உயிர்ப்புக் காலம் 3ஆம் ஞாயிறுI. திருத்தூதர் பணிகள் 3:13-15,17-19 II. 1 யோவான் 2:1-5 III. லூக்கா 24:35-48
உம் முகத்தின் ஒளி
இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 4) வரிகள் - 'உமது முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும்' - இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் சுருக்கமாக இருக்கிறது. தாவீது அரசரின் கண்களில் விழுந்த தூசியாக , காலுக்குள் சிக்கிய கூழாங்கற்களாக மூன்று விடயங்கள் அவரை வருத்திக்கொண்டே இருக்கின்றன: (அ) பெத்சபாவுடன் கொண்ட உறவு, அந்த உறவுக்குப் பின் நடந்த கொலை. (ஆ) மக்கள் தொகை கணக்கெடுப்பு. (இ) அவருடைய மகன் அப்சலோம் அவருக்கு எதிராகச் செய்த கிளர்ச்சி. திபா 3, அப்சலோமின் கிளர்ச்சியைப் பின்புலமாகக் கொண்ட பாடலாக அமைந்துள்ளது. தன் அன்பு மகனே தனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து தன்னைக் கொல்லத் தேடுகிறான் என்பதை தாவீது அரசரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அப்சலோமின் தொடக்கம் வெற்றிகரமாக அமைகிறது. ஆனால், அந்த வெற்றி மிகவும் தற்காலிகமானதாக இருக்கிறது. ஆக, பொல்லார்கள் கிளர்ந்தெழுந்தாலும், அவர்கள் வெற்றி பெற்றாலும், அவர்களுடைய கிளர்ச்சியும் வெற்றியும் சிறு பொழுதே என்றும், அவை விரைவில் மறைந்துவிடும் என்றும் சொல்கிறது இத்திருப்பாடல். இப்பாடலில், 'எவ்வளவு காலம் வெறுமையை விரும்பி பொய்யானதை நாடிச் செல்வீர்கள்?' எனக் கேட்கிறார் தாவீது. இக்கேள்வி புனித அகுஸ்தினார் வாழ்வையும் தொட்டது என்பதை நாம் மனத்தில் கொள்வோம். மேலும், தான் ஆண்டவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட நிலையை நினைத்து, ஆண்டவருடைய அன்பனாகத் தான் இருக்கின்ற நிலை குறித்து மகிழ்கின்ற தாவீது, 'ஆண்டவரின் முகத்தின் ஒளி நம்மீது வீசும்போது,' 'நாம் மகிழ்ச்சியும், மன அமைதியும், பாதுகாப்பும்' பெறுவோம் என்கிறார்.
இன்றைய முதல் வாசகம் (காண். திப 3:13-15,17-19), திருத்தூதர் பேதுரு எருசலேம் நகரின் சாலமோன் மண்டபத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாக இருக்கிறது. எருசலேம் ஆலயத்திற்கு வழிபாட்டுக்குச் செல்கின்ற பேதுருவும் யோவானும், கால் ஊனமுற்றிருந்த ஒருவருக்கு நலம் தந்து நற்செயல் செய்கின்றனர். இயேசுவின் பெயரால் அவர்கள் நலம் தருகின்றனர். இயேசுவின் பெயரே அவருக்கு நலம் தந்தது என்று உற்சாகமாக அறிவிக்கின்ற பேதுரு, 'வாழ்வின் ஊற்றாகிய அல்லது வாழ்வின் ஆசிரியராகிய அவரை மறுதலித்துக் கொலையாளியை விடுவித்ததை' சுட்டிக்காட்டி, 'மனம் மாறி அவரிடம் திரும்புங்கள்' என அழைப்பு விடுக்கின்றார். மேலும், அவர்கள் தங்கள் அறியாமையில் இப்படிச் செய்ததாகச் சொல்கின்றார். ஒளி படாத எதுவும் அறியப்படாமல் இருக்கும் என்பது அறிவியல் நியதி. அதன்படி, இயேசுவே மெசியா என்பது இயேசுவின் சமகாலத்து ஆட்சியாளர்களுக்கு இருளில் இருந்த ஒரு மறைபொருளாக இருந்தது. ஆனால், இப்போது அது ஒளிக்கு வருகிறது. ஒளிக்கு வந்த செய்தியைக் கேட்ட அனைவரும் ஒளிக்கு வர வேண்டும். அதாவது, அவர்கள் மனம் மாற வேண்டும்.
இரண்டாம் வாசகத்தில் (காண். 1 யோவா 2:1-15), இயேசுவை அறிதல் பற்றிப் பேசுகின்ற யோவான், அறிதல் என்பது அன்பு செய்தலிலும், அன்பு செய்தல் என்பது கட்டளைகளைக் கடைப்பிடித்தலிலும் நிறைவு பெறுகிறது எனத் தன் குழுமத்துக்கு எழுதுகின்றார். அறிதல் என்பது செயலாற்றுவதற்கே என்பது யோவான் தரும் பாடமாக இருக்கிறது.
நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 24:25-48), இயேசு சீடர்களுக்குத் தோன்றும் நிகழ்வை வாசிக்கின்றோம். இந்நிகழ்வு எம்மாவு நிகழ்வின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. இங்கே லூக்கா, 'இன்க்ளுசியோ' என்ற இலக்கியக் கூற்றைப் பயன்படுத்தி தன் நற்செய்தியின் இறுதிப் பகுதியான இப்பகுதியை நிறைவு செய்கிறார். லூக்கா நற்செய்தி எருசலேம் நகரத்தில் தொடங்குகிறது. இங்கே எருசலேம் நகரத்தில் முடிகிறது: 'எருசலேம் தொடங்கி ...,' 'நீங்கள் வல்லமையால் ஆட்கொள்ளப்படும் வரை இந்நகரத்திலேயே இருங்கள் ...' எனச் சொல்கிறார் இயேசு. இரண்டாவதாக, லூக்கா நற்செய்தியின் தொடக்கமும் இறுதியும் மகிழ்ச்சி என்ற வார்த்தையை மையமாகக் கொண்டுள்ளது.
இயேசுவைக் கண்டவுடன் சீடர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால், இயேசு மூன்று படிகளில் அவர்களுடைய அச்சத்தைக் களைகின்றார்: (அ) அவர்களோடு உரையாடுகின்றார். கேள்விகள் கேட்டு அவர்களின் சந்தேகத்தைப் போக்க விழைகின்றார். (ஆ) அவர்களோடு உண்கின்றார். இயேசு மீன் உண்ணும் நிகழ்வு அவர்களுக்கு இயேசுவின் உயிர்ப்பின் சான்றாக இருப்பதோடு, இயேசு உடலோடு உயிர்த்தெழுந்தார் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக இருக்கிறது. மற்றும் (இ) மறைநூலை விளக்குகின்றார். திருச்சட்டம், இறைவாக்கு, மற்றும் திருப்பாடல்கள் நூல்களில் தன்னைப் பற்றி எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்ற இயேசு, மறைநூலின் படி அவர்கள் பெற்ற அனைத்துக்கும், 'நீங்கள் சாட்சிகள்' என மொழிகின்றார். 'சான்று பகர்தல்' என்னும் இந்த வார்த்தையே லூக்காவின் இரண்டாவது நூலாகிய திருத்தூதர் பணிகள் நூலின் அடிப்படையாக இருக்கிறது.
ஆக, இயேசுவின் முகத்தின் ஒளி சீடர்களின் மேல் வீசியவடன், அவர்களுடைய வாழ்வு மாற்றம் பெறுகிறது. அந்த மாற்றம் அவர்களுடைய நற்செய்தி அறிவிப்பிலும் போதனையிலும் தெரிகின்றது.
இன்றும் ஆண்டவரின் ஒளி நம்மேல் வீசுகிறது.
சாவின் காரணிகள் நம்மைச் சூழ்ந்திருந்தாலும், நம்மைச் சுற்றி இருக்கும் ஊடகங்கள் பொய்யுரையைத் தொடர்ந்து பரப்பி, நம்மைத் திகிலுக்கும், அச்சத்துக்கும் உள்ளாக்கினாலும், இவை எல்லாவற்றின் நடுவில் அவர் நிற்கின்றார். இவை எல்லாவற்றையும் எதிர்கொண்டவர் அவர். அவர் இன்று நம்மைப் பார்த்துக் கேட்கும் ஒற்றைக் கேள்வி இதுதான்: 'நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்?'
அப்சலோமின் வெற்றி கண்டு கலங்கிய தாவீதிடம் ஆண்டவர் இதே கேள்வியை அவர் உள்ளத்தில் கேட்கின்றார்: 'தாவீது, நீ ஏன் கலங்குகிறாய்?'
தங்கள் தலைவராம் இயேசுவைக் கொன்றுவிட்டு, தங்களையும் கொல்லத் தேடுகிறார்கள் என யூத மற்றும் உரோமை ஆட்சியாளர்களுக்கு அஞ்சி நடுங்கிய சீடர்களிடம், 'நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்?' எனக் கேட்கின்றார் இயேசு.
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, தீமை வெல்வதும், நன்மை செய்பவர்கள் தோற்பதும் நமக்கு நெருடலாக இருக்கின்றது. ஆனால், ஆண்டவரின் முகத்தின் ஒளி நம்மேல் படும் போது, 'இது ஏன்?' என்ற கேள்விக்கு விடை நமக்குத் தெரியத் தொடங்குகிறது.
ஆண்டவரின் முகத்தின் ஒளி நம்மேல் இன்றும் தொடர்ந்து படுகின்றது:
(அ) நமக்கு நடுவில் நிற்கும் நம் உறவுகள் மற்றும் நட்பு வழியாக.
(ஆ) நற்கருணை மற்றும் மற்ற அருளடையாளங்களில் அவரை நாம் உண்பதன் வழியாக.
(இ) இறைவார்த்தையைக் கேட்டு, வாசித்து, அதன்படி நாம் நடப்பதன் வழியாக.
அவருடைய முகத்தின் ஒளி நம்மேல் படுகிறது. ஏனெனில், நாம் அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட அன்பர்கள்.
அவருடைய ஒளி நம்மேல் பட்டவுடன், நாம் மகிழ்ச்சியும், மன அமைதியும், பாதுகாப்பும் பெறுகிறோம்.
அவருடைய முகத்தின் ஒளியைப் பெற்ற நாம், கண்ணாடி போல நின்று மற்றவர்கள் மேல் பிரதிபலித்தால், அதுவே சாட்சிய வாழ்வு.
இன்று, நம் இறைவேண்டல் இப்படியாக இருக்கட்டும்:
'ஆண்டவரே, கொரோனா பெருந்தொற்று மீண்டும் எங்களை அச்சுறுத்தத் தொடங்கியுள்ள வேளையில், தீமை மானுடத்தை வெற்றிகொண்டது போல நாங்கள் உணரும் இவ்வேளையில், உம் முகத்தின் ஒளி எம்மேல் வீச் செய்யும். எங்களை ஆளும் அதிகாரம் கொண்டவர்கள் தங்களுடைய நலன்களை மட்டுமே முன்நிறுத்தி, எம் நலனைப் புறந்தள்ளுகின்ற வேளையில், உம் முகத்தின் ஒளி எம்மேல் வீசச் செய்யும். பசி, வறுமை, நோய், தனிமை, முதுமை, வெறுமை, சோர்வு, விரக்தி, ஏமாற்றம், பயம், சந்தேகம் என்னும் புற மற்றும் அகக் காரணிகளால் எங்கள் வாழ்வு இருள்சூழ்ந்த பள்ளத்தாக்கு போல இருக்கும் வேளையில், உம் முகத்தின் ஒளி எம்மேல் வீசச் செய்யும்!'