Saturday, November 22, 2014

பண்ணையாரும் பத்மினியும்!

நேற்று இரவு 'பண்ணையாரும் பத்மினியும்' என்ற திரைப்படம் பார்த்தேன். எஸ்.யு. அருண்குமார் அவர்கள் இயக்கத்தில் வெளியான விஜய் சேதுபதி மற்றும் ஜெயப்பிரகாஷ் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம். படம் முழுக்க கேமரா ஒரு பண்ணையாரையும், பிரிமியர் பத்மினி காரையும் சுற்றி வருகின்றது.

நாம் சின்ன வயதில் எதிர்பார்த்து கிடைக்காத ஒன்று கடைசி வரை கிடைக்காமல் போனால் வலி எப்படி இருக்கும் என்பதே திரைப்படத்தின் தொடக்கம் மற்றும் இறுதி காட்சிகளாக இருக்கின்றது. கொஞ்சம் காதல், கொஞ்சம் சண்டை, கொஞ்சம் காமெடி என படம் விறுவிறுப்பாக இருந்தது.

தனக்குள்ளதெல்லாம் தன் ஊருக்கு என்று பரந்த மனம் காட்டும் பண்ணையார், ஒரு பொருளாக இருந்தாலும் அதைத் தன் காதலி போல பார்த்துக்கொள்ளும் ஓட்டுநர், தனக்கு வலி வந்தாலும் பொய் சொல்லக் கூடாது என நினைக்கின்ற பண்ணையாரின் மனைவி என்று நிறைய கேரக்டர்கள் நிறைய மதிப்பீடுகளைக் குறித்துக் காட்டுகின்றனர்.

சிறுவர்கள் காருக்குப் பின்னால் ஓடும் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் நான் சின்ன வயதில் காருக்குப் பின்னாலேயே ஓடிப்போய் கீழே விழுந்த சில்லு மூக்கு உடைத்துக் கொண்டு வந்ததுதான் நினைவிற்கு வந்தது.

ஒரு கிராமத்தை செல்லுலாய்டடில் செதுக்கிய அழகிய திரைப்படம்.

ஒவ்வொருவரின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது என்பதே இத்திரைப்படத்தின் மையம்.

நாம் எல்லாரும் ஒரு கதையை வாழ்கிறோம். சில நேரங்களில் 'ஐயோ! அப்படி அந்தக் கதையை வாழாமல் போய்விட்டோமே!' என்று தவறிய வாய்ப்புகளைப் பற்றியும் வருந்துகிறோம். ஆலங்குளத்தில் பிறந்து விட்டு அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியவில்லையே என கவலைப்படுகிறோம்.

'நீங்க நடிக்க வரலைன்னா என்ன வேலைக்குப் போயிருப்பீங்க?' என்ற கேள்விக்கு 'சில நேரங்களில் சில மனிதர்கள்' கதாநாயகி அழகாகச் சொல்வார்: 'ஒரு நல்ல ஆபிஸ் உத்தியோகத்துக்குப் போயிருக்கலாம். அப்படிப் போய் அங்கயும் ஏதாச்சும் ஒரு பிரச்சினையை இழுத்து வைத்துக் கொண்டு பேசாம நடிக்கப் போயிருக்கலாமோன்னு அழுதுகிட்டு இருந்துருப்பேன்'.

நாம் வாழ்க்கையில் ஒன்றைத் தேர்வு செய்யும் மற்றொன்றை கட்டாயம் இழக்க வேண்டிய ஒரு நிலை வந்துவிடுகிறது. அந்த இழப்பின் வடுக்கள் நம் சிறுவயது முதல் நம்மைத் துரத்திக் கொண்டே வருகின்றன.

ஒவ்வொருத்தருக்கும் பின்னால் ஒரு கதை இருக்கும்.

இலங்கைச் சிறையிலிருந்து தூக்குத்தண்டனை ரத்தாகி வெளிவந்த ஐந்து பேர் தங்கள் சொந்த ஊருக்கு நேற்று திரும்பியுள்ளனர். அதில் இருவரின் குழந்தைகள் தங்களின் தந்தையின் முகத்தை இப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கின்றனர். என்ன ஒரு நெருடலான நேரம்? இந்தத் தந்தையர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன கதை சொல்வார்கள்? எந்த இழப்பைச் சொல்லி அழுவார்கள்? இந்தக் குழந்தைகள் வளர்ந்தபிறகு தங்களின் குழந்தைகளுக்கும் தங்கள் தந்தையர் தப்பி வந்த கதையைச் சொல்வார்களா?

இன்று டுவிட்டர் தளத்தில் மேய்ந்த ஒரு பெண்ணின் இழப்பின் வரிகள் இவை:

'கணவனிடம் ஊடல் கொண்டாடி
தரையில் படுக்கும்போதெல்லாம்,
பாதி ராத்திரியில்
தரையில் இருந்து உருண்டு
கட்டிலில் விழுந்து விடுகிறேன்!'

நல்லாயிருக்குல? ரணகளத்திலயும் ஒரு கிலுகிலுப்பு!


1 comment:

  1. கண்டவற்றுக்கெல்லாம் ஆசைப்படுபவர்களைப் பார்த்துக் சொல்லும் பழமொழி ஒன்றுண்டு."கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை" என்பதுதான் அது.ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றைப்பெற முடியும்...என்பதை வலியுறுத்துவதாக உள்ளது இன்றையப் பதிவு. எதைப்பெற எதை இழக்கிறோம்?... யோசிக்க வேண்டிய விஷயம்தான்.நாங்கள் முதன் முதலாக வாங்கிய' பத்மினி பிரிமியரை' ஞாபகமூட்டுகிறது தந்தையின் வரிகள்.முதல் கார் என்று ஆசை ஆசையாக வைத்திருந்தாலும் 4 ஆண்டுகள் கழித்து அதை இழக்க வேண்டியதாயிற்று இன்னொரு புது காரைத்தேடி.பெறுவதும், இழப்பதும் நாம் அன்றாடம் சந்திக்க வேண்டிய 'கட்டாயங்கள்'......

    ReplyDelete