Thursday, July 28, 2016

மார்த்தா

நாளை மார்த்தாவின் திருநாள்.

பெத்தானியா இயேசுவுக்கு இரண்டாம் வீடு.

பெத்தானியா வீட்டின் இல்லத்தரசி மார்த்தா. மார்த்தாவை நினைக்கும் போதெல்லாம் அவரை மரியா மற்றும் லாசருக்கு அக்கா என்ற நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும் என்றே தோணும்.

அக்காவுக்குப் பின் பிறந்த தம்பி அல்லது தங்கைக்கு எப்போதும் இரண்டு அம்மாக்கள். ஒன்று, தாய். இரண்டு அக்கா. அக்காக்கள் வீடுகளில் குட்டி அம்மாக்களாகவே இருக்கிறார்கள்.

இயேசுவை தன் இல்லத்திற்கு வரவேற்றவர் இந்தக் குட்டி அம்மா மார்த்தாதான்.

தன் சகோதரன் இறந்த செய்தி கேட்டு இயேசு வந்தபோது அவரை நோக்கி ஓடிச் சென்றதும் இந்தக் குட்டி அம்மாதான்.

இரண்டு முறை மார்த்தா பேசுகின்றார் நற்செய்தி நூல்களில்:

அ. 'என்னோடு வேலை செய்யும்படி என் சகோதரியை என்னுடன் அனுப்பி வையும்!'

இயேசுவிடம் எந்தவித இனிஹிபிஷனும் இல்லாமல் பேசுகிறார் மார்த்தா. 'இயேசு என்ன நினைப்பார்?' என்ற கவலை அவருக்கு இருந்ததே இல்லை.

ஆ. 'நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்!'

இயேசுவை எப்போதும் தன்னுடன் வைத்துக்கொள்ளவும், அவர் தன்னுடன் இறந்தால் தனக்கும், தன் இல்லத்திற்கும் எதுவும் நெருங்காதும் என்றும் அலாதி நம்பிக்கை கொள்கிறார்.

இயேசுவுக்கு அவரின் அம்மா மரியா முதல் பிறப்பைத் தருகின்றார்.

இந்தக் குட்டி அம்மா அவருக்கு இரண்டாம் பிறப்பைத் தருகின்றார்.

மரியா வழியாக இயேசு இந்த உலகிற்கு வந்தார்.

மார்த்தா வழியாக இயேசு நம் வீட்டிற்கு வரும் அளவுக்கு நெருக்கமாகிறார்.

இறுதியாக,

'பலவற்றைக் குறித்துக் கவலைப்பட்டவர் மார்த்தா!'

இதுதான் நம் வாழ்வின் எதார்த்தம்.

இயேசுவின் காலடியில் அமர்ந்து அமைதியாக இருக்கும் தங்கை மரியாவைப் போல வாழ்க்கை நம் அனைவருக்கும் அமைவதில்லை.

நாம் இவ்வுலகில் வாழும் வரை மார்த்தா போல ஓடிக்கொண்டேதான் இருக்கின்றோம்.

இன்று நாம் பலவற்றைக் குறித்துக் கவலைப்படவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

கவலைகள்தாம் வாழ்க்கை.

ஆக, கடவுளின் பாதம் அமர்வதை விடுத்து இன்னும் கொஞ்சம் கவலைப்படுவோம்!

மார்த்தாவின் கவலைகளும் இயேசுவை மையப்படுத்தியேதான் இருந்தன!

Wednesday, July 27, 2016

அப்துல் கலாம்

இன்று அப்துல் கலாம் அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாள்.

அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களாக இன்று நான் எடுத்துக் கொள்வது மூன்று:

அ. கட்டுக்களை மீறி சிந்திப்பது

கலாம் கடற்கரையில் சின்ன வயதில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர் கடலைப் பார்த்த நேரத்தை விட கரையைப் பார்த்த நேரம்தான் அதிகம் இருக்கும் என நினைக்கிறேன். கடலை மட்டுமே பார்த்திருந்தால் ஒருவேளை அவர் சாதாரண மீனவராகத்தான் மாறியிருப்பார். கரையைப் பார்த்து நின்றதால் தான் நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தார். இல்லையா? 'இதுதான் என் வாழ்க்கை. இதுதான் என் பெற்றோர் தொழில். இதுதான் நான்' என எந்தக் கட்டுக்களுக்குள்ளும் அவர் தன்னை அடக்கிக் கொள்ளவில்லை. கட்டுக்களை மீறி சிந்திக்கின்றார். கட்டுக்களை மீறி சிந்திக்கும் சிந்தனைதான் பின் செயல்வடிவம் பெறும்.

ஆ. அர்ப்பணம்

தான் செய்த எல்லாவற்றிலும் அர்ப்பணம் கலந்து செய்கின்றார் கலாம். படிப்பு, பணி, விஞ்ஞானிப் பணி, குடியரசுத் தலைவர் பணி என எது என்றாலும் அதை முழுiமாகச் செய்கின்றார். நான் பல நேரங்களில் என முழு ஆற்றலைப் பயன்படுத்துவது கிடையாது. காரணம், போதுமான அர்ப்பணம் கிடையாது. செய்யும் எல்லாவற்றிலும் அர்ப்பணம் கலந்து செய்தால் என்னால் என் சிறப்பானதை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்.

இ. மதிப்பீடுகள்

கலாம் ஒரு இசுலாமியராக பிறந்து, வளர்ந்து, இயற்கை எய்தினார். தன் மதம் குறித்த எந்த ஒரு மேட்டிமை உணர்வும் அவரிடம் இல்லை. 'என் மதம்தான் சிறந்தது' என்றோ, 'என் மதம்தான் உண்மையான மீட்பு தருகிறது' என்றோ, 'மற்ற மதத்தவர்கள் சாத்தானின் பிள்ளைகள்' என்று அவர் எண்ணியது இல்லை. தன் கடவுளை மெய்ப்பிக்க ஊர் ஊராகச் செல்லவில்லை. தன் கடவுளுக்காக அவர் போராடவில்லை. மதம் அல்லது இறைநம்பிக்கை என்பது உயரம் தாண்டுதலின் கைக்கம்பு போன்றதுதான். ஒரு கட்டத்தில் அந்தக் கம்பை நான் விட்டால்தான் குச்சியின் அடுத்த பக்கத்திற்குப் போக முடியும். கம்பைப் பிடித்துக் கொண்டே இருக்க முயல்வது முட்டாள்தனம். என் கிறிஸ்தவ மதம்தான் மேலானது, உண்மையான இறைவனைக் கொண்டிருக்கிறது, கடவுளே மனுவுரு எடுத்தது என்று நான் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை. மதிப்பீடுகள் மனித இனத்திற்குப் பொதுவானவை - இதை உணர்ந்து வாழ்ந்தவர் கலாம்.

கலாம் காலம் சென்றாலும், காலத்திற்கும் நிலைக்கிறார்!

வாழ்க நீ எம்மான்!

Tuesday, July 26, 2016

வெற்றிடம்

ஒருவழியாக அண்ணாவின் 'இந்துமதமும் தமிழரும்' என்ற நூலை வாசித்து முடித்தாயிற்று.

220 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் அதிகமாக சைவ சமயத்தையும், போகிற போக்கில் மற்ற சமயங்களையும் சாடுகின்றார் அண்ணா.

'கடவுள்' என்ற ஒரு சிந்தனையை பகுத்தறிவு மறுக்குமா?

'இல்லை' என்றே சொல்வேன். அதையே அண்ணாவும் சொல்கிறார்.

'என்னால் இவ்வளவுதான் முடிகிறது!' ஆனால் 'இன்னும் என்னால் முடியும்!' என்று மனிதர்கள் இரு துருவங்களுக்கு நடுவே போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

நம் வரையறையை மிஞ்சி மேலெழும்பு நிற்கும் ஆற்றல் நம் அனைவருக்கும் இருக்கிறது.

அந்த ஆற்றலில் தான் நமக்கு மிஞ்சிய ஒரு ஆற்றலை உணர்கின்றோம். அந்த ஆற்றலுக்குத்தான் நம் கடவுள், அல்லது அல்லா, அல்லது இயேசு, அல்லது சிவன், அல்லது முருகன் எனப் பெயரிடுகின்றோம்.

அந்த ஆற்றல் தனி மனிதர் சார்ந்தது.

அதற்குப் பெயர், புத்தகம், அடையாளம், சடங்கு என வரையறை வரைவது மடமை.

2000 ஆம் ஆண்டுகளுக்கு முன் வணங்கப்பட்ட கடவுளர்கள் இன்று மறக்கப்பட்டுவிட்டனர். இன்று நாம் கொண்டாடும் கடவுளர்கள் நாளை மறக்கப்படலாம்.

ஆனால், மனித குலம் என்றும் தன் உள்ளத்தில் இருக்கும் அந்த வெற்றிடத்தை அடைக்க முயன்றுகொண்டே இருக்கும்.

அந்த வெற்றிடம் இருக்கும் வரைக்கும் கடவுளுக்கான தேடல் இருக்கும்.

Monday, July 25, 2016

தங்கம் லோன்

இரண்டு நாள்களுக்கு முன் ஆபரணத் தங்க நகை கடைகளின் உரிமையாளர்களை டில்லியில் சந்தித்த நம் பிரதமர் மோடி இரண்டு விஷயங்களைச் சொன்னார்:

அ. கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அதை அரசிடம் சொல்லிவிட வேண்டும்.

ஆ. வீட்டில் அனைவரும் வைத்திருக்கும் தங்க நகைகளை அரசிடம் ஒப்படைத்து இரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, நாம் தங்க நகைகளை வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைதான் பயன்படுத்துகின்றோமாம். மற்ற நாட்கள் எல்லாம் அது நம் வீட்டில் சும்மா தான் இருக்கிறதாம். சும்மா இருக்கிறதை அரசிடம் கொடுத்தால் அரசின் தங்க இருப்பு அதிகமாகுமாம். நம் நாடு வளர்ந்த நாடாகிவிடுமாம்.

இதுதான் நம்ம மோடி மஸ்தான் வித்தை.

நம்ம நாட்டில் உள்ள வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி விட்டு இங்கிலாந்து சென்றுவிட்டார் மல்லையா. 'அவரிடம் இருந்து கடனை எப்படி பெறப் போகிறீர்கள்?' என்று நிருபர் ஒருவர் மோடியிடம் கேட்கின்றார்.

அதற்கு மோடி சொல்கிறார்: 'மல்லையாவின் ரேஷன் கார்ட் மற்றும் கேஸ் மானியம் ரத்து செய்யப்பட்டிருக்கிறதாம்!'

ஆமாம் மோடி சார். ரேஷன்ல அரிசி, பருப்பு, சீனி வாங்க முடியாம மல்லையா ரொம்ப கஷ்டப்படுவார். உடனே உங்ககிட்டு வந்த சரணடைந்துவிடுவார்.

'சீப்பை ஒளிச்சு வச்சா கல்யாணம் நடக்காதுன்னு!' சொல்ற வடிவேல் காமெடி மாதிரி இருக்கு உங்கள் பதில்.

வாழ்த்துக்கள்!

நிற்க.

இன்று ஒரு வங்கியில் காசோலை மாற்றச் சென்றிருந்தேன்.

மதியம் வழக்கமாகக் காற்றாடும் அந்த வங்கியில் இன்று நிறைய பெண்கள் கூட்டம்.

திங்கள் கிழமை மதியம்தான் நகைக்கடன்கள் முடித்தவர்களுக்கு நகைகள் திரும்ப கொடுக்கப்படுமாம். ஆகையால்தான் இவ்வளவு கூட்டம்.

ஒரு அம்மா தான் ஒரு லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்த ஐந்து பவுன் நகைகளை திரும்பப் பெறுவதற்காக வந்திருந்தார். அவரின் விண்ணப்பங்களை சரி செய்த மேனேஜர் அவரின் நகைகளை திரும்ப ஒப்படைத்தார். நகைகள் இருந்த பையின் சீலை அவரால் பிரிக்க முடியாமல், யாரிடம் கொடுக்க என்று அவரே யோசித்து, அந்த வங்கியிலேயே நம்பிக்கைக்குரியவராய் தெரிந்த என்னிடம் கொண்டு வந்தார்.

'தம்பி! இதைப் பிரிங்க!' என்றார்.

கஷ்டப்பட்டுப் பிரித்தேன்.

'என் மகளின் தலைப்பிரசவத்துக்கு அடகு வைத்த நகைகள். குழந்தை பிறந்து இறந்து விட்டது. அம்மாவை மட்டும்தான் காப்பாற்ற முடிந்தது. ஐந்து வருடங்களாகக் கட்டி இப்போதுதான் மீட்கிறேன்' என்றார்.

அவர் பேசி முடிக்கவும், நான் பிரிக்கவும் சரியாக இருந்தது.

'வேகமாக அவற்றை வாங்கித் தன் கைகளால் தடவிப்பார்த்தார்!'

பேறுகால வேதனையுற்ற தன் மகளின் வியர்வைத் துளிகள் அந்த செயினிலும், வளையலிலும் படிந்திருப்பதை அவர் அறிந்து கொண்டார் போல!

வெறும் மஞ்சள் கையிற்றை மட்டும் கழுத்தில் கட்டிக் கொண்டு நிறையப் பெண்கள் கூலி வேலை செய்வதையும், காய்கறிகள் விற்பதையும், கட்டிட வேலைகள் செய்வதையும் பார்த்திருக்கிறேன்.

இந்த மஞ்சள் கயிறுகளுக்குப் பின் எத்தனையோ வங்கிகளின் அடகுச் சீட்டுகள் இருக்கலாம்.

நம்ம மோடிக்கு யார் சொல்வார் இந்த மஞ்சள் கயிறுகள் பற்றி?

Sunday, July 24, 2016

லிப்ஸ்டிக் பாப்பாக்கள்

'யாரெல்லாம் லிப்ஸ்டிக் போடலாம்?' என்ற தலைப்பில் 1931ஆம் ஆண்டில் பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் ஒரு கட்டுரை எழுதினார்.

மருத்துவப் பணி, ஆசிரியப் பணி, செவிலியர் பணி செய்வோர் லிப்ஸ்டிப் பயன்படுத்தலாமா, கூடாதா என்ற கேள்வி பெண்ணியவாதிகள் நடுவில் அதிகம் பேசப்பட்டதைக் கிண்டல் செய்து எழுதப்பட்ட கட்டுரை இது.

இன்று காலை ஞாயிறு திருப்பலிக்காக ஒரு கிராமத்திற்குச் சென்றேன். அந்தக் கிராமத்தில் உள்ள மாணவ-மாணவியர் இல்லத்தில் உள்ள குழந்தைகளும் திருப்பலிக்கு வந்திருந்தார்கள். சுமார் 5 வயது முதல் 10 வயது நிரம்பிய 18 குழந்தைகள் ஒரே மாதிரி லிப்ஸ்டிக் அணிந்து வந்திருந்தார்கள்.

நான் 3ஆம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாடகத்திற்காக லிப்ஸ்டிக் அணிந்திருக்கிறேன். சிகப்பு கலர் லிப்ஸ்டிக். இரவு 8 மணி புரோகிராமுக்கு சாயங்காலம் 4 மணிக்கெல்லாம் உதட்டில் லிப்ஸ்டிக் தடவி விட்டார் மல்லிகா டீச்சர். இனிக்கிறது என்பதற்காக வேகமாக ஓடி போட்டிக் கொண்டேன். அன்னைக்குன்னு பார்த்து மழை வந்துடுச்சு. புரோகிராம் இன்னும் லேட்டாகும் என்று சொன்னார்கள். எல்லாருக்கும் டீ ஏற்பாடு செய்யப் பட்டது. பாவி மக! அந்த டீச்சர் லிப்ஸ்டிக் அழிந்து போகும் என்று சொல்லி, எங்க 6 பேருக்கு டீ கொடுக்கல. என்ன கொடுமை சரவணன் இது!

'இது யாருடைய லிப்ஸ்டிக்?' என்று கேட்க, எல்லாரும் ஒரு குழந்தையை நோக்கிக் கைகளை நீட்டினர். அந்தக் குழந்தை வெட்கப்பட்டதில் அதன் கன்னம் இன்னும் சிவந்தது.

தனிவுடைமை, முதலாளித்துவத்தின் அடையாளமான லிப்ஸ்டிக் இங்கே பொதுவுடைமை ஆக்கப்பட்டிருக்கிறது ஆச்சர்யமாக இருந்தது.

தான் பழம் உண்டது தன் கணவனுக்கு தெரியக் கூடாது என நினைத்த ஏவாள் தான் முதலில் உதட்டுச்சாயத்தை (லிப்ஸ்டிக்) கண்டுபிடித்திருக்க வேண்டும்.

திருப்பலி முடிந்த ஓடி வந்த குழந்தைகளில் ஒன்று, 'உங்களுக்கும் லிப்ஸ்டிக் போடவா ஃபாதர்?' என்றது.

'லிப்ஸ்டிக்கின் அழகு குழந்தையின் மழலைப் பேச்சில்தான்' என்ற ஜென் ஞானம் பிறந்தது எனக்கு.

Saturday, July 23, 2016

மஞ்சள் பொண்ணு

ஆரப்பாளையத்திலிருந்து மாட்டுத்தாவணி செல்லும் பேருந்தில் ஏறினேன்.

நான் ஏறிய அடுத்த நிறுத்தத்தில் ஒரு பையனும், பொண்ணும் (வயது 24 முதல் 20க்குள்) ஏறினார்கள். நான் அமர்ந்திருந்த சீட்டில் ஓர் இடமும், எனக்குப் பின் உள்ள சீட்டில் ஓர் இடமும் என இரண்டு இடங்கள் இருந்தன.

நாம கஷ்டப்பட்டு இப்படி சீட் பிடிக்கும் நேரத்தில் எல்லாம் ஏதாவது பொண்ணு அல்லது அக்கா வந்து, 'கொஞ்சம் மாறி ஒக்காருங்க!' என்று சொல்வார்கள். எல்லார் முன்னிலையிலும் அவமானப்பட்டு(!) எழுந்து செல்ல வேண்டும்.

அந்தப் பொண்ணு சொல்றதுக்கு முன்னாடி நானே எழுந்திடலாம் என நினைத்து எழுந்தேன்.

அந்தப் பையன் அந்தப் பொண்ணிடம், 'பிரியங்கா! நீ அவர் அருகில் உட்கார்!' என்றார்.

எனக்கு சற்று ஆச்சர்யம்.

இந்தியா வல்லரசாகிவிட்டதா?

'சும்மா! உட்காரும்மா!' என்றார் மறுபடியும்.

நான் எழுந்துவிடலாம் என நினைத்துக் கொண்டிருந்த நொடியில் உட்கார்ந்து விட்டார்.

உதட்டோரம் சின்னப் புன்னகை.

மஞ்சள் கலர் சுடிதார் அணிந்திருந்தார். மற்றபடி வேறெதும் பார்க்காமல் நான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் மூழ்கிவிட்டேன்.

இடையிடையே பின்னால் இருக்கும் பையன் இவரோடு பேசிக்கொண்டிருந்தார். பேச்சை வந்து அவர்கள் நாகர்கோவில் பக்கம் உள்ளவர்கள் என்று புரிந்து கொண்டேன்.

அவர்கள் இறங்குவதற்கு முன் உள்ள நிறுத்தத்தில் இறங்க வேண்டியிருந்ததால்,

'எக்ஸ்க்யூஸ்மி!' என்றேன். மஞ்சள் பொண்ணு எழுந்து வழிவிட்டார்.

'நன்றி!' என்று சொல்லிவிட்டு வீடு வந்தேன்.

குளித்துவிட்டு தலையைத் துவட்டியபோது, என் இடது காதோரம் சில முடிகள் நரைத்திருந்தன.

அந்த மஞ்சள் பொண்ணு என்னருகில் உட்கார்ந்ததன் அர்த்தம் வேகமாகப் புரிய ஆரம்பித்தது.


Friday, July 22, 2016

அறிஞர் அண்ணா

ஒரு வாரமாக, அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய 'இந்துமதமும் தமிழரும்' என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன்

தமிழர்கள் இயல்பிலேயே கடவுள் நம்பிக்கை அற்றவர்கள், பகுத்தறிவை மட்டும் கொண்டவர்கள் என்பதற்கு அவர் முன்வைக்கும் சான்றுகள் வியக்க வைக்கின்றன.

போகிற போக்கில் எல்லா மதங்களையும், மதங்கள் கொண்டிருக்கும் மூடப்பழக்கங்களையும் சாடுகிறார்.

இரண்டு நாட்களாக ஒரே கேள்வி:

அண்ணா மோட்சத்துக்குப் போயிருப்பாரா? அல்லது நரகத்துக்குப் போயிருப்பாரா?

Thursday, July 21, 2016

வினைச்சொல்

'மூன்று பேர் ஆண்டவரோடு எப்போதும் இருந்தனர். மரியாள், அவரின் அன்னை. அவரின் சகோதரி. மற்றும் ஆண்டவரின் தோழி என அழைக்கப்பட்ட மகதலேன்.

... ... ...

அவர் (ஆண்டவர்) மகதலேனை எல்லா சீடர்களுக்கும் மேலாக மிக அதிகமாக அன்பு செய்தார். அவரின் உதடுகளில் இதழ் பதித்து அடிக்கடி அவர் முத்தமிடுவார். 'எங்களை விட நீர் அவரை மட்டும் மிகுதியாக அன்பு செய்வதேன்?' என்று சீடர்கள் அவரிடம் கேட்டனர். அப்போது மீட்பர் பதிலாகச் சொன்னது: 'அவளை அன்பு செய்வது போல உங்களை நான் ஏன் அன்பு செய்யவில்லையா? பார்வையற்ற ஒருவரும், பார்வை பெற்ற ஒருவரும் இருளில் இருந்தால், இருவரும் ஒரே நிலையில்தான் இருக்கின்றனர். ஒளி வரும்போது, பார்வை பெற்றவர் ஒளியைக் காண்பார். பார்வையற்றவர் இருளிலேயே இருப்பார்...'

ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி நூல்களில் (Apocryphal Writing) ஒன்றான, 'பிலிப்பின் நற்செய்தியில்' (Gospel of Philip) மேற்காணும் 'இறைவாக்கு' பகுதி இருக்கிறது.

நாளை மகதலா நாட்டு மரியாள் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

திருஅவையின் வழிபாட்டு நாள்காட்டியில் 'நினைவு' என்று இருந்த மதலேன் மரியாள் திருநாளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'திருவிழா' என்று மாற்றியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்!

மதலேன் மரியாள் - இந்தப் பெயரில் நம் ஊரிலும் இன்று நிறையப் பெண்கள் இருக்கிறார்கள்.

'மரியாள்' என்பது பொதுவான பெயராக இருந்ததால், நம் இளவலைத் தனியாக அடையாளம் காணும்பொருட்டு 'மகதலா நாட்டு மரியாள்' அல்லது 'மதலேன் மரியாள்' என அழைத்தனர் நற்செய்தியாளர்கள்.

'மரியாள்' - இது எல்லாருக்கும் பெயர்ச்சொல் என்றால், 'மதலேன் மரியாளுக்கு' ஏனோ வினைச்சொல்லாகவே ஆயிற்று!

'பிலிப்பு நற்செய்தியின்' காலம் தொட்டு, 'தெ லாஸ்ட் டெம்ப்டேஷன்,' 'தெ டாவின்சி கோட்' என இன்று வரை நாவல்கள், திரைப்படங்களில் பேசுபொருளாக இருப்பவர் மதலேன் மரியாள்.

'இயேசு இவரை அன்பு செய்தார்,' 'இவர் இயேசுவை அன்பு செய்தார்' என ஏற்றுக்கொள்ள நம் மனம் இன்றும் தயங்குவது ஏன்?

ஓர் ஆணும், மற்றொரு ஆணும் அன்பு செய்தால் அது ஒன்றுமில்லை, ஓர் ஆண், மற்றொரு பெண்ணை அன்பு செய்வதுதான் தவறு என்று நாம் பார்ப்பதால்தான் இயேசு என்ற ஆண், மதலேனாள் என்ற பெண்ணை அன்பு செய்ததை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மற்ற பக்கம், கடவுள் என்றால் பெண் சுகத்தை (ஆண் சுகத்தை) கடந்தவர் என்ற கருதுகோளும், இதை ஏற்றுக்கொள்வதற்குத் தடையாக இருக்கிறது.

'கட்டிப்பிடிக்கும் தூரத்தில்' கடவுளை நெருக்கமாகக் கொண்டுவந்தவர் இந்த மதலேனா!

நற்செய்தி நூல்களில் இவர் அழுதுகொண்டிருக்கின்ற இளவலாகவே அறிமுகம் செய்யப்படுகின்றார்.

அழுது கொண்டே தன் கண்ணீரால் இயேசுவின் காலடிகளைக் கழுவுகின்றாள்.

கல்லறையின் முன் நின்று கொண்டு அழுகின்றாள்.

கல்லறைக்கு முதுகைத் திருப்பிக் கொண்டு அழுகின்றாள்.

'என்னுடையது கிடைத்துவிட்டது!' என்று எண்ணும்போதும்,

'என்னுடையது என்னை விட்டுப் போய்விடுமோ!' என்று எண்ணும்போதும்,

பெண்கள் அழுதுவிடுகின்றனர்.

இயேசுவைக் கல்லறையில் வைத்தபின் விழித்திருந்தவர் இவர் ஒருவர் மட்டும்தான். 'இந்த இரவு நீங்காதா?' எனச் நகரைச் சுற்றி வருகின்றார். உயிர்க்குயிரான தன் அன்பரைக் கண்டுகொள்கின்றார்.

அவருக்கு எப்போதும் இயேசு மட்டுமே நினைவில் நின்றார்!

அவரே இயேசுவின் உயிர்ப்பின் முதல் சாட்சியாகின்றார்!

Wednesday, July 20, 2016

அந்தக் காலணிகள்

இன்று எங்களின் அலுவலகங்களைச் சுத்தம் செய்தோம்.

தேவையற்றதைக் கழித்து ஒதுக்கவும், அறையின் ஒட்டடை மற்றும் குப்பைகளை அகற்றவும் வெளியிலிருந்து ஆட்களை அழைத்திருந்தோம்.

'ஆட்கள் வேலை செய்கிறார்கள். சென்று பார்ப்போம்!' என நான் புறப்பட்டேன்.

செல்லும் வழியில் ஒரு அம்மா தன் தலையில் சும்மாடு இட்டு பெரிய ஃபோட்டோக்கள் இரண்டை சுமந்து கொண்டு வந்தார்கள். அந்த அம்மாவிற்கு வயது 60ஐ ஒட்டி இருக்கும். அவரைப் பார்த்தவுடன் என் நினைவு சட்டென்று உறைந்துவிட்டது.

இந்த 60 வயதிலும் தன் தேவைக்காக, தன் குடும்பத்தின் தேவைக்காக இவர் உழைப்பதைப் பார்க்கும்போது எனக்கு குற்ற உணர்வாக இருந்தது.

'நான் வேலை பார்ப்பதில்லை. அவர்கள் வேலை பார்க்கிறார்கள்!' என்று நான் சொல்ல வரவில்லை.

இருந்தாலும், நான் வேலை பார்ப்பது என்னவோ குறைவுதான் என்று தோன்றிற்று.

அவர்கள் தூரத்தில் இருந்து வருவதாகச் சொன்னார்கள். ஒரு நிமிடம் கூட நிற்கவில்லை. காலையில் என்ன சாப்பிட்டிருப்பார்கள்? மதியம் என்ன சாப்பிட்டார்கள்? என எதுவும் எனக்குத் தெரியாது. மதியம் தூங்கவும் இல்லை. மதிய உணவு முடிந்த அடுத்த நிமிடம் வேலையைத் தொடங்கிவிட்டார்கள்.

ஒடுங்கிய தேகம். ஒடுங்காத உற்சாகம். மிக எளிமையான தோற்றம்.

நான் கொஞ்ச நேரம் வேலை செய்தாலும் நிறைய வேலை செய்ததாக நினைத்துக் கொள்கிறேன். சில நேரங்களில் நான் செய்யும் வேலை தான் சிறந்தது என்ற எண்ணமும் வந்து போகிறது. கொஞ்ச நேர வேலைக்கு மதிய ஓய்வு வேறு சில நேரங்களில்.

அவர்கள் காலையிலிருந்து மாலை வரை செய்த வேலையில் அலுவலகம் தூய்மையாகிவிட்டது. அவர்களின் உழைப்பின் பலன் உடனடியாகத் தெரிந்துவிடுகிறது.

ஆனால் என் உழைப்பின் பயன் எதிலும் தெரிவதில்லை.

என் உழைப்போடு நான் சமரசம் செய்கிறேனோ?

அல்லது என் உழைப்பை விட அதிக சௌகரியங்களை நான் அனுபவிக்கின்றேனோ?

கைக்குக் கவசம் இல்லை.

மூக்குக்கு முகமூடி இல்லை.

அவரின் பாதங்களை விட கொஞ்சம் நீளமாகவே இருந்த தேய்ந்த காலணிகளை அணிந்து கொண்டு அவர் இன்னும் என் வராண்டாவில் நடந்து செல்வதுபோலவே எனக்குத் தெரிகின்றது.

அந்த அம்மாவின் பெயரைக் கேட்கவும் துணிச்சல் பிறக்கவில்லை எனக்கு.

வாழ்வில் அத்தியாவசியங்களே இல்லாமல் அவர்களால் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடிகிறது?

சின்னச் சின்ன அசௌகரியங்களை என்னால் ஏன் சகித்துக் கொள்ள முடியவில்லை?

அவர்கள் நிம்மதியாக இரவில் உறங்கச் செல்வார்கள். ஆனால், ஓய்வு, நிறைவு, சௌகரியங்கள் இருக்கும் எனக்கு இரவில் மனச்சோர்வு வருவது ஏன்?

எனக்கு ஓர் ஆசை.

அந்த அம்மாவின் காலணிகளைக் கேட்டு வாங்க வேண்டும் என்று.

60 வயது நிரம்பிய ஒரு பாட்டி தன் வயிற்றுத் தேவைக்கு உழைத்து வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என் மண்ணில், என் தேவைகள் பெரிதல்ல என்று அந்தக் காலணிகள் எனக்கு உணர்த்தும்!

Tuesday, July 19, 2016

அந்த ஒருவர்

இன்று காலை திருப்பலியில் நாம் வாசித்த நற்செய்திப் பகுதியில் (காண். மத் 13:46-50) என்னைக் கவர்ந்த வார்த்தை 'ஒருவர்.'

'ஒருவர்' இயேசுவை நோக்கி, 'அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்' என்கிறார்.

நற்செய்தி நூல்களில் நிறைய இடங்களில் பெயரில்லாத இந்த 'ஒருவர்' வருகிறார்.

'ஒருவர்' தன் மகனை இயேசுவிடம் கொண்டு வந்தார்.

'ஒருவர்' எரிக்கோவுக்கு பயணம் செய்தார்.

பெண் 'ஒருவர்' இயேசுவை தன் இல்லத்தில் வரவேற்றார்.

இந்த ஒருவர் இன்றைய நற்செய்தியில் விநோதமாக இருக்கிறார். எல்லாரும் இயேசு பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்க இவர் மட்டும் வாசலுக்குள் யார் வருகிறார்கள், வாசலை விட்டு யார் போகிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த ஒருவருக்கு இயேசுவின் தாயும், சகோதரர்களும் வந்த நோக்கமும் தெரிந்திருக்கிறது. 'உம்மோடு பேச வேண்டும் எனக் காத்திருக்கிறார்கள்!' என்கிறார்.

இந்த ஒருவர் வழியாக இயேசு ஒரு புதிய பார்வை மாற்றத்தைக் கற்றுத் தருகின்றார்.

பார்ப்பதில், 'மேலோட்டமாகப் பார்ப்பது,' 'ஆழமாகப் பார்ப்பது' என இரண்டு வகைகள் உண்டு.

மேலோட்டமாகப் பார்த்தால், வந்திருந்தவர்கள் 'தாயும் சகோதரர்களும்தான்!'

ஆனால், ஆழமாகப் பார்த்தால், அவர்கள் 'இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்கள்!'

அந்த ஒருவர் இயேசுவிடம் சத்தமிட்டுச் சொன்னதுபோல,

இன்று என்னால், 'ஆண்டவரே, அவர் வந்திருக்கிறார்! இவர் வந்திருக்கிறார்!' என்று என்னால் சத்தமிட்டுக் கூறமுடியுமா?

மேலும், என்னால் மற்றவர்களை 'ஆழமாகப் பார்க்க' முடியுமா?

Sunday, July 10, 2016

நீதிமொழிகள் - 23

'பிள்ளாய்! தேன் சாப்பிடு. அது நல்லது. கூட்டினின்று ஒழுகும் தேன் உன் வாய்க்கு தித்திப்பாய் இருக்கும்.'
(நீமொ 24:13)

'தேன் கிடைத்தால் அளவோடு சாப்பிடு. அளவை மீறினால் தெவிட்டிப் போகும். நீ வாந்தியெடுப்பாய்.'
(நீமொ 25:16)

'தேனை மிகுதியாக சாப்பிடுவது நன்றன்று. புகழ்ச்சியை மிகுதியாக விரும்புவதும் நன்றன்று.'
(நீமொ 25:27)

'தேன்' என்ற வார்த்தையை அடுத்தடுத்து கையாளும் ஆசிரியர் அதை மூன்று அர்த்தங்களில் பயன்படுத்துகின்றார்.

அ. இனிமையாக இருக்கும் தேனை சாப்பிடு. அது நல்லது.

ஆ. அளவோடு சாப்பிடு. அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து.

இ. புகழ்ச்சி என்பது தேனைப் போன்றது. அதை அதிகம் விரும்பாதே.

இனிமையாக இருக்கும் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். இது முதல் பாடம்.

இனிமையாக இருக்கும் எதுவும் அளவோடும் இருக்க வேண்டும். இது இரண்டாம் பாடம்.

Saturday, July 9, 2016

நீதிமொழிகள் - 22

'துன்பக் கதறல்,
துயரக் கண்ணீர்,
ஓயாத சண்டை,
ஒழியாத புலம்பல்,
காரணம் தெரியாமல் கிடைத்த புண்கள்,
கலங்கிச் சிவந்திருக்கும் கண்கள்
- இவை அனைத்தையும் அனுபவிப்பவர் யார்?
திராட்சை இரச மதுவில் நீந்திக் கொண்டிருப்பவர்களே!'

(நீமொ 23:29)

நீதிமொழிகள் நூல் ஆசிரியர் அதிகமாக முன்வைத்து அறிவுறுத்தும் மற்றொரு செயல் 'மது அருந்துவது.' திராட்சை மது அருந்துவது தேவையற்ற ஒரு செயலாகப் பார்க்கப்பட்டது.
மேற்கத்திய நாடுகளில் மது என்பது உணவு வகைகளில் ஒன்று என கருதப்படுகிறது. ஆனால், கீழைத்தேய மதங்களும், நாடுகளும் மதுவை விலக்கப்பட்ட பொருளாகவே கருதுகின்றன.

நம் தெய்வப்புலவர் திருவள்ளுவரும் தம் திருக்குறளில், 'கள்ளுண்ணாமை' பற்றி ஒரு அதிகாரம் முழுக்கப் பேசுகின்றார் (எண். 93).

இன்று நம் தமிழகத்தில் மது ஒழிப்பு தேவையா, இல்லையா என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்க, மற்ற பக்கம் சிலர் நன்றாகக் குடிக்கின்றனர். சிலர் குடிப்பதை நிறுத்துகின்றனர்.

மதுவினால் நன்மை ஒன்றும் இல்லை.

ஆக, அதை ஒதுக்குதல் நலம்.


Friday, July 8, 2016

நீதிமொழிகள் - 21

'கர்ணன்' திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு.

தகுந்த வேளையில் பலி கொடுப்பவர்களே போரில் வெல்வார்கள் என்று துரியோதனனுக்குச் சொல்லப்படும்.

சாஸ்திரங்கள் கற்றறிந்த பாண்டவர்களின் இளைய சகோதரன் சகாதேவனை நாடி வருவார் துரியோதனன். 'பலி கொடுப்பதற்கு தகுந்த நேரம் எது?' என்று அவர் கேட்க, இவரும் நேரம் குறித்துக் கொடுத்துவிடுவார்.

இப்படி பலி கொடுத்துவிட்டால் நிச்சயம் துரியோதனன் வெற்றி பெறுவார் என்ற கேள்விப்பட்ட பாண்டவர்கள், குறிப்பாக பீமன், சகாதேவன் மேல் கோபம் கொள்வார்கள்.

'இந்தத் தவற்றிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்!' என்று பாண்டவர்களும், பாஞ்சாலியும் கண்ணனிடம் (கிருஷ்ணா) புலம்புவார்கள்.

அப்பொழுது கண்ணன் (கிருஷ்ண பரமாத்மா) சொல்வார்:

'உங்களின் எல்லாருடைய முட்டாள்தனத்திற்கும் ஈடுகொடுக்க நான் ஒருவன் கிடைத்துவிட்டேன்!'

நிற்க.

'மனிதர் தம் மடைமையாலேயே வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வர். ஆனால் அவர்கள் ஆண்டவர்மீது சினங்கொண்டு குமுறுவர்' (நீமொ 19:2) என்கிறார் நீமொ ஆசிரியர்.

Thursday, July 7, 2016

நீதிமொழிகள் - 20

'எண்ணிப் பாராமல் செயலில் இறங்குவதால் பயனில்லை.
பொறுமையின்றி நடப்பவர் இடறிவிழுவார்.'
(நீமொழி 19:2)

முதல் ஏற்பாட்டு மக்களை இறைவாக்கினர் வழியாக கடவுள் சாடுவதற்கு அதிகக் காரணமாக இருந்தது அவர்களின் பிளவுபட்ட மனம்.

ஒருவருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட மனம் அடுத்தவருக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டாலோ, அல்லது அடுத்தவருக்கு முழுமையாகக் கொடுக்கப்பட்டாலோ அதை பிளவுபட்ட மனம் என அழைக்கிறது எபிரேய விவிலியம்.

அதாவது, யாவே இறைவனைத் தங்கள் கடவுளாகக் கொண்டு தங்களையே அவரிடம் அர்ப்பணம் செய்த இஸ்ரயேல் மக்கள், பாகால் இறைவனுக்கும், அஸ்தரோத்துக்கும் தங்கள் அர்ப்பணத்தைப் பகிர்ந்து கொடுத்தாலோ, முழுமையாகக் கொடுத்தாலோ அது பிளவுபட்ட மனம்.

பிளவுபட்ட மனம் வருவதற்குக் காரணம் முழுமையாக எண்ணி முடிவெடுக்காததுதான்.

முழுமையாக எண்ணி முடிவெடுத்த ஒருவர் அந்த முடிவில் நிலைத்திருக்க வேண்டும்.

கலப்பை பிடித்து உழ வேண்டும் என்ற களத்தில் இறங்கியவர் முழுமையாக நிலத்தை உழ வேண்டும். பாதி உழுதுவிட்டு, 'நாளை பார்க்கலாம்!' என்றோ, 'அங்கே நிழலாக இருக்கிறது! அங்கே போகலாம்!' என்றோ, 'என் நண்பர்கள் பம்ப் செட்டில் குளிக்கிறார்கள். நான் அங்கே போகிறேன்!' என்று சொல்லிக் கொண்டோ பாதிவழி திரும்ப முடியாது. உழுவதற்கு இறங்குமுன் அவர் எல்லாவற்றையும் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

ஆனால், ஏர்பிடித்து உழுவது போல் வாழ்க்கை அவ்வளவு எளிதல்ல. சில நேரங்களில் நம் எண்ணங்கள், திட்டங்களை மாற்ற வேண்டிய அவசியமும் வந்துவிடுகிறது.

இருந்தாலும்,

'எண்ணிப் பார்த்து இறங்குவதே சிறந்தது'

இதையே வள்ளுவப் பெருந்தகையும்,

'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு' (குறள் 467)

'நன்கு திட்டமிட்ட பிறகே வேலையைத் தொடங்க வேண்டும். தொடங்கிவிட்டு பின் திட்டமிடுவது துன்பம் அல்லது தவறு அல்லது பிறழ்வு!'

Wednesday, July 6, 2016

நீதிமொழிகள் - 19

'கைக்கூலி கொடுப்பவர் அதை ஒரு மந்திரத் தாயத்தைப் போல பயன்படுத்துகிறார்.
அதைக் கொண்டு அவர் எடுத்த காரியமனைத்தையும் நிறைவேற்றுவார்'

'ஒருவர் கொடுக்கும் அன்பளிப்பு அவருக்கு நல்வழி பிறக்கச் செய்யும்.
அவரைப் பெரியோர்முன் கொண்டு போய்ச்சேர்க்கும்.'

(நீமொ 17:8, 16)

கைக்கூலி அல்லது கையூட்டு அல்லது இலஞ்சம் அல்லது அன்பளிப்பு கொடுத்து காரியத்தைச் சாதித்துக் கொள்வது சரியா அல்லது தவறா என்று சொல்லாத நீமொழி ஆசிரியர், கைக்கூலியும், அன்பளிப்பும் எப்படி காரியங்களைச் சாதிக்க வல்லவை என்பதைச் சொல்கின்றார்.

அவர் பயன்படுத்தும் உருவகம் 'மந்திரத்தாயத்து.'

கைக்கூலி மந்திரம் செய்யக் கூடியது.

கைக்கூலி அல்லது அன்பளிப்பு கொடுத்து காரியம் சாதிப்பவர்களை நாம் நேர்மையற்றவர்கள் என்று சொல்ல முடியுமா?

எந்த அளவுக்கு கைக்கூலி அல்லது அன்பளிப்பை நாம் பயன்படுத்தலாம்?

Tuesday, July 5, 2016

நீதிமொழிகள் - 18

'வாக்குவாதத்தைத் தொடங்குவது மதகைத் திறந்துவிடுவது போலாகும்.
வாக்குவாதம் மேலும் வளருமுன் அதை நிறுத்திவிடு!' (நீமொ 17:14)

புனேயில் ஒரு வாரமாக மழை பெய்து கொண்டிருக்கிறது.

இப்படியே பெய்து கொண்டிருந்தால் வெள்ளம் வந்துவிடும் என என் நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தான் வசிக்குமிடத்தில் திடீரென மதகு திறக்கப்பட்ட ஆற்றில் பெருகிவந்த வெள்ளம் பற்றிக் குறிப்பிட்டார். எதிர்பாராத நேரத்தில், எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி ஏரிகள் திறந்துவிடப்பட்டதால் சென்னை அனுபவித்த துயரம் இன்னும் காயவில்லை.

'வாக்குவாதத்தை தொடங்குவது மதகைத் திறந்துவிடுவது போலாகும்' என்கிறார் ஆசிரியர்.

'வாக்குவாதம்' என்பது தத்துவயியல் தர்க்கம் அல்ல. மாறாக, சண்டை. அதாவது, ஒருவர் மற்றவர் மேல் அடுத்தடுத்த சொல் அம்புகளை எய்வது.

வாக்குவாதங்கள் இரயில் பெட்டிகள் போல, ஒன்று மற்றொன்றை என நிறைய பழைய சரக்குகளை வெளியே இழுத்துவந்துவிடுகின்றன.

மதகு வழியே வெளியேறும் நீரும் அப்படித்தான் எல்லா அழுக்குகளையும் வெளியே கொண்டு வந்துவிடுகிறது. மேலும், மதகில் வெளியேறும் நீரை திரும்பவும் நம்மால் அணைக்குள் அனுப்ப முடிவதில்லை.

ஆக,

'வாக்குவாதம் வளருமுன் அதை நிறுத்திவிடுதல் சால்பு!'

Monday, July 4, 2016

நீதிமொழிகள் - 17

'ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரை உண்டாக்கியவரையே இகழுகிறார்.
பிறருடைய இக்கட்டைப் பார்த்து மகிழ்கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்.'
(நீமொ 17:5)

'Dear and Glorious Physician. A Novel about Luke' என்ற நாவலை எழுதுகின்ற டேய்லர் கால்ட்வெல், கதாநாயகன் லூக்கானுஸ் பற்றி ஒரு குறிப்பை பதிவு செய்கின்றார்.

தன்னுடன் பணி செய்யும், அல்லது தனக்காக பணி செய்யும் அடிமைகள், தன் சுமையைச் சுமப்போர், தன்னிடம் மருத்துவம் பார்க்க வரும் நோயுற்றோர், ஏழையர் அனைவரையும் பார்க்கும் லூக்கானுஸ், கடவுளைப் பார்த்து, 'இவர்களை எல்லாம் ஏன் இப்படி வைத்திருக்கிறாய்? உனக்கு கருணை இல்லையா?' என்று புலம்புவதாக எழுதுகிறார்.

அதாவது, இவர்களை எல்லாம் பார்த்து, லூக்கானுஸ் தன்மையம் கொண்டவராக, 'இவர்களை விட நான் நன்றாக இருக்கிறேன். இறைவா, உனக்கு நன்றி' என்று சொல்லாமல், இவர்களுக்காக வருந்துபவராக இருந்தார் எனக் குறிப்பிடுகிறார் கால்ட்வெல்.

இரண்டு நாட்களுக்கு முன் அம்பேத்கார் அவர்கள் 1936ஆம் ஆண்டு எழுதிய 'Annihilation of Caste' என்ற நூலை வாசித்தேன். தொடர்ந்து சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய 'தமிழ்க் கிறித்தவம்' என்ற நூலையும் வாசித்தேன். கிறிஸ்தவர்களாக மதம் மாறியபோது தன் மத அடையாளத்தைத் துறந்த கிறிஸ்தவர்கள், தங்கள் சாதிய அடையாளத்தைத் துறக்கவில்லை இன்றுவரை என எழுதிகிறார் சிவசுப்பிரமணியன். மேலும், கிறிஸ்தவ மதத்தில் சாதியம் இருந்ததால்தான் தான் புத்தமதத்தை தழுவியதாக எழுதுகிறார் அம்பேத்கார்.

ஒருவர் பொருளாதார அடிப்படையில் இன்று உயர்ந்து நின்றாலும் அவரின் சாதியை வைத்து தாழ்வானவராக காட்டுகிறது நம் மண்ணில் இருக்கிறது.

ஒருவரின் பொருளாதார நிலையை, ஏழ்மையை வைத்து ஒருவரை இகழ்தல், அவரைப் படைத்தவரையே இகழ்தலுக்குச் சமம் என்கிறார் நீமொ ஆசிரியர்.

அப்படியிருக்க, நாம் ஆண்-பெண், உயர்ந்தவர்-தாழ்ந்தவர், பணக்காரர்-ஏழை, படித்தவர்-படிக்காதவர் என்று மற்றவரை அளக்கும்போதெல்லாம் நம்மைப் படைத்தவரையே அளக்கிறோம் என்பதை மறந்துவிடுகிறோமோ?

Sunday, July 3, 2016

நீதிமொழிகள் - 16

'நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்' என்பது முதுமொழி.

அதாவது, நாம் நினைப்பதும் நடப்பதும் ஒன்றோடொன்று ஒத்துப் போகாதபோது அதை தெய்வத்தின் செயல் அல்லது நினைப்பு என்று சொல்கிறோம்.
உதாரணத்திற்கு, அடுத்த ஞாயிறு நாம் பிக்னிக் போகலாம் என திட்டமிடுகிறோம். ஒவ்வொன்றாகத் தயாரிக்கிறோம். நண்பர்களை அழைக்கிறோம். இடத்தை, வாகனத்தை, உணவை ஏற்பாடு செய்கிறோம். ஆனால், அந்த வார இறுதியில் எதிர்பாராத விதமாக மழை பெய்ய ஆரம்பிக்கிறது. நம் திட்டம் கலைந்துவிடுகிறது.

இதை நாம் எப்படி எதிர்கொள்வது?

'மடியிலுள்ள திருவுளச் சீட்டை ஒருவர் குலுக்கிப் போடலாம்.
ஆனால், திருவுளத் தீர்ப்பை வெளிப்படுத்துபவர் ஆண்டவரே' (நீமொ 16:33) என்கிறார் நீமொ ஆசிரியர்.

அதாவது, நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளில் ஒரு குறிப்பிட்ட அளவு வரைதான் நாம் அவற்றை கைக்குள் வைக்க முடியும். சில நேரங்களில் அவை கைமீறிப் போய்விடுகின்றன.

சீட்டு அல்லது தாயம் குலுக்கி விழுவதை 'பிராபபிலிட்டி தேற்றம்' வழியாக நாம் ஓரளவுக்குக் கணித்துவிடலாம். ஆனால், இறைவனின் திருவுளத்தை நாம் அறியவோ அதை மாற்றவோ நம்மால் முடிவதில்லை.

அதாவது, ஒன்று நடக்க வேண்டும் என இருந்தால் அது நடந்துதான் ஆகும்.

திறந்த மனம், குழந்தை உள்ளம் - இருந்தால் போதும்.

Saturday, July 2, 2016

நீதிமொழிகள் - 15

நான்கு வாரங்களுக்கு முன் எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில் நண்பர் ஒருவர் 'நம்மேல் வந்து விழும் பொழுதுபோக்கு' (passive entertainment) என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை அனுப்பியிருந்தார்.

24 வயது இளைஞனின் கடிதம் அது.

எனக்கு இன்று 24 வயது ஆகிறது. ஆனால் எனக்கு வாழப்பிடிக்கவில்லை. வாழ்க்கை ஒரே மாதிரி ஓடிக்கொண்டு இருக்கிறது. நான் ஒரு கணிணிப் பொறியாளர். பகல் முழுவதும் வேலை. இரவு வீட்டிற்கு வந்தவுடன் தொலைக்காட்சி, சில நேரங்களில் போர்ன், சில நேரங்களில் நண்பர்களுடன் பார்ட்டி, சில நேரங்களில் செக்ஸ், சிலநேரங்களில் சுயஇன்பம். திரும்ப அடுத்த நாள் வேலை. அடுத்த இரவு இந்த ஐந்தில் ஏதாவது ஒன்று. இப்படியேதான் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படித்தான் என் எஞ்சிய வாழ்க்கை இருக்குமா? என்று நினைக்கும்போதே பயமாக இருக்கிறது.

ஒருநாள் நான் முடிவெடுத்தேன். என்மேல் வந்துவிழும் இந்த பொழுதுபோக்குகளை நிறுத்துவது என்று. நான் நிறுத்தினேன்.

செய்தித்தாள் படிப்பது.
நாவல்கள் படிப்பது.
டிவி பார்ப்பது.
சினிமா செல்வது.
போர்ன் பார்ப்பது.
செக்ஸ் மற்றும் சுயஇன்பம் அனுபவிப்பது.
உணவகம் செல்வது.
மது அருந்துவது.

முதல் வாரம். இரண்;டாம் வாரம். மூன்றாம் வாரம். நாட்கள் நகர்ந்தன. அப்படியே பைத்தியம் பிடிப்பது போல இருந்தது. எல்லாம் வெறுமையாகத் தெரிந்தது. அந்த வெறுமையில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன்.

நான் சின்ன வயதில், பாதி வழியில் விட்ட பென்சில் ஸ்கெட்ச் செய்வது, ஸ்கவுட்டில் சேர்ந்து டிரெக்கிங் செய்வது, ஆதரவற்றர்களைத் தேடி ஓடுவது, தன்னார்வத் தொண்டு செய்வது என நானே பொழுது போக்குகளை உருவாக்கிக் கொண்டேன்.

என் நண்பர்கள் என்னை முட்டாள் என்றும், மடையன் என்றும் சொல்கிறார்கள். ஆனால், இன்று நான் என்னையே மறுபடியும் அடையாளம் காண ஆரம்பித்திருக்கிறேன்.

நிற்க.

'ஒருவரது இன்பமோ துன்பமோ அது அவருடையதே. வேறெவரும் அதைத் துய்க்க இயலாது' (நீமொ 14:10) என்கிறார் நீமொ ஆசிரியர்.

அதாவது, எனக்கு தலைவலி என்றால் நான் தான் மாத்திரை போட வேண்டும்.

என் பள்ளிப்பருவ குருகுலத்தில் மாணவர்கள் டிவியில் கிரிக்கெட் பார்க்க எத்தனிப்பார்கள். அப்போது எங்களின் இயக்குநராக இருந்த அருள்திரு. மரிய செல்வம் அவர்கள், 'என்னதான் டென்டுல்கர் 50 அடிச்சாலும், 100 அடிச்சாலும், அது அவரது வெற்றியே தவிர உங்கள் வெற்றியாக ஆகப்போவதில்லை. அவரின் மகிழ்ச்சி உங்களின் மகிழ்ச்சியாக ஆக முடியாது. நீங்கள் நன்றாகப் படித்து தேர்வில் வெற்றி பெற்றால் அது உங்கள் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை மட்டும் தேடுங்கள்' என்பார். அவரின் வார்த்தைகளுக்கு இன்றுதான் எனக்குப் பொருள் தெரிகிறது.

'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்கிறது புறநானூறு.

தீமையும், நன்மையும் நமக்கு வெளியே இருந்து வருவதில்லை. நாமாகவே, நம் சொல்லாலும், செயலாலும் தேடிக்கொள்கிறோம்.

அதுபோலவே, எனக்கு நிகழும் தீமையும், நன்மையும், எனக்கு மட்டுமே துன்பமும், இன்பமும் தரும்.

'தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறுதானே!'

ஆக, என் மகிழ்ச்சிக்கும், என் துன்பத்திற்கும் நான் மற்றவர்களைக் காரணம் காட்டுவது சால்பன்று.

'பகிர்ந்தால் உன் துன்பம் பாதியாகும். உன் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்' என்று சுவரில் எழுதி வைத்திருப்பார்கள். அதை எல்லாம் சீரியஸா எடுக்கக் கூடாது. அப்படி ஒரு முறை சீரியஸா எடுத்து, என் பிரச்சினை ஒன்றை என் நண்பன் ஒருவனிடம் பகிர, அடுத்தநாள் சாப்பாட்டு அறையில் என்னை சந்தித்த, நண்பனின் நண்பன் ஒருவன், 'என்னடா, இப்போ எப்படி இருக்க? பிரச்சினை சரியாயிடுச்சா?' என்று கேட்டான். 'உனக்கு எப்படித் தெரியும்?' எனக் கேட்க, 'அவன்தான் சொன்னான்!' என்று என் நண்பனைக் கை காட்டினான். நம் வாழ்வின் முக்கியமான பிரச்சினைகளை நாம் நண்பர்களிடம் பகிர, அதை அவர்கள் டீ டைமில் பேசும் பேசுபொருளாக மாற்றிவிடுவது எவ்வளவு கொடுமையானது!

ஆக, நல்லதோ, கெட்டதோ எனக்கு நடப்பது எனக்குத்தான். உங்களுக்கு நடப்பது உங்களுக்குத்தான்!

இன்னும் சொல்வேன்...

Friday, July 1, 2016

நீதிமொழிகள் - 14

இன்றைய வலைப்பதிவு நம் வலைப்பூவின் 1000ஆவது இதழ்.

இறைவனுக்கும், உங்களுக்கும், என் எழுத்துக்களை இரசித்து அன்றாடம் பின்னூட்டமிடும் என் அம்மாவுக்கும், என் தோழர்களுக்கும் இனிய நன்றிகள்.

'நெடுநாள் எதிர்நோக்கியிருப்பது மனச்சோர்வை உண்டாக்கும்.
விரும்பியது கிடைப்பது சாகாவரத்தைப் பெறுவது போலாகும்!'

(நீமொ 13:12)

இந்த ஒரு மாதமாக புனேயில் இருக்கிறேன். என் உடன் மாணவர்களை வெளியிலிருந்து என் ஹாஸ்டலுக்கு அழைத்து வருவேன் அடிக்கடி. 'உங்களுக்கு காஃபியா, அல்லது டீயா?' என்று நான் கேட்டால், 90 சதவிகத மாணவர்கள், 'ஏதாச்சும்' என்றே பதில் சொல்கின்றனர். 'எது இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இதுவா?' அல்லது 'எனக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது என்று சொல்ல முடியாத நிலையில் இவர்கள் இருக்கிறார்களா?' என்று தெரியவில்லை.

குறுகிய பொழுது எதிர்நோக்கும் ஒன்றைப் பற்றியே நமக்கு சில நேரங்களில் தெளிவில்லாமல் இருக்கும்போது, நெடுநாள் நோக்கியிருப்பது தெளிவாக இருக்குமா?

11 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் யாராவது, 'உன் நெடுநாள் ஆசை எது?' என்று கேட்டால், நான் உடனே 'விமானப்பயணம்' என்று சொல்லியிருப்பேன். ஆனால் இந்த நெடுநாள் ஆசை என் வாழ்வில் நடந்தேறிய அந்த முதல் நிகழ்வு மிகவும் சோகமான நிகழ்வு. சின்ன வயதில் எங்க ஊரு நத்தம்பட்டி வானில் உச்சியில் விமானம் பறப்பது தெரிந்தாலே, பாதி சோற்றை தட்டில் போட்டுவிட்டு ஓடிச் சென்று பார்ப்பேன். புவிஈர்ப்பு விசையை மனிதர் தோற்கடிக்க முடியும் என்ற சிந்தனையின் குழந்தையே இந்த அலுமினியப் பறவை.

நெடுநாள் எதிர்நோக்கியிருந்த இந்த விமானப் பயணம் அமைந்தது என் அப்பாவின் இறப்பில்தான். இன்றும் விமானத்திற்குள் நுழையும்போதெல்லாம் அந்த முதல் அனுபவம் கசப்பாய் வந்து போகிறது.

நெடுநாள் எதிர்நோக்கியிருந்த ஒன்று கிடைத்தால் சாகாவரம் பெற்றது போலாகும் என்கிறார் நீதிமொழிகள் ஆசிரியர்.

நிச்சயம் இவர் விமானப்பயணம் பற்றி பேசியிருக்க வாய்ப்பில்லை.

ஆனால், எதிர்நோக்கு என்ற ஒன்றுதான் நம் வாழ்விற்கு ருசியைக் கொடுக்கின்றது. எதிர்நோக்கு எட்டாக்கனியாக இருப்பது போல தெரிந்தால் மனம் சோர்வடைந்துவிடுகிறது.

'நான் விரும்பியது கிடைத்தது' என்று ஒரு பெரிய பட்டியல் போட்டுப் பார்க்கலாமே.

அப்படிப் பார்த்தால் எனக்கு டீ பிடிக்குமா, காஃபி பிடிக்குமா என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும்.

இன்னும் சொல்வேன்...