Tuesday, November 11, 2014

அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க!

உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ, மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், 'நீர் உடனே வந்து உணவருந்த அமரும்' என்று உங்களில் எவராவது சொல்வாரா? ... ... நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், 'நாங்கள் பயனற்ற பணியாளர்கள். எங்கள் கடமையைத்தான் செய்தோம்' எனச் சொல்லுங்கள். (காண். லூக் 17:7-10)

கடந்த மூன்று நாட்களாக வலைப்பதிவு சரியாக எழுதவில்லை என்று என் மனதில் இன்று காலை உறுத்திக் கொண்டே இருந்தது. அது என்னவோ மனசு சரியில்லையென்றால், மூளையும், உடலும் வேலை செய்ய மறுத்துவிடுகின்றது. மனசு சரியில்லையா, மூளை சரியில்லையா அல்லது உடம்பு சரியில்லையா என்று குழம்பும் அளவிற்கு ஒன்றையொன்று பிண்ணிப் பிணைந்து இருக்கிறது என்பதுதான் மனித வாழ்வின் ஆச்சர்யம். பெண்களுக்கு 'அந்த மூன்று நாட்கள'; இருப்பது போல, ஆண்களுக்கும் இயற்கை 'அந்த மூன்று நாட்களை' வைத்திருக்கிறது என்பது உண்மை எனவே தோன்றுகிறது. மாதத்தில் எப்படியும் மூன்று நாட்கள் 'மூட்' சரியில்லாமல் போய்விடுகிறது.

இப்பெல்லாம் விகடன் புத்தகங்கள் வந்தவுடன் படித்துவிடுகிறேன்.

இந்த வார ஜூனியர் விகடனில் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய அழகிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். அதன் பின்புலத்தில் மேற்காணும் நற்செய்தியைச் சிந்திக்க விழைகிறேன்.

மனித சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன. உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்று ஒருபக்கம் பகுப்பு. பணக்காரர் - ஏழை என்ற பகுப்பு. ஆங்கிலேய ஏகாதிபத்தியம் நம்ம ஊருக்கு வந்தபோது கூடவே 'அரசாங்க அலுவலர் - ப்யூன்' என்ற பகுப்பும் நுழைந்துவிட்டது. அதாவது ஒருவர் ஏவுவார் - மற்றவர் ஏவப்படுவார். இது அரசு அலுவலகத்தில் மட்டுமல்லாமல் நாம் பணியாற்றும் பள்ளி, கல்லூரி, அலுவலகம், ஏன் மறைமாவட்டம் மற்றும் துறவற இல்லத்திலும் இருக்கின்றது. ஒருவர் மேலிருப்பார். மற்றவர் கீழிருப்பார். கீழிருப்பவர் மேலிருப்பவருக்கு பயந்து இருக்க வேண்டும். மேலிருப்பவர் சொல்வது - சில நேரங்களில் முட்டாள் தனமாக இருந்தாலும் - கீழிருப்பவரால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இப்படி இருந்தால் தான் சமூகம் அல்லது திருஅவை என்ற எந்திரம் இயங்கும். கீழிருப்பவருக்கும் சேர்த்து மேலிருப்பவரின் மூளை வேலை செய்யும். ஆகவே கீழிருப்பவர் ஒருபோதும் தன் மூளையைப் பயன்படுத்தவே கூடாது. 'ஏன்!' என்றும் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்பது 'கீழ்ப்படிதல் இல்லை!' அல்லது 'கடவுளின் திருவுளத்திற்கு எதிர்ப்பு' அல்லது 'போராளி!' அல்லது 'கோபக்காரன்!' என்ற மிகப்பெரிய பட்டங்களைக் கொடுத்துவிடும்.

இன்றைய நற்செய்தியிலும் இயேசுவின் போதனை இந்தத் 'தலைவன் - பணியாளன்' பகுப்பை நியாயப்படுத்தவதாக இருக்கின்றது. பகல் முழுவதும் தோட்டத்தில் வேலை செய்த பணியாள் மாலை வந்தாலும் வீட்டிற்கு வந்து 'ஓய்வு எடுப்போம்!' என ஓய்ந்திருக்க முடியாது. வரிந்து கட்டிக் கொண்டு தலைவனுக்குப் பணி செய்ய வேண்டும். சாப்பாடு தயார் செய்ய வேண்டும். அவர் உண்டு குடிக்கும் வரை அருகிருக்க வேண்டும். தலைவர் நன்றிகூட சொல்ல மாட்டார்.

இதை இடதுசாரி மூளையோடு வாசித்தால் உடனே கோபம் வந்துவிடுகிறது. மேற்காணும் கதையில் வரும் இரண்டு பேருமே மனிதர்கள் தாம். ஆனால் அவர்களுக்குள் ஏன் ஏற்றத்தாழ்வு - ஒருவர் ஆணையிடுகிறார், மற்றவர் அடிபணிகிறார். அந்த அடிபணிதலுக்குத்தான் 'சம்பளம்' தருகிறோமே என்று ஆணையிடுபவர் சொல்லலாம். ஆனால் ஏன் அவர் சம்பளம் கொடுக்க வேண்டும். அதை இவர் வாங்க வேண்டும். இந்த ஏற்றத் தாழ்வு எங்கிருந்து வந்தது. என்னிடம் வேலி இருக்கிறது என்பதற்காக என் ஊரில் உள்ள ஊரணியைச் சுற்றி வேலியிட்டுவிட்டு இந்தத் தண்ணீர் எனக்குச் சொந்தம். மற்றவர்கள் எல்லாம் எனக்கு வேலை செய்தால் தண்ணீர் குடிக்க விடுவேன் என்று சொல்வது எவ்வகையில் நியாயம்?

'கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே' என்ற கீதை உபதேசமும் மேட்டுக்குடியினருக்கு சால்ரா தட்டுவதாகவே இருக்கின்றது. இன்னும் இதை முதலாளித்துவ சிந்தனையில் சொன்னால், 'வேலை பார்! சம்பளம் எதிர்பாராதே!' என்பது போல இருக்கிறது.

நன்றாகப் படிக்கின்ற மாணவன் தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்கும் போதும், மாய்ந்து, மாய்ந்து வேலை செய்யும் ஒருவருக்கு பணிஉயர்வு மறுக்கப்படும் போதும் ஆறுதலுக்குச் சொல்லப்படும் வார்த்தைகளும் இவைதான்.

வாழ்க்கையில் எல்லாமே நாம் எதிர்பார்ப்பது போல நடக்காதுதான். ஆனால் நியாயம் என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா?

(ஏன் தம்பி இவ்வளவு கோபப்படுறீங்க?)

பிரபஞ்சன் அவர்கள் குறிப்பிடும் ஒரு ருஷ்யக் கதை இது:

அச்சுமேலவ் ஒரு கீழ்நிலை குமாஸ்தா. ஒருநாள் நாடகம் பார்ப்பதற்காக ஒரு தியேட்டருக்குச் செல்கிறான். இரண்டாம் வரிசையில் இடம் கிடைக்கிறது. நாடகம் நடந்து கொண்டிருக்கும்போதே இவனுக்குத் தும்மல் வருகிறது. அடக்கிப் பார்க்க நினைக்கிறான். முடியவில்லை. தும்மிவிடுகிறான். தும்மலின் நுண்ணிய தண்ணீர்த் துளி முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர் மேல் பட்டிருக்குமோ என்ற நினைப்பில் முன் வரிசையைப் பார்க்கிறான். அவனுக்கு முன்னே அமர்ந்திருப்பவர் அவனது தாசில்தார். 'ஐயயோ! எஜமான் மேலேயே தும்மல் பட்டுவிட்டதே!' என நினைத்து, 'தும்மல் என்பது ஒரு இயற்கை உபாதை. அதை அடக்க முடியாது. என்னை மன்னித்து விடுங்கள்!' என்கிறான். அவரும் அவன் தும்மியதைக் கண்டுகொள்ளாமல், 'பரவாயில்லை!' என்கிறார். இவனுக்கு மனதில் ஒரு நெருடல். வழக்கமாகப் பேசுவதுபோல இவர் பேசவில்லையே என நினைத்து மெதுவாக அவருடைய பின்கழுத்துப் பகுதியை துடைத்து விடுகிறான். 'யார்' என அதிர்ந்தவராக அவர் திரும்பிப் பார்த்து சற்றுக் கோபமாக, 'பேசாம! நாடகம் பார்க்க விடுறியா?' என்கிறார். ஐயயோ! எஜமான் கோபப்பட்டுவிட்டாரே என நினைத்துக் கொண்டு இடைவேளை நேரத்தில் போய் மீண்டும் மன்னிப்பு கேட்கிறான். நாடகம் முடிந்து வீட்டிற்குச் செல்கிறான். தூக்கமே வரவில்லை. எஜமானின் வீடு நோக்கிச் செல்கிறான். நேரம் அதிகாலை 3:45 மணி. அழைப்பு மணியை அடிக்கிறான். ஒருவேளை கவர்னர் தான் வந்துவிட்டாரோ என எண்ணி அவரும் தன் சீருடையை அணிந்தவராக தட்டுத்தடுமாறி வருகிறார். வந்து பார்த்தால் குமாஸ்தா. அவருக்கு கோபம். 'இன்னும் ஒரு தடவை உன்னைப் பார்த்தால் சுட்டுவிடுவேன்!' என்று துப்பாக்கியை எடுக்கின்றார். அவன் பயந்து வீட்டிற்குத் திரும்புகிறான். விடிந்தவுடன் அவனை எழுப்ப அவனது மனைவி செல்கிறாள். அங்கே குமாஸ்தா இறந்து கிடக்கிறான்.

தன் மேலதிகாரி மேல் தும்மிவிட்டோம் என்கிற பயம் அவனைக் கொன்றுவிட்டதா? ஏன் இந்த அடிமைத்தனம்? நமக்கு மேலிருப்பவர்களை நாம் எந்நேரமும் மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டுமா? என்று பல கேள்விகளை எழுப்பி ருஷ்யப் புரட்சிக்கு வழிவகுத்தது இந்தக் கதை.

'ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க!' என்று எங்க கணக்கு வாத்தியார் அடிக்கடி எங்களைத் திட்டுவார்.

மாடுகள் தங்களுக்குக் கொம்பு இருப்பதை மறந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. அதுபோலத்தான் நம்மேல் சுமத்தப்படும் நுகங்களை நாமும் எடுத்துக் கொண்டு, 'அவர் சொல்லிட்டார்! இவர் சொல்லிட்டார்! நாம செய்யணும்! என்று ஓடுகிறோம்.

'நாங்கள் பயனற்ற பணியாளர்கள்!' என்று சொல்லும்போது, 'என்னால் ஒரு பயனும் இல்லையா?' என்ற கேள்விதான் என்னுள் எழுகின்றது.


1 comment:

  1. தந்தைக்கு ஏன் இந்த சமூக்க் கட்டமைப்பின் மீது இத்துணை கோபம் என்று தெரியவில்லை.உடல் நிலை சரியில்லையெனத் தாங்களே காரணமும் கூறிவிட்டீர்களே.கொஞ்சம் யோசித்துப் பார்ப்போமே..இறைவன் நம் உடம்பு முழுவதுமே வெறும் " மூளை" யாகப்படைத்திருப்பின் எப்படி இருந்திருக்குமென்று! யார் சொல்வதை யார் கேட்பது? எங்கும் எதிலும் அமைதிக்குப்பதில் குழப்பம்தான் மிஞ்சும். இயற்கையின் நியதிக்குட்பட்டு இயங்கும் வரைதான் பிரபஞ்சம்.மற்றபடி அந்த குமாஸ்தாவின் நிலைமை நம்மில் பலருக்கு நேர்ந்திருக்கலாம்.யோசிக்க வேண்டிய விஷயமே." நாங்கள் பயன்ற்ற ஊழியர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்" என்று சொல்லும்போது செய்த செயலுக்குக் கூலி எதிர்பாராமலும் தலைக்கனம் என்ற ஒன்று நம்மைத்தக்காமலுமிருக்க அந்த வார்த்தைகள் துணை செய்யும்.தந்தைக்கு ஒரு வேண்டுகோள்! ஓவரா யோசிப்பதைக் கொஞ்சம் குறையுங்களேன்..இந்த சமூகத்தின் மீது தங்களுக்குள்ள கோபமும் குறையும்.நல்ல கருத்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete