Monday, June 27, 2022

சாகப் போகிறோம்!

இன்றைய (28 ஜூன் 2022) நற்செய்தி (மத் 8:23-27)

சாகப் போகிறோம்!

இயேசு படகில் ஏற, சீடர்களும் உடன் ஏறுகின்றனர். படகை அவர்கள் முன்னால் செலுத்த, அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்குகின்றார். வந்திருந்தவர்கள் அனைவரும் மீன்பிடி அல்லது கடல்தொழில் செய்பவர்கள். கடலில் புயல் எழுந்தது கண்டு அவர்கள் பயப்பட, தச்சரோ தூங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு அதிசயமும், சிரிப்பும், கோபமும் ஒருசேர வந்திருக்கும்.

கடலின் இரைச்சலுக்கு மேல் இருக்கிறது அவர்களுடைய இரைச்சல்: 'ஆண்டவரே, காப்பாற்றும்! சாகப் போகிறோம்!'

வாழ்வு கொடுக்க வந்தவரிடம், 'நாம் சாகப்போகிறோம்' என்று அவரையும் தங்களோடு இணைத்துக்கொள்கின்றனர். எழுந்த இயேசு, இரைந்த அவர்களைக் கடிந்துகொள்ளாமல், இரையும் கடலைக் கடிந்துகொள்கின்றார். 

'மிகுந்த அமைதி உண்டாயிற்று'

ஒரே வாக்கியத்தில் ஒட்டுமொத்த விளைவையும் சுருக்கிவிடுகின்றார் மத்தேயு.

ஆனால், சீடர்களின் மனத்தில் அப்போதுதான் காற்று அடிக்கத் தொடங்குகிறது.

'நம்மோடு இருப்பவர் யார்? காற்றும் கடலும் கீழ்ப்படிகின்றனவே? தீமையின் ஆதிக்கம் இவருடைய ஒற்றைச் சொல்லுக்குக் கீழ்ப்படிகின்றதே இவர் யார்?' 

இயேசுவை நோக்கி சற்றுமுன் 'ஆண்டவரே' என அழைத்தவர்கள், 'இவர் எத்தகையவரோ?' என வியக்கின்றனர்.

இரு கட்டளைகள் இடுகின்றார் இயேசு.

ஒன்று, அச்சம் அகற்ற வேண்டும்.

இரண்டு, நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில், 'காரணம் இன்றி காரியம் நடக்குமா?' எனஆண்டவர் கேட்பதைச் சுட்டிக் காட்டி, இஸ்ரயேல் செய்த தீங்குக்கு எதிராக ஆண்டவரின் தண்டனைத் தீர்ப்பு வரும் என முன்னுரைக்கிறார் ஆமோஸ்.

இன்றைய நற்செய்தி வாசகம் தரும் பாடம் என்ன?

இறைவனை நோக்கி நாம் எழுப்பும் மன்றாட்டுகள் அல்லது நமக்கு நாமே பேசிக்கொள்ளும் சொற்கள் எதிர்மறையாக இருக்கின்றனவா? அச்சம் மற்றும் நம்பிக்கைக் குறைவினால் நாம் எதிர்மறையாக யோசிக்கத் தொடங்குகிறோம் எனில், அச்சம் தவிர்த்து நம்பிக்கையில் வளர்வது நலம்.


2 comments:

  1. Philomena Arockiasamy6/28/2022

    என் மனதுக்கு மிக நெருக்கமானதொரு பதிவு. புயலின் கோரம் மீன்பிடித்தலைத் தொழிலாகக் கொண்டவர்களை பயத்திற்குள்ளாக்க, தச்சனின் மகனோ நிம்மதியான உறக்கத்திலிருக்கிறார்.வாழ்வுகொடுக்க வந்தவர் தங்களை சாவுக்குள்ளாக்கப்போகிறாரோ என்ற தேவையற்ற அச்சம் சீடர்கள் மத்தியில். இயேசுவின் கடிதல் கடலை நோக்கியதாக இருக்க,அமைதி பிறக்கிறது அங்கே! வெளியே தோன்றிய அமைதி சீடர்களின் கலக்கம் போக்கவில்லை.’ஆண்டவரே!’ என அழைத்தவர் மேல் சந்தேகக்கண்! ஒருவரை நம்பி உதவிக்காக நிற்கும் போது நமக்குத் தேவை அச்சமற்ற தன்மையும்,நம்பிக்கையும் என்பதை சீடர்கள் உணரவில்லை.நம்முடைய. வேண்டுதல்கள் கூட பல நேரங்களில் பலனளிக்காமல் போகக் காரணம் இந்த அவநம்பிக்கைதான்.
    கூடவே “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்ற மூதோர் சொல்லும் நமக்கு ஒரு பாடத்தைத்தருகிறது. நாம் விளைத்ததை நாம் அறுவடை செய்துதானேயாக வேண்டும்!?
    அச்சம் தவிர்த்து,நம்பிக்கையைக் கூட்ட அழைப்புவிடும் அழகானதொரு பதிவு.தந்தைக்கு நன்றி!!!

    ReplyDelete
  2. It's even more interesting to read this verse in the older translation

    ஆகையால் அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் அணுகி அவரை எழுப்பி; ஆண்டவரே! எங்களை இரட்சியும், செத்தோமென்றார்கள்.

    They didn't say that they are about to die.. they considered themselves dead...

    ReplyDelete