Tuesday, January 17, 2017

எது முறை?

ஓய்வுநாள் பற்றிய மற்றொரு சர்ச்சை நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். 3:1-6) வருகிறது.

தொழுகைக்கூடத்தில் சூம்பிய கை உடையவர் ஒருவர் இருக்கிறார்.

'சூம்பிய கை' உடையவரை நீங்க பார்த்திருக்கிறீர்களா?

தேனியில் வலது கை சூம்பிய ஒரு பாட்டி உண்டு. என்மேல் அலாதி பிரியம் உண்டு அந்தப்பாட்டிக்கு. அந்தப் பாட்டியைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு என் அய்யாமை நினைவு வரும். ஒருமுறை அவரின் வீட்டிற்குச் சென்றேன். ஒரு பாய், ஒரு தண்ணீர் குடம், சிறிய பையில் 4 சேலைகள், ஒரு மாதா படம், ஒரு செபமாலை - இதுதான் இந்தப் பாட்டியின் சொத்து. அந்த வீட்டிலிருந்த சொத்து. மற்றபடி மற்ற சொத்துக்களை எல்லாம் வங்கியில் வைத்திருக்கிறது இந்த அறிவாளிப் பாட்டி. இவரின் பிள்ளைகள் இவருக்கு கை சூம்பிய நாள்முதல் இவரைக் கவனிக்க வருவதில்லை. ஆனால் இவரிடம் நிலம் மற்றும் சொத்துக்கள் நிறைய இருப்பதால் இவரோடு டச்சில் இருக்கிறார்கள்.

விபத்து ஒன்றில் தன் பாதிக்கையை (பாதிக்கை அல்ல, கால் பகுதி கையை!) இழந்ததாகச் சொன்னார். ஆனாலும், அந்த இழப்போடு வாழப் பழகிக்கொண்டார்.

சூம்பிய கை மிகவும் கொடுமையானது. கை இல்லை என்றால், 'கை இல்லை' என்று சொல்லிவிடலாம். ஆனால், கை இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாத நிலைததன் சூம்பிய கை.

இப்படிப்பட்ட ஒருவரை நடுவில் நிறுத்தி மற்றவர்களிடம் கேள்வி கேட்கிறார் இயேசு:

'ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா?
உயிரைக் காப்பதா? அழிப்பதா?
எது முறை?'

நன்மை-தீமை, உயிர்-அழிப்பு - முதல் கேள்வியை இரண்டாவதாகவும் கேட்கிறார் இயேசு.

இந்த இரண்டோடு கேள்வி முடிந்திருந்தால் ஒருவேளை மக்கள் பதில் சொல்லியிருப்பார்கள்.

ஆனால், 'எது முறை?' என்ற கேள்வி அவர்களை மௌனமாக்குகிறது.

எது முறை? ஓய்வுநாளா? மனிதரின் நலமா?

ஒரு ஆசிரியையின் ஒரே குழந்தை காய்ச்சலாய்க் கிடக்கிறது. அந்த ஆசிரியை பள்ளிக்கு வர வேண்டும் என நிர்பந்திக்கிறது பள்ளி. இதில் எதை அவர் தேர்ந்து கொள்வார்?

பல நேரங்களில் நம் வாழ்விலும், 'எது முறை?' என்ற கேள்விக்கு நம்மால் பதில் சொல்ல முடிவதில்லை.

'எது முறை?' என்பதை ஒவ்வொருவரும்தான் தீர்மானிக்க வேண்டும் என்பர் சிலர்.

அப்படி என்றால் ஒட்டுமொத்தமாக, 'இதுதான் முறை' என்று எதுவும் நமக்கு இல்லையா?

ஆனால், இயேசுவுக்கு தெரிந்திருந்தது.

அதனால்தான், 'கையை நீட்டும்!' என்கிறார். கை நலமடைகிறது.

பதில் சொல்ல முடியாத நிலையில் இருந்தவர்களே சூம்பிய கையர்கள்.


3 comments:

  1. இயேசுவின் காலத்தில் இந்த 'ஓய்வு நாள்' என்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கிறது என்பதையே விளக்குகிறது இன்றையப்பதிவு.என் இளம் வயது நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கிழிந்த துணி தைப்பது கூட பாவம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.ஆனால் இன்று அதே ஞாயிற்றுக்கிழமைகளில் நம் கன்னியர் நடத்தும், பள்ளிகளில் கூட முழுநேர வகுப்புகள் நடத்தப்படுவதைப் பார்க்கிறேன்.இது முறையா? யார் பதில் சொல்வது? ஓய்வுநாளில் உயிரை அழிப்பதற்குப்பதில் உயிரைக் காக்க வேண்டும் என்பதும், தீமைக்குப்பதில் நன்மைதான் செய்ய வேண்டும் என்பதும் இயேசுவுக்குத் தெரியாதா என்ன? கண்டிப்பாகத் தெரியும்.ஆனால் எந்நேரமும் அவரை மாட்டிவிடத் துடிக்கும் ஒரு கும்பலை மடக்கவும்,அவர்கள் வாயாலேயே உண்மையை வரவழைக்கவுமே இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும். மற்றபடி நம் உடம்பில் எந்த உறுப்புக்குப் பங்கம் வந்திடினும் அது இழப்புதான். நம்மால் அடுத்தவரின் இழந்த உறுப்பை சரி செய்ய இயலாமல் போகலாம்.ஆனால் நம்மால் அடுத்தவரின் உடலுக்கும்,உணர்வுக்கும் தீங்கு வராமல் பார்த்துக்கொள்வதே நாம் அனுசரிக்க வேண்டிய 'முறை' என நினைக்கிறேன். மற்றபடி கால் பகுதிக்கையை இழந்த அறிவாளிப்பாட்டியின் கதையைப் பின்புலத்தில் தந்தை கூறியிருக்கும் சுவாரஸ்யம் அழகு! தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. தந்தையின் கருத்துப்படி 'பதில் சொல்ல முடியாத நிலையில் இருந்தவர்களே சூம்பிய கையர்கள்'. இன்று நன்மைகள் செய்யும் வாய்ப்புக்களை நழுவ விடும் போதும் நாம் சூம்பிய கையர்களே.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete