Sunday, March 25, 2018

ஆறு நாட்களுக்கு முன்பு

நாளைய (26 மார்ச் 2018) நற்செய்தி

ஆறு நாட்களுக்கு முன்பு

'பாஸ்கா விழாவுக்கு ஆறு நாட்களுக்கு முன்பு' - இப்படித்தான் தொடங்குகிறது நாளைய நாளின் நற்செய்தி வாசகப் பகுதி (யோவான் 12:1-11). ஏறக்குறைய நாற்பது நாட்களாக, செபம், நோன்பு, பிறரன்புச் செயல்கள் என நம் உடலை ஒறுத்து, பக்குவப்படுத்தி, நம் மனத்தை ஒருமுகப்படுத்தி, ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு என்னும் பாஸ்கா விழாவைக் கொண்டாடத் தயாரித்தோம். நாம் மேற்கொண்ட இந்தத் தயாரிப்பு இன்று நாம் தொடங்கி கொண்டாடும் ஏழாம் நாள் கொண்டாடும் திருநாளிற்காகத்தான்.

இன்னும் அந்த நாளுக்கு ஆறு நாட்கள் இருக்க, இன்றைய நற்செய்தி வாசகம் ஆறு பேரை நம் முன் வைக்கிறது. இந்த ஆறு பேர் யார்? இந்த ஆறு பேர் நமக்கு வைக்கும் சவால்கள் எவை? என்று பார்ப்போம்.

1. இலாசர். இவர் மார்த்தா மற்றும் மரியாளின் சகோதரர். இயேசுவின் நண்பர்களாக இருந்த இந்தக் குடும்பம் வசித்தது பெத்தானியாவில். நோயுற்றிருந்து இறந்துபோன இலாசரை இயேசு உயிரோடு மீண்டும் எழுப்புகின்றார். இந்த உயிர்ப்பு நிகழ்வால் இயேசுவின்மேல் பலர் நம்பிக்கை கொள்கின்றனர். இயேசுவின் எதிரிகளுக்கு இவரின் உயிர்ப்பு கண்ணில் விழுந்த தூசியாய் உறுத்துகிறது. இயேசுவோடு இணைந்து இவரையும் கொன்றுவிட நினைக்கின்றனர். வாழ்க்கையை இரண்டாம் முறையாக வாழும் வாய்ப்பு பெற்றவர் இலாசர். நம் வாழ்க்கையை நாம் ஒரேமுறைதான் வாழ்கிறோம். இந்த ஒற்றை வாழ்வை நாம் வாழும் விதம் எப்படி?

2. மார்த்தா. மூத்த சகோதரி. விருந்தோம்பலில் இவரை யாராலும் மிஞ்ச முடியாது. முன்னொரு நாள் இயேசு இவர்கள் வீட்டிற்கு வந்தபோது, இயேசுவைக்குப் பணிவிடை செய்வதில் இவர் மும்முரமாய் இருக்கிறார். 'மார்த்தா, நீ பலவற்றைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்!' எனக் கடிந்து கொள்கின்றார். நம் வாழ்வில் நாம் எதை முதன்மைப்படுத்த வேண்டும்? என்பதை நாம் இவரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.

3. மரியா. இயேசுவின் காலடிகளில் நறுமணத் தைலம் பூசி, தமது கூந்தலால் துடைக்கின்றார். மிக உயர்ந்த நறுமணத் தைலம் அது. அந்த தைலத்தால் அந்த வீடே கமகமக்கிறது. தன்னிடம் இருக்கும் மிகச் சிறந்த ஒன்றை இயேசுவுக்காக இழக்கின்றார் மரியா. மதிப்பு மிக்க ஒன்றை நாம் கண்டுகொள்ளும்போது, அதனிலும் மதிப்பு குறைந்த ஒன்றை இழந்தால் தவறில்லையே என்பது இவரின் வாதம். இயேசுவே இவர் கண்ட புதிய புதையல்.

4. யூதாசு இஸ்காரியோத்து. இவர்தான் இயேசுவை எதிரிகளிடம் முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்தவர். இவர் கணக்கில் புத்திசாலி. இவரிடம்தான் சீடர்குழுவின் பணப்பை இருந்தது. 'இது என்ன விலை?' 'அது என்ன விலை?' என்று இவரின் மூளை எல்லாவற்றிற்கும் விலை குறிக்கும். ஆகையால்தான் இயேசுவை முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விலை பேசுகின்றார். இங்கே, 'நறுமணத் தைலத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம்' என்று போலி அக்கறை காட்டுகின்றார். நம் வாழ்வில் நாம் எல்லாவற்றிற்கும் விலைபேசிவிட முடியுமா?

5. யூதர்களும் அவர்களின் குருக்களும். இவர்கள் வந்திருந்தது இயேசுவைக் கொன்றுவிடும் திட்டத்தோடு. இயேசுவின்மேல் மக்கள் நம்பிக்கை கொண்டது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. தங்களின் மதம் மற்றும் அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரான இயேசுவின் குரலும் இவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. நாமும் பல நேரங்களில் நம் மனச்சான்றின், நம் கடவுளின் குரலை அழித்துவிடத் துடிக்கிறோம். இல்லையா?

6. இயேசு. இவர்தான் இந்த நிகழ்வின் கதாநாயகன். நடக்கும் அனைத்தும் தன் இறுதிநாளை ஒட்டியே நடக்கிறது என்று எப்போதும் தன் இறப்பையும், அதன் வழியாக நடந்தேறவிருக்கும் மனிதகுல மீட்பையும் மனத்தில் நிறுத்தியவர். இவரைத் தான் வானகத் தந்தை, தான் பூரிப்படையும் மகன் (காண். முதல் வாசகம், எசாயா 42:1-7) என உச்சி முகர்கின்றார். இவரே மக்களின் புதிய உடன்படிக்கை. இவரே உலகின் ஒளி. இவரே ஆண்டவர். அதுவே இவரின் பெயர்.

7. நாம். இந்த ஆறு நபர்களுக்குப் பின் நிழலாடுவது நீங்களும், நானும். இந்த கதாபாத்திரங்களில் நம் எல்லாரிடத்திலும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கின்றனர். மற்றெல்லாம் மறைந்து இயேசு மட்டும் வளர்ந்தால் இந்த நாள் மட்டுமல்ல. எல்லா நாளுமே நமக்கு உயிர்ப்பு நாளே.

1 comment:

  1. கண்களில் ஒத்திக்கொள்ள வேண்டியதொரு பதிவு. இன்றையக் கதாபாத்திரங்களில் உச்சி முகரப்பட வேண்டியவர்களும், உதாசீனம் செய்யப்பட வேண்டியவர்களும் உள்ளனர். மார்த்தா- மரியா...இந்த பெத்தனி சகோதரிகளில் என்னைக்கவர்ந்தவர் என்றுமே மார்த்தா தான்.இயேசு அவருக்குச் செய்தது ஓரவஞ்சனை என்ற எண்ணமும் எனக்குண்டு..ஆனால் இன்றென்னவோ தந்தையின் " மார்த்தா! நீ பலவற்றைக்குறித்துக்கவலைப்படுகிறாய்" எனும் வரி என் மனப்போக்கை மாற்றிவிட்டது போல உணர்கிறேன். ஆம்!எதை நாம் முதன்மைப்படுத்த வேண்டுமென்பதை மார்த்தாவிடமும், மதிப்பு மிக்க ஒன்றை நாம் கண்டுகொள்ளும்போது,அதனினும் மதிப்பு குறைந்த ஒன்றை இழந்தால் தவறில்லை என்பதை மரியாவிடமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.அதற்கும் மேலாக யூதாசு நமக்குக் கற்றுத்தரும் பாடம்.... " விலை பேச முடியாத பல விஷயங்கள் இம்மண்ணில் இருக்கின்றன." ...எண்ணிய மாத்திரத்தில் என் கண்களைப் பனிக்க வைக்கும் விஷயமிது.இன்றைய கதாநாயகர்கள் ஆறு பேரில் என்னில் ஓங்கி நிற்பது யார்? யோசிக்கிறேன்.எல்லோருடைய சாயலின் கலவையாக நான் இருப்பினும், மற்றெல்லோரும் மறைந்து இயேசு மட்டும் என்னில் வளர்ந்தால் இந்த நாள் மட்டுமல்ல... எல்லா நாளுமே நமக்கு உயிர்ப்பு நாளே!.... உயிர்ப்பின் திருநாளுக்கு ஆறு நாட்களுக்கு முன்னரே உயிர்ப்பின் சுவையை உணர்த்திய தந்தைக்கு நான் என்னத்தைக் கொடுப்பது என் செபத்தைத்தவிர? தந்தையை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete