திருத்தூதர்கள் பேதுரு, பவுல்
உரோமன் கத்தோலிக்கத் திருஅவையின் இருபெரும் தூண்கள் என அழைக்கப்படுகின்ற திருத்தூதர்களான பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம்.
'உன் பெயர் பேதுரு. இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா' (காண். மத் 16:18) என்று பேதுருவையும், 'பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்' (காண். திப 9:15) என்று பவுலையும் தேர்ந்தெடுத்தார் ஆண்டவராகிய இயேசு.
இவர்கள் நமக்குத் தருகின்ற வாழ்வியல் பாடங்கள் எவை?
அ. உயிர்ப்பு அனுபவம்
பேதுரு இயேசுவை மறுதலிக்கிறார். பவுல் இயேசுவின் இயக்கம் சார்ந்தவர்களை அழிக்கச் செல்கின்றார். ஆனால், உயிர்த்த இயேசுவைச் சந்தித்தபின் இவர்களுடைய இருவரின் வாழ்வும் தலைகீழாக மாறுகின்றது. மாறிய வாழ்வு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. ஆக, இயேசுவின் உயிர்ப்பு அனுபவம் பெறுதல் மிக அவசியம். இதையே பவுலும் பிலிப்பியருக்கு எழுதுகின்ற திருமடலில், 'கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிய விரும்புகிறேன்' (காண். பிலி 3:10) என்கிறார். இந்த அனுபவம் நம் துன்பங்களில், செபங்களில், உறவுநிலைகளில், திடீரென தோன்றும் ஒரு உந்துசக்தியில் கிடைக்கலாம்.
ஆ. பொருந்தக் கூடிய தன்மை
பேதுருவும் பவுலும் எதிரும் புதிருமானவர்கள். குடும்ப பின்புலம், தொழில், படிப்பு, ஆள்பழக்கம், குணம் போன்ற அனைத்திலும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்களாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும் பணிசார்ந்த வாக்குவாதங்களும் எழுந்துள்ளன. இதை பவுலே கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் குறிப்பிடுகின்றார்: 'ஆனால், கேபா (பேதுரு) அந்தியோவுக்கு வந்தபோது அவர் நடந்துகொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன் ... யூதர்களின் வெளிவேடத்தில் அவர் பங்குகொண்டார் ... நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், 'நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிற இனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க பிற இனத்தார் யூத முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?' என்று கேட்டேன்' (காண். கலா 2:11-14). இப்படியாக இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நற்செய்தி அறிவிப்புப் பணி என்ற புள்ளியில் அவர்கள் இருவர் ஒருவர் மற்றவரோடு இயைந்து பொருந்தினர்.
இ. எழுத்துக்கள்
'பேசுபவர்கள் மறைந்துவிடுவார்கள். எழுதுபவர்கள் என்றும் வாழ்வார்கள்' என்பது ஜெர்மானியப் பழமொழி. இவர்களின் எழுத்துக்களில் இவர்கள் இன்றும் வாழ்கிறார்கள். ஆகையால்தான், இவர்களின் திருமுகங்களை நாம் வாசிக்கும்போது, வாசிக்கத் தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் வாசிப்பவரின் குரலை நாம் மறந்து, இவர்களின் குரலைக் கேட்கத் தொடங்குகிறோம். இவர்கள் தங்களுடைய குழுமங்களுக்கு, அவற்றின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளின் பின்புலத்தில் எழுதிய திருமடல்கள் இன்று நம் குழுமங்களுக்கும், நம் சூழல்களுக்கும் மிக அழகாகப் பொருந்துகின்றன. எழுதுபொருள்கள் முழுமையாக உருப்பெறாத நிலையில், நெருப்பு, தண்ணீர், கள்வர் என ஏட்டுச்சுருள்களுக்கு நிறைய எதிரிகள் இருந்தாலும், நீங்காமல் நிறைந்திருக்கின்றன இவர்களுடைய எழுத்துக்கள்.
'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' என்கிறார் சபை உரையாளர் (7:8). புனித பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் தொடக்கம் மிகவும் சாதாரணமாக இருந்தது. கலிலேயக் கரையில் வலைகளை அலசிக்கொண்டிருந்தவர் பேதுரு. தன்னுடைய அவசர மனநிலையால் இயேசுவால் கடிந்துகொள்ளப்பட்டவர். இயேசுவை மறுதலித்தவர். ஆனால், இறுதியில், 'ஆண்டவரே! உமக்கு எல்லாம் தெரியுமே!' என்று சரணாகதி அடைந்தவர். கிறிஸ்தவம் என்ற புதிய வழியைப் பின்பற்றியவர்களை அழிக்கச் சென்றவர் பவுல். வழியிலேயே தடுத்தாட்கொள்ளப்படுகின்றார். 'வாழ்வது நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்' என்று தன் வாழ்க்கையைக் கிறிஸ்துவிலும், கிறிஸ்துவைத் தன் வாழ்க்கையிலும் ஏற்றார்.
இவர்கள் இருவருக்கும் பொதுவான மூன்று விடயங்களை நம் வாழ்க்கைப் பாடங்களாக எடுத்துக்கொள்வோம்:
(அ) அவர்கள் தங்கள் இறந்தகாலத்தை ஏற்றுக்கொண்டனர்
நம் கடந்தகாலத்தை நாம் இரண்டு நிலைகளில் எதிர்கொள்ள முடியும். ஒன்று, எதிர்மறை மனநிலையில். கடந்தகாலத்தை நினைத்து குற்றவுணர்வு, பழியுணர்வு, அல்லது பரிதாப உணர்வு கொள்வது எதிர்மறை மனநிலை. இந்த மனநிலையில் நாம் எப்போதும் நம் கடந்தகாலத்தோடு போரிட்டுக்கொண்டே இருப்போம். 'ச்சே! அப்படி நடந்திருக்கலாமே! இப்படி நடந்திருக்கலாமே! நான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமே!' என்று நம்மை நாமே குறைசொல்லிக்கொண்டு வாழ்வது இந்த மனநிலையில்தான். ஆனால், இரண்டாவது மனநிலை நேர்முக மனநிலை. 'ஆமாம்! நான் அப்படித்தான் இருந்தேன். ஆனால், அதை நான் இப்போது மாற்றிக்கொண்டேன். அதுவும் நான்தான். இதுவும் நான்தான்' என்ற மனநிலையில் எந்தவொரு எதிர்மறை உணர்வும் இருக்காது. வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும். பேதுருவும் பவுலும் ஒருபோதும் குற்றவுணர்வால், பழியுணர்வால், பரிதாப உணர்வால் தங்களுடைய கடந்த காலத்திற்குள் தங்களைக் கட்டிக்கொள்ளவில்லை. மாறாக, தங்கள் கடந்த காலத்தை அருளோடு கடந்து வந்தனர்.
(ஆ) அவர்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டனர்
பேதுருவும் பவுலும் இறையனுபவம் பெற்றவுடன் தங்களுடைய பாதைகளை மாற்றிக்கொண்டனர். மாற்றிக்கொண்ட பாதையிலிருந்து அவர்கள் திரும்பவில்லை. பேதுரு மீன்பிடிக்கத் திரும்பிச் சென்றார். ஆனால், 'உமக்கு எல்லாம் தெரியுமே!' என்று சொல்லி இயேசுவிடம் சரணாகதி அடைந்த அடுத்த நொடி முதல் திரும்பவே இல்லை. ஆண்டவரை நோக்கி வாளேந்திய பவுல் ஆண்டவருக்காக வாளை ஏற்கின்றார். ஆண்டவர் மட்டுமே அவருடைய பாதையாக மாறினார்.
(இ) அவர்கள் தங்கள் நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்தனர்
தங்களுடைய பணிவாழ்வில் இருவரும் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். இறுதியாக, 'இயேசுவே இறைமகன்' என்ற தங்களுடைய நம்பிக்கை அறிக்கைக்காக இறப்பை ஏற்கின்றனர். இயேசு பற்றிய நற்செய்தி நம் காதுகளுக்கு வந்து சேர இவர்களுடைய நம்பிக்கையே முக்கியக் காரணம்.
புனித பேதுரு மற்றும் பவுல் - வலுவற்ற இரு துரும்புகள் இறைவனின் கரம் பட்டவுடன் வலுவான தூண்களாயின.
நம் தொடக்கமும் வளர்ச்சியும் துரும்பாக இருக்கலாம். ஆனால், நம் இலக்கு நம்மைத் தூணாக மாற்றிவிடும். ஏனெனில், அவரின் கரம் என்றும் நம்மோடு.
திருஅவையின் மாபெரும் இரு தூண்கள்! “ உன் பெயர் பேதுரு.இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக்கட்டுவேன்” என இயேசுவால் அடையாளம் காட்டப்பட்ட பேதுரு……” பிறமக்களுக்கும்,அரசருக்கும்,இஸ்ரேல் மக்களுக்கும் இயேசுவின் பெயரை எடுத்துச்செல்ல தெரிந்து கொண்ட கருவியாக” அடையாளம் காட்டப்பட்ட பவுல். இந்த இரண்டு மாபெரும் தூண்களை அஸ்திவாரமாகக் கொண்டு கட்டப்பட்டது தான் இன்று ஓங்கி உயர்ந்து நிற்கும் நம் திருஅவை.இவர்கள் இருவருக்கிடையேயும் கண்டுகொள்ளத்தக்க வேறுபாடுகள் நம் கண்ணுக்குத் தெரிந்தாலும் இயேசு எனும் ஒற்றைச் சங்கிலி வேறுபாடுகள் களைந்து ஒரு புள்ளியில் இவர்களைச் சேர்க்கிறது்.
ReplyDeleteஎன்னதான் கிறிஸ்துவை மறுதலித்திருந்தாலும் உடனே மனம் வருந்துகிறார். உயிர்த்த கிறிஸ்து இவர்கள் இருவரையுமே மாற்றிப் போடுகிறார். படிப்பறிவில்லாத பேதுருவும், சட்டங்களைக் கரைத்துக் குடித்த பவுலும் கிறிஸ்துவை ஆதாரமாக வைத்துக் கைகோர்க்கின்றனர். கருத்து வேற்றுமைகள் வந்தபோது அங்கு கருத்து மோதலே இருந்ததே தவிர தன் மனித மோதல் இருககவில்லை. ஏனெனில் உயிர்த்த கிறிஸ்து வாழ்வி்ல் இவர்களைப்பின்னோக்கி இழுத்த அத்தனையையும் அவருக்கான உந்து சக்தியாக மாற்றிவிட்டார்.” ஆண்டவரே! உமக்கெல்லாம் தெரியுமே!” என்று சொல்லுமளவுக்குப் பேதுருவும்,” வாழ்வது நானல்ல; என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்” எனச்சொல்லுமளவிற்கு பவுல் உரமேற்றப்பட்டதும் உயிர்த்த கிறிஸ்துவினாலேதான்.
தங்களுடைய வலுவற்ற இறந்த காலத்தை ஏற்றுக்கொண்டதும்…இதுவரை கடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்க்காத்தும், “இயேசுவே இறைமகன்” எனும் நம்பிக்கை அறிக்கைக்காகச் சாவை ஏற்றதுமே வலுவற்ற இந்த இரு துரும்புகளை வலுவான தூண்களாக்கின.” இன்று நம்மில் துரும்பாக இருக்கும் பல விஷயங்கள் தூண்களாக மாறிவிடும் நம் இலக்குகள் சரியாக இருப்பின்!
இன்று இந்த இரு தூண்களின் பெயர்களைத்தாங்கியுள்ள குருமடங்களுக்கும்…அங்கே பயிற்றுவிப்பவர்களுக்கும்…பயின்றுகொண்டிருப்பவர்களுக்கும்…படித்து முடித்தவர்களுக்கும் திருநாள் வாழ்த்துக்கள்! பேதுரு- பவுல் எனும் இரு தூண்களோடு முடிந்துவிடக்கூடாது திருஅவை. இன்று பல விதங்களில் சிக்கித்தவிக்கும் திருஅவை இயேசுவின் விழுமியங்களோடு ஒளிர வேண்டுமெனில் தேவை ஆயிரமாயிரம் தூண்கள் கொண்ட மண்டபம்.நம் இளம் குருக்கள் தங்களின் இலக்குகளையும்,விழுமியங்களையும் உணர்ரந்து இன்று ஒவ்வொருவரும் இயேசு விரும்பும் ஒரு தூணாக மாற வாழ்த்துகள்! இறைவன் உங்கள் முயற்சிகளை…. ஆசைகளை….எதிர்பார்ப்புகளை…. ஏமாற்றங்களை…குறைகளை…நிறைகளை… உங்களின் அனைத்தையும் ஆசீர்வதிப்பாராக! திருவிழா வாழ்த்துக்கள்!!!