Monday, November 24, 2014

உங்களுக்கு வந்தா ரத்தம்!

நேற்று காலை வத்திக்கான் நகருக்குள் இருக்கும் தூய மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய நம் திருத்தந்தை அவர்கள் 'இயேசு எருசலேம் கோவிலைச் சுத்தப்படுத்தும்' நற்செய்திப் பகுதியை முன்வைத்து மறையுரை ஆற்றினார். மறையுரையில் அருட்பணியாளர்களிடம் இன்று வணிக சிந்தனை மேலோங்கியுள்ளது என்று தொடங்கிய அவர், தான் முன்பு பணியாற்றிய இடத்தில் இருந்த ஒரு பங்குத்தந்தை திருமண அருட்சாதனத்திற்காக நேரத்தை கூறு போட்டு விற்றதாகவும், திருவருட்சாதனங்கள் ஒரு போதும் விற்கப்படக்கூடாது என்றும், பங்கு மக்களிடமிருந்து பங்குப் பணியாளர்கள் எந்தவொரு காணிக்கையும் பெறக்கூடாது என்றும் சொன்னார்.

ரொம்ப மகிழ்ச்சி!

திருத்தந்தை அவர்கள் 'மறைமாவட்ட அருட்பணியாளர்கள்' என்று பேசியிருப்பதுதான் இன்று உரோம் முழுக்க பரபரப்பான பேச்சு.

திருவருட்சாதனமும், கடவுளி;ன் அருளும் ஒருபோதும் விலைபேசப்படக் கூடாது என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இதற்கான குறிப்பு திருத்தூதர்பணிகள் நூலிலேயே உள்ளது (8:9-24). லூத்தர் அவர்கள் நம் திருச்சபையை விட்டுச் செல்வதற்கு இதுவும் ஒரு முதற்காரணமாக அமைந்தது.

சரி! நம்ம போப்பாண்டவர் சொன்னது மாதிரி மறைமாவட்ட அருட்பணியாளர்கள் இருக்க வேண்டும்! புரிஞ்சதா! அப்படின்னு இன்னைக்கு நாம சொல்லிட முடியுமா?

நான் மதுரையில உள்ள ஒரு பங்கின் அருட்பணியாளர் என வைத்துக்கொள்வோம். எனக்குக் கீழே 100 குடும்பங்கள் இருக்கின்றன (400 பேர்!). இந்த 400 பேரில் சராசரியாக வாரநாட்களில் ஆலயத்திற்கு வருபவர்கள் 15 பேர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டு திருப்பலிகளிலும் இவர்கள் வருகை 300. வழிபாடுகளின் போது பயன்படுத்தப்படும் ஓஸ்தி, ரசம், திருப்பலி உடை, தரை விரிப்பு, சேர் வாடகை, மின்சாரம், இசைக்கருவிகள், லைட், ஃபேன், தரை வாடகை என ஒரு மணி நேரத்திற்கு ஒரு அளவு என்று கணக்கிட்டால் ஒரு மாதத்திற்கென்று ஒரு அளவு வரும். சரி. இப்ப இந்தச் செலவை யார் பார்ப்பார்? நான் பங்கு பராமரிப்பு நிதியும் வாங்கவில்லை. காணிக்கையும் எடுக்கவில்லை. 300 பேரும் வந்து வேடிக்கை பார்த்துவிட்டு போய்விடுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். ஒரு பங்கில் என்ன நடக்கும்? பங்கு அருட்பணியாளர் எதை வைத்துச் சரி செய்வார்?

ஏன்...பங்குச் சாமியார் வேலைக்குப் போகலாமே! என்று சொல்வர் துறவியர் (ஏன்னா! நாங்க ஸ்கூல்ல வேலை பார்க்குறோம்! காலேஜ்ல வேல பார்க்கிறோம்! ஆனா நீங்க மட்டும் கோயிலே கதின்னு இருந்துகிட்டு காணிக்கைக் காசுல பிழைக்கிறீங்க!).

ஐயா! துறவியரே! நீங்க படிக்கும் போதே உங்க வேலைக்குத் தேவையான மாதிரி டிகிரி படிக்கிறீங்க. உங்க படிப்பை நீங்க இன்வஸ்ட் பண்ணி அதுல இருந்து சம்பாதிக்கிறீங்க. ஆனா எங்கள மட்டும் ஃபிலாசபியும், தியாலஜியும் மட்டும்தானே படிக்க விடுறீங்க. இந்த இரண்டையும் வச்சு ஒரு சலூன் கடையில கூட வேலை பார்க்க முடியாது! ஏன்னா சலூன் கடையில பேசப்படுற ஃபிலாசஃபி கூட நாங்க படிச்சதில்லை!

நாங்க மக்கள்ட்ட காணிக்கை வாங்குறோம்னு சொல்றீங்களே. ஏன்! நீங்க உங்க ஸ்கூல்ல பிள்ளைங்ககிட்ட ஃபீஸ் வாங்குறதில்லையா? கண்ணுக்குத் தெரியாத கடவுளைத் தான் நாங்க விற்கிறோம்னா, நீங்க கண்ணுக்குத் தெரியற கடவுளையே விற்கிறீங்களே? போன மாதம் ஃபீஸ் கட்ட முடியாத ஒரு அருட்பணியாளரை வெளியே அனுப்பியது ஒரு 'பாப்பிறைப் பல்கழைக்கழகம்!'

உங்களுக்கு வந்தா ரத்தம்! ஆனா எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னியா?

எனக்கு பெர்சனலா இந்த வரி வாங்குறது, காணிக்கை எடுக்குறது, வீடு வீடா நோட்டு கொண்டு போய் சந்தா வாங்குறது, பூசைக்கு காசு வாங்குறது, இத்யாதி, இத்யாதி என எதுவும் பிடிக்காதுதான். இப்படிச் செய்யும்போதெல்லாம் ஏதோ பிச்சையெடுப்பது போலவே எனக்குத் தோன்றும்.

33 வயசுல ஒரு குடும்பத்தை நிர்ணயிக்கக் கூடிய மனப்பக்குவம் உடைய எனக்கு எப்படி பிச்சையெடுத்துப் பிழைக்க வேண்டும் என தோணும்?

இது கடவுள் காசு! நாம அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுன்னு சொல்றீங்களா?

என் பங்குல இருக்குற 100 குடும்பங்களும் நாளைக்கு ஒரு பிராடஸ்டன்ட் பாஸ்டர் பின்னால போயிட்டா நான் என் கோவிலுக்கு எப்படி கரண்ட் பில் கட்டுவேன்? எப்படி வெள்ளை அடிப்பேன்? நான் எப்படி சாப்பிடுவேன்?

வத்திக்கானின் அன்றாட நடைமுறையே மக்களின் காணிக்கையை நம்பிதான் இருக்கிறது என்பதை திருத்தந்தை மறந்துவிட்டாரோ? எதையும் விற்கக் கூடாதுன்னா, ஏன் பீட்டர்ஸ் பசிலிக்காவுல காணிக்கைப் பெட்டி இருக்கு? அங்க ஏன் பூசைக்கருத்து எழுதுறாங்க? பேபல் பிளஸ்ஸிங் ஏன் விற்குறீங்க?

'வெறும் செபமாலை சொல்லி மட்டும் திருச்சபையை நடத்த முடியாது' என்று வத்திக்கானுக்குத் தெரிந்ததால் தான் அது வங்கியை நடத்துகிறது.

நீங்க பேங்க் நடத்தலாம். ஆனா ஒரு பங்குச்சாமியார் திருமணப்பூசைக்கு இவ்வளவு கொடு என்றால் நீங்க ரூல் போடுவீங்க!

எங்க மறைமாவட்டத்திலேயே சில பேர் பண்ணை வைத்திருக்கிறார்கள் எனவும், தனிப்பட்ட சொத்துக்கள் வைத்திருக்கிறார்கள் எனவும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதில் தவறு இல்லை என்பதே என் கருத்து. தன்மானம் உள்ள அனைவரும் தனிப்பட்ட சொத்து வைத்திருப்பர். சொத்து வைத்திருக்க வேண்டும்.

ஏன்னா! ஒரு கோவிலில் மக்கள் காணிக்கை போடுவது என் படிப்பிற்கோ, என் மறையுரைக்கோ, என் ஆளுமைக்கோ, என் திறமைக்கோ அல்ல - மாறாக, நான் செய்யும் சின்ன மாயவித்தைக்கே!

ஒரு மறைமாவட்ட அருட்பணியாளர் அவரின் திறமைக்காக அல்ல, அவரின் சாமியார் வேலைக்கே மதிக்கப்படுகிறார்.

இன்னைக்கு நம்ம ஊர்களில் வாழ்கின்ற நபர்களுக்காகவும், இறந்த நபர்களுக்காகவும் திருப்பலிக் கருத்து கொடுக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் வாழ்கின்ற நபர்களுக்கு யாரும் கருத்து கொடுப்பதில்லை. ஏன்? நாம் வாழ்வது நம்ம கையில் தான் இருக்கிறது. கடவுள் கையில் இல்லை என்பது அவர்களுக்குத் தெரிந்து விட்டது. இன்னும் கொஞ்ச நாளில் வத்திக்கான் 'உத்தரிக்கிற நிலை இல்லை' என்று சொல்லிவிட்டாலோ, 'இறப்பிற்குப் பின் வாழ்வு இல்லை' என்று சொல்லிவிட்டாலோ, இறந்தவர்களுக்காக செபிப்பதும் போய்விடும். (வத்திக்கான் அவ்வளவு சீக்கிரம் சொல்லாது!)

இப்படியெல்லாம் பேசி நீங்க செய்றத நியாயப்படுத்தாதீங்கனு சொல்றீங்களா?

நான் நியாயப்படுத்தலை. திருவருட்சாதனங்கள் விலைக்கு அல்ல என்று திருத்தந்தை சொன்னார் என்றால், 'குருக்களும் விலைக்கு அல்ல!' என்று அவர் சொல்ல வேண்டும்.  'உன் வயிற்றுக்கு நீ உழைக்க வேண்டும்!' என எங்களுக்குச் சொல்ல வேண்டும். அப்படி உழைக்க திருச்சபைச் சட்டம் அனுமதிக்க வேண்டும். அல்லது எங்க ஊர் முருகன் கோவிலை மாதிரி எங்க மாதா கோவிலையும் எங்க அரசாங்கம் எடுத்துக்கணும். அரசாங்கமே குருக்களை நியமிக்கணும். சம்பளம் கொடுக்கணும்.

இன்று எங்கள் மறைமாவட்டத்தில் ஆண்டுக்கு 15 சதவிகிதம் என கத்தோலிக்கர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. திருயாத்தரை தளங்களில் கூடும் கூட்டத்தை மட்டும் வைத்து கத்தோலிக்கத் திருச்சபையின் வளர்ச்சியைச் சொல்லிவிட முடியாது. அந்தக் கூட்டம் எங்கும் கூடும். அந்தக் கூட்டத்தில் பலர் கத்தோலிக்கர்களே இல்லை.

பிரிவினை சகோதரர்களோடு சண்டை போட்டுக் கொண்டோ, அன்பியத்திற்கு வராத மக்களை 'நீ வா! நீ வா!' என்று சொல்லிக் கொண்டோ, அருட்சகோதரிகளைப் பார்த்து, 'பொட்டு வைக்க வா! பூ வைக்க வா! கோலம் போட வா!' என்று அழைத்துக் கொண்டோ, பார்க்குறவங்களையெல்லாம் 'பங்கு வரி கட்டிட்டியா?' என்று கேட்டுக் கொண்டோ (நாம ஏன் வரி கட்டணும்! நம்ம என்ன ஆங்கிலேய ஆட்சியிலயா இருக்குறோம்!), 'எங்க கடவுள் தான் உண்மையான கடவுள்'னு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டோ ஒரு அருட்பணியாளர் இருக்கம் வரை அங்கே காணிக்கை இருக்கும்! வியாபாரம் இருக்கும்!


2 comments:

  1. நாம் விசுவசிக்கும் 'ஒரே கத்தோலிக்கத் திருச்சபையில்' காணப்படும் அவலங்களைக் கோபத்துடன் படம்பிடித்துக் காட்டியுள்ளார் தந்தை.ஒரே இறைவனைக் கொண்டாடும் மக்களுக்குள் அதுவும் இறையடியார்களுக்குள்ளே இத்தனை பேதமா,பிணக்கா.ஏற்க முடியவில்லை.தந்தையவர்களின் கோபத்திலுள்ள நியாயமும் புரியாமலில்லை.இதை யார் சரி செய்வது? இறைவனுக்கே வெளிச்சம். இவற்றையெல்லாம் பார்க்கையில் தள்ளி நின்று இறைவனைத் தரிசிப்பதுதான் எங்களைப்போன்ற சாமான்யர்களுக்குச் சாலச் சிறந்தது என நினைக்கிறேன். ஆனால் இத்தனை இடர்பாடுகளையும் மீறி 'பரிசுத்த ஆவி' திருச்சபையை வழி நடத்துகிறார்;இன்னும் நடத்துவார் என்பது என் அசைக்கமுடியா நம்பிக்கை.தந்தையே! தாங்களும் இதை நம்ப வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்! இறைவன் நம்மை வழிநடத்திக் காப்பாராக!

    ReplyDelete
  2. நல்ல சாமிக்கு
    புத்தி ஏன் இப்படி நாறிப் போச்சு?

    ReplyDelete