Tuesday, July 19, 2016

அந்த ஒருவர்

இன்று காலை திருப்பலியில் நாம் வாசித்த நற்செய்திப் பகுதியில் (காண். மத் 13:46-50) என்னைக் கவர்ந்த வார்த்தை 'ஒருவர்.'

'ஒருவர்' இயேசுவை நோக்கி, 'அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்' என்கிறார்.

நற்செய்தி நூல்களில் நிறைய இடங்களில் பெயரில்லாத இந்த 'ஒருவர்' வருகிறார்.

'ஒருவர்' தன் மகனை இயேசுவிடம் கொண்டு வந்தார்.

'ஒருவர்' எரிக்கோவுக்கு பயணம் செய்தார்.

பெண் 'ஒருவர்' இயேசுவை தன் இல்லத்தில் வரவேற்றார்.

இந்த ஒருவர் இன்றைய நற்செய்தியில் விநோதமாக இருக்கிறார். எல்லாரும் இயேசு பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்க இவர் மட்டும் வாசலுக்குள் யார் வருகிறார்கள், வாசலை விட்டு யார் போகிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த ஒருவருக்கு இயேசுவின் தாயும், சகோதரர்களும் வந்த நோக்கமும் தெரிந்திருக்கிறது. 'உம்மோடு பேச வேண்டும் எனக் காத்திருக்கிறார்கள்!' என்கிறார்.

இந்த ஒருவர் வழியாக இயேசு ஒரு புதிய பார்வை மாற்றத்தைக் கற்றுத் தருகின்றார்.

பார்ப்பதில், 'மேலோட்டமாகப் பார்ப்பது,' 'ஆழமாகப் பார்ப்பது' என இரண்டு வகைகள் உண்டு.

மேலோட்டமாகப் பார்த்தால், வந்திருந்தவர்கள் 'தாயும் சகோதரர்களும்தான்!'

ஆனால், ஆழமாகப் பார்த்தால், அவர்கள் 'இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்கள்!'

அந்த ஒருவர் இயேசுவிடம் சத்தமிட்டுச் சொன்னதுபோல,

இன்று என்னால், 'ஆண்டவரே, அவர் வந்திருக்கிறார்! இவர் வந்திருக்கிறார்!' என்று என்னால் சத்தமிட்டுக் கூறமுடியுமா?

மேலும், என்னால் மற்றவர்களை 'ஆழமாகப் பார்க்க' முடியுமா?

3 comments:

  1. தந்தை தன்னையே ' ஆத்தும சோதனைக்கு' உட்படுத்தும் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்.நாமும் நம்மையே கேட்டுக்கொள்ளக்கூடியதொரு கேள்விதான்.இன்றைய இந்தப் பகுதியைப் பார்க்கையில் ஒருவரைப் பெயர் சொல்லிக் குறிப்பிடுவதை விட ' ஒருவர்' எனக்குறிப்பிடுவது அந்த ஒருவரின் முக்கியத்துவத்தைக் கூடுதல் வெளிச்சம் போட்டுக்காட்டுவதாகத் தெரிகிறது.அந்த முக்கியத்துவத்துடன் தான் தந்தை குறிப்பிடும் அத்தனை ' 'ஒருவரும்' தெரிகிறார்கள். ஆம்! " இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுபவ்களே இவர்கள்" என்பதில் மாற்றுக்கருத்தில்லை.தந்தை முன் வைப்பது போல் " ஆண்டவரே, அவர் வந்திருக்கிறார்! இவர் வந்திருக்கிறார்! "என நம்மால் சத்தமிட்டுக்கூற முடிந்தால்....நம்மாலும் மற்றவர்களை "ஆழமாகப்பார்க்க"முடிந்தால் நாமும் "இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களே!"... சிறிது இடைவெளிக்குப்பின் தந்த நல்லதொரு செய்திக்காகத் தந்தைக்கு என் நன்றிகள்!!!


    ReplyDelete
  2. Depth... aalam.. nicely explained...

    ReplyDelete
  3. Depth... aalam.. nicely explained...

    ReplyDelete