கடவுள் எங்கே?
'கடவுள் எங்கே இருக்கிறார்?' என்ற கேள்வி நம்மில் பல நேரங்களில் எழுவதுண்டு. இந்தக் கேள்வி எழும்போதெல்லாம், நம் தேடல் பெரும்பாலும், 'கடவுள் எங்கே இருக்கிறார்?' என்று அவரைத் தேடுவதில் அல்ல. மாறாக, 'கடவுள் என்னோடு இருக்கிறாரா?' என்ற தேடலில்தான் இருக்கின்றது.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியாவின் பணி முடிந்து, எலிசாவின் பணி தொடங்குகிறது. நிகழ்வில் எலியா உயிருடன் தேரில் எடுத்துக்கொள்ளப்படுகின்றார். அந்த நேரத்தில், தனக்கு இரண்டு மடங்கு ஆவி வேண்டும் என எலியாவிடம் கேட்கின்றார். எலியாவைப் பார்த்துக்கொண்டே இருந்தால் அது நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
மேலிருந்து கீழே விழுந்த எலியாவின் மேலாடையை எடுத்துத் தன்னுடன் வைத்துக்கொள்கின்றார் எலியா.
தன்னிடம் உள்ள ஆற்றலைச் சோதிப்பதற்காக, அல்லது தன் அருகில் இருக்கின்ற இறைவாக்கினர் குழுவினர் ஐம்பது பேரின் முன் தன் ஆற்றலை அறிவிப்பதற்காக, அவர் இவ்வாறு செய்கின்றார்.
எலியா தன்னுடைய மேலாடையை அடித்துபோது யோர்தான் ஆற்றின் தண்ணீர் இரண்டாகப் பிரிகிறது. இப்போது எலிசா அடிக்கும்போதும் அவ்வாறே நடக்கிறது.
ஆண்டவரின் ஆவி இவ்வாறாக காணக்கூடிய ஓர் அடையாளத்தை நிகழ்த்திக் காட்டுகின்றார்.
இதற்கு மாறாக,
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்கள் தாங்கள் செய்யும் அனைத்தையும் - இறைவேண்டல், இரக்கச் செயல்கள், நோன்பிருத்தல் - மறைவாகச் செய்யுமாறு கற்பிக்கின்றார். இங்கே காண்பவர் இறைவனாக மட்டுமே இருக்க வேண்டும்.
'கடவுள் என்னோடு இருக்கிறாரா?' என்ற தேடலை விட, 'நீர் என்னோடு இருப்பதால்' என்ற நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கையில் மறைவாய் உள்ள இறைவனிடம் நாம் உரையாடவும் உறவாடவும் முடியும். அந்த நம்பிக்கைப் பயணம் சில நேரங்களில் எளிதானது அல்ல.
நம் வாழ்வின் இக்கட்டான நேரங்களில்…. உடலும், உள்ளமும் ஒருசேர உடைந்து நிற்கும் தருணங்களில் நம்மில் அடிக்கடி எட்டிப் பார்க்கும் கேள்விதான் “இறைவன் என்னோடு இருக்கிறாரா?”
ReplyDeleteஆனால் நாளடைவில் இறைவனின் பிரசன்னம் நம்மோடு இருப்பதை நாம் புரிந்து கொள்ளவே இந்த இக்கட்டான தருணங்கள் என்பதை வாழ்க்கை நமக்குப் பாடமாகப் புகட்டும்.
எலியாவையே பார்த்துக்கொண்டிருந்த எலிசா போல, நம் தேடல் எல்லாம் ‘அவரை’ப் பற்றியே இருப்பின், நம் உடல் அழிந்து கொண்டிருந்தாலும் நம் உள்ளம் புதுப்பிக்கப்படுவதை உணருவோம். உண்மைதான்! ‘நீர் என்னோடு இருப்பதால்’ எனும் நம்பிக்கைத் துளிர் மட்டும் நம்மில் குடிகொள்ளும் பட்சத்தில் நம்மில் உறையும் இறைவனோடு நாம் உறவாடவும், உரையாடவும் முடியும் எனும் அச்சாணி போன்ற வார்த்தைகளுக்காகத் தந்தைக்கு நன்றி!!!