Sunday, November 23, 2014

அரசர்கள் பேரம் பேசுவதில்லை!

சென்னையில் ஒரு பெரிய வணிக வளாகத்திலுள்ள ஒரு கடையில் எழுதப்பட்ட ஒரு வாசகம்: 'kings don't bargain' (அரசர்கள் பேரம் பேசுவதில்லை). 'விலையில் பேரம் பேசக்கூடாது' என்ற வியாபார நோக்கம் இருந்தால்கூட இந்த வாசகம் இயேசுவை அரசராகப் பார்ப்பதில் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொடுக்கின்றது.

பேரம் பேசுவது என்பது நம் விருப்பத்திற்கு ஏதுவாக மாற்றிக் கொள்வது, உதாரத்திற்கு ஒரு பொருளின் விலையை நம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றித்தர வற்புறுத்துவது. இது வியாபாரத்தில், கொடுக்கல்-வாங்கலில் தொடங்கினாலும் நம்மையறியாமல் நம் உறவுகளிலும், உணர்வுகளிலும், ஏன் நம் அறநெறியிலும்கூட நுழைந்து விடுகிறது. உதாரணத்திற்கு, இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் நட்பில், ஒரு நண்பன் தவறு செய்யும்போது, அதைச் சுட்டிக்காட்டினால் நட்பு முறிந்துவிடுமோ என்ற கவலையில், அந்த நண்பனின் செயலோடு பேரம் பேசுகிறோம். மனைவியை கடைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில் அவசரமாக வந்த ஒரு பணியை மறுநாள் செய்வதாக பேரம் பேசுகிறோம். அலுவலகம், வேலை, பணம் தான் முக்கியம் என்று குடும்ப மகிழ்வை பேரம் பேசுகிறோம். 'இந்த ஒருமுறை மட்டும், இனிமேல் செய்ய மாட்டேன்' என்று தவறுகின்ற ஒவ்வொரு நேரமும் நம் மனச்சான்றோடு பேரம் பேசுகிறோம்.

இயேசு தன் வாழ்வில் எந்த நிலையிலும் தன் மதிப்பீடுகளோடும், மற்ற மனிதர்களோடும் பேரம் பேசவில்லை. தன்மேல் பொறாமைப்பட்ட தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள், சதுசேயர்களோடு அவர் பேரம் பேசியிருந்தால் அவர் ஒரு பெரிய இரபியாக இன்றும் மதிக்கப்பட்டிருக்கலாம். தன்னை அரசராக்கப் விரும்பிய மக்களோடு போயிருந்தால் 'இஸ்ராயேல் மக்களுக்கு உணவு கொடுத்த அரசரே' என்று ப்ளக்ஸ் போர்ட் வைத்திருப்பார்கள். 'நீ பாவங்களை மன்னிக்கிறாய்? பேய்களை விரட்டுகிறார்? ஓய்வுநாளை மீறுகிறாய்? பாவிகளோடு உண்கிறாய்? இலாசரை உயிர்ப்பிக்கிறாய்? விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணுக்கு இரக்கம் காட்டுகிறாய்?' என்று குற்றம் சாட்டப்பட்டபோது, 'ஐயயோ, தெரியாம செஞ்சுட்டேன், இனிமே செய்யமாட்டேன். நீங்க எப்படி நினைக்கிறீங்களோ அப்படியே இருக்கிறேன்' என்று தன் இறையரசுப்பணியை பேரம் பேசவில்லை. 'என் விருப்பம் அன்று, உம் விருப்பப்படியே ஆகட்டும்' என்று தன் தந்தையிடம் சரணடைகிறார். பேரம் பேசவில்லை.

ஏனென்றால், அவருக்குத் தெரியும் - 'அரசர்கள் பேரம் பேசுவதில்லை'. உண்மையை நேருக்கு நேராகத் தழுவுகின்றார். பொய்மையை, போலித்தனத்தை, முகமூடிகளைச் சாடுகின்றார்.

திருமுழுக்கில் நம் தலையில் பூசப்படும் 'கிறிஸ்மா' தைலத்தின் வழியாக நாமும் இயேசுவின் அரசுரிமையில் பங்கேற்கின்றோம். ஆனால், நாம் பேரம் பேசுவதில்லையா? நம் மதிப்பீடுகளில், உண்மைக்குச் சான்று பகர்வதில், உறவுகளில்?

இன்று நாம் காணும் ஊழல், வன்முறை, குற்றம், போர், இயற்கைச் சீர்கேடு, சுகாதாரமின்மை – அனைத்தும் உருவானது 'யாரோ ஒருவர் பேரம் பேசத் தொடங்கியபோதுதான்.' நாம் அரசர்கள். அரசர்கள் பேரம் பேசுவதில்லை!


1 comment:

  1. அழகான பதிவு....நம் கடந்த காலத்தைத் திரும்பிப்பார்க, நம்மை ஒரு ஆத்தும சோதனைக்குத் தயாராகச் சொல்லும் அழைப்பு.'திருவருகைக் காலத்தை' எதிர்நோக்கியுள்ள நமக்கு நம்மையே தூய்மைப்படுத்தக் கிடைத்த அரிய வாய்ப்பு.நம் அகத்தையும்,புறத்தையும் தூய்மையாக்கி அங்கே நம் 'கிறிஸ்து அரசருக்கு' சிம்மாசனம் ஒன்றமைப்போம்." அரசர்கள் பேரம் பேசுவதில்லை"... அழகான தலைப்பு.நாமும் தான் அரசர்களாக முயற்சிப்போமே! அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்!

    ReplyDelete