelete