Thursday, June 9, 2022

விந்தையான கடவுள்

இன்றைய (10 ஜூன் 2022) முதல் வாசகம் (1 அர 19:9-16)

விந்தையான கடவுள்

வாழ்க்கை பல நேரங்களில் நம் முகத்தில் செங்கல்லாலும் சம்மட்டியாலும் அடிக்கும்.

ஒரு ரபியிடம் வருகின்ற இளவல், 'ரபி, நான் எல்லாருக்கும் நல்லதையே செய்கிறேன். யாருக்கும் கெடுதல் நினைப்பதில்லை. ஆனால், நான் மற்றவர்களை நடத்துவதுபோல அவர்கள் என்னை நடத்துவதில்லையே!' என முறையிடுகிறார். அதற்கு ரபி, 'தம்பி! நீ வெஜிடேரியன் மெனு அருந்துகிறவன் என்பதற்காக பாய்ந்து வரும் மாடு உன்னை முட்டாமல் விடுமா? நீ இறைச்சி உண்கிறாயோ, காய்கறி உண்கிறாயோ! மாடு அதைப் பொருட்படுத்துவதில்லை! அது தன் சுபாவத்தில் செயல்படும்! நாய் குரைப்பது அதன் சுபாவம்! ஆக, மனிதர்கள் செயல்பாடும் அவர்களுடைய சுபாவம்!'

எலியா நானூறு பாகால் இறைவாக்கினர்களைக் கொன்றுவிடுகிறார்.

மற்றவர்கள் முன் தன் கடவுள் யாரென்று நிரூபித்த அவருக்கு தன் கடவுள் யாரென்று தெரியவில்லை. தெரியாமல் தவிக்கின்றார். நானூறு இறைவாக்கினர்களைக் கொன்று பாகால் வழிபாட்டை நிறுத்திய அவருக்கு, கடவுள் நன்மை அல்லவா செய்திருக்க வேண்டும்? ஆனால், கடவுள் ஒரு நன்மையும் செய்யவில்லை. நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவருடைய உயிருக்கே உலை வைக்கின்றார். இசபெலுக்கு தப்பி ஓடுகின்றார் எலியா.

பாவம் அவர்! அவர் செய்த நன்மையை கடவுள் அவருக்குத் திருப்பிச் செய்யவில்லை!

ஆகையால்தான், 'ஆண்டவரே! நான் வாழ்ந்தது போதும்! என் உயிரை எடுத்துக்கொள்ளும்!' என்று தற்கொலை எண்ணத்தால் அலைக்கழிக்கப்படுகிறார். உலகை வென்ற ஒருவர் தன்னையே மாய்த்துக்கொள்ளும் நிலைக்கும் போவதை நாம் இன்றும் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னால் வரும் வெற்றிடமே இந்த எண்ணத்திற்குக் காரணம்.

இந்த வெற்றிடத்தை நிரப்ப கடவுள் முன் வருகின்றார். எலியாவுக்குத் தன்னை மெல்லிய ஒலியில் வெளிப்படுத்துகின்றார். சூறாவளியிலும் தீயிலும் கடவுள் இல்லை. இதை ஓர் உருவகமாகவும் எடுத்துக் கொள்ளலாம். எலியாவின் உள்ளம் சூறாவளி போலும், தீ போலும் எரிந்துகொண்டிருக்க, அங்கே கடவுள் இல்லை. மனம் இளைப்பாறி தென்றல் மாதிரி ஆனவுடன் அங்கே கடவுள் வருகின்றார்.

எலியாவை கடவுள் ஒரு வார்த்தைகூட சொல்லிப் பாராட்டவில்லை.

மாறாக, 'உன் வேலை முடிந்துவிட்டது' என்கிறார். எவ்வளவு கொடுமை!

ஒரு தலைவரிடம், 'ஐயா, வேலை முடிந்து விட்டது!' என்று பணியாள் சொல்ல, 'நீ போகலாம்! உனக்குப் பதிலாக வேறு ஆள் போட்டாயிற்று!' என்று சொன்னாள் அவனுக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது எலியாவுக்கு.

இந்த நிகழ்விலிருந்து என்ன தெரிகிறது?

ஒன்று, நாம் நன்மை செய்தால் நமக்கு நன்மையே கிடைக்கும் அல்லது நடக்கும் என்பது முட்டாள்தனம்.

இரண்டு, தீமை ஒரு நாள் அழிக்கப்படும் என நினைப்பதும் முட்டாள்தானம். எலியா பாகால் இறைவாக்கினர்களை அழித்துவிட்டதால் இஸ்ரயேலில் பாகால் வழிபாடு முடிந்துவிடவில்லை. அது இன்னும் அதிகமாக தொடர்ந்தது. 


மூன்று, இந்த உலகில் நம்மை விட்டால் யாருமில்லை என்ற நினைப்பு பெரிய தவறு. அப்படி எலியா நினைத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், 'நீ போய் எலிசாவை அருள்பொழிவு செய்!' என அவரை அனுப்பிவிடுகின்றார்.


நற்செய்தி வாசகத்தில் (மத் 5:33-37), நம் சொற்கள்மேல் நாம் கொள்ள வேண்டிய கட்டுப்பாடு பற்றி அறிவுறுத்துகின்றார் இயேசு. 


2 comments:

  1. Philomena Arockiasamy6/09/2022

    சூறாவளிபோலும், தீ போலும் எரிந்து கொண்டிருந்த எலியாவின் மனத்தில் கடவுள் இல்லை.மனம் இளைப்பாறித் தென்றல் மாதிரி ஆனவுடன் அங்கே கடவுள் வருகிறார். நம்மிலும் இறைவன் உறைய வேண்டுமெனில்,
    நம் வாழ்வில் பூகம்பம் தோன்றும் நேரங்களிலும் நம் மனத்தைப் பூவாக வைத்துக்கொள்ளப் பழகுவோம்.
    எலியா நம் வாழ்க்கைக்கு ஒரு மாதிரி!

    ReplyDelete
  2. எலியாவை கடவுள் ஒரு வார்த்தைகூட சொல்லிப் பாராட்டவில்லை.

    மாறாக, 'உன் வேலை முடிந்துவிட்டது' என்கிறார். எவ்வளவு கொடுமை!

    ///இதிலே என்ன கொடுமை...?it has been clarified...


    லூக்கா 17:9,10
    தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.”

    ReplyDelete