எண்ணிக்கை 6:22-27 கலாத்தியர் 4:4-7 லூக்கா 2:16-21
ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!
என்னங்க! எல்லாரும் இங்க வந்து நிக்குறீங்க! இந்தக் குளிர்ல! கோவிலுக்கு உள்ளே, வெளியே என்று ஒரே மக்கள் கூட்டம்! போன வருடத்தோடு நம்ம வாழ்க்கையில இன்னொரு வயது கூடிடுச்சு என்று எந்த வருத்தமும் நம்மிடம் இல்லை! கடந்த ஆண்டு விட்டுச் சென்ற காயங்கள் நம்மிடம் இல்லை! நாம் இன்று அணிந்துள்ள புதிய ஆடை போல நம் உள்ளத்தில் ஒருவிதமான புத்துணர்வு.
விவிலியத்தில் முதன்முதலாகப் புத்தாண்டு கொண்டாடியவர்கள் நம் முதற்பெற்றோர் ஆதாமும் ஏவாளும்தான். ஏதேன் தோட்டத்திற்குள் அவர்கள் இருந்தது வரை அவர்களுக்குக் காலம் பற்றிய உணர்வு இல்லை. தோட்டத்திற்கு வெளியே அனுப்பப்பட்டவுடன்தான் காலம் பற்றிய உணர்வு அவர்களுக்கு வருகின்றது. ஆண்-பெண் என்று இருந்த அவர்கள், தந்தை-தாய் என்று மாறுகிறார்கள். ஏவாள் கருத்தரித்து தன் முதல் மகனைப் பெறுகிறாள். நம் முதற்பெற்றோரின் புத்தாண்டு சாபத்தில் தொடங்கியது. 'வயிற்றினால் ஊர்ந்து புழுதியைத் தின்பாய்' என்று பாம்புக்கும், 'உன் மகப்பேற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்' என்று பெண்ணுக்கும், 'நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை என்பாய்' என்று ஆணுக்கும் ஆண்டவர் சாபம் அளிக்கின்றார். நெற்றி வியர்வைதான் வாழ்வின் நியதி என்றால், நாம் இங்கே ஆலயத்தில் கூடி நிற்பது ஏன்? வேதனைதான் வாழ்வின் எதார்த்தம் என்றால், இந்த இரவில் நாம் இறைவேண்டல் செய்வது ஏன்?
இந்த இரவில் நாம் நம் காலத்தைக் கொண்டாடுகின்றோம். காலம் எப்போது தோன்றியது? என்பது பற்றிய கேள்விக்கு இன்றும் தெளிவான விடை இல்லை. ஆனால், 'காலங்கள் அவருடையன, யுகங்களும் அவருடையன' என்பது வாழ்வியல் எதார்த்தமாக இருக்கிறது. நாம் காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டவர்கள் என்றாலும், இடத்தைத் தெரிவு செய்யும் ஆற்றல் பெற்றுள்ள நாம், காலத்தின்முன் கையறுநிலையில் இருக்கின்றோம். காலம் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தை நமக்கு தருகிறது. அடுத்து வரப் போகும் ஆச்சர்யத்தையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது. 'கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார். காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கின்றார்' என்கிறார் சபை உரையாளர் (சஉ 3:11).
இந்த நாள் நமக்கு நான்கு நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: கிரகோரியன் காலண்டர்படி புத்தாண்டுத் திருநாள், மரியா இறைவனின் தாய் என்னும் திருநாள், இயேசுவுக்கு பெயர் சூட்டப்பட்ட நாள், மற்றும் கிறிஸ்து பிறப்பின் எட்டாம் திருநாள். இந்த நாளின் இறைவார்த்தை வழிபாடு நமக்குத் தரும் செய்தி 'ஆண்டவரின் உனக்கு ஆசி அளிப்பாராக!'
அது என்னங்க ஆசி அல்லது ஆசீர்? எபிரேயத்தில் 'ஆசிர்' என்னும் சொல் உள்ளது. அச்சொல்லுக்கு 'செல்வம்' அல்லது 'வளம்' என்பது பொருள். தமிழ் ஒருவேளை எபிரேயச் சொல்லைத் தன் சொல்லாக ஏற்றிருக்கலாம். அல்லது தமிழ்ச்சொல் எபிரேயச் சொல்லாக மாறியிருக்கலாம் என்பது முதல் புரிதல். இரண்டாவதாக, 'ஆசீர்' என்னும் சொல்லை, 'ஆ' மற்றும் 'சீர்' என இரண்டாகப் பிரித்தால், 'ஆ' என்பது பெயர்ச்சொல்லாகவும், 'சீர்' என்பது வினைச்சொல்லாகவும் உள்ளது. 'ஆ' என்பதன் பொருள் 'பசு' என்று அறிவோம். அதைத் தவிர்த்து, 'ஆ' என்றால் 'ஆகுதல்' அல்லது 'ஆகுகை' ('வளர்தல்'), 'ஆறு' ('குணம்' அல்லது 'பண்பு'), 'ஆன்மா' ('உள்ளம்) என்ற பொருள்களும் உண்டு. ஆக, உன் 'ஆகதலும்,' 'ஆறும்,' 'ஆன்மாவும்' 'சீர் ஆகுக!' என்று சொல்வதே 'ஆசீர்
விவிலியத்தில் ஆசீர் மிக முக்கியமானதாக இருக்கக் காரணம் கடவுள் நம் முதற்பெற்றோருக்குக் கொடுத்த சாபம். அந்த சாபம் இல்லை என்றால், ஆசீருக்குப் பயன் இல்லை. ஏனெனில், சாபத்தின் சாயம் ஆசீரில் களையப்படுகின்றது. ஆசீர் நம் உழைப்பைத் தாண்டியதாக இருக்கிறது. ஆசீர் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. ஆசீர் நமக்கு ஆச்சர்யத்தைக் கொண்டு வருகிறது
படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகின் உயிரினங்களுக்கும் (தொநூ 1:24), ஆணுக்கும் பெண்ணுக்கும் (1:28) ஆசி வழங்குகின்றார். நோவாவுக்கும் புதல்வர்களுக்கும் (தொநூ 9:1), ஆபிரகாமுக்கும் (12:1) மற்ற குலமுதுவர்களுக்கும் எனத் தொடரும் ஆசி இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. கீழ்ப்படிதலுக்கான ஆசிகளை இணைச்சட்ட நூல் (28:1-14) பட்டியலிடுகிறது. ஈசாக்குக்குப் பிடித்தமான வேட்டைக் கறியுடன் வருகின்ற ஏசா, 'என் தந்தை எழுந்து தம் மகன் கொண்டு வந்திருக்கும் வேட்டைக் கறியை உண்டு மனமாற எனக்கு ஆசி வழங்குவாராக!' என இறைஞ்கின்றார். தான் தன் சகோதரனால் ஏமாற்றப்பட்டதை உணர்கின்ற அவர், ஈசாக்கை நோக்கி, 'அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா? எனக்கும் ஆசி வழங்க வேண்டும் அப்பா!' என்று சொல்லிக் கூக்குரலிட்டு அழுகின்றார். அவரின் அழுகை நம்மையும் சற்றே தடுமாற வைக்கிறது
'ஆண்டவரே, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா? கடந்த ஆண்டு என் வாழ்க்கையில் கஷ்டம் ஏன்? துன்பம் ஏன்? கலக்கம் ஏன்? ஏமாற்றம் ஏன்? பின்னடைவு ஏன்?' என்று இன்று நாமும் அவர்முன் அழுகின்றோம். ஏசாவுக்கு வழங்குவதற்கு அப்பா ஈசாக்கிடம் ஆசி இல்லை. ஆனால், 'அப்பா, தந்தையே!' என்று தூய ஆவியாரின் உதவியால் நாம் கதறியழும் ஆண்டவர் (இரண்டாம் வாசகம்) நமக்கு நிறைய ஆசி வழங்கக் காத்திருக்கிறார். காலத்திற்கு உட்பட்டு வாழும் நம் நிலையை அறிந்தவர் அவர். ஏனெனில், புனித பவுல், 'காலம் நிறைவுற்றபோது, தன் மகனைக் கன்னியிடம் பிறந்தவராக – அதாவது, காலத்திற்கு உட்பட்டவராக – நம் மண்ணுலகுக்கு அனுப்பினார்.' காலத்தின் வரையறுக்குள் கடவுள் வந்ததால் காலம் புனிதம் பெற்றது. காலம் அடிமை வாழ்விலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமைப் பேற்றை அளிக்கின்றது
கடவுளே நுழைந்த கால நீரோட்டத்தின் மிகச் சிறிய பகுதியே 2022 என்னும் புதிய ஆண்டு. இந்த ஆண்டுக்குள் நுழையும் நமக்குக் கடவுள் தரும் ஆசீரைப் பட்டியலிடுகின்றது முதல் வாசகம் (காண். எண் 6:22-27). மூன்று ஆசிகள், ஒவ்வொரு ஆசியிலும் இரு கூறுகள் என்று அமைந்துள்ளன: ;: (அ) 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!' இதில் ஆ ண்டவர்தான் செயலாற்றுபவர். ஆண்டவர் தான் ஆசீர் அளிப்பவர். 'உனக்கு' என்பது இரண்டாம் நபர் (முன்னிலை) ஒருமை. ஆக, இது மொத்தமாக கூட்டத்தின்முன் வழங்கப்பட்டாலும், ஆசி ஒவ்வொரு தனிநபருக்கும் உரியது. (ஆ) 'ஆண்டவர் அவர் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்வாராக! உனக்கு அருள்கூர்வாராக!' 'ஒளி' என்பது விவிலியத்தில் வாழ்வைக் குறிக்கும். ஆண்டவரின் முகம் எப்போதும் ஒளிரக் கூடியது. இந்த முகம் மனிதர்கள்மேல் படும்போது அவர்களும் ஒளி பெறுகின்றனர். வாழ்வு பெறுகின்றனர். மேலும், உருவகத்தின் அடிப்படையில் 'திருமுகம் ஒளிர்தல்' என்பது 'அருள்கூர்தல்' என்றும் பொருள்படும். 'ஹனான்' ('அருள்') என்ற வார்த்தை 'தன் குழந்தையை கூர்ந்து பார்க்கும் தாயின்' செயலைக் குறிக்கிறது. (இ) 'ஆண்டவர் தன் திருமுகத்தை உயர்த்துவாராக! உனக்கு அமைதி தருவாராக!' மீண்டும் ஆண்டவரின் திருமுகமே இங்கு செயலாற்றுகிறது. 'தாழ்ந்து போன முகம்,' அல்லது 'குனிந்த முகம்' அவமானத்தை அல்லது கோபத்தைக் குறிக்கும் (தொநூ 4:6,7). மேலும், வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொள்ளுதல் கோபத்தையும், ஒருவரிடமிருந்து விலகி நிற்பதையும், கண்டுகொள்ளாததையும் குறிக்கும் (இச 31:18, திபா 30:8, 44:25). ஆண்டவர் தன் முகத்தை தாழ்த்திக் கொள்ளாமல், வேறு பக்கம் திருப்பிக் கொள்ளாமல் உன் பக்கம் திருப்புகிறார். இறுதியாக அவர் 'ஷலோம்' ('அமைதி, நிறைவு, நலம்') தருகிறார்
இந்த மூன்று ஆசிகளையும் ஒருசேர வாசிக்கும்போது என்ன தோன்றுகிறது? எனக்கு வெளியில், என்னில், எனக்கு உள்ளே என்று மூன்று நிலைகளில் வரும் ஆசி நம்மை முழமையான மனிதர்களாக ஆக்குகின்றது – அல்லது நம் ஆகுதலைச் சீர்படுத்துகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகம் (லூக் 2:16-21), 'இடையர்களின் வருகை,' 'இடையர்களின் வியப்பு,' 'மரியாவின் பதிலுணர்வு,' 'இடையர்களின் செல்கை,' மற்றும் 'இயேசுவின் விருத்தசேதனம்' என்று ஐந்து நிகழ்வுகளாக நகர்கிறது. ஆண்டவரின் ஆசி தங்களுக்கு மீட்பாக வந்ததை இடையர்கள் வந்து கண்டு, வியப்படைகின்றனர். ஆண்டவரின் ஆசியால் தான் அடைந்த நிலையை எண்ணி மரியா அனைத்தையும் மனத்தில் இருத்திச் சிந்திக்கின்றார். ஆண்டவரின் ஆசியைப் பெறும் - தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையைப் பெறும் - விருத்தசேதனச் சடங்கு குழந்தைக்கு நிறைவேற்றப்படுகிறது. காலத்திற்கு உட்பட்ட கடவுள், அப்படி உட்படுதலின் வலியையும் உணரத் தொடங்குகின்றார்.
'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?' எனக் கேட்ட எலிசபெத்து, மரியாவை இறைவனின் தாய் என வாழ்த்துகின்றார் (லூக் 1:43). கீழைத்திருஅவை ஆயர் நெஸ்டோரியஸ் அவர்களுடைய தப்பறையான கொள்கைக்குப் பதிலிறுக்கின்ற எபேசு பொதுச் சங்கம் (கிபி 431), 'இம்மானுவேல்தான் கடவுள். இம்மானுவேலின் தாய் இறைவனின் தாய்' என்று அறிவிக்கின்றது. நாசரேத்து மரியாவை இம்மானுவேலின் தாய், இறைவனின் தாய் என்னும் நிலைக்கு உயர்த்தியது ஆண்டவரின் ஆசியே!
'ஆ-சி' என்னும் சொல்லின் பின்புலத்தில் அன்னை கன்னி மரியாவின் வாழ்க்கை மூன்று வகை 'ஆ-சி'களால் நிறைந்துள்ளது: (அ) 'ஆண்டவரின் சித்தம்,' (ஆ) 'ஆண்டவரின் சிறப்பு,' மற்றும் (இ) 'ஆண்டவரின் சிரிப்பு.' (அ) 'ஆண்டவரின் சித்தம்' - இவ்விரண்டு வார்த்தைகளில் மரியாவின் சரணாகதி அடங்கியுள்ளது. முதல் ஏவா தன் சித்தம் நிறைவேற வேண்டும் என விரும்பியதால் ஆண்டவரின் சாபத்திற்கு உள்ளானார். இரண்டாம் ஏவா ஆண்டவரின் சித்தமே நிறைவேற வேண்டும் என விரும்பியதால் (காண். லூக் 1:37) இறைவனின் ஆசியைப் பெற்று அவரின் தாயாக உயர்கின்றார். (ஆ) 'ஆண்டவரின் சிறப்பு' – மரியா தன் புகழ்ச்சிப் பாடலில், 'இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்' (காண். லூக் 1:48) என்னும் சொற்கள் வழியாக தான் அடைந்துள்ள சிறப்பான நிலையை அறிக்கையிடுகின்றார். இது 'ஆண்டவர் தந்த சிறப்பு' என்பதை அவர் உணர்ந்தார். (இ) 'ஆண்டவரின் சிரிப்பு' – மரியா சிரித்ததாக விவிலியம் பதிவு செய்யவில்லை. ஆனால், அவர் தன் மகிழ்ச்சியை என்றும் தக்கவைத்துக்கொள்கின்றார். சிமியோனின் சொற்கள், இளவல் இயேசு காணாமற் போதல், சிலுவையின் நிழல் என்று எல்லா இடங்களிலும், தன் வலுவின்மை, இயலாமை, மற்றும் கையறுநிலை குறித்து மனதிற்குள்ளேயே சிரித்துக்கொள்கின்றார். 'ஆண்டவரின் மகிழ்வே நம் வலிமை' (நெகே 8:10) என்ற நிலையில் அவர் ஆண்டவரில் எந்நேரமும் சிரித்தவராக இருந்தார்.
இறைவனின் தாய் அவர் என்றால், இம்மானுவேலின் சகோதர சகோதரிகளாகிய நம் தாயும் அவரே. நம் முதல் தாய் ஏவா கொண்டு வந்த சாபத்தை, நம்மிடமிருந்து அகற்றி, நமக்கு ஆசியைப் பெற்றுத் தர வந்த இந்தத் தாய் நம் புத்தாண்டுக்கு வழங்கும் செய்தியும் இதுவே.
(அ) 'ஆண்டவரின் சித்தம் நிறைவேற்றுங்கள்!' வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நாம் இறைவனின் குரலைக் கேட்டு வழிநடக்க இந்த ஆண்டு முயற்சி செய்வோம். 'நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும், 'இதுதான் வழி. இதில் நடந்து செல்லுங்கள்' என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்' (எசா 30:21) என்கிறார் கடவுள். இறைவனின் குரலைக் கேட்க வேண்டுமென்றால், நம் உள்ளிருக்கும் ஓசைகள் அடங்க வேண்டும். நம் வெளிப்புறக் கவனச்சிதறல்கள் குறைய வேண்டும்.
(ஆ) 'ஆண்டவரின் சிறப்புக்கு உரியவர் நீங்கள்!' இந்த உலகின் பார்வையில் நாம் எப்படி இருந்தாலும், நம் இறைவனின் பார்வையில் மதிப்புக்கு உரியவர்கள் நாம் (எசா 43:4). ஆக, நம் தன்மதிப்பையும், மனித மாண்பையும் சீர்குலைக்கும் எதையும் செய்தல் ஆகாது. மதிப்பற்றவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது (காண். 2 திமொ 2:20-21) அவசியம்.
(இ) 'ஆண்டவரின் சிரிப்பைக் கொண்டிருங்கள்!' இந்த ஆண்டு நாம் நிறைய சிரிக்க வேண்டும். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்பதால் மட்டுமல்ல, மாறாக, இறைவன் நம்மோடு இருப்பதால். அவநம்பிக்கை, அதீத எண்ணம், கவலை உள்ளம் அனைத்தையும் ஓரத் தள்ளிவிட்டு என்ன நடந்தாலும், எதைப் பார்த்தாலும், நாமே முட்டாள்தனமாகச் செயல்பட்டாலும் ஒரு புன்முறுவல் பூத்துவிட்டு அடுத்த நிமிடத்திற்கு நகர வேண்டும்.
'ஆண்டவர் உனக்கு ஆ-சி வழங்குவாராக!' என்று நாம் வாயார ஒருவர் மற்றவரை வாழ்த்துவோம். இதையே திருப்பாடல் ஆசிரியர் தன் இறைவேண்டலாக (67), 'கடவுளே! எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக!' என முன்மொழிகின்றார்.