Thursday, July 21, 2016

வினைச்சொல்

'மூன்று பேர் ஆண்டவரோடு எப்போதும் இருந்தனர். மரியாள், அவரின் அன்னை. அவரின் சகோதரி. மற்றும் ஆண்டவரின் தோழி என அழைக்கப்பட்ட மகதலேன்.

... ... ...

அவர் (ஆண்டவர்) மகதலேனை எல்லா சீடர்களுக்கும் மேலாக மிக அதிகமாக அன்பு செய்தார். அவரின் உதடுகளில் இதழ் பதித்து அடிக்கடி அவர் முத்தமிடுவார். 'எங்களை விட நீர் அவரை மட்டும் மிகுதியாக அன்பு செய்வதேன்?' என்று சீடர்கள் அவரிடம் கேட்டனர். அப்போது மீட்பர் பதிலாகச் சொன்னது: 'அவளை அன்பு செய்வது போல உங்களை நான் ஏன் அன்பு செய்யவில்லையா? பார்வையற்ற ஒருவரும், பார்வை பெற்ற ஒருவரும் இருளில் இருந்தால், இருவரும் ஒரே நிலையில்தான் இருக்கின்றனர். ஒளி வரும்போது, பார்வை பெற்றவர் ஒளியைக் காண்பார். பார்வையற்றவர் இருளிலேயே இருப்பார்...'

ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி நூல்களில் (Apocryphal Writing) ஒன்றான, 'பிலிப்பின் நற்செய்தியில்' (Gospel of Philip) மேற்காணும் 'இறைவாக்கு' பகுதி இருக்கிறது.

நாளை மகதலா நாட்டு மரியாள் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

திருஅவையின் வழிபாட்டு நாள்காட்டியில் 'நினைவு' என்று இருந்த மதலேன் மரியாள் திருநாளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'திருவிழா' என்று மாற்றியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்!

மதலேன் மரியாள் - இந்தப் பெயரில் நம் ஊரிலும் இன்று நிறையப் பெண்கள் இருக்கிறார்கள்.

'மரியாள்' என்பது பொதுவான பெயராக இருந்ததால், நம் இளவலைத் தனியாக அடையாளம் காணும்பொருட்டு 'மகதலா நாட்டு மரியாள்' அல்லது 'மதலேன் மரியாள்' என அழைத்தனர் நற்செய்தியாளர்கள்.

'மரியாள்' - இது எல்லாருக்கும் பெயர்ச்சொல் என்றால், 'மதலேன் மரியாளுக்கு' ஏனோ வினைச்சொல்லாகவே ஆயிற்று!

'பிலிப்பு நற்செய்தியின்' காலம் தொட்டு, 'தெ லாஸ்ட் டெம்ப்டேஷன்,' 'தெ டாவின்சி கோட்' என இன்று வரை நாவல்கள், திரைப்படங்களில் பேசுபொருளாக இருப்பவர் மதலேன் மரியாள்.

'இயேசு இவரை அன்பு செய்தார்,' 'இவர் இயேசுவை அன்பு செய்தார்' என ஏற்றுக்கொள்ள நம் மனம் இன்றும் தயங்குவது ஏன்?

ஓர் ஆணும், மற்றொரு ஆணும் அன்பு செய்தால் அது ஒன்றுமில்லை, ஓர் ஆண், மற்றொரு பெண்ணை அன்பு செய்வதுதான் தவறு என்று நாம் பார்ப்பதால்தான் இயேசு என்ற ஆண், மதலேனாள் என்ற பெண்ணை அன்பு செய்ததை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மற்ற பக்கம், கடவுள் என்றால் பெண் சுகத்தை (ஆண் சுகத்தை) கடந்தவர் என்ற கருதுகோளும், இதை ஏற்றுக்கொள்வதற்குத் தடையாக இருக்கிறது.

'கட்டிப்பிடிக்கும் தூரத்தில்' கடவுளை நெருக்கமாகக் கொண்டுவந்தவர் இந்த மதலேனா!

நற்செய்தி நூல்களில் இவர் அழுதுகொண்டிருக்கின்ற இளவலாகவே அறிமுகம் செய்யப்படுகின்றார்.

அழுது கொண்டே தன் கண்ணீரால் இயேசுவின் காலடிகளைக் கழுவுகின்றாள்.

கல்லறையின் முன் நின்று கொண்டு அழுகின்றாள்.

கல்லறைக்கு முதுகைத் திருப்பிக் கொண்டு அழுகின்றாள்.

'என்னுடையது கிடைத்துவிட்டது!' என்று எண்ணும்போதும்,

'என்னுடையது என்னை விட்டுப் போய்விடுமோ!' என்று எண்ணும்போதும்,

பெண்கள் அழுதுவிடுகின்றனர்.

இயேசுவைக் கல்லறையில் வைத்தபின் விழித்திருந்தவர் இவர் ஒருவர் மட்டும்தான். 'இந்த இரவு நீங்காதா?' எனச் நகரைச் சுற்றி வருகின்றார். உயிர்க்குயிரான தன் அன்பரைக் கண்டுகொள்கின்றார்.

அவருக்கு எப்போதும் இயேசு மட்டுமே நினைவில் நின்றார்!

அவரே இயேசுவின் உயிர்ப்பின் முதல் சாட்சியாகின்றார்!

1 comment:

  1. " மதலேன் மரியாள்".... எதிர்மறையாகவே பேசப்படும் இவரின் இன்னொரு பக்கத்தைக் காட்டும் அழகானதொரு பதிவு.தன் தாய்க்கு,சகோதரிக்கு இணையாக இயேசு இவரையும் அன்பு செய்துள்ளார் எனில் இது போற்றப்பட வேண்டிய உறவு என்பதில் என்ன சந்தேகம்? அழுகைக்குத் துணைபோகும் இவர் பற்றிக்கூறுகையில் 'என்னுடையது கிடைத்து விட்டது' என்று எண்ணும்போதும், ' என்னுடையது என்னை விட்டுப் போய்விடுமோ' என்று எண்ணும் போதும் பெண்கள் அழுதுவிடுவதாக்க் கூறுகிறார் தந்தை. ஆம் ... இதுதான் பெண்களின் பலமும்,பலவீனமும். இந்த பலத்தை,பலவீனத்தை,ஒரு ஆணுடனான அழகான நட்பை,அதன் புனிதத்தை உலகுக்கு உரக்கச் சொல்கிறார் மதலேன் மரியாள்.யாருக்கும்,எதற்கும் அஞ்சாமல் இயேசுவின் இறப்பு வரை...ஏன் இறந்த பின்னும் கூட அவரோடு இருந்த காரணத்தால்தான் உயிர்த்த இயேசுவின் ஒப்பற்ற மாட்சிமையில் பங்கு பெறுகிறார். உலகம் நம்மையும் பழித்துரைக்கும் தருணங்களில் ' பற்றிக் கொள்ள வேண்டியவரை' மட்டும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டால் " எல்லாமே தொட்டு விடும் தூரம்" தான்.இதுதான் மதலேன் மரியாளின் நமக்குச் சொல்லாமல் சொல்வது.அழகானதொரு புனிதம் படித்த உணர்வைத்தந்த ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு ஒரு 'சல்யூட்!'...

    ReplyDelete