Monday, June 13, 2022

உன்னையே விற்றுவிட்டாய்

இன்றைய (14 ஜூன் 2022) முதல் வாசகம் (1 அர 21:17-29)

உன்னையே விற்றுவிட்டாய்

நேற்றைய முதல் வாசகத்தில் நடந்த நிகழ்வின் தொடர்ச்சியை இன்று வாசிக்கின்றோம். நாபோது இறந்துவிட்ட செய்தி கேட்டு, அவருடைய திராட்சைத் தோட்டத்தை உரிமையாக்கிக் கொள்ள ஆகாபு புறப்பட்டுச் செல்கின்றார். அவரைச் சந்திக்க எதிரில் வருகின்றார் இறைவாக்கினர் எலியா.

இந்த வாசகத்தில் இரண்டு, மூன்று பாடப் பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, 'நீ அவனிடம் சொல்ல வேண்டியது' என்று ஆண்டவர் எலியாவுக்கு இரண்டு முறை சொல்கின்றார் (காண். 21:19). ஆண்டவர் எதைத்தான் சொன்னார்? இரண்டையும் சொன்னார் என்றால், ஏன் அவர் தொடர்ச்சியாகச் சொல்லவில்லை. இரண்டு, ஆகாபு அரசன் தண்டிக்கப்படுவது அவன் மறைமுகமாகச் செய்த இக்கொலைக்காகவா அல்லது அவன் இஸ்ரயேல் மக்களை சிலைவழிபாட்டுக்குத் தூண்டி எழுப்பியதாலா? மூன்று, ஆண்டவர் நிகழ்வின் இறுதியில் ஆகாபை மன்னிக்கின்றார். ஆனால், நூலின் இறுதியில் ஆகாபின் இரத்தத்தை நாய்கள் நக்குகின்றன. 

இப்படிப்பட்ட முரண்களை வாசிக்கும்போதெல்லாம் நாம் ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும். அரசரைப் பற்றிய எந்தப் பதிவுகளையும் நாம் இருப்பதுபோல அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. அரசவைக் கவிஞர்கள் அல்லது அரசர்கள் தங்களுடைய அரசனை ஏற்றிப் போற்றி எழுதுவது மரபு. எடுத்துக்காட்டாக, சாலமோன் ஞானத்திற்காக மன்றாடுகின்றார். ஆனால், அவருடைய வாழ்வின் இறுதியில் மிகவும் மதிகேடான செயல் செய்து இறந்து போகின்றார். சாலமோன் ஞானத்திற்காக மன்றாடியிருப்பாரா? தெரியாது? அவருடைய அரசவை ஆசிரியர் ஒருவர், சாலமோனிடம் 'வெரி குட்' வாங்குவதற்காக எழுதியிருக்கலாம். மேலும், பல ஞான ஆசிரியர்கள் தங்கள் எழுத்துக்களை சாலமோனின் எழுத்துக்களாக வார்த்தளித்திருக்கலாம். இங்கேயும், ஆகாபு அரசன் இழிவான இறப்பை எதிர்கொண்டாலும், தொட்டும் தொடாமலும் எழுதுகின்றனர் ஆசிரியர்கள்.

நாபோத்திடம் திராட்சைத் தோட்டம் இருந்தது உண்மை. அதை ஈசபேல் தட்டிப் பறித்தது உண்மை. அதற்கு மறைமுகமான தூண்டுதலாக ஆகாபு இருந்தது உண்மை. எலியா இறைவாக்குரைத்ததும் உண்மை. ஆனால், ஆகாபை கடவுள் மன்னித்தாரா? அல்லது தண்டித்தாரா? என்பது உறுதியாக இல்லை.

இன்றைய வாசகத்தில் உள்ள மூன்று சொல்லாடல்களை நாம் சிந்திப்போம்:

அ. 'என்னைக் கண்டுபிடித்துவிட்டாயா?'

எலியா ஆண்டவரின் வாக்கைத் தனக்கு உரைத்தபோது, ஆகாபு, 'என்னைக் கண்டுபிடித்துவிட்டாயா?' எனக் கேட்கின்றார். ஆண்டவரின் கண்கள் ஆயிரம் சூரியன்களுக்கு ஒப்பானவை என்றும், அவற்றுக்கு மறைவானது எதுவும் இல்லை எனவும் சொல்கின்றன ஞானநூல்கள். ஆக, நாம் செய்கிற செயல்கள் அனைத்தையும் இறைவன் காண்கின்றார். குறிப்பாக, வறியவர்களுக்கு துன்பம் இழைக்கப்படும்போது ஆண்டவர் அவர்கள் சார்பாக செயலாற்றுகிறார். ஆனால், நாபோத்து உயிரோடு இருக்கும்போது தன்னை நோக்கி அவர் அழைத்தபோது, அவரைக் காப்பாற்ற வராத கடவுள், இப்போது அந்த நிகழ்வைக் கண்டுபிடித்து தண்டனை கொடுத்தால் என்ன? கொடுக்காவிட்டால் என்ன?

ஆ. 'உன்னையே விற்றுவிட்டாய்'

பாவம் செய்தல் என்பதை 'விற்றுவிடுதல்' என்ற சொல்லாடல் வழியாக பல நிகழ்வுகளில் பதிவு செய்கிறது முதல் ஏற்பாடு. பாவம் செய்யும்போது நான் என்னுடைய தான்மையை, அறிவை, சுதந்திரத்தை என்னுடைய உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் விற்றுவிடுகிறேன். எடுத்துக்காட்டாக, நான் கோபத்தில் யாரையாவது அடித்துவிடுகிறேன் என வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில், நான் அந்தக் கோபத்தின் அடிமையாக என்னை விற்றுவிடுகிறேன். ஆனால், நாம் எந்த உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும், நபர்களுக்கும், கருத்தியல்களுக்கும் நம்மை விற்றல் ஆகாது.

இ. 'நாய்கள் நக்கும்'

இது ஒரு பக்கம் தண்டனையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் இதுதான் வாழ்வின் எதார்த்த நிலை. நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைப் பறித்த ஆகாபு, அதில் காய்கறி போடப் போவதாகச் சொன்னார். அவர் காய்கறி போட்டாரா, போடவில்லையா, எவ்வளவு விளைச்சல் கிடைத்தது, கிடைக்கவில்லை என்று எதுவும் நமக்குத் தெரியாது. ஆனால், ஆகாபு இறந்தபோது அவர் பறித்துக்கொண்ட தோட்டம் அவரைக் காப்பாற்றவில்லை. அவர் அடைத்த வேலிகள் நாய்களைத் தள்ளி வைக்கவில்லை. இறப்பின் முன், நாய்களின் முன் ஆகாபு கையறுநிலையில் கிடக்கின்றார். தான் பறித்துக்கொண்டு அதே நிலத்தில் தன் இரத்தத்தைச் சிந்துகின்றார். இதையே பட்டினத்தார், 'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' என்கிறார். காதறுந்த ஊசி கூட கடைசியில் உடன் வராதபோது, தோட்டத்தைப் பறிப்பதும், தோட்ட உரிமையாளரைக் கொல்வதும் ஏன்?

நற்செய்தி வாசகத்தில் (மத் 5:43-48), நம்மை வெறுப்பவர்மேலும் அன்பு காட்டுமாறு நமக்குக் கற்பிக்கின்றார் இயேசு. விண்ணகத் தந்தையைப் போல நிறைவாய் இருப்பது என்பது இரக்கம் காட்டுவதில்தான் உள்ளது.

சில நேரங்களில் கடவுள் நீதியின்படி செயலாற்றுகின்றார் (முதல் வாசகத்தில்போல). சில நேரங்களில் இரக்கத்தின்படி செயலாற்றுகின்றார் (நற்செய்தி வாசகத்தில் போல)



1 comment:

  1. Philomena Arockiasamy6/13/2022

    நாம் மகிழும்போது நம்முடன் மகிழ்ந்து, நாம் கண்ணீர் விடுகையில் நம் கண்ணீரைத் துடைத்துவிடும் அதே இறைவன் தான், நாம் பாதை மாறுகையில் தம் நீதியின் படி நம்மை நடத்துகிறார். நல்லவன் நாபோது கொல்லப்படுவதை அனுமதிக்கும
    அதே இறைவன் தான் அவனைக் கொன்ற தீயவன் ஆகாபுவை நாய்களால் நக்கப்படவும் அனுமதிக்கிறார். ஏன், எதற்கு என்று கேள்வி கேட்க நமக்கு உரிமை இல்லை; ஏனெனில் அவர் இறைவன்.நாம் செய்ய வேண்டியதெல்லாம் நிறைவாயுள்ள நம் விண்ணகத் தந்தையைப்போல… நல்லோர் மேலும், தீயோர் மேலும் பெய்யும் மழையைப்போல நம்மை வெறுப்பவர் மீது அன்பையும், இரக்கத்தையும் பொழிவது மட்டுமே!
    அன்பு, இரக்கம், நீதி…. இந்த குணங்களனைத்துமே இறைவனுக்கு மட்டுமல்ல, மனிதனுக்கும் சொந்தமானது என்பதை எடுத்துக்காட்டும் பதிவு. தந்தைக்கு நன்றி!

    ReplyDelete