Monday, March 5, 2018

உடன் பணியாளர்

நாளைய (6 மார்ச் 2018) நற்செய்தி (18:21-35)

உடன் பணியாளர்

தூய பவுல் தன் திருத்தூது அடையாளத்தை மற்ற திருத்தூதர்களோடு அல்லது திருத்தூது பணி செய்பவர்களோடு இணைத்துப் பேசும்போதெல்லாம் 'உடன்பணியாளர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் 'உடன் பணியாளர்' வருகின்றார்.

அரசன் ஒருவன் இருக்கின்றான். அவன் தன் பணியாள் ஒருவரின் கடனை மன்னிக்கின்றான். அந்த பணியாளனின் உடன் பணியாளன் அவனிடம் கடன்பட அவன் அவனை மன்னிக்க மறுக்கின்றான். இந்த செய்தியை உடனடியாக மற்ற உடன்பணியாளர்கள் அரசனிடம் கொண்டு செல்கின்றனர்.

சில நேரங்களில் உடன் பணியாளனோடு வாழ்வதுதான் மிகவும் கடினம்.

எதற்காக அவனது உடன் பணியாளர்கள் அரசனிடம் இவனைப் பற்றி சொன்னார்கள்?

உடன் பணியாளனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலா?
அல்லது
இவனுக்கு இவ்வளவு கடன் மன்னிக்கப்பட்டதே என்ற பொறாமையிலா?
அல்லது
'அரசன் ஒரு மடையன். இவன் கடனாகிய வாங்கிய பணத்தை என்னவெல்லாம் செய்தான். இது அரசனுக்குத் தெரியவில்லை' என்ற கோபத்தாலா?
அல்லது
அடிபட்ட உடன்பணியாளன் இவர்களிடம் வந்து முறையிட்டானா?
அல்லது
;கீழிருப்பதை மேலே சொல்லும்' இன்ஃபார்மர்களாக இவர்கள் இருந்தார்களா?
பாருங்களேன். இந்;த அரசன் அவர்கள் சொன்னதை வெரிஃபை பண்ணக்கூட இல்லை. பல நேரங்களில் இதுதான் உண்மை. யார் முதலில் பிரச்சினையை மேலே கொண்டு சொல்கிறாரோ அவர்தான் மேலிருப்பவரால் உடனடியாக நம்பப்படுவார். அடுத்து வருவதெல்லாம் இரண்டாம் செய்திதான் அவருக்கு.

எது எப்படி இருந்தாலும், இவர்களால் பணியாளன் அரசனிடம் மாட்டிக்கொண்டான்.

ஒருவேளை இந்த உடன்பணியாளர்களே உட்கார்ந்து இரண்டு பேரையும் கூட்டி வைத்து அவர்களுக்குப் புரிய வைத்திருக்கலாமே? ஏன் அவர்கள் உடனடியாக அரசனிடம் ஓட வேண்டும்? தாங்கள் தப்பித்துக்கொள்வதற்காக?

இன்று நாம் வீட்டில் 50 சதவிகிதம் இருக்கிறோம் என்றால், நாம் பணி செய்யும் இடத்தில் மற்ற 50 சதவிகிதம் இடத்தில் இருக்கிறோம். அருள்பணி நிலை, குருத்துவம், துறவறம் போன்ற நிலைகளில் இருப்பவர்களுக்கு இந்த பிரிவும் கிடையாது. அவர்கள் எப்போதும் உடன்பணியாளர்களோடுதான் இருக்க வேண்டும்.

நமக்கு நன்றாக அறிமுகமான நம் வீட்டில் வாழ்வதே நமக்கு கஷ்டமாக இருக்கும்போது, நமக்கு அறிமுகம் இல்லாத, வேலை என்ற ஒற்றை இணைப்பை மட்டும் நம்பி, எந்நேரமும் போட்டியும், பொறாமையும், முந்துதலும், தள்ளுதலும் இருக்கும் உடன்பணியாளர்களோடு உள்ள வாழ்வு நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்?

பணியாளர்களுக்குத் தலைவராக இருப்பது எளிது.
தலைவனுக்கு பணியாளராக இருப்பது கொஞ்சம் கஷ்டம்.
உடன்பணியாளராக இருப்பது ரொம்ப கஷ்டம்.

கொஞ்சம் தாராள உள்ளம், நிறைய கண்டுகொள்ளாமை - உடன்பணியாளரோடு ஓரளவு நன்றாக வாழ்ந்துவிடலாம்.

உடன்பணியாளரோடு உள்ள உறவு சரியில்லை எனில் வதைப்போரிடம் ஒப்படைக்கப்படுவோம் என்பது இன்றைய நற்செய்தி விடுக்கும் எச்சரிக்கை.

1 comment:

  1. "நமக்கு அறிமுகமான நம் வீட்டில் வாழ்வதே நமக்குக் கஷ்டமாக இருக்கும்போது, நமக்கு அறிமுகம் இல்லாத, வேலை என்ற ஒற்றை இணைப்பை மட்டும் நம்பி, எந்நேரமும் போட்டியும்,பொறாமையும்,முந்துதலும்,தள்ளுதலும் இருக்கும் உடன் பணியாளர்களோடு உள்ள வாழ்வு நமக்கு எவ்வளவு கஷ்டம்?" என்று சொல்லும் தந்தை அந்தக் கஷ்டத்தை மேற்கொள்ளும் வித்தையையும் முன் வைக்கிறார். . "கொஞ்சம் தாராள உள்ளம்,நிறைய கண்டு கொள்ளாமை இருப்பின் உடன்பணியாளரோடு ஓரளவு நன்றாக வாழ்ந்து விடலாம்" என்பதே அந்த வித்தை.வதைப்போரிடம் ஒப்படைக்கப்படுவோம் என்ற பயம் தரும் உந்துதலை விட " முந்தையது" உடன்பணியாளரோடு இணைந்துவாழ உதவும் என்பதே என் கருத்து.அன்றாடம் நாம் சந்திக்கும் ஒரு பிரச்சனையை மேற்கொள்ள வழி சொல்லும் ஒரு பதிவைத் தந்த தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete