Friday, June 24, 2022

மரியாவின் மாசற்ற இதயம்

இன்றைய (25 ஜூன் 2022) நினைவு

மரியாவின் மாசற்ற இதயம்

இயேசுவின் திருஇதயத் திருநாளுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது மரியாளின் மாசற்ற இதயம். இயேசு தன் அன்பை மனுக்குலத்திற்குக் காட்டியதை அவருடைய இதயம் சுட்டிக்காட்டுகிறது. மரியா இயேசுவையும் இறைத்தந்தையையும் அன்பு செய்ததை அவருடைய இதயம் சுட்டிக்காட்டுகிறது. மரியாவின் இதயத்தின் வழியாக நம் அனைவருடைய இதயங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே இத்திருவிழாவின் நோக்கம்.

லூக்கா நற்செய்தி 2ஆவது பிரிவில், 'மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்' என இருமுறை வாசிக்கின்றோம். மேலும், மரியாவின் உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்று சிமியோன் இறைவாக்குரைக்கின்றார். 'இயேசுவின் சிலுவையின் கீழ் நின்ற மரியா தன் உள்ளத்தால் தன்னையே அவருடன் சிலுவையில் அறைந்துகொண்டார்' என மொழிகின்றார் புனித அகுஸ்தினார். மரியா இயேசுவைத் தன் உடலில் ஏந்தியதை விட, உள்ளத்தில் ஏந்தியதால்தான் வணக்கத்துக்குரியவர் ஆனார் எனத் தொடர்கிறார் அகுஸ்தினார். 

மரியாளின் மாசற்ற இதயத்தை நினைவாக மட்டுமே திருச்சபை கொண்டாடுகிறது. சில இடங்களில் இதற்கு விழா அல்லது பெருவிழாவும் எடுக்கப்படுகிறது.

மரியாளின் இதயத் துடிப்பை நாம் நற்செய்தி நூல்கள் மற்றும் திருத்தூதர் பணிகளில் நிறைய வாசிக்கின்றோம்.

வானதூதரின் வார்த்தை கேட்டு, 'இது எத்தகையதோ?' என்று வியப்பில் கலங்குகிறது இதயம்.

'இது எங்ஙனம் ஆகும்?' என்று கேள்வி கேட்டு தயங்குகிறது இதயம்.

'எலிசபெத்துக்கு குழந்தையா?' என்று துள்ளிக் குதித்து உதவ ஓடுகிறது இதயம்.

'சத்திரத்தில் இடமில்லையா?' - பயம் கொள்கிறது இதயம்.

'வந்த இடையர்களுக்கு இடம் எப்படித் தெரிந்தது?' - வியப்பு கொள்கிறது இதயம்.

'பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் என் குழந்தைக்கா!' - ஆச்சர்யம் கொள்கிறது இதயம்.

'என் தந்தையின் அலுவலில் நான் ஈடுபட்டிருக்கக் கூடாதா?' - மகனின் கேள்வி கேட்டு குழம்புகிறது இதயம்.

'உன் மகனுக்கு பித்து பிடித்துவிட்டது!' - ஊராரின் உளறல் கேட்டு பதைபதைக்கிறது இதயம்.

'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது!' - இல்லத்தாரின் இழுக்கு பற்றிக் கவலை கொள்கிறது இதயம்.

'இதோ! உம் மகன்!' - மேலே பார்ப்பதா? கீழே பார்ப்பதா? குழம்புகிறது இதயம்.

'மகனுக்குப் பின் இறையாட்சி இயக்கத்திற்கு என்ன ஆகும்?' - மேலறையில் பெந்தகோஸ்தே பெருவிழாவில் செபிக்கிறது இதயம்.

இவ்வாறாக, இயேசுவின் பிறப்புக்கு முன், இயேசுவின் பிறப்பில், வாழ்வில், பணியில், இறப்பில், உயிர்ப்பில், விண்ணேற்றத்திற்குப் பின் என அவருக்காகவே துடிக்கிறது அன்னை கன்னி மரியாளின் இதயம்.

'உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்!' என்று தன் உள்ளம் வாளால் காயம்படக் கையளித்தார் அன்னை.

காயம்படுவதற்கும், குணமாக்குவதற்கும் இதயங்கள் நமக்கு என்று நினைவூட்டுகிறது மரியின் இதய நினைவு.


1 comment:

  1. Philomena Arockiasamy6/24/2022

    மரியாளின் மாசற்ற இதயம்…தான் பெற்றெடுத்த மகனை மட்டுமின்றி, விண்ணகத் தந்தையையும் சேர்த்தே அன்பு செய்த ஒரு இதயம் ,நம் இதயங்களையும் சேர்த்தே இறைவனுக்கு படைப்பதைக் கொண்டாடும் விழா! தனயனின் இதயத்தைக் கொண்டாடும் வேளையில் தாயின் இதயத்தையும் சேர்த்தே கொண்டாடும் ஒரு விழா!
    இயேசுவைத் தன் உடலில் ஏந்திய நேரங்களை விட உள்ளத்தில் ஏந்திய பொழுதுகளே அதிகம் எனும் புனித அகுஸ்தினாரின் வார்த்தைகள் மரியாவின் மாசற்ற இதயத்திற்கு வலு சேர்க்கின்றன. மரியாவின் உள்ளத்தில் எழுந்திருக்கலாமெனத் தந்தை அடுக்கடுக்காக்க் குறிப்பிட்டிருக்கும் கேள்விகள் உங்களுக்கும்,எனக்கும் எழுந்திருந்தால் மூச்சு முட்டியே இறந்திருப்போம்.ஆனால் அன்னை மரியா இவை அத்தனையையும் தாங்கிக்கொள்ள முடிந்ததற்கு ஒரே காரணம் அவள் அனைத்தையும் உள்ளத்திலிருத்தி சிந்தித்துக் கொண்டிருந்ததுவே.இத்தனைக்குப் பின்னரும் தன் உள்ளம் ஒரு வாளால் ஊடுருவத் தன்னையே கையளித்தது மட்டுமே அவள் மாசு மறுவற்ற ஒரு இதயத்திற்கு சொந்தக்காரி என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது.
    உண்மைதான்! ‘காயம் படுவதற்கும்,குணமாக்குவதற்கும் தான் இதயங்கள் நமக்கு’ என்று சொல்லாமல் சொல்லும் நம் தாயின் வாழ்க்கை நம் கல் நெஞ்சங்களையும் கரைக்கட்டும்! இதயம் தொட்ட ஒரு பதிவு. தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete