Friday, June 10, 2022

புனித பர்னபா

இன்றைய (11 ஜூன் 2022) திருநாள்

புனித பர்னபா

இன்று நம் தாய்த்திருஅவை புனித பர்னபாவின் திருநாளைக் கொண்டாடுகிறது.

திருத்தூதர் பணிகள் நூலின் முதன்மைக் கதைமாந்தர்களில் ஒருவராக, பவுலின் நுகத்தடித் தோழராக விளங்கும் இவரை லூக்கா இப்படி அறிமுகம் செய்கின்றார்: 'சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு என்னும் லேவியர் ஒருவர் இருந்தார். இவருக்குத் திருத்தூதர்கள், 'ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்' என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தனர். அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு வந்து திருத்தூதர்களின் காலடியில் வைத்தார்.' (காண். திப 4:36-37)

திருத்தூதர் பணிகள் நூலின் பதிவுகளின் பின்புலத்தில் இவருடைய பண்பு நலன்களைச் சிந்தித்து அவற்றை நமதாக்க முன்வருவோம்.

அ. அனைத்தையும் துறந்தவர்

இவர் ஒரு லேவியர். முதல் ஏற்பாட்டில் யோசுவாவின் தலைமையில் யாக்கோபின் பன்னிரு குலங்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டபோது, லேவியர் குலத்திற்கென்று எந்தப் பகுதியும் கொடுக்கப்படவில்லை. ஆனால், லேவியர்கள் கால் கடுக்க யோர்தான் ஆற்றில் உடன்படிக்கைப் பேழையைப் பிடித்துக்கொண்டு நிற்க, அப்பேழைக்கு அடியே மக்கள் நுழைந்து, வாக்களிக்கப்பட்ட நாட்டைப் பிடிக்கிறார்கள். ஆற்றிலிருந்து வெளியே வந்த அவர்கள், தங்களுக்கு நிறைய நிலம் கிடைக்கும் என்று கனவில் இருக்கிறார்கள். ஆனால், ஆண்டவராகிய கடவுளோ, 'லேவி குலத்திற்குத் தவிர மற்ற அனைத்திற்கும் பங்கு வைக்கிறார்.' இவர்கள் முறையிடுகிறார்கள். ஆண்டவர் அழகாக அவர்களுக்குப் பதில் தருகிறார்: 'நானே உங்கள் உரிமைச் சொத்தாகவும், உங்கள் பங்காகவும் இருப்பேன்.' ஆண்டவரையே தன்னுடைய சொத்தாகக் கருதிய லேவி குலத்திற்கு மற்ற அனைத்து நிலத்தாரும் தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சம் இடம் கொடுத்தனர். பர்னபா என்னும் நம் இனியவர் இக்குலத்திலிருந்து வந்தவராக இருக்கலாம். அல்லது இயேசுவின் சமகாலத்தில் ஆலயத்தில் பணி செய்த லேவியர்கள் (குருக்களின் உதவியாளர்களில்) ஒருவராக இருந்திருக்கலாம். ஆனால், லேவி குலம் மட்டும்தான் ஆலயப்பணி செய்ய முடியும். ஆக, 'ஆண்டவரையே பற்றிக்கொண்டிருக்க வேண்டியவர்', 'கொஞ்ச நிலத்தைப் பற்றிக்கொண்டிருந்ததால் என்னவோ' அதைத் துறக்க, அதை விற்க முன்வருகின்றார். இது இவருடைய மனமாற்ற அனுபவமாக இவருக்கு இருக்கிறது.

ஆ. திரைக்குப் பின் நிற்பவர்

திருத்தூதர் பவுல், தன் அழைப்பைப் பற்றிக் குறிப்பிடும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, அவர் மூன்றுமுறை அழைக்கப்படுவதை, அல்லது கடவுளின் அழைத்தலைப் பெறுவதை நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம்: (அ) கலாத்தியருக்கு எழுதுகின்ற திருமடலில் பவுல், 'ஆண்டவர் என்னைத் தாயின் வயிற்றிலேயே தேர்ந்தெடுத்து அழைத்தார்' என்கிறார். (ஆ) திருத்தூதர் பணிகள் நூலில், தான் தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில் அழைப்புப் பெற்றதாகச் சொல்கிறார். (இ) பர்னபா வழியாக அழைக்கப்படுகின்றார். அதாவது, சவுல் என்னும் பவுலின் பணி முதலில் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆக, பவுல் சோர்ந்து போய் தன் சொந்த ஊருக்குச் சென்று மறைந்த வாழ்க்கை வாழ்கின்றார். பர்னபா அவரைத் தேடிச் செல்கின்றார். கடவுளின் பதிலாளி போல இங்கே செயல்படுகின்றார் பர்னபா. ஆனால், பவுல் அடுத்தடுத்து தொடக்கத் திருஅவையில் புறவினத்தாரின் திருத்தூதராக முதன்மை பெறுகின்றார். பர்னபா அவரை மேலே ஏற்றிவிட்ட ஏணி போல நின்றுகொள்கின்றார். இது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. 

இ. தவறுகளைப் பொருட்படுத்தாதவர்

பவுலும் பர்னபாவும் இணைந்து செல்லும் இரண்டாவது தூதுரைப் பயணத்தில் அவர்கள் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு வருகிறது (காண். திப 15:36-38). பர்னபா தன்னுடன் மாற்கை அழைத்துச் செல்ல விரும்புகின்றார். 'அவன் நம்மை பாதியிலேயே விட்டுவிட்டுப் போனவன். அவன் வேண்டாம்' என்று அடம் பிடிக்கிறார் பவுல். 'இல்லை! இல்லை! அவன் ஏதோ ஒரு நிலையில் நம்மை விட்டுப் போனான். ஆனால், அவனை நாம் மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று வலியுறுத்துகின்றார் பர்னபா. பவுல் அதற்கு இணங்க மறுக்கிறார். விளைவு, இருவரும் பிரிகின்றனர். பர்னபா தன்னோடு மாற்கையும், பவுல் தன்னோடு சீலாவையும் அழைத்துச் செல்கின்றனர். ஆக, தவறுகளையும், மனித வலுவின்மைகளையும் பரந்த மனத்தோடு, தாராள உள்ளத்தோடு பொருத்துக்கொள்கின்றார் பர்னபா.

இன்றைய நாளில், நாம் நம் பற்றுக்களைத் துறக்கவும், மற்றவர்களை முன் நிறுத்தி நாம் ஒதுங்கிக்கொள்ளவும், மற்றவர்களின் தவறுகளைப் பொருட்படுத்தாமல் வாழவும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார் பர்னபா.

நற்செயல்: இவரைப் போல ஊக்குவிக்கும் பண்பு கொண்டவராக இருந்து, இன்று யாராவது ஒருவரை நம் சொல்லால், செயலால் ஊக்குவித்தல்.


1 comment:

  1. Philomena Arockiasamy6/10/2022

    பர்னபா… இவருக்கும் பவுலுக்குமிடையே இருந்த நட்பில் மாற்கைக்குறித்த சில விரிசல்கள் தோன்றிடினும் அவர் மாற்கின் வலுவின்மையின் பக்கம் நிற்பது அவரின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டு.”ஆண்டவரையே உரிமைச் சொத்தாகக் கொள்பவர்களை அனைத்து நலன்களும் தானாக வந்தடையும்” என்பதை இவரின் வாழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. வரிசை கட்டி நிற்கும் இவரது நற்பண்புகளை நாமும் நமதாக்கிக் கொண்டால், நாமும் தாயின் வயிற்றிலேயே ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப் பட்டவராவோம். கண்டிப்பாகத் தேவையிலிரைப்போரை இன்று தேடிப்பிடித்து நம் சொல்லால்/ செயலால் அவர் துன்பம் களைவோம். தந்தைக்கு நன்றி!

    ReplyDelete