Sunday, January 8, 2017

சுவரொட்டிகள்

இன்று பெரியகுளம் திருப்பலிக்குச் சென்றுவிட்டு மதுரை திரும்பிக்கொண்டிருந்தேன்.

வரும் வழியில் நிறைய சுவரொட்டிகள்.

தமிழகத்தின் சுவரொட்டிகளை அரசியல், சினிமா, திருமணம், இறப்பு என்ற நான்கு வரையறைகளுக்குள் வைத்துவிடலாம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், சின்னம்மாவாக, சின்ன அம்மாவாக நிற்க ஆவல் கொண்டிருப்பவர்களின் போஸ்டர்கள்தாம் அதிகம் இருந்தது.

ஒரு போஸ்டர் வித்தியாசமாக இருந்தது:

ஜெயாவின் அண்ணன் மகள் தீபாவின் படத்துடன் இருந்தது.

'அம்மாவைப் போல கொண்டை.

அம்மாவைப் போல சேலை.

அம்மாவைப் போல கைகள்.

அம்மாவைப் போல ஆங்கிலம்.

அம்மாவைப் போல ஆட்சி செய்ய வா!' என அழைத்தது இந்த போஸ்டர்.

தீபாவின் முகத்தை எனக்கு முதல் நாளிலிருந்தே பிடிக்கவில்லை.

ஆங்கிலத்தில் 'கான்ஸ்டிபேடட் லுக்' என்ற ஒரு வார்த்தை உண்டு. அப்படித்தான் இருக்கிறது இவரது லுக்.

மற்றொரு பக்கம் சசியின் அலும்பு தாங்க முடியவில்லை.

இவ்வளவு நாள்களாக ஜெயாதான் இரும்பு பெண்மணி என நினைத்திருந்தேன். ஆனால், அவரையே மடக்கி மர்ம அறைக்குள் வைத்துவிட்ட சசிதான் இரும்பி.

வெறும் லுக்கை மட்டும் வைத்து ஆட்சி செய்ய முடியும் என்று என் நாட்டு மக்களுக்கு ஒருத்தி அல்லது ஒரு கூட்டம் சொல்கிறது என்றால், அதை எதிர்த்து கேட்க என்னால் ஏன் முடியவில்லை?

நேற்று வரை யாராக இருந்த ஒருவர் இன்று என்னை ஆட்சி செய்ய வருகிறார் என்றால்,

அவருக்கு எந்தவித தகுதியும், திறமையும் இல்லை என்றாலும் என்னால் ஏன் ஏற்றுக்கொள்ள முடிகிறது?

என் மௌனம் என் இயலாமையா?

அல்லது சகிப்புத்தன்மையா?

அல்லது கண்டுகொள்ளாத்தன்மையா?

நாளை ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழாவை கொண்டாடுகிறோம்.

திருமுழுக்கில் ஆண்டவரும் 'மகன்' 'செல்ல மகன்' 'சின்ன மகன்' என்று பெயர் பெறுகிறார்.

ஆனால், அவர் பெயருக்கேற்ப வாழ்ந்தார்.


1 comment:

  1. இன்றைய அரசியலுக்குக் கொடுக்கும் ஒரு சவுக்கடியாகத்தான் தந்தையின் இன்றையப்பதிவைப்பார்க்கிறேன்.நாட்டை ஆண்ட ஒருவருக்கு அருகில் இருந்ததாலேயே ஒருவர் நம்மை ஆளும் தகுதி பெறுகிறார் எனில் அவரின் இரத்தம் என்பதாலேயே இன்னொருவர் அந்தப் பந்தயத்தின் அடுத்த ஆட்டக்காரராக வருகிறார். இராமன் ஆண்டால் என்ன...இராவணன் ஆண்டால் என்ன என்ற நினைப்பில் மக்கள் இருக்கும் வரை நாமெல்லாம் கண்ணிருந்தும் குருடரே! காதிருந்தும் செவிடரே! எந்தத் தகுதியும்,திறமையும் இல்லாதவர்களை நம்மை ஆள அனுமதிக்கிறோமே! எப்படி? தந்தையின் கேள்வியில் இயலாமை கொப்பளிக்கிறது.ஆனால் அவரும் கூட தன் இயலாமையை இந்தப்பதிவில் தான் கொட்டித்தீர்க்க முடியும்! மற்றபடி இந்த சின்னம்மாக்களும்,சின்ன அம்மாக்களும் இன்றையத் திருமுழுக்கு வாசகங்களில் இடம்பெறும் 'செல்ல மகன்', 'சின்ன மகன்' என்ற வார்த்தைகளோடு ஒப்பிடக்கூடத் தகுதியற்றவர்கள். தகுதியானவர்கள் முடங்கிப்போவதும்,தகுதியற்றவர் உரக்க ஓதுவதும் தமிழ்நாடு வாங்கி வந்த சாபம்! இறைவன்தான் இந்த நாட்டுப்பிள்ளைகளை இந்த 'அம்மாக்களிடமிருந்து' காப்பாற்ற வேண்டும். செய்வாரா இறைவன்!? அவருக்கேனும் அந்த தைரியம் இருக்கிறதா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!!!

    ReplyDelete