Wednesday, November 5, 2014

கட்டிடம் ஏன் சரிந்து விழுந்தது?

'உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டி முடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்க மாட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, 'இம்மனிதன் கட்டத் தொடங்கினான். ஆனால் முடிக்கவில்லை!' என்பார்களே. (காண் லூக்கா 14:25-33)

தன் சீடர்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி எல்லாவற்றையும் துறக்க வேண்டும், எப்படி சிலுவையைச் சுமக்க வேண்டும் என்று சொல்லும் இயேசுவின் போதனைப்பகுதியில் திடீரென கோபுரம் உதாரணமும், சண்டைக்குச் செல்லும் அரசன் உதாரணமும் இருக்கின்றது.

கடந்த வாரம் 'நாணயம் விகடனில்' ரியல் எஸ்டேட் பற்றி வாசித்துக் கொண்டிருந்தேன். சென்னையில் வில்லிவாக்கத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டடிம் சரிந்து விழுந்த நிகழ்விற்குப் பின் ரியல் எஸ்டேட் சென்னை மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் சரிந்து விட்டதாகவும், அது எழுந்து வருவதற்கு இன்னும் ஆண்டுகள் ஆகலாம் என்றும் சொல்லியிருந்தார் ஆசிரியர்.

அடுக்குமாடிக் கட்டிடம் ஏன் சரிந்து விழுந்தது? என்னும் கேள்விக்கு, ஏரி மணல், புதைகுழி, கம்பிகளின் தரக்குறைவு, போதாத அடித்தளம் என்று நிறைய காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஆனால், கண்டிப்பாக இதைக் கட்ட முனைந்தவர்கள் தொடங்குவதற்கு முன்பாக அமர்ந்து ஆகும் செலவைக் கணித்திருக்கத்தான் செய்வார்கள். இருந்தாலும் ஏதோ ஒரு தவறு நிகழ்ந்ததால் இன்று சரிந்து விட்டது. இதற்கு அவர்கள் பொறுப்பானவர்கள் என்றாலும் இந்தத் தவறு அவர்களையும் தாண்டி நடந்த ஒன்று என்றும் சொல்ல முடியும்.

ஆக, நாம் அமர்ந்து ஆராய்ந்து கோபுரம் கட்டத் தொடங்கினாலும், முடிக்காமல் போய்விட வாய்ப்பு இருக்கவே செய்கின்றது.

ஒருவேளை சீடத்துவம் என்பது ஆற, அமர்ந்து, யோசித்து முடிவெடுக்க வேண்டிய விடயம் என்றாலும் சிலரின் கோபுரங்கள் பாதியிலேயே நிற்பதும், கட்டப்பட்ட கோபுரங்கள் சாய்ந்து விடுவதும் நாம் காண்கின்ற ஒன்றே. இதற்கெல்லாம் காரணம் இவர்கள் சரியாக முடிவெடுத்துத் தொடங்கவில்லை என்று சொல்லிவிட முடியுமா? இல்லை!

கோபுரம் கட்டி முடிக்காமல் இருப்பது பற்றி இந்த சமூகத்திற்கு அக்கறையில்லை. அது கேலி பேசுவதில் தான் அக்கறை காட்டுகிறது.

இதுதான் இன்றைய சமூக எதார்த்தம்.

அண்மையில் பொறியியல் படிக்கும் இளவல் ஒருவர் தான் தற்கொலை செய்து கொள்வதாக முகநூலில் சொல்லிவிட்டு அப்படியே செய்தும் விட, அவரின் பக்கத்திற்கு 28 லைக்குகள் விழுந்திருக்கின்றனவாம்.

இதுதான் உலகம். இதுதான் நம்மைச் சுற்றியிருக்கும் கூட்டம்.

நற்செய்திப் பகுதியை வாசிக்கும் போதே அந்தக் கேலி செய்யும் கூட்டத்தின் மேல் கோபம் வருகிறது.

இந்த நற்செய்திப் பகுதி சீடத்துவத்திற்கு மட்டுமல்ல, நம் வாழ்க்கைக்கு நான்கு சவால்கள் விடுகின்றது:

அ. சீடத்துவத்திலும் சரி, வாழ்விலும் சரி நம் கோபுரத்தை நாம் கட்டி முடிக்கவில்லையென்றால் வருத்தப்படக் கூடாது. 'அவன் கட்டிட்டான்! நான் கட்ட முடியல!' என்று சுயபச்சாதாபமும் வரக் கூடாது. கட்ட முடியவில்லை என்றால் கட்ட முடியவில்லை. அதற்கு நாம என்ன செய்ய முடியும்?

ஆ. நம் கோபுரம் கட்டப்படுவதற்கு ஒரு செங்கல் கூட எடுத்துக் கொடுக்காமல் நின்று வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு, நாம் கட்ட முடியாமல் தவிக்கும் போது நம்மைப் பார்த்துக் கேலி செய்யும் கூட்டத்தைப் பற்றிக் கண்டுகொள்ளவே கூடாது.

இ. சீடத்துவம் என்னும் அழைப்பிலும், வாழ்வு என்னும் அழைப்பிலும் ஏதோ ஒரு வகையில் கட்ட முடியாமல் பாதியிலேயே உழைப்பைக் கைவிடும் அன்பர்களைக் கண்டு கேலி பேசக் கூடாது. அவர்களுக்கு நாம் எந்த வகையிலும் உதவியதில்லை. பின் அவர்களைக் கேலி செய்யும் உரிமை மட்டும் எங்கிருந்து வரும்.

ஈ. சீடத்துவத்தில் ஒருவர் தொடர்ந்து நிலைத்திருப்பதால் அவர் கோபுரத்தை நன்றாகக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லிவிடவும் முடியாது. ஒவ்வொரு நாள் விடியலும் அவருக்கென்று சோகங்களைக் கொண்டு வரலாம். தண்ணீர் இல்லாமல் போகலாம். செங்கல் தீர்ந்து போகலாம். உடன் உழைப்பாளர்கள் ஒத்துழைக்காமல் போகலாம். கட்டியது இடிந்து விடலாம். இந்த நேரங்களில் நமக்குத் தேவையானதெல்லாம் அவர்மேல் ஒரு கரிசணையான பார்வை.

இதை எழுதும் போது எனக்குள்ளே ஒரு கேள்வி: 'இந்த இயேசு நாதர் வந்தோமோ, போனோமான்னு இல்லாம, ஏன் சீடர்களையெல்லாம் ஏற்படுத்தி, அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்தாரு? இன்னைக்குப் பாருங்க! சீடர்கள் அப்படிங்கிற குழுவிலேயே எத்தனை பிரிவுகள்! இதுல ஒவ்வொருத்தரும் 'நாங்கதான் உண்மையான சீடர்னு சண்டை வேற!'

வடிவேலு சொல்ற மாதிரி, 'போயி புள்ளைங்கள படிக்க வைங்கப்பா!' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!



1 comment:

  1. வில்லிவாக்கத்தில் அடுக்குமாடிக் கட்டிடம் கட்டியவர்கள் விபரம் தெரியாதவர்கள் அல்லர்.அடுத்தவரின் அறியாமையைக் காசாக்க நினைத்த கூட்டம்தான்.இவர்களைக் கேலி பண்ணுவது வேண்டாம்; ஆனால் கேள்வி கேட்கக்கூட ஆளில்லையே என்பது தான் நம்மூரின் அவலம்.நம் அனைவருக்குமே கட்டிடம் கட்டும் சந்தர்ப்பம் அமையாமல் போகலாம்.ஆனால் நம் வாழ்க்கை எனும் கட்டிடத்தை சிந்தித்துத்திட்டமிட்டுக் கட்டுவோமேயானால் பல நேரங்களில் சிந்திய ்பாலுக்காக நம்மை சிதைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் நேராது.இத்துணூண்டு மூளைக்குள் இத்துணை விஷயங்களைச் சேகரித்து அதைப்பக்குவமாக்க் கொடுக்கும் இந்த மனித கணிணிக்கு ஒரு 'சலூய்ட்'!

    ReplyDelete