Wednesday, November 12, 2014

கண்ணீர் ரேகைகள்!

'மொத தபா பார்த்தேன் உன்ன
பேஜார் ஆயி போயி நின்னே நின்னே
கிஷ்ணாயில் ஊத்தாம பத்த வச்சியே
கொழாத் தண்ணி என்ன
நா மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்'

கடந்த நான்கைந்து நாட்களாக என் உதடுகள் இந்தத் தத்துவப் பாடலையே முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றன. ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் இசையில், ஷங்கரின் 'ஐ' திரைப்படத்தின் பாடலே இது. பாடலின் இன்டர்லியூடை உன்னிப்பாகக் கேட்டால் 'வெங்காபாய்ஸ்' ஆல்பத்தின் 'ஷலலா லாலா' வாடை அடிக்கிறது.

இந்தப் பாடலின் பல்லவியில் வரும் ஒரு வார்த்தை 'கிஸ்ணாயில்' (கிறிஷ்ணா ஆயில்) - இது ஒரு சென்னைச் செந்தமிழ் வார்த்தை. இது குறிக்கும் பொருள் 'மண்ணெண்ணெய்'. இப்போதெல்லாம் 'கெரசின்' என்று ஆங்கிலத்தில் சொன்னால் தான் தெரிகிறது. கெரசின் வார்த்தையைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் - மண்ணெண்ணெய், கிஸ்ணாயில் எனத் தொடர்ந்து 'சீமத்தண்ணி' என்ற வார்த்தை வரை போகலாம். அதாவது 'சீமை தண்ணீர்' - வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்படும் அல்லது வெளிநாட்டில் புழக்கத்தில் இருக்கும் தண்ணீர்.

சரி தம்பி! ஏன் இந்த கெரசின் ஆராய்;ச்சி!

'சீமத்தண்ணியை' போலவே கொஞ்சம் பழைய வார்த்தை 'சீஸா' (அதாவது, குடுவை அல்லது பாட்டில்).

'ஏய்யா...அந்தச் சீமத்தண்ணி சீஸாவை எடுத்துட்டு வா!' - கிஸ்ணாயில் வார்த்தை எனக்கு இந்த வாக்கியத்தை நினைவூட்டியது. இந்த வாக்கியத்தை அடிக்கடி என்னிடம் சொன்னவர் என் அய்யாமை (அய்யாவின் - அப்பாவின் அம்மா). இன்று அவருடைய நினைவு நாள். நேற்று இரவு முதல் இவரின் நினைவாகவே இருந்தது. ஆகவே, இன்றைய பதிவு இவரை மையமாக வைத்து எழுதலாம் என நினைத்தேன். போரடித்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்!

இவரின் பெயர் லட்சுமி அம்மாள் - லட்சுமி என்பதுதான் பெயர். 'அம்மாள்' என்பது மரியாதைக்காக ஒட்டிக் கொண்டது. இவர் பிறந்த ஊர் இராசபாளையத்திற்கு தெற்கே இருக்கும் 'ஜமீன் நத்தம்பட்டி' - ஆனால் ஜமீன்கள் இருந்தார்கள் என்பதற்கு தடம் ஏதுமில்லை. இவர் பிறந்த ஆண்டு தெரியவில்லை. ஆனால் இறந்த ஆண்டு 2007. இவருக்கு ஒரு தங்கை உண்டு - அவரின் பெயர் 'ராஜலட்சுமி'.

என்னைப் பலர் இன்னும் 'லட்சுமி அம்மாளின் பேரன்' என்றே அறிவார்கள். பரம்பரை இந்து. முருக பக்தை. பலருக்குப் பிரசவம் பார்த்த மருத்துவச்சி. பகல் நேரங்களில் கூலிக்குக் காட்டு வேலைக்குச் செல்வார். காட்டு வேலை பார்த்துவிட்டு வந்தாலும் வெள்ளைச் சேலை பளிச்சென்று அணிந்து வருவார். சுத்தத்தின் மறுஉருவம். வெள்ளைச் சேலை ஏன்? திருமணம் முடிந்து 7 வருடங்களிலேயே கணவனை இழந்தவர். அதன்பின் ஏறக்குறைய 60 வருடங்கள் அந்த இழப்பைக் காட்டுக் கொள்ளாமலேயே வாழ்ந்தவர். டெய்லி ஃபோன் பண்ணும் கேர்ள்பிரண்ட் ஒரு வாரம் ஃபோன் பண்ணலன்னா வரும் இழப்பை, விரக்தியை எப்படி ஹேண்டுள் பண்ணுவது என்று செமினார்களும், வெபினார்களும், புத்தகங்களும் எழுதப்படுகின்ற இந்தக் காலத்தில் இவ்வளவு பெரிய இழப்பை ஒரு நொடியும் காட்டிக் கொள்ளாமல் தன் இரு மகன்களையும் வளர்த்தெடுத்தவர். இவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. தன் வாழ்நாளில் இவர் மேற்சட்டை அணிந்ததும் கிடையாது. அதன்பின் இருப்பது ஒரு இருண்ட சமூகப் பிண்ணனி. நம் நாடு விடுதலை பெறுவதற்கு முன் தமிழகத்தின் தென்முனை முழுவதும் திருவாங்கூர் என அழைக்கப்பட்டு ஒரே மாகாணமாக இருந்தது. நம் நாட்டில் சாதியம் மிகக் கொடுமையாக பின்பற்றப்பட்டதும் இந்த மாகாணத்தில் தான். கீழ்ச்சாதியினரும், பனைஏறி என்று அழைக்கப்பட்ட நாடார் இன ஆண் மற்றும் பெண்கள் மேற்சட்டை அணியக் கூடாது என்பது ஒரு வழக்கமாக இருந்தது. இது அவர்களின் அடிமைத்தனத்;தின் அடையாளமாம். 1919ல் முதன்முதலாக வேதமாணிக்கம் என்பவர் கிறிஸ்தவராக மாறுகிறார். கிறிஸ்தவராக ஒருவர் மாறினால் அவர் சாதியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்பதால் அவரும் அவரின் குடும்பத்தாரும் மேல்சட்டை அணியலாம். மேல்சட்டை அணிய வேண்டும் என்பதற்காக கிறித்தவராக மாறியவர்கள் பலர். அவர்களில் ஒருவர் என் அம்மாவின் அம்மா குடும்பம். ஆனால் எங்கள் அய்யாமையின் குடும்பத்தார் மாற மறுத்துவிட்டனர். நாடு விடுதலை பெற்று சாதியப் பாகுபாடு ஓரளவு மடிந்தாலும் இவர் என்னவோ மேல்சட்டை அணியாமலேயே இருந்துவிட்டார்.

பகலில் காட்டு வேலை செய்வார். இரவில் பாம்புக் கடி வைத்தியம் செய்வார். கோவிலில் குறி சொல்வார். திருவிழாவின் போது முளைப்பாரி இடுவார். முளைப்பாரியை சுமந்து செல்லும் போது கும்மி பாட்டு பாடுவார். எங்கள் ஊரில் மட்டுமல்ல, எங்கள் சுற்றுவட்டத்தில் எந்த ஊர் திருவிழாவென்றாலும் 'லட்சுமி அம்மாள் செய்த முளைப்பாரிதான்' தூக்கிச் செல்லப்படும். அந்த நாட்களில் கடுமையான விரதமும் இருப்பார்.

10க்குப் 10 கூரை வீடுதான் அவரின் கணவர் அவருக்குக் கட்டிக் கொடுத்தது. அங்கேதான் நான் பிறந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் அந்த வீடு இடிக்கப்பட்டது. வீடு இடிக்கப்பட்ட வரை அங்கு மின்விளக்கு கிடையாது. தினமும் மாலை மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி சுத்தம் செய்வதே இவரின் தலையாய கடமை. எங்க வீடு மட்டும்தான் கல்பதித்தது என்று பெருமைப்படவும் கற்றுத் தந்தார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெள்ளையடிப்பு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூரை மாற்றம் என வீட்டைப் பக்குவமாகப் பாதுகாத்தார். இரவில் தன் தங்கையின் வீட்டிற்குத் தூங்கச் சென்றுவிடுவார்.

ஒவ்வொரு திங்கள் கிழமையும் முருகன் கோயில் பொங்கல் கொண்டு வருவார். எங்க அம்மாவுக்கும் அவர்களுக்கும் சண்டை நடக்கும். 'எங்க சாமி பேயொன்றும் இல்லை!' என்று சொல்லி வாதத்தில் ஜெயிப்பார். திருநீறும், சர்க்கரையும் கலந்து செய்யப்படும் அந்தப் பொங்கல் இன்றும் தொண்டைக்குழியில் இருக்கின்றது.

நான் குருமடம் போகிறேன் என்பதை இறுதிவரை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இருந்தாலும் அவரின் இறுதி நாட்களில் கிறிஸ்தவ கோயிலுக்கு அடிக்கடி சென்றார்.

முருகன் படம், மாதா படம், அம்மன் படம் என எல்லாம் இருக்கும் ஒரு இடம் எங்கள் வீட்டின் ஜன்னல் தான். அங்கே தான் திருநீறும் இருக்கும். சந்தனமும் இருக்கும். பாண்ட்ஸ் பவுடரும் இருக்கும். எதை வேண்டுமானாலும் எடுத்துப் பூசிக் கொள்ளலாம். அம்மா ஒரு பக்கம் பைபிள் படிக்க, அய்யாமை மறுபக்கம் கந்தசஷ்டி கவசம் படிப்பார்கள். எனக்கு இன்றுவரை இரண்டும் ஒன்று என்றே தோன்றுகிறது.

ஏறக்குறைய 84ஆம் வயதில் சிவனடி சேர்ந்தார். அப்போது நான் புனேயில் இறையியல் படித்துக் கொண்டிருந்தேன். விடுமுறைக்கு வந்து அவரின் கல்லறை எங்கே என்று கேட்டபோது, அவரை அடக்கம் செய்யவில்லை, எரியூட்டினோம் என்றார்கள். இன்றும் எங்கள் ஊரின் காற்றில் தான் அவர் இரண்டறக் கலந்திருக்கிறார் என்பது என் நம்பிக்கை. என் தங்கை மகள் ஃபிலோ ஒய்யாரமாக நடக்கும் போதெல்லாம் என் அய்யாமையைத் தான் எனக்கு நினைவூட்டுகிறார்கள்.

இளம் வயதில் தன் கணவனையும், முதிர்வயதில் தன் மூத்த மகனையும் (என் அப்பா) இழந்து விட்டார். முதல் இழப்பை ஏற்றுக் கொண்ட அளவிற்கு இரண்டாம் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. (அடுத்த சில மாதங்களில் அவரது இரண்டாம் மகனும் இறந்து விட்டார் என்பது இன்னொரு சோகம்!)

அவரிடம் நான் கற்றுக்கொண்டதாக இன்று நன்றியோடு நினைவுகூறுவது மூன்று:

அ. உழைக்காமல் உண்ணும் உணவு உடலில் ஒட்டாது. தான் இறந்த அன்று கூடப் பகலில் காட்டு வேலைக்குச் சென்று வந்தவர். எந்த அன்பளிப்பையும் ஏற்காதவர். தன் உடல்நலத்திற்காகவோ, தன் பயணத்திற்காகவோ, தன் செலவிற்காகவோ தன் மகனைச் சார்ந்திருக்கவே இல்லை. நாம் சாப்பிடும் பருக்கைக்கு நாம்தான் உழைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.

ஆ. பரந்த மனப்பான்மை. அவருக்கு எல்லாச் சாமியும் ஒன்றுதான். ஒவ்வொரு சாதியினரும் முருகன், பெருமாள், அம்மன், கருப்பசாமி, வீரணன் என்று தங்களுக்கென்று சாமிகளை வைத்திருந்தாலும், இந்த எல்லாத் திருவிழாக்களிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட வெகுசிலரில் இவரும் ஒருவர். 'எனக்கு நற்கருணை கொண்டுவருவாயா!' என்று கூட என்னிடம் சொல்லி அனுப்பியவர்.

இ. இவர் சிரித்தும் பார்த்ததில்லை. அழுதும் பார்த்ததில்லை. தன் வாழ்நாளில் தொலைக்காட்சி பெட்டி பார்த்திராதவர். ரேடியோ கேட்டிராதவர். சுற்றுவட்டத்தின் 15 கிமீ மேல் பயணம் செய்திராதவர். தனக்கென்று ஒரு நட்பு வட்டத்தை வைத்துக் கொண்டவர். நான்கு சேலைகளுக்கு மேல் வைத்திராதவர். செருப்பு அணியாதவர். மோதிரம், நகை என்று எதையும் தன் உடல் தொட அனுமதிக்காதவர். இறுதிவரை கண்பார்வை, காதுகேளும் திறனோ குறையாதவர். ஒரு புகைப்படமும் எடுத்துக் கொள்ளாதவர். தன் ஊர் தான் உலகம் என வாழ்ந்தவர்.

இன்றும் எங்கள் ஊரின் தண்ணீராய், மண்ணாய், காற்றாய் மற்ற முன்னோர்களோடு கலந்து எங்களைக் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதே என் உறுதியான நம்பிக்கை.


1 comment:

  1. என்னே ஒரு பதிவு! தங்களின் 'அய்யாமை' பற்றிய தங்களின் நினைவுகளை,உணர்வுகளை எழுத்தாகப் பிரதிபலித்திருக்கும் விதம் கண்களைக் கசியவைத்துவிட்டது.விவிலியத்தில் வரும் ஒரு 'எஸ்தர்' போல, ஒரு 'ரூத்' போல இவரும் எனக்கொரு Biblical character ஆகத்தான் தோன்றுகிறார்.அத்தனை சோகங்களையும் சுகங்களாக்கி வாழ்ந்திருக்கும் இவர்போன்ற பெண்மணிகள் என் போன்ற இன்றையத் தலைமுறையினருக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.இத்துணை சிறந்த குணாதிசயங்களைப் பெற்ற 'அய்யாமை'யின் பெயரன் என்பதே தங்களுக்கு ஒரு சிறப்பு,பலம்,பொக்கிஷம், சொத்து எல்லாமே! லட்சுமி பாட்டியின் ஆன்மா இறைவனில் அமைதி பெறட்டும்!!!! ஆமா ஃபாதர்! எல்லாம் சரிதான்,இத்துணை அழகான பதிவுக்கு அதென்ன அப்படியொரு முன்னோட்டம்...திருஷ்டிப் பரிகாரமா? ( கோச்சுக்காதீங்க...pl....)

    ReplyDelete