Sunday, June 26, 2022

என்னைப் பின்பற்றி வாரும்!

இன்றைய (27 ஜூன் 2022) நற்செய்தி (மத் 8:18-22)

என்னைப் பின்பற்றி வாரும்!

இயேசுவின் சீடர்கள் பற்றிய நிகழ்வில் புரிதல்கள் இரு நிலைகளில் உள்ளன. சில சீடர்களை இயேசுவே அழைக்கின்றார். அவர்களும் அவரைப் பின்தொடர்கின்றனர். சிலர் தாங்களாகவே அவரைப் பின்பற்ற விரும்பும்போது இயேசு அவர்களைத் தடை செய்கின்றார். இவ்விரு நிலைகளுக்கும் இடைப்பட்ட ஒரு பகுதியை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம்.

மறைநூல் அறிஞரும், இயேசுவின் இன்னொரு சீடரும் இயேசுவைப் பின்பற்ற விரும்புகின்றனர். இருவரையும் தன்னைப் பின்பற்றுமாறு அழைக்கிறாரா அல்லது இல்லையா என்பதை நம்மால் தெளிவுறக் காண இயலவில்லை. 

இந்நற்செய்திப் பகுதியில் இயேசு சீடத்துவம் பற்றிய இரு பாடங்களைத் தருகின்றார்:

ஒன்று, 'மானிட மகனுக்கோ தலைசாய்க்கக் கூட இடமில்லை.' இடம் என்பது மானிடரின் வாழ்வில் மிக முக்கியமானது. நேரம் இறைவனுக்கு உரியது. இடம் மானிடருக்கு உரியது. இந்த உலகில் நாம் நமக்கென ஓர் உள்ளங்கை இடத்தையாவது உரிமையாக்கிக்கொள்ள விரும்புகின்றோம். இடம்தான் நம் வேரூன்றுதலுக்கு அடிப்படையாக இருக்கிறது. இடம் இல்லாத நிலை நம்மை மற்றவர்களின் இரக்கத்தில் வாழுமாறு தள்ளி விடுகிறது. ஆக, சீடத்துவம் என்பது ஒருவரை முற்றிலுமான கையறுநிலைக்குத் தள்ளுகிறது.

இரண்டு, 'இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம்.' இறந்தோர் என்பது நம் பழைய வாழ்க்கையின் உருவகமாக இருக்கிறது. இறந்த காலத்தைப் பற்றிக்கொண்டிருக்கும் ஒருவர் நிகழ்காலத்திற்குள் கால் வைக்க இயலாது. நிகழ்காலத்தில் நிற்க இயலாத ஒருவரால் இயேசுவின் சீடராக இருத்தல் இயலாது.

இந்த இரு சீடத்துவப் பாடங்களையும் நம் வாழ்வுக்கு எப்படிப் பொருத்திப் பார்ப்பது?

ஒன்று, கையறுநிலைக்கு நம்மை உட்படுத்துவது. பல நேரங்களில் நாம் அசௌகரியங்களை விலக்கிக் கொள்வதையே விரும்புகின்றோம். அதாவது, அசௌகரியங்கள் தேவையற்றவை என ஒதுக்கிவிட நினைக்கின்றோம். ஆனால், அப்படி விலக்காமல் அசௌகரியங்கள் வழியாக வாழக் கற்றுக்கொள்வது நல்லது. 

இரண்டு, கடந்த காலம் பல நேரங்களில் நினைவாக நம் மூளையில் அமர்ந்துகொள்கிறது. கடந்த காலத்தின் மகிழ்ச்சி, கவலை, துன்பம் ஆகியவை நம் நிகழ்காலத்தின்மேல் வெகுவாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த காலத்தைக் கைவிடல் நலம்.

முதல் வாசகத்தில், இறைவாக்கினர் ஆமோஸ் ஆண்டவர் மக்களுக்குத் தரவிருக்கின்ற தண்டனை பற்றி முன்மொழிகின்றார். இவர் பயன்படுத்தும் உருவகம் ஒன்று அழகாக உள்ளது: 'வைக்கோல் பொதி நிறைந்த வண்டி அழுந்துவது போல, உங்களையும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே அழுத்துவேன்.'

நம் கடந்தகாலம் நம்மை இது போல அழுத்துவிட வாய்ப்பிருக்கிறது. நம் வண்டியில் உள்ள வைக்கோலைக் காலி செய்வது நலம்.


1 comment:

  1. Philomena Arockiasamy6/26/2022

    “ சீடத்துவம்” …இந்த வார்த்தை பல நேரங்களில் துறவறத்தைக் குறிப்பது போல் தோன்றிடினும், கொஞ்சம் ஆழமான சிந்தனை அது இல்லறத்திற்கும் பொருந்துமென்கிறது.சௌகரியங்களைத் தேடிப்போவதில் தவறில்லை; ஆனால் அசௌகரியங்களுக்கும் நம்மை உட்படுத்தும் போது மட்டுமே நமக்கும் கீழே உள்ள கோடிப்பேரின் அவலமும்…ஆதங்கமும் புரியும். அவ்வப்பொழுது “கையறுநிலை” நம்மைத் தேடி வருகையில் நாம் அதைத் தழுவிக்கொள்வது வாழ்வில் நமக்கொரு பிடிப்பைத்தரும்.
    கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்ப்பதும் தவறில்லை… ஒருமுறை செய்த தவறை மீண்டும் செய்யாமலிருக்க.ஆனால் அது நம்மை அழுத்திவிடாமல், ஒரு பாடமாக மட்டுமே அமைந்தால் நலம்.இன்று நம் கைப்பிடியில் இருக்கும் நாளைக் கணக்கில் கொள்ளாமல் கடந்து போன நேற்றைய தவறுகளை சிந்தித்துக் கொண்டிருப்பதால் யாது பயன்? தந்தை சொல்வது போல் வண்டியில் உள்ள வைக்கோலைக் காலி செய்தல் நலம்.
    “கீழே கொட்டிவிட்ட பாலை நினைத்து வருந்துவது மடத்தனம்”… என்ற பாடம் சொல்லும் ஒரு பதிவு. தந்தைக்கு நன்றி!!!

    ReplyDelete