Saturday, July 2, 2016

நீதிமொழிகள் - 15

நான்கு வாரங்களுக்கு முன் எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில் நண்பர் ஒருவர் 'நம்மேல் வந்து விழும் பொழுதுபோக்கு' (passive entertainment) என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை அனுப்பியிருந்தார்.

24 வயது இளைஞனின் கடிதம் அது.

எனக்கு இன்று 24 வயது ஆகிறது. ஆனால் எனக்கு வாழப்பிடிக்கவில்லை. வாழ்க்கை ஒரே மாதிரி ஓடிக்கொண்டு இருக்கிறது. நான் ஒரு கணிணிப் பொறியாளர். பகல் முழுவதும் வேலை. இரவு வீட்டிற்கு வந்தவுடன் தொலைக்காட்சி, சில நேரங்களில் போர்ன், சில நேரங்களில் நண்பர்களுடன் பார்ட்டி, சில நேரங்களில் செக்ஸ், சிலநேரங்களில் சுயஇன்பம். திரும்ப அடுத்த நாள் வேலை. அடுத்த இரவு இந்த ஐந்தில் ஏதாவது ஒன்று. இப்படியேதான் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படித்தான் என் எஞ்சிய வாழ்க்கை இருக்குமா? என்று நினைக்கும்போதே பயமாக இருக்கிறது.

ஒருநாள் நான் முடிவெடுத்தேன். என்மேல் வந்துவிழும் இந்த பொழுதுபோக்குகளை நிறுத்துவது என்று. நான் நிறுத்தினேன்.

செய்தித்தாள் படிப்பது.
நாவல்கள் படிப்பது.
டிவி பார்ப்பது.
சினிமா செல்வது.
போர்ன் பார்ப்பது.
செக்ஸ் மற்றும் சுயஇன்பம் அனுபவிப்பது.
உணவகம் செல்வது.
மது அருந்துவது.

முதல் வாரம். இரண்;டாம் வாரம். மூன்றாம் வாரம். நாட்கள் நகர்ந்தன. அப்படியே பைத்தியம் பிடிப்பது போல இருந்தது. எல்லாம் வெறுமையாகத் தெரிந்தது. அந்த வெறுமையில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன்.

நான் சின்ன வயதில், பாதி வழியில் விட்ட பென்சில் ஸ்கெட்ச் செய்வது, ஸ்கவுட்டில் சேர்ந்து டிரெக்கிங் செய்வது, ஆதரவற்றர்களைத் தேடி ஓடுவது, தன்னார்வத் தொண்டு செய்வது என நானே பொழுது போக்குகளை உருவாக்கிக் கொண்டேன்.

என் நண்பர்கள் என்னை முட்டாள் என்றும், மடையன் என்றும் சொல்கிறார்கள். ஆனால், இன்று நான் என்னையே மறுபடியும் அடையாளம் காண ஆரம்பித்திருக்கிறேன்.

நிற்க.

'ஒருவரது இன்பமோ துன்பமோ அது அவருடையதே. வேறெவரும் அதைத் துய்க்க இயலாது' (நீமொ 14:10) என்கிறார் நீமொ ஆசிரியர்.

அதாவது, எனக்கு தலைவலி என்றால் நான் தான் மாத்திரை போட வேண்டும்.

என் பள்ளிப்பருவ குருகுலத்தில் மாணவர்கள் டிவியில் கிரிக்கெட் பார்க்க எத்தனிப்பார்கள். அப்போது எங்களின் இயக்குநராக இருந்த அருள்திரு. மரிய செல்வம் அவர்கள், 'என்னதான் டென்டுல்கர் 50 அடிச்சாலும், 100 அடிச்சாலும், அது அவரது வெற்றியே தவிர உங்கள் வெற்றியாக ஆகப்போவதில்லை. அவரின் மகிழ்ச்சி உங்களின் மகிழ்ச்சியாக ஆக முடியாது. நீங்கள் நன்றாகப் படித்து தேர்வில் வெற்றி பெற்றால் அது உங்கள் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை மட்டும் தேடுங்கள்' என்பார். அவரின் வார்த்தைகளுக்கு இன்றுதான் எனக்குப் பொருள் தெரிகிறது.

'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்கிறது புறநானூறு.

தீமையும், நன்மையும் நமக்கு வெளியே இருந்து வருவதில்லை. நாமாகவே, நம் சொல்லாலும், செயலாலும் தேடிக்கொள்கிறோம்.

அதுபோலவே, எனக்கு நிகழும் தீமையும், நன்மையும், எனக்கு மட்டுமே துன்பமும், இன்பமும் தரும்.

'தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறுதானே!'

ஆக, என் மகிழ்ச்சிக்கும், என் துன்பத்திற்கும் நான் மற்றவர்களைக் காரணம் காட்டுவது சால்பன்று.

'பகிர்ந்தால் உன் துன்பம் பாதியாகும். உன் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்' என்று சுவரில் எழுதி வைத்திருப்பார்கள். அதை எல்லாம் சீரியஸா எடுக்கக் கூடாது. அப்படி ஒரு முறை சீரியஸா எடுத்து, என் பிரச்சினை ஒன்றை என் நண்பன் ஒருவனிடம் பகிர, அடுத்தநாள் சாப்பாட்டு அறையில் என்னை சந்தித்த, நண்பனின் நண்பன் ஒருவன், 'என்னடா, இப்போ எப்படி இருக்க? பிரச்சினை சரியாயிடுச்சா?' என்று கேட்டான். 'உனக்கு எப்படித் தெரியும்?' எனக் கேட்க, 'அவன்தான் சொன்னான்!' என்று என் நண்பனைக் கை காட்டினான். நம் வாழ்வின் முக்கியமான பிரச்சினைகளை நாம் நண்பர்களிடம் பகிர, அதை அவர்கள் டீ டைமில் பேசும் பேசுபொருளாக மாற்றிவிடுவது எவ்வளவு கொடுமையானது!

ஆக, நல்லதோ, கெட்டதோ எனக்கு நடப்பது எனக்குத்தான். உங்களுக்கு நடப்பது உங்களுக்குத்தான்!

இன்னும் சொல்வேன்...

2 comments:

  1. ஒரு 24 வயது யுவன் தான் வாழ்க்கையில் அவனே பட்டுத் தெரிந்து கொண்ட பாடங்கள் வழியாக நம்மைத் தட்டி எழுப்புகிறார் தந்தை." தீமையும் நன்மையும் நமக்கு வெளியே இருந்து வருவதில்லை; நாமாகவே நம் சொல்லாலும் செயலாலும் தேடிக்கொள்கிறோம்";... " எனக்கு நிகழும் தீமையும்,நன்மையும் எனக்கு மட்டுமே துன்பமும் இன்பமும் தரும்" போன்ற வரிகள் இன்றைய இளைஞர்களின் தாரக மந்திரமாயிருப்பின் எத்துணை நலம்! அவனவன்்தலையெழுத்தை எழுதுவது அவனவன் செய்யும் நல்லது,கெட்டது மட்டுமே என்பதை சுருங்கச் சொல்லும் தந்தைக்குப் பாராட்டுக்கள்! அனைவருக்கும் புனித தோமையாரின் திருநாள் மட்டும் ஞாயிறு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. என் மகிழ்ச்சிக்கும், என் துன்பத்திற்கும் நான் மற்றவர்களைக் காரணம் காட்டுவது சால்பன்று. Very true... the point is its for BOTH happiness as well as sadness... others are NOT responsible... its one's own willingness to let things turn..

    ReplyDelete