Wednesday, November 26, 2014

சிலேட் நினைவு!

என் நண்பர் ஒருவருக்கு ஐபேட் வாங்குவதற்காக அவரோடு கடைக்குச் சென்றிருந்தேன். ஐபேட் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு மட்டுமே. மற்றவைகள் எல்லாம் டேப்ளட் எனவே அழைக்கப்படுகின்றன. எச்பி நிறுவனம் தன் தயாரிப்புகளுக்கு ஸ்லேட் எனப் பெயர் வைத்திருக்கின்றது. நம் கலைஞர் கருணாநிதி இதற்கு 'வரைவுப்பட்டிகை' என்று தமிழ்ப்படுத்தியுள்ளார். வரைவுப் பதாகை என்றும் கொள்ளலாம்.

அந்தக் கடையில் இருக்கும் போது சின்ன வயசுல ஸ்லேட் வச்சிருந்ததுதான் நினைவிற்கு வந்தது. என் பள்ளிப்பருவத்தில் மூன்று வகை ஸ்லேட்களை பயன்படுத்தியிருக்கிறேன். முதலில் கல்லில் உள்ள ஸ்லேட். என்ன வகை கல் என்று தெரியவில்லை. ஆனால் ஓங்கி அடித்தால் உடைந்து விடும். சுற்றிலும் மரத்தினால் செய்யப்பட்ட ரீப்பர் இருக்கும். விளிம்புகளில் தகரம் அடிக்கப்பட்டடிருக்கும். இந்தத் தகரம் பட்டுக் கிழிந்த பைகளும், சட்டைகளும் சில. அடுத்த வகை, பிளாஸ்டிக் மற்றும் தகரம். பிளாஸ்டிக்கினால் ஆன ஃப்ரேம். தகரத்தினால் ஆன எழுதும் பகுதி. இந்தப் பிளாஸ்டிக் தான் என் பசி போக்கும். எழுதும்போது இன்று நகத்தைக் கடிப்பது போல அன்று பிளாஸ்டிக் ஃப்ரேமை கடித்ததுண்டு. நானாவது பரவாயில்லை. என் வகுப்புத் தோழன் ஒருவன் பிளாஸ்டிக் ஃபிரேம் முழுவதையும் கடித்து எடுத்துவிட்டு அந்த தகரப் பகுதியைக் கொண்டு ஒரு சண்டையில் மற்றவன் கையை கிழித்தும் விட்டான். மூன்றாம் வகை ஏறக்குறைய இரண்டாம் வகை போல தான். ஆனால் எழுதும் பகுதி கறுப்பாக இருப்பதற்குப் பதிலாக ஆலிவ் பச்சை நிறத்தில் இருக்கும்.

சிலேட்டில் எழுதுவது ஒரு கலை. 12 வாய்ப்பாடுகளையும் அதற்குள் அடக்க சின்ன இன்ஜினியரிங் பண்ண வேண்டும். எழுதியது அழியாமல் பக்குவமாக புத்தகப் பைக்குள் வைக்க வேண்டும். பல நேரங்களில் எழுதிய சிலேட்டைக் கையில் தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். எழுதும்போது நம் கை அழுத்தி எழுதிய இடம் அழிந்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சிலேட்டில் எண்ணெய் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாத்தியார் 'சரி' என்று ஒரு டிக் அடித்தால் எழுதப்பட்டது தன் நிறைவை அடைந்து விடுகிறது. திரும்ப அடுத்த நாள் எழுத வேண்டும். மறுநாள் திரும்பவும் வாய்ப்பாடு எழுதுவதற்கு பதில் வாத்தியாரின் டிக் மார்க்கை மட்டும் அழித்து விட்டுக் கொண்டு சென்ற நாட்களும் உண்டு.

எழுதும் குச்சியிலும் மூன்று வகை உண்டு: சாதா குச்சி, மாவு குச்சி மற்றும் கடல் குச்சி. சில குச்சிகளைக் கொண்டு எழுதினால் பல் கூசுவது போல கீச் கீச் என்று இருக்கும். குச்சி வழுக்கும்.

ஆறாம் வகுப்பு சென்ற போது கிடைத்த பெரிய மாற்றமே 'இனி சிலேடு தேவையில்லை!' என்பதுதான். ஆனாலும் கணக்கு படிப்பிற்கு மட்டும் 12ஆம் வகுப்பு வரை சிலேடு ஒன்று வைத்திருந்தேன்.

உடனடிக் குறிப்பு எழுத, ரஃப் ஒர்க் செய்ய, ஸ்டடி ஹாலில் அமைதியாக ஒருவர் மற்றவரோடு கருத்துப் பரிமாற்றம் செய்ய, 'இது என் இடம்' என இடம் பிடிக்க என சிலேடு பழக்கத்தில் இருந்து கொண்டே இருந்தது.

இன்று பெரும்பாலும் வெள்ளை சிலேட்டும், மார்க்கர் பேனாக்களும் தான் புழக்கத்தில் இருக்கின்றன.

ஒரு எழுத்தை ஒருமுறை எழுதுவதற்குப் பதிலாக இன்றைய டேப்ளட்களில் மூன்று முறை அழித்து எழுதுகிறார்கள் மக்கள் என சொல்கிறது ஒரு ஆய்வு. ஒவ்வொரு நாளும் மேம்பட்ட நிலைக்குத் தொழில்நுட்பம் கடந்து சென்றாலும் சின்ன வயசு ஸ்லேட்டின் இடத்தை எதுவும் எடுத்துவிட முடியாது.

இன்று சிலேடுகள் பெரும்பாலும் கடைகளில் விலைப்பட்டியில் எழுதித் தொங்கவிடுவதற்கு மட்டும்தான் பயன்படுகின்றன.

இப்போ நம் முன்னால் எக்கச்சக்கமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு தொடுக்கு தான். ஆனால் நாம் எந்தத் தகவல்களை உட்கிரகித்துள்ளோம் என்பதைச் சரி பார்க்க ஒரு சிலெட் தேவை தான்.

'தாபுலா ராசா' என்பது இந்த நுட்பத்தின் பெயர். இதன் அர்த்தம் 'வெற்று சிலேடு' அல்லது 'வெள்ளைத் தாள்'. உங்களுக்குப் பிடித்தமான ஒருவரைப் பற்றி நீங்க எவ்வளவு தெரிஞ்சு வைத்திருக்கீங்க என்றால் ரொம்பத் தெரியும் என்று சொல்வோம். ஒரு சிலேடைக் கொடுத்து அவரைப் பற்றி என்ன எழுதுவீர்கள் என்றால் நாம் என்ன எழுதுவோம். நாம் வெற்றுத் தாளில் எவ்வளவு எழுத முடியுமோ அவ்வளவுதான் அவரை நமக்குத் தெரியும்.

சின்ன வயசின் சிலேட் நினைவு வந்து திரும்பும் நேரத்தில் என் நண்பரின் கைக்கு புதிய ஐபேடும், பில்லும் வந்து சேர்ந்தது.


1 comment:

  1. பால்ய வயதின் சில நினைவுகளைத் தனக்கே உரித்தான முறையில் சுவை பட அசைபோட்டிருக்கிறார் தந்தை. என்னதான் இன்று தொழில் நுட்பம் வளர்ந்து ஐபேட், டாப்ளட் போன்றவை வந்திடினும் இந்த ஸ்லேட்,குச்சி போன்றவற்றை நினைக்கையில் நம்முள் எழும் மலரும் நினைவுகளுக்கு ஈடு இணை இல்லைதான். இக்காலச் சிறார்களுக்கு இப்படிப்பட்ட சின்னச்சின்ன சுவையூட்டும் விஷயங்கள் இல்லாமல் போனது வருத்தப்பட வேண்டிய ஒன்றுதான்.ஆனால் இவற்றிற்கெல்லாம் மேலாக ஒன்றுள்ளதே நம் மனமெனும் ஸ்லேட் ....அதில் என்னவேண்டுமானாலும் எழுதலாம்; எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்.ஆகவே அந்த ஸ்கேட்டில் நாம் திரும்பிப்பார்க்கும்போது நமக்கு மகிழ்ச்சிதரக்கூடிய விஷயங்களை மட்டுமே எழுதுவோம்

    ReplyDelete