Wednesday, June 15, 2022

தந்தையின் உள்ளம்

இன்றைய (16 ஜூன் 2022) முதல் வாசகம் (சீஞா 48:1-15)

தந்தையின் உள்ளம்

நாம் கடந்த சில நாள்களாக வாசித்து வந்த எலியா நிகழ்வுகள் முடிவுற்ற வேளையில், இன்றைய முதல் வாசகத்தில், எலியாவுக்கு சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் செலுத்தும் புகழாஞ்சலியை வாசிக்கின்றோம். அவருடைய கவிதைக் கதம்பத்தில் ஒரு வாக்கியம் என்னை ஈர்க்கிறது:

'தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கு' ... 'நீர் இஸ்ரயேலின் குலங்களைக் கடிந்துகொள்வீர்'

'தந்தையின் உள்ளம் மகன் நோக்கி'

இதே சொல்லாடலை நாம் மலாக்கி 4:6 மற்றும் லூக் 1:17இல் வாசிக்கின்றோம்.

தந்தையின் உள்ளம் எப்போதும் மகன் நோக்கித்தானே இருக்கும்? தன் மகனை மறக்கின்ற தந்தை யாராவது உண்டா? இந்தச் சொல்லாடலின் பொருள் என்ன?

முதலில், இதன் இறையியல் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். 

விவிலியத்தில் 'ஊழ்வினை' என்பது உண்டு. சிலப்பதிகாரத்திலும், 'ஊழ்வினை உகுத்து வந்து ஊட்டும்' என்று சொல்லப்பட்டுள்ளது. திருக்குறளில் வள்ளுவர் 'ஊழ்' என்பதற்கென ஒரு அதிகாரமே வைத்துள்ளார். அதாவது, தந்தை செய்கின்ற செயல் மகனைப் பாதிக்குமா, பாதிக்காதா? என்பதுதான் ஊழ்வினையின் கேள்வி. விவிலியம் இதை இரண்டு நிலைகளில் புரிந்துகொள்கிறது: ஒன்று, தந்தையின் குற்றத்திற்காக கடவுள் மகனைத் தண்டிக்கிறார். எடுத்துக்காட்டாக, தாவீது பத்சேபாவுடன் பாவம் செய்து பிறந்த குழந்தை இறந்து போகிறது. ஆனால், தவறு செய்த தாவீது உயிர் வாழ்கிறார். இரண்டு, ஒருவர் ஈச்சம் பழம் சாப்பிட்டால் இன்னொருவருக்கா பல் புளிக்கும் என்று கேட்கின்ற எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாகப் பேசுகின்ற கடவுள், அவரவருடைய பாவங்களுக்கான தண்டனை அவரவருக்கே என்கின்றார்.

ஆக, தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவது என்பது, எலியா நிகழ்வின் பின்புலத்தில், ஒருவர் தன்னுடைய மகனையும் மனத்தில் கொண்டு தன் வாழ்வை நன்முறையில் கட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே. என் பாவம் என்னுடன் போனால் பரவாயில்லை. ஆனால், அது என் மகனையும் பாதிக்கும் என்றால், நான் இன்னும் அதிகக் கவனமுடன் நடந்துகொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, இதை மிக சாதாரண உலகியல் உறவு அடிப்படையில் புரிந்துகொள்வோம்.

ஒரு தந்தை தன் மகனுக்கு மூன்று காரியங்களைச் செய்ய வேண்டும் அல்லது செய்கிறார்:

அ. தான்மை அல்லது அடையாளம்

'நான் யார்?' என்ற என் அடையாளத்தையும், என் தான்மையையும் கொடுப்பவர் என் தந்தையே. தந்தை தன்னுடைய பெயரை மட்டும் எனக்குத் தருவதில்லை. மாறாக, நான் கொண்டிருக்கும் விழுமியங்கள், மதிப்பீடுகள், மற்றும் பண்புகள் அனைத்தும் அவரிடமிருந்தே வருகின்றன.

ஆ. வாக்குறுதி

தந்தை தன் மகனுக்கு தன்னுடைய உடனிருப்பை வாக்குறுதியாக அளிக்கின்றார். 'எந்த நேரத்திலும் நான் உன்னுடன் இருக்கிறேன்' என்ற உறுதியைத் தருகின்றார். மேலும், மகன் செய்வது அனைத்தையும் தந்தை ஏற்றுக்கொள்கின்றார். நேர்முகமான காரியங்களைப் பாராட்டி மகிழ்கின்றார்.

இ. தொடுதல்

தந்தை தன் மகனைத் தன்னுடைய உடல் மற்றும் உணர்வுகளால் தொடுகின்றார். இத்தொடுதலே மகனுக்கு உந்துசக்தியாக இருக்கிறது.

ஆக, இரண்டாவது நிலையில், எலியா ஒவ்வொரு தந்தையையும் பொறுப்புடன் வாழ அழைக்கின்றார்.

இன்று நாம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்:

மகன் அல்லது மகள் என்பவர் தந்தை மற்றும் தாயின் நீட்சி. நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும். பெற்றோர்கள் என்னும் மரங்கள் நன்மரங்கள் என்றால் பிள்ளைகள் நற்கனிகளே. நாம் எத்தகைய மரங்களாய் இருக்கிறோம்? எத்தகைய கனிகளைக் கொடுக்கிறோம்?


1 comment:

  1. Philomena Arockiasamy6/15/2022

    பெற்றோர்கள் எனும் மரங்களாகிய நாம் எத்தகைய கனிகளை விட்டுச்செல்கிறோம்?…. என நம்மை சிந்திக்க விடுக்கும் ஒரு அழைப்பு!
    மேலேயுள்ள படத்தைப் பார்த்தவுடன்…. ‘தந்தையுள்ளம்’ எனும் வார்த்தையைக் கேட்டவுடன் நம் நினைவுகளில் வருவது நம் விண்ணகத் தந்தையே! எலியா மற்றும் தாவீது அரசரின் பின்புலத்தில் ஒரு தந்தை
    தன் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் மனத்திற்கொண்டே தன் வாழ்க்கையை நிர்ணயிக்க வேண்டுமென்கின்றன வேதங்கள்.
    “தெய்வம் நின்று கொல்லும்” எனும் சொற்றொடரெல்லாம் பொய்த்துப்போய், இன்று நான் செய்த பாவத்திற்கு நாளையே கூலியைப் பெறும் காலமிது. இதில் என்னுடன் சேர்ந்து என் பிள்ளைகளின் (அவர்கள் ஆணோ.. பெண்ணோ) பயணமும் இனிதே முடிய வேண்டுமெனில் பெற்றோர்களின் வாழ்க்கை ஒரு முள்ளின் மேல் நடக்கும் வேள்வியே! ஒரு குடும்பத்தில் தந்தையே ‘எல்லாம்’ என்றிருந்த காலங்கள் மலையேறி, தந்தையும், தாயும் சேர்ந்தே பிள்ளைகளுக்குத் தங்களின் குடும்ப அடையாளத்தையும், ‘நாங்கள் என்றென்றும் உங்களோடிருப்போம்’ என்ற வாக்குறுதியையும், தங்கள் உணர்வால்… உள்ளத்தால் உந்துசக்தியையும் கொடுத்தால் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் சொத்து இதைவிட வேறென்னவாக இருக்கமுடியும்? இப்படியான வாழ்க்கைமுறை கொண்ட குடும்பங்களில் இறைவனும் தன் சிம்மாசனத்தையிட்டு அமருவார்.
    “ பெற்றோர்கள் எனும் மரங்கள் நன் மரங்கள் என்றால் பிள்ளைகள் நற்கனிகளே!” அருமை!வேதவாக்குபோன்ற ஒரு சொற்றொடருக்காகத் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!
    .

    ReplyDelete