Tuesday, June 21, 2022

செயல்கள்

இன்றைய (22 ஜூன் 2022) நற்செய்தி (மத் 7:15-20)

செயல்கள்

எரேமியா நூலில் அனனியா என்னும் போலி இறைவாக்கினர் பற்றி நாம் வாசிக்கின்றோம். பாபிலோனியாவுக்கு யூதா நாட்டினர் நாடுகடத்தப்படுவார்கள் என்ற செய்தியை எரேமியா அறிவிக்கின்றார். ஆனால், எரேமியாவின் செய்தி போலியானது என்றும், அவர் பொய் இறைவாக்கினர் என்றும், அரசருக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் ஒன்றும் நடக்காது என்ற தவறான செய்தியை அனனியா உரைக்கின்றார். அனனியாவின் சொற்கள் அரசருக்குப் பிடித்துப் போக, எரேமியாவை கிணற்றில் தூக்கி எறிகின்றார். ஆனால், சில ஆண்டுகளில் எரேமியா சொன்னவாறே பாபிலோனியப் படையெடுப்பு நடந்தேறுகிறது. அந்த நேரத்தில்தான் மக்கள், அனனியாதான் போலி இறைவாக்கினர் என அறிந்துகொள்கின்றனர்.

இங்கே, சொல்கின்ற செய்தியும் நடக்கின்ற செயலும் ஒன்றோடொன்று ஒத்துப் போனால் அது உண்மை என ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இன்றைய நற்செய்தியில் போலி இறைவாக்கினர்கள் பற்றி எச்சரிக்கின்றார் இயேசு. அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல்லிவிட்டு, நல்ல மரம், நல்ல கனி என்னும் உருவகத்தைத் தருகின்றார். 

மரத்தின் இயல்பை வெளியில் காட்டுவது கனி. மனிதரின் இயல்பை வெளியில் காட்டுவது அவருடைய சொல்லும் செயலும். மனத்தில் எண்ணங்கள் பலவாக இருக்கலாம். ஆனால், எண்ணங்கள் சொற்களாகவும் செயல்களாகவும் வெளியில் வரும்போது ஒருவர் யாரென்று நாம் அறிந்துகொள்கின்றோம். நம் உள்ளார்ந்த இயல்பு புதுப்பிக்கப்பட வேண்டும். புதுப்பிக்கப்பட்ட நம் இயல்பில் நாம் பேசும் சொற்களும் செய்யும் செயல்களும் நன்மையாகவே வெளிப்படும். அதுபோல நம் வாழ்வில் மாற்றம் வேண்டி நாம் பல முயற்சிகள் செய்கின்றோம். வெறும் செயல்களை மட்டும் மாற்ற முயற்சி செய்கின்றோம். ஆனால், உள்ளார்ந்த இயல்பு மாறினால்தான் வெளிப்புறத்திலும் மாற்றம் இருக்கும். எடுத்துக்காட்டாக, திருடுகின்ற ஒருவர் திருட்டுச் செயலை மட்டும் நிறுத்தினால் போதாது. அப்படி நிறுத்துவது சில நாட்கள் மட்டுமே நீடிக்கும். ஆனால், பேராசை என்ற உள்ளார்ந்த இயல்பு அகற்றப்பட்டால் வெளிப்புறத்தில் மாற்றம் வந்துவிடும் எளிதாக!


1 comment:

  1. Philomena Arockiasamy6/22/2022

    ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல.’பல சமயங்களில் எது உண்மை..எது போலி எனத்தெரியாத அளவிற்குப் போலிகள் நம்மை ஏமாற்றி விடுகின்றன. அத்தகைய ஒரு போலி தான் இங்கே அனனியா உருவில் வருகிறார். ஒரு போலியால் எரேமியா எனும் உண்மை ஓரங்கட்டப்படுகிறது.கெட்ட கனிதரும் நல்ல மரமும் இல்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமும் இல்லை. மனத்திலிருப்பையே வார்த்தைகளாகப் பிறக்கையில் அந்ந பிறப்பிடத்தின் தூய்மை எத்துணை முக்கியம்! நாம் வெளிப்படையாகச் செய்யும் அத்தனை செயல்களும் தூய்மைக்குச் சான்று பகர வேண்டுமெனில், நம் மனத்தின் உள்ளார்ந்த அழுக்குகள் அகற்றப் பட வேண்டும். உள்புற அகத்தின் அழகே வெளிப்புறத்தில் செயல்கள் வடிவம்
    பெறும்.
    “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்ற சொல்லாடலுக்கு அர்த்தம் தரும் ஒரு பதிவு. தந்தைக்கு நன்றி!!!



    ReplyDelete