Friday, November 28, 2014

ஜில் ஜில் ஜிகர்தண்டா

நேற்று இரவு 'ஜிகர்தண்டா' திரைப்படம் பார்த்தேன். 'சூது கவ்வும்' முகங்களே இதிலும் அதிகம் தெரிந்தன. ஜிகர்தண்டாவுக்கு ஃபேமஸ் நம்ம மதுரை தான். 'சுகர்' என்பதன் வடமொழியாக்கமே 'ஜிகர்'. 'தண்டா' என்றால் குளிர். ஆக, குளிர்ந்த சர்க்கரை தான் ஜிகர்தண்டா. மதுரையில் ஜிகர்தண்டாவுக்கு ஃபேமஸான கடை விளக்கத்தூணிற்கு அருகில் உள்ளது. திரைப்படமும் மதுரையையும், மதுரையின் மண்வாசனையையும், மல்லிகை வாசனையையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

அடி தடி என இருந்த அசால்ட் சேது அழுகுனி குமாராக மாறுவது தான் கதைச் சுருக்கம்.

இந்தத் திரைப்படத்தில் இரண்டு வரிகள் என்னைக் கவர்ந்தன:

அ. மத்தவங்களுக்கு நம்ம மேல பயம் இருந்துகிட்டே இருக்கணும். அந்தப் பயம் தான் நம் பலம்.

இது என்னவோ உண்மை தாங்க. நம்ம வாழ்க்கையவே பாருங்க. நாம யாரைப் பார்த்தாவது பயப்படுவோம். அல்லது நாம யாரையாவது பயமுறுத்திகிட்டே இருப்போம்.

எங்க பிரிட்டோ ஸ்கூல்ல ஒரு பி.இ.டி வாத்தியார் இருந்தார். ஒரு நாள் நான் தண்ணி குடிச்சிகிட்டு இருந்தப்போ பின்னால முதுகுல ஒரு குச்சியால அடிச்சார். அதோட மட்டுமல்லாமல் தொடர்ந்து தலையைப் பிடித்து அடிச்சுகிட்டே நடு கிரவுண்டுக்குக் கூட்டிப்போனார். எல்லா ஜன்னல்களிலிருந்தும் ஸ்டூடண்ஸ் வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தாங்க. 'குடிப்பியா! குடிப்பியா!' என்று ஏதோ டாஸ்மாக்ல பியர் வாங்கிக் குடிச்சது போல அடிச்சார். அந்த அடியை நான் தான் வாங்கினேன். ஆனால் அதன் பின் யாரும் அந்தக் குழாயில் தண்ணீர் குடிக்கவேயில்லை. பயம் காட்டுவதில் இது ஒரு ரகம். தூக்குத் தண்டனை இருப்பதன் அர்த்தமும் இதுதான். தூக்குல தொங்குறவனைப் பார்த்து பயந்து மத்தவங்க திருந்தணும் என்பதற்காகத் தான்.

நம்மையறியாமலே நாம் எதற்கோ, யாருக்கோ பயந்துகிட்டே இருக்கிறோம். நாம யாருக்கு பயப்படுறோமோ அவங்களுக்கு அடிமை ஆயிடுறோம். நம்மள பார்த்து யாரும் பயப்படலனாலும், தெருவுல போற நாயைப் பார்த்து கல்லெடுத்து ஓங்கியவுடன் அது ஓடுவதைப் பார்த்து ஒரு மெல்லிய புன்முறுவலையும் பூக்க வைக்கும் போது நமக்குள்ளே ஒரு பெருமித உணர்வு வரத்தான செய்யுது.

ஆ. உனக்கு வெளியில இருக்கிறவன் 'நீ ஜெயிச்சுட்டியா, தோத்துட்டியானு' சொல்லக் கூடாது. உனக்கு உள்ளிருப்பவன் தான் சொல்ல வேண்டும்.

நம்மகிட்ட இருக்கிற இன்னொரு கெட்ட குணம் அப்ரூவல். யாராவது நம்மைப் பார்த்து, 'டே! நீ நல்லா இருக்க! நீ நல்லவன்! இந்த டிரஸ் உனக்கு நல்லா இருக்கு!' என்று சொல்லிக் கொண்டே இருக்கணும். தப்பா யாராவது சொல்லிட்டா உடனடியா நம்ம மூஞ்சு தொங்கிப் போகுது. அப்ரூவல் தேடுவது நம்மை பிச்சைக்காரராக்கி விடுகிறது. அடுத்தவர்கள் போடும் சில்லறை ரிமார்க்குகளில் நம் வாழ்க்கை நகர ஆரம்பிக்கிறது. காலப்பபோக்கில் நம் பிறப்பு முதல் நம் கூடவே வரும் நம் உள்மனிதனை மறந்து விடுகிறோம்.

எனக்கு ஒரு பாலிஸி உண்டுங்க. நம்ம பிரண்ட்ஸ், ரெலடிவ்ஸ், லவ்வர்ஸ் இவங்கல்லாம் நம்ம கூடவே இருப்பது போல இருந்தாலும், அவங்க நம்ம கூட இருப்பதில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை நமக்கு இருக்கும் நண்பர் நாம் மட்டும் தான். நம்மை நாமே அன்பு செய்ய, ஏற்றுக் கொள்ள பழகிக்கிட்டோம்னு வையுங்க வாழ்க்கையில ஜெயிச்ச மாதிரி தான்.


2 comments:

  1. ஜில்ஜில்ஜிகர்தண்டா..இதில் எனக்கு எந்த ஈடுபாடும் இல்லையெனினும் மதுரை வரும் எம்பிள்ளைகள் இது கிடைக்கும் விளக்குத்தூண் நோக்கிப்படையெடுப்பது வாடிக்கையான விஷயம்.இது மட்டுமல்ல,மதுரை என்று சொல்லுமுன்னே, நம்மைப்பெருமூச்சு விடச்செய்யும்,நாவை ஊறவைக்கும் பல பெருமைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.ஆனால் தந்தைக்கு என்னாச்சு என்றுதான் தெரியவில்லை...விழாக்காலம் நெருங்க,நெருங்க மனம் சொந்த மண்ணைத் தேடுகிறது போலும்! இன்றையப் பதிவில் என்னைக்கவர்ந்த இரண்டு விஷயங்கள்...1."நாம் ஜெயிப்பதையும்,தோற்பதையும் நமக்குள் இருப்பவன்தான் சொல்லணும்; 2.நாம் நம்மை நாமே ஏற்றுக்கொள்ள,அன்புசெய்யப் பழகிட்டோம்னா வாழ்க்கையில பாதி ஜெயிச்ச மாதிரிதான்" ...கண்டிப்பாக இவை நம் வாழ்வை மேலும் அர்த்தமுள்ள தாக்கும் வார்த்தைகள். தந்தைக்கு ஒரு வார்த்தை..தங்களுக்கு இந்த மண்ணின் மீது உள்ள பிரியம் போல எங்களுக்கும் தங்கள் மீது அன்பும்,அக்கறையும் உண்டு.நீங்கள் மென்மேலும் வளர எங்கள் செபங்களும், வாழ்த்துக்களும்!!!..

    ReplyDelete
  2. எனக்கு ஒரு பாலிஸி உண்டுங்க. நம்ம பிரண்ட்ஸ், ரெலடிவ்ஸ், லவ்வர்ஸ் இவங்கல்லாம் நம்ம கூடவே இருப்பது போல இருந்தாலும், அவங்க நம்ம கூட இருப்பதில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை நமக்கு இருக்கும் நண்பர் நாம் மட்டும் தான். நம்மை நாமே அன்பு செய்ய, ஏற்றுக் கொள்ள பழகிக்கிட்டோம்னு வையுங்க வாழ்க்கையில ஜெயிச்ச மாதிரி தான்.VERY GREAT PHILOSOPHY

    ReplyDelete