Tuesday, June 7, 2022

கர்மேல் மலை

இன்றைய (8 ஜூன் 2022) முதல் வாசகம் (1 அர 18:20-39)

கர்மேல் மலை

புனித நாடுகளுக்குத் திருப்பயணம் செய்யும்போது நாம் அழைத்துச் செல்லப்படும் ஓரிடம் கர்மேல் மலை. இந்த மலையில்தான் இறைவாக்கினர் எலியா பாகாலின் நானூறு இறைவாக்கினர்களுக்குச் சவால் விட்டு, வானிலிருந்து நெருப்பு இறங்கி வந்து எலியாவின் பலிப்பொருள்களை ஏற்றுக்கொண்ட இடம் உண்டு. இந்த இடத்தில் இறைவாக்கினர் எலியாவின் சிலை உள்ளது. அந்தச் சிலையில் எலியாவின் வலது கையில் ஓங்கிய வாள் ஒன்று இருக்கும். அவருடைய காலடிகள் பாகால் இறைவாக்கினர் ஒருவரின் மேல் இருக்கும். எலியாவின் முகம் கோபம் தழும்பி நிற்கும்.

இந்த நிகழ்வு உண்மையிலேயே நடந்ததா?

வானிலிருந்து நெருப்பு இறங்கி வந்து எலியாவின் பலிப்பொருளை உட்கொண்டதா?

எலியா செய்தது சரியா?

பாகால் இறைவாக்கினர்களைக் கொன்றது சரி எனில் அவர் ஓடி ஒளிந்தது ஏன்?

இந்தியா போல பல மதங்கள் இணைந்து வாழும் இடத்தில், இந்தப் பாடத்தை இடறல் இல்லாமல் நம்மால் வாசிக்க இயலுமா?

எந்தக் கடவுள் உயர்ந்த கடவுள் என்பதை நாம் நிரூபிக்க வேண்டுமா?

கர்மேல் நிகழ்வுப் பாடத்தை நாம் அதன் சூழலில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். எந்த மதமும் தங்கள் கடவுளே உண்மைக் கடவுள் என்று கருதுவது இயல்பு. தங்களுடைய கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்த அவர்கள் கதையாடல்களை உருவாக்குவதும் இயல்பு. இதன் நோக்கம் மற்ற கடவுளர்களைப் பொய்யர்கள் என ஆக்குவதற்காக அல்ல. மாறாக, தங்கள் மதத்தவர் நடுவே ஒரு பிணைப்பை உருவாக்குவதற்காகவும், தங்கள் நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காகவுமே. நாம் சந்தையில் வாங்கும் ஒரு பொருளை ஒரிஜினல் என்றும் இன்னொரு பொருளை டூப்ளிகேட் என்றும் பிராண்ட் செய்வது போல. சில நேரங்களில் டூப்ளிகேட் பொருள்கள் ஒரிஜினல்கள் பொருள்களை விட நன்றாகப் பயன்பாட்டில் இருக்கும் என்பதும் நம் அனுபவமாக இருக்கலாம்.

எலியா தன் சமகாலத்து இஸ்ரயேலில் விளங்கிய பாகால் வழிபாட்டைக் களைய விரும்புகிறார். ஒரே கடவுளான இஸ்ரயேலின் கடவுளான யாவே ஆண்டவரே உண்மையான கடவுள் என அவர்களுக்குச் சொல்ல விரும்புகின்றார். ஆக, பாகால் இறைவாக்கினர்கள் எல்லாம் வேற்று இனத்தவர் அல்லர். ஒரு காலத்தில் யாவே இறைவனை வழிபட்டவர்கள்தாம். வேற்று நாட்டினரின் கடவுள்மேல் ஏதோ ஒரு காரணத்தால் ஈர்க்கப்பட்டு பாகாலை வழிபடத் தொடங்குகின்றனர்.அவர்களை யாவே இறைவன் பக்கம் இழுக்க முயற்சி செய்கின்றார் எலியா.

இந்த நிகழ்வு நமக்கு மூன்று பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றது:

ஒன்று, இறைவாக்கினர் எலியாவின் பேரார்வம்.

எலியா தன் கடவுள்மேல் கொண்ட அன்பின் பேரார்வத்தால் பற்றி எரிகின்றார். நாம் எந்த அளவுக்கு கடவுள்மேல் உள்ள அன்பால் பற்றி எரிகிறோமோ அந்த அளவுக்குத்தான் நம்மால் மற்றவர்களை அன்பு செய்ய முடியும் என்பது என் புரிதல். தன் கடவுளை முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்கின்றார் எலியா. இன்று கடவுள்மேல் நாம் கொண்டுள்ள அன்பு எப்படி இருக்கிறது? பற்றி எரிகிறதா? அல்லது குளிர்ந்து வாடுகிறதா?

இரண்டு, இரு மனம் களைதல்.

தன் சமகாலத்து மக்களைப் பார்த்து, 'எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் கடவுள் என்றால், அவரைப் பின்பற்றுங்கள்! பாகால்தான் என்றால், அவன் பின்னே செல்லுங்கள்!' இரு மனம் கொண்டிருத்தல் நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் சோர்வு தருகிறது. முடிவுகள் எடுக்க முடியாமல் நம்மைத் தத்தளிப்புக்கு உள்ளாக்குகிறது. பாவம் இஸ்ரயேல் மக்கள்! ஒரு பக்கம் யாவே இறைவனும் வேண்டும் என நினைத்தார்கள். இன்னொரு பக்கம், பாகால்மேல் உள்ள கவர்ச்சியையும் விட்டுவிட மனமில்லாமல் இருந்தார்கள். முடிவெடுக்கவும், எடுத்த முடிவில் நிலைத்திருக்கவும் எலியா நம்மை அழைக்கிறார்.

மூன்று, மக்களின் மனத்தை மாற்றுபவர் கடவுள்.

நம் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் அனைத்தையும் நிமிடத்திற்கு நிமிடம் மாற்றுபவர் இறைவன் என்பது முதல் ஏற்பாட்டு நம்பிக்கை. மக்களை மனத்தை மாற்றுமாறு இறைவனிடம் வேண்டுகிறார் எலியா. இன்று நம் எண்ணங்கள் எப்படி உள்ளன? அவற்றை நாம் எப்படி இறைவன் பக்கம் திருப்புவது?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 5:17-19) தன் வருகை திருச்சட்டத்தை நிறைவேற்றவே என மொழிகின்றார் இயேசு. தன் இருத்தலின் நோக்கத்தைத் தெளிவுற உணரும் எவரும் வெற்றியாளரே! 

எலியாவின் இருத்தல் உண்மையான இறைவாக்கினர் நிலையில் இருத்தலாக இருந்தது!



No comments:

Post a Comment