Thursday, November 6, 2014

கொஞ்சம் ப்ரீஸ்ட்லி ஜெலஸி!

நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன். இஸ்ரயேல் இனத்தவன். பென்யமின் குலத்தவன். எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன். ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். (காண். பிலிப்பியர் 3:3-8)

பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பகுதிகளில் ஒரு பகுதி இது. தூய பவுலடியார் தான் பெருமை கொண்டிருந்த அனைத்தையும் இயேசுவின் மேலுள்ள நம்பிக்கைக்காக இழக்கத் துணிகின்றார். எந்த அளவுக்கு இயேசுவை அனுபவித்திருந்தால் இப்படி இருக்கத் தோன்றும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக 'அழகன்' திரைப்படம் பார்த்துவிட்டு, மதுபாலாவின் குட்டி நாக்கிற்காக சொத்தையே எழுதிக் கொடுக்கலாம் என்று என் அம்மாவிடம் வேடிக்கையாகச் சொன்னேன்.

ஒருவரின் மேல் நமக்கு அதீதமான விருப்பம் வந்துவிட்டால் அவருக்காக நாம் எதையும் செய்யத் துணிந்து விடுகின்றோம். சினிமாக் காதல்களில் சிலர் 'எனக்காக கடலில் குதிப்பாயா?' 'எனக்காக சாலையில் ஆடையின்றி ஓடுவாயா?' என்று கேட்க அதற்கு அந்தக் காதலர்களும் கடலில் குதிக்கின்றார்கள், ஆடையின்றி ஓடுகிறார்கள். ஆக, ஒன்றைப் பெற வேண்டும் என்று நம் மனம் முடிவெடித்தவுடன் மற்றதைத் துறக்கத் துணிந்துவிடுகிறது. இதற்கு வெறும் மூளையின் ஒத்துழைப்பு இருந்தால் போதாது. முழு மனமும் ஒத்துழைக்க வேண்டும்.

இன்று காலை இணைச்சட்ட நூலைக் குறித்த ஒரு கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தேன். 'முழு இதயத்தோடும், முழு மனத்தோடும், முழு வலிமையோடும் கடவுளை அன்பு செய்வது என்றால் என்ன?' என்பதே கட்டுரையின் உட்பொருள். இப்படிச் செய்வது என்றால் வேறு எண்ணத்திற்கே இடமிருக்கக் கூடாதாம். கடவுள் மட்டும் தான் முழுமையாக இருக்க வேண்டுமாம். இதன் பின்புலம் இஸ்ரயேல் மக்கள் வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது என்பதுதான். ஆக, இஸ்ரயேலின் கடவுள் மட்டுமே ஒருவரின் உள்ளம், மூளை, உடல் என இருக்க வேண்டும்.

இந்த ஆண்டு நவம்பர் 26 முதல் 2016 பிப்ரவரி 2 வரை உள்ள ஆண்டை திருத்தந்தை 'இயர் ஆஃப் கான்சக்ரேடட் லைஃப்' (அர்ப்பண வாழ்வின் ஆண்டு) எனக் கொண்டாட அழைப்பு விடுத்துள்ளார். துறவற நிலையில் இருக்கும் அருட்செல்வர்களுக்கும், அருட்செல்வியருக்கும் தங்களையே சுயஆய்வு செய்ய அழைக்கும் ஆண்டு என்கிறார் திருத்தந்தை. இதில் மறைமாவட்ட அருட்பணியாளர்களும் அடங்குவர் என்கின்றனர் சிலர். ஆனால் 'இது எங்களுக்கு மட்டும்' என உரிமை கொண்டாடுகின்றனர் துறவற நிலையில் உள்ளவர்கள். (இந்தக் கொண்டாட்டத்தின் மீது கூட அவர்களுக்கு அப்படியொரு எக்ஸ்க்லுசிவம்!)

அருட்பணி நிலைக்கு வந்தபின் எனக்கு ஆதாயமானது என நான் பற்றிக் கொள்வதும் அதிகமாகவே இருக்கிறது. என் படிப்பு, என் பங்கு, என் பங்கு மக்கள், என் பணி என இவைகள் முன்னிறுத்தப்படும்போது கிறிஸ்துவை நான் 'குப்பையாகக்' கருதத் தொடங்கிவிட்டேனோ என்ற பயமும் வந்துவிடுகிறது.

தன் இனம், குலம், பிறப்பின் அடையளாம், சமய அடையாளம் என அனைத்தையும் துறக்கும் பவுலடியார் அர்ப்பண வாழ்விற்கான பெரிய சவாலை இன்று முன்வைக்கின்றார்.

'இந்த வருடம் எங்க பங்கில் உள்ள சின்ன ஃபாதர் மிக அதிகமாக மிஷன் சண்டே கலெக்ஷனுக்கு பணம் சேகரி;த்தார். நீங்க ஒன்னும் பண்ணல!' என்று நக்கலடித்தார் என் நண்பர் ஒருவர். முதலில் கொஞ்சம் ப்ரீஸ்ட்லி ஜெலஸி வந்தது. ஆனால் நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்: 'விண்டோஸ் 7ஐ விட விண்டோஸ் 8 பெட்டர் இல்லையா? ஐஓஎஸ் 7.2 ஐ விட ஐஓஎஸ் 8 பெட்டர் இல்லையா? டைப்ரைட்டரை விட கம்ப்யூட்டர் பெட்டர் இல்லையா? அதுபோலத்தான் உங்க சின்ன ஃபாதரும். முந்தைய எடிஷனை விட பின்பு வருவது பெட்டர் ஆகத்தான் இருக்க வேண்டும்.'

என் நண்பர் தொடர்ந்து சொன்னார்: 'பின்பு வந்தது பெட்டரா இருக்கு என்பதற்காக முந்தையது அந்தக் காலகட்டத்தில் எவ்வளவு பயன்பட்டது என்பதையும் மறக்க முடியாதுதானே! டைப்ரைட்டர் பயன்படுத்திய காலத்தில் டைப்ரைட்டர் பெரியது இல்லையா!' (இது நண்பரின் பெருந்தன்மை!)

என் அடையாளங்களை, என் திறமைகளை, என் ஆற்றல்களை மட்டும் நான் ஆதாயம் என்று நினைக்கிறேனா என்று என்னிடமே நான் கேள்வி கேட்கத் தூண்டுகிறார் தூய பவுலடியார்.


1 comment:

  1. நம் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒருவரைப்பார்த்து " உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்" எனச் சொல்வது இயல்புதான்.அது அன்பின் ஆழத்தை உணர்த்தும் ஒரு வெளிப்பாடே தவிர லிட்டரலா அர்த்தம் கொள்ள முடியாது.அதுபோலத்தான் கிறிஸ்தவனுக்கு கிறிஸ்துவின் மேல் உள்ள பற்றும், உறவும்.அவருக்காக உயிரைத் துறக்காவிடினும் அவர் சாயலில் உள்ள நம் சகோதர்ரின் உயிரை எடுக்காதிருப்பதே பெரிய விஷயம்.மற்றபடி கிறிஸ்துவை முழுமையாக நேசிப்பதில் என்ன கஷ்டம் எனக்கேட்கிறது என் மனது.ஆனால் அனைத்தையும் குப்பை என நினைத்து துறப்பது?! Well..."my spirit is willing but my flesh is weak".....ஆனாலும் முயற்சி செய்தே ஆகவேண்டிய விஷயம்..அதனால் முயற்சி செய்யலாமே!

    ReplyDelete