Wednesday, July 27, 2016

அப்துல் கலாம்

இன்று அப்துல் கலாம் அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாள்.

அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களாக இன்று நான் எடுத்துக் கொள்வது மூன்று:

அ. கட்டுக்களை மீறி சிந்திப்பது

கலாம் கடற்கரையில் சின்ன வயதில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர் கடலைப் பார்த்த நேரத்தை விட கரையைப் பார்த்த நேரம்தான் அதிகம் இருக்கும் என நினைக்கிறேன். கடலை மட்டுமே பார்த்திருந்தால் ஒருவேளை அவர் சாதாரண மீனவராகத்தான் மாறியிருப்பார். கரையைப் பார்த்து நின்றதால் தான் நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தார். இல்லையா? 'இதுதான் என் வாழ்க்கை. இதுதான் என் பெற்றோர் தொழில். இதுதான் நான்' என எந்தக் கட்டுக்களுக்குள்ளும் அவர் தன்னை அடக்கிக் கொள்ளவில்லை. கட்டுக்களை மீறி சிந்திக்கின்றார். கட்டுக்களை மீறி சிந்திக்கும் சிந்தனைதான் பின் செயல்வடிவம் பெறும்.

ஆ. அர்ப்பணம்

தான் செய்த எல்லாவற்றிலும் அர்ப்பணம் கலந்து செய்கின்றார் கலாம். படிப்பு, பணி, விஞ்ஞானிப் பணி, குடியரசுத் தலைவர் பணி என எது என்றாலும் அதை முழுiமாகச் செய்கின்றார். நான் பல நேரங்களில் என முழு ஆற்றலைப் பயன்படுத்துவது கிடையாது. காரணம், போதுமான அர்ப்பணம் கிடையாது. செய்யும் எல்லாவற்றிலும் அர்ப்பணம் கலந்து செய்தால் என்னால் என் சிறப்பானதை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்.

இ. மதிப்பீடுகள்

கலாம் ஒரு இசுலாமியராக பிறந்து, வளர்ந்து, இயற்கை எய்தினார். தன் மதம் குறித்த எந்த ஒரு மேட்டிமை உணர்வும் அவரிடம் இல்லை. 'என் மதம்தான் சிறந்தது' என்றோ, 'என் மதம்தான் உண்மையான மீட்பு தருகிறது' என்றோ, 'மற்ற மதத்தவர்கள் சாத்தானின் பிள்ளைகள்' என்று அவர் எண்ணியது இல்லை. தன் கடவுளை மெய்ப்பிக்க ஊர் ஊராகச் செல்லவில்லை. தன் கடவுளுக்காக அவர் போராடவில்லை. மதம் அல்லது இறைநம்பிக்கை என்பது உயரம் தாண்டுதலின் கைக்கம்பு போன்றதுதான். ஒரு கட்டத்தில் அந்தக் கம்பை நான் விட்டால்தான் குச்சியின் அடுத்த பக்கத்திற்குப் போக முடியும். கம்பைப் பிடித்துக் கொண்டே இருக்க முயல்வது முட்டாள்தனம். என் கிறிஸ்தவ மதம்தான் மேலானது, உண்மையான இறைவனைக் கொண்டிருக்கிறது, கடவுளே மனுவுரு எடுத்தது என்று நான் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை. மதிப்பீடுகள் மனித இனத்திற்குப் பொதுவானவை - இதை உணர்ந்து வாழ்ந்தவர் கலாம்.

கலாம் காலம் சென்றாலும், காலத்திற்கும் நிலைக்கிறார்!

வாழ்க நீ எம்மான்!

3 comments:

  1. கலாம்!.. இந்த மண்ணுக்கு அவரைப் பறிகொடுத்து ஓராண்டுகாலம் ஒரு நிமிடமாய் உருண்டோடிவிட்டது.அவர் உயிர் பிரிந்தபின்னரே இந்த ' மாமனிதனை' ப் பற்றி மக்கள் தெரிந்து கொண்ட விஷயங்கள் அனேகம்.ஒரு மீனவனான அவர் ' கடலைப் பார்த்த நேரத்தை விட, கரையைப்பார்த்த நேரங்கள் தான் அதிகம்' என்கிறார் தந்தை.பின்னால் வளர்ந்தபிறகு தன்னில் ஒளிந்திருந்த அனைத்துக்கட்டுக்களையும் மீறி இந்த நாட்டிற்குத் தன்னை முழுவதுமாய் அர்ப்பணிக்கப் போவதன் ஆரம்பமாய் அன்றே அவர் கனவு கண்டிருக்க வேண்டும்.அனைத்து மதங்களுக்கும்,கடவுளர்க்கும் சொந்தக்காரரான இவர் இன்றைய மதவாதிகளுக்கு கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் அநேகம்.தான் சார்ந்திருக்கும் மதத்தைவிட தான் கொண்டிருக்கும் மதிப்பீடுகள் தான் ஒருவனை உயர்த்தும் என்று உலகிற்கு உரக்கச்சொன்னவர்.இவர் இறந்த அன்று நடந்த நிகழ்ச்சிகளை அவரோடு அன்று இருந்த அவரின் உதவியாளர் எழுதிய கட்டுரையை இன்று நினைத்தாலும் கண்கள் பனிக்கின்றன.தந்தையின வார்த்தைகளில் " காலம் சென்றாலும் காலத்திற்கும் நிலைத்திருப்பவர் கலாம்!".... இதற்கு மேல் அவரைப்பற்றிச் சொல்ல வார்த்தைகள் தேவையில்லை.நல்லதொரு மாமனிதனைப் பற்றித் தந்த பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Anonymous7/28/2016

    Super Yesu. Good Morning Dr

    ReplyDelete
  3. He was a living saint... what an inspiration he was and is to countless people...கலாம் காலம் சென்றாலும், காலத்திற்கும் நிலைக்கிறார்!...semma...

    ReplyDelete