திருமுழுக்கு யோவான் பிறப்பு
இந்த ஆண்டு, ஜூன் மாதம் 24ஆம் தேதி இயேசுவின் திருஇருதயப் பெருவிழா வருவதால், அன்று கொண்டாடப்பட வேண்டிய திருமுழுக்கு யோவானின் பிறப்புப் பெருவிழாவை இன்று (23 ஜூன் 2022) நாம் கொண்டாட திருஅவை நம்மை அழைக்கிறது.
திருஅவை மூவரின் பிறந்தநாள்களைத் தான் கொண்டாடுகிறது: இயேசு, இயேசுவின் தாய் மரியா, இயேசுவின் முன்னோடி திருமுழுக்கு யோவான். இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:57-66,90) திருமுழுக்கு யோவானின் பிறப்பு நிகழ்வையும், பெயரிடுதல் நிகழ்வையும் வாசிக்கின்றோம்.
'இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'
- இதுதான் சக்கரியா-எலிசபெத்து இல்லத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் உள்ளத்தில் எழுந்த ஒரே கேள்வி.
இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை சக்கரியாவின் பாடலிலிருந்து வாசகர் தெரிந்துகொள்ள முடியும்: 'நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய். ஏனெனில், பாவமன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்!'
திருமுழுக்கு யோவான் பின்வரும் வாழ்க்கைப் பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார்:
1. தன் இலக்கு எது என்பதை தன்னுடைய செயல்களில் வெளிப்படுத்தினார்.
இயேசுவின் செயல்கள் பல நேரங்களில் அவருடைய இலக்கை மக்களுக்குத் தெளிவாகச் சொல்லவில்லை. 'இவர் யாரோ?' என்று மக்கள் எண்ணும்படியாகவே அவர் வைத்திருந்தார். ஆனால், திருமுழுக்கு யோவான் யார் என்பதை மக்கள் தெளிவாக அறிந்திருந்தனர். ஏனெனில், அவருடைய செயல்கள் அவருடைய இலக்கை அப்படியே வெளிப்படுத்தின.
2. இரண்டாம் இடத்தில் இருப்பது
இன்றைய உலகில் நாம் நம்மிடம் இல்லாத ஒன்றையும் இருப்பதாகச் சொல்லிப் பெருமைப்படுகிறோம். ஆனால், அவர், 'நீர் மெசியாவா?' என்று மக்கள் கேட்டபோது, 'இல்லை' என்றும், 'மிதியடி வாரை அவிழ்ப்பவர்' என்றும் சொல்கின்றார். மேலும், மணமகனுக்கு அருகில் நிற்கும் தோழன் என்கிறார். திருமண நிகழ்வுகளில் மணமகனின் மேல் அள்ளி எறியப்படும் வெளிச்சம் தோழன்மேல் விழுவதில்லை. மணமகன் தோழர்களை யாரும் பார்ப்பதில்லை. தன்னை இரண்டாம் இடத்தில் வைத்துக்கொள்வதன் வழியாக, 'இரண்டாம் இடத்தில் இருந்தால் என்ன தவறு?' என்று நம்மைக் கேட்கத் தூண்டுகின்றார் யோவான்.
3. செயல்கள் முதன்மைகளை வெளிப்படுத்துகின்றன
இதையே நம் இன்றைய வாழ்வியல் பாடமாக எடுத்துக்கொள்வோம். ஆங்கிலத்தில், .... என்ற ஒரு சொல்அடை உண்டு. என்னுடைய இலக்குகள் என் வெறும் எண்ணங்களாக மட்டுமே இருந்தால் நான் இலக்கை அடைய முடியாது. நான் ஓர் எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற இலக்கை வைத்திருக்கிறேன் என்றால், நான் தினமும் ஒரு பக்கமாவது எழுத வேண்டும். எழுதவே செய்யாமல் நான் எழுத்தாளன் ஆக முடியாது. ஆக, 'எழுத்தாளன் ஆக வேண்டும்' என்ற என்னுடைய எண்ணம் 'எழுதுதல்' என்னும் செயலில் வெளிப்பட வேண்டும். அப்படி வெளிப்பட்டால்தான் அது என்னுடைய முதன்மை என்பது தெளிவாகும்.
திருமுழுக்கு யோவானின் செயல்கள் அவருடைய இலக்கை நோக்கியதாகவே இருந்தன. பாலைநிலத்தில் 'மறைந்து' வாழ்கின்றார். ஏனெனில், அது அவருடைய பணி. வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு, ஒட்டக மயிராடையை அணிகின்றார். அதுதான் அவருடைய எளிய வாழ்க்கை முறை. திருமுழுக்குக் கொடுக்கின்றார். அதுதான் அவருடைய பணி. தலை வெட்டுண்டு இறந்து போகின்றார். அதுதான் அவருடைய நியதி. தான் மெசியாவின் முன்னோடி எனக் கனவு காணவில்லை அவர். முன்னோடியாகச் செயல்படுகிறார்.
ஆக, செயல்கள் நம் முதன்மைகளை வெளிப்படுத்துகின்றன. திருமுழுக்கு யோவானின் பிறப்பு திருவிழாவில் நம் முதன்மைகளைச் சரிசெய்வதோடு, இலக்குகளுக்கு ஏற்றச் செயல்களைச் செய்ய முற்படுவோம்.
4. மகிழ்ச்சி
திருமுழுக்கு யோவான் தாயின் வயிற்றில் இருக்கும்போது மகிழ்கின்றார். இவருடைய பிறப்பால் சுற்றத்தார் மகிழ்கின்றனர். மணமகனுக்கு அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்டு மகிழும் நண்பனே தான் எனத் தன்னைப் பற்றி எடுத்துரைக்கின்றார் யோவான். மகிழ்ச்சி என்பது பின்வருவனவற்றில் அடங்கியுள்ளது எனக் கற்பிக்கிறார் யோவான்.
(அ) தாழ்ச்சியில்
'எனக்குப் பின் வருபவர் எனக்கு முன்பே இருந்தவர். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை' என்று ஒரே நேரத்தில் இயேசுவை மணமகனாகவும் (காண். ரூத் 4), தன்னை அடிமையாகவும் முன்வைக்கின்றார் திருமுழுக்கு யோவான். தான் மிகப் பெரிய இறைவாக்கினராகக் கருதப்பட்டாலும், தனக்கென்று சீடர்கள் இருந்தாலும், தன்னைத் தேடி ஆட்சியாளர்களும் அரச அலுவலர்களும் வந்தாலும் தாழ்ச்சியில் மிளிர்கின்றார் யோவான்.
(ஆ) குரல் கேட்பதில்
மணமகன் குரல் கேட்பதில் மகிழும் மாப்பிள்ளைத் தோழர் இவர். அவருடைய குரல் கேட்டால் போதும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் யோவான்.
(இ) தன் பணியைச் செய்வதில்
எளிமையான உணவுப் பழக்கம், அமைதியான பாலைவனம் என அவருடைய வாழ்க்கை ஒரு சிறுநுகர் வாழ்வாக இருந்தது. அந்த நிலையில்தான் அவர் மனமாற்றத்தின் செய்தியை அறிவித்து திருமுழுக்கு கொடுத்தார். வாழ்வு தரும் தண்ணீராக வந்த மெசியாவுக்கே தண்ணீரால் திருமுழுக்கு கொடுத்தார்.
(ஈ) துன்பம் ஏற்பதில்
ஏரோதுவின் தவற்றைச் சுட்டிக்காட்டியதால் சிறைத்தண்டனைக்கும் மரணத்திற்கும் ஆளானார். ஏனெனில், தன் வாழ்க்கையின் இலக்கோடு அவர் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை.
மகிழ்ச்சி என்பது ஒரு மாபெரும் உணர்வு. நாம் பிறந்தபோதும் நம் பெற்றோர் மகிழ்ந்தனர். நம் உதடுகள் அழகாகச் சிரித்தன. ஆனால், அன்றாட அலுவல்களின் அழுத்தத்திலும், வாழ்வியல் போராட்டத்திலும் நம் சிரிப்பை நாம் மறந்துவிட்டோம். இன்று நன்றாகச் சிரிப்போம்! ஏனெனில், 'ஒரு குழந்தை பிறந்துள்ளது!'
“ ஒரு குழந்தை பிறந்துள்ளது!”…. தினம் தினம் எத்தனையோ குடும்பங்களில்….எத்தனையோ தாய்மார்கள்….எத்தனையோ குழந்தைகளைப் பெற்றெடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கில்லாத என்ன விஷயம் “ இந்தக்குழந்தையை” மற்ற குழந்தைகளிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது? இவரின் தாய் எலிசபெத்தின் உதரத்தில் இருக்கும்போதே, மரியாவின் வாழ்த்தொலி கேட்டு துள்ளிக் குதித்ததாக இவரைப்பற்றி மட்டுமே குறிப்பிடப்படுகிறது.இயேசுவுக்கு முன்னோடியாக வந்தவர் …இயேசுவின் இலக்கு மக்களுக்குத் தெளிவாக இல்லாத நிலையிலும், இவருடைய செயல்கள் இவரை யாரென்று மக்களுக்குத்தெளிவாக அடையாளம் காட்டின. சில சமயங்களில் மணமகனை விட மணமகனின் தோழன் அதிகம் உற்றுப்பார்க்கப் படுவது போல, பல விஷயங்களுக்காக இவர் உற்றுநோக்கப்படுகிறார்..மறைந்த வாழ்க்கை வாழ்வதும்,தேனையும்,வெட்டுக்கிளியையும் உணவாகக்கொள்வதும், இவருக்குப் பின் வந்தவரின் மிதியடிவாரை அவிழ்க்க க் கூடத் தனக்குத் தகுதியில்லை என்று கூறுவதும் அவர் இரண்டாம் இடத்தில் இருப்பதைப் பற்றிக்கவலைப்படவில்லை என்று உணரவைக்கிறது.இயேசுவுக்கே நீரால் திருமுழுக்குக் கொடுத்த இவர், தன் இலக்கோடு சமரசம் செய்து கொள்ளாத காரணத்தால் மட்டுமே சிறைத்தண்டனைக்கும்,மரணத்திற்கும் ஆளாகிறார். இவரைப்பற்றிப் போற்றப்பட இத்தனை காரணங்களிருந்தாலும் அவரை நமக்கு நெருக்கமாக்கிக் காட்டுவது, தாயின் வயிற்றிலிருந்தபோதே அவர் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஷயமே! இன்று பிறக்கும் நம் குழந்தைகள் தங்கள் தாயின் வயிற்றிலிருக்கையிலேயே தங்கள் தாய்மாரை மகிழ்ச்சி உணர்விற்கு உட்படுத்ததவில்லை எனினும், பிறந்த பிறகாவது அவர்களின் தாய்மாரை…தந்தையரை…..சுற்றத்தை ஏன் இந்த உலகையே மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்களாக! ஆம்! கண்டிப்பாக இன்று பிறந்துள்ள “ இந்தக்குழந்தைக்காக” நாம் மகிழ்வோம்.தந்தைக்கும்…அனைவருக்கும் திருநாள் வாழ்த்துக்கள்!!!
ReplyDelete