Thursday, March 15, 2018

அவருடைய நேரம் வராததால்

நாளைய (16 மார்ச் 2018) நற்செய்தி (யோவா 7:1-2,10,25-30)

அவருடைய நேரம் வராததால்

சபை உரையாளர் நூலில் 'நேரம்' பற்றிய பதிவு நாம் அறிந்ததே:

'ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு' எனத் தொடங்கும் இப்பதிவு 'பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்' என தொடங்கி, 'கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார். காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார்' என நிறைவு செய்கின்றார் ஆசிரியர்.

இந்த இடத்தில் வரும் 'நேரம்' என்பது நாம் நாள்காட்டியில் பார்க்கும் நேரம் அல்ல. மாறாக, இது நிகழ்வு நேரம்.

'நேரம்தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது' - இது பழங்காலம் தொட்டு மக்களால் அதிகம் நம்பப்படும் ஒன்று.

'உனக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது' என்றும், 'உனக்கு இது கெட்ட நேரம்' என்று சொல்வதும் நாம் கேட்டதுண்டு.

'நேரம்தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது' - இதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். இதை இப்படியே ஏற்றுக்கொண்டுவிடுவது நம் வாழ்வில் பல விரக்திகளை நம்மிடமிருந்து விரட்டியடிக்கின்றது.

நற்செய்தியாளர் யோவானுக்கும் இத்தகைய நேரம் பற்றிய நம்பிக்கை இருப்பதை நாம் நாளைய நற்செய்தியில் வாசிக்கின்றோம்.

அதாவது, இயேசுவைக் கொல்லத் தேடுகிறார்கள் யூதர்கள். யூதர்கள் அதிகம் கூடி வரும் கூடாரத் திருவிழாவில் இயேசு வெளிப்படையாக நடந்துகொண்டிருக்கிறார். ஆனால், யாரும் அவர்மேல் ஒரு விரலையும் வைக்கவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.

நாம பாத்திருப்போம்.

ஒருவர் கார் விபத்தில் நேருக்கு நேராக மோதி இறக்கும் தருவாயில் இருந்திருப்பார். ஆனால் அவர் பிழைத்து நடமாடத் தொடங்குவார்.

மற்றவர் சின்ன கல் தட்டி காலில் நகம் பெயர்ந்திருக்கும். அவர் அது ஸெப்டிக் ஆகி சில மாதங்களில் இறந்துவிடுவார்.

இதை நேரம் என்று சொல்வதைத் தவிர வேறில்லை.

முன்னவருக்கு அவரின் நல்ல நேரம் அவரைக் காப்பாற்றுகிறது.

பின்னவருக்கு அவரின் கெட்ட நேரம் அவரை அழித்துவிடுகிறது.

இன்னொரு பக்கம், நேரம் பார்த்து செய்யப்படும் செயல்கள் நிறைவேறாமால் போவதும் உண்டு. அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்? நேரம் நன்றாக இருந்தது. ஆனால் பார்த்தவரின் நேரம் சரியில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.

இந்த நேரம் என்னும் வலையிலிருந்து விடுபட வழியே இல்லையா?

இருக்கிறது.

ஒரே வழி.

நேரத்தை தன் கையில் வைத்திருக்கின்ற அவரில் நம்மை இணைத்துக்கொள்வது.

நாளை எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியாது.

ஆனால் நாளையைத் தன் கரங்களில் வைத்திருக்கின்ற அவரை நமக்குத் தெரியும்.

இந்தத் தெளிவு இருந்ததால்தான் இயேசுவால் எதிரியின் கூடாரத்திலும் நடமாட முடிந்தது.

4 comments:

  1. நாளை எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியாது.

    ஆனால் நாளையைத் தன் கரங்களில் வைத்திருக்கின்ற அவரை நமக்குத் தெரியும்.///
    this reminds me the following song


    Many things about tomorrow
    I don't seem to understand
    But I know who holds tomorrow
    And I know who holds my hand

    ReplyDelete
  2. நற்செய்திக்கான தெளிவுரை எல்லாம் போதும் சாமி .. யூதித் நூலுக்கு பண்ண மாதிரி ஏதாவது நூலை எடுத்து மொத்த நூலுக்கும் தெளிவுரை சொல்லுங்க ...

    ReplyDelete
  3. ஆங்கிலத்தில் ஒரு அழகான பாடலின் வரிகள்...என் மனதுக்கு மிக நெருக்கமானவை....
    " In His time, there's a time; Both for sowing& for reaping there's a time.
    Time for losing time for gain,
    Time for joy and time for pain
    Every purpose under Heaven has a time." நேற்று சிரித்தவர்கள் இன்று அழுவதும், நேற்று இயலாமையில் இருந்தவர்கள் இன்று ஏணியின் உச்சத்தில் இருப்பதும் காலத்தின் விளையாட்டு. " காலங்கள் அவருடையவை" எனில் அந்தக் காலத்தில் நடக்கும் விஷயங்களும் அவருடையவைதானே! "நேரம் தான் எல்லாவற்றையும் நிர்ணயிருக்கிறது" என்பதை ஏற்றுக்கொண்டு விட்டால் நம் வாழ்வின் பல விரக்திகளை நம்மிலிருந்து விரட்டிவிடலாம்.உண்மையிலும் உண்மை! "எல்லா நேரத்தையும் நல்ல நேரமாக்கலாம் நேரத்தைத் தன் கையில் வைத்திருக்கிற அவரில் நம்மை இணைக்கும் போது" ... நேரம் பார்த்துச் சொல்லும் நல்ல விஷயங்களுக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  4. My appreciation & thanks to Ms.Catherine for the lovely lines on "Tomorrow". May God bless us...

    ReplyDelete