Sunday, July 24, 2016

லிப்ஸ்டிக் பாப்பாக்கள்

'யாரெல்லாம் லிப்ஸ்டிக் போடலாம்?' என்ற தலைப்பில் 1931ஆம் ஆண்டில் பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் ஒரு கட்டுரை எழுதினார்.

மருத்துவப் பணி, ஆசிரியப் பணி, செவிலியர் பணி செய்வோர் லிப்ஸ்டிப் பயன்படுத்தலாமா, கூடாதா என்ற கேள்வி பெண்ணியவாதிகள் நடுவில் அதிகம் பேசப்பட்டதைக் கிண்டல் செய்து எழுதப்பட்ட கட்டுரை இது.

இன்று காலை ஞாயிறு திருப்பலிக்காக ஒரு கிராமத்திற்குச் சென்றேன். அந்தக் கிராமத்தில் உள்ள மாணவ-மாணவியர் இல்லத்தில் உள்ள குழந்தைகளும் திருப்பலிக்கு வந்திருந்தார்கள். சுமார் 5 வயது முதல் 10 வயது நிரம்பிய 18 குழந்தைகள் ஒரே மாதிரி லிப்ஸ்டிக் அணிந்து வந்திருந்தார்கள்.

நான் 3ஆம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாடகத்திற்காக லிப்ஸ்டிக் அணிந்திருக்கிறேன். சிகப்பு கலர் லிப்ஸ்டிக். இரவு 8 மணி புரோகிராமுக்கு சாயங்காலம் 4 மணிக்கெல்லாம் உதட்டில் லிப்ஸ்டிக் தடவி விட்டார் மல்லிகா டீச்சர். இனிக்கிறது என்பதற்காக வேகமாக ஓடி போட்டிக் கொண்டேன். அன்னைக்குன்னு பார்த்து மழை வந்துடுச்சு. புரோகிராம் இன்னும் லேட்டாகும் என்று சொன்னார்கள். எல்லாருக்கும் டீ ஏற்பாடு செய்யப் பட்டது. பாவி மக! அந்த டீச்சர் லிப்ஸ்டிக் அழிந்து போகும் என்று சொல்லி, எங்க 6 பேருக்கு டீ கொடுக்கல. என்ன கொடுமை சரவணன் இது!

'இது யாருடைய லிப்ஸ்டிக்?' என்று கேட்க, எல்லாரும் ஒரு குழந்தையை நோக்கிக் கைகளை நீட்டினர். அந்தக் குழந்தை வெட்கப்பட்டதில் அதன் கன்னம் இன்னும் சிவந்தது.

தனிவுடைமை, முதலாளித்துவத்தின் அடையாளமான லிப்ஸ்டிக் இங்கே பொதுவுடைமை ஆக்கப்பட்டிருக்கிறது ஆச்சர்யமாக இருந்தது.

தான் பழம் உண்டது தன் கணவனுக்கு தெரியக் கூடாது என நினைத்த ஏவாள் தான் முதலில் உதட்டுச்சாயத்தை (லிப்ஸ்டிக்) கண்டுபிடித்திருக்க வேண்டும்.

திருப்பலி முடிந்த ஓடி வந்த குழந்தைகளில் ஒன்று, 'உங்களுக்கும் லிப்ஸ்டிக் போடவா ஃபாதர்?' என்றது.

'லிப்ஸ்டிக்கின் அழகு குழந்தையின் மழலைப் பேச்சில்தான்' என்ற ஜென் ஞானம் பிறந்தது எனக்கு.

2 comments:

  1. என்ன ஆச்சு ஃபாதர்? நேற்று காதோரத்து நரைமுடி,இன்று லிப்ஸ்டிக்...! காலைத் திருப்பலிக்குக் குழந்தைகள் அணிந்திருந்த லிப்ஸ்டிக் தங்களின் பள்ளி நாட்களையும்,மல்லிகா டீச்சரையும் ' ஞாபகம் வருதே' ஸ்டைலில் பாட வைத்திருப்பது நல்ல விஷயந்தான்.ஆனாலும் " தனிவுடைமை,முதலாளித்துவத்தின் அடையாளமான லிப்ஸ்டிக் இங்கே பொதுவுடைமை ஆக்கப்பட்டிருக்கிறது" , " லிப்ஸ்டிக்கின் அழகு குழந்தையின் மழலைப்பேச்சில்தான்" போன்ற வரிகள் இரசிக்கவும்,யோசிக்கவும் வைக்கின்றன.இறுதியாக யாரெல்லாம் லிப்ஸ்டிக் போடலாம் என்று பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் சொல்கிறார் என்பதை விட்டு விட்டீர்களே! யோசிக்க வைக்கும் ஒரு பதிவு! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. ஒரு சிங்கிள் டீ கிடைக்காததுக்கு இவ்ளோ பீல் பண்ணுறீங்களே .. நாங்கெல்லாம் ப்ரோக்ராம் முடியுற வரை மேல் உதடும் கீழ் உதடும் ஒட்டாம , பூரா " ஈ" ன்னுட்டே திரிஞ்சிருக்கோம் .. மதுரைக்கு வந்தாலும் வந்தீங்க ... நரை முடியும் , லிப்ஸ்டிக்கும் ... நடத்துங்க ..நடத்துங்க ....

    ReplyDelete