Tuesday, January 10, 2017

உம்மைத் தேடி

ரோம் நகரில் மெட்ரோவில் பயணம் செய்யும்போதெல்லாம் ஒரு விநோதமான நிகழ்வைக் கண்டிருக்கிறேன்.

அமைதியான மெட்ரோ பெட்டி.

சிலர் பேப்பர் படித்துக்கொண்டிருப்பர்.

சிலர் புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பர்.

சிலர் ம்யூசிக் கேட்டுக்கொண்டிருப்பர்.

சிலர் வெளியே தெரியும் இருட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பர்.

சிலர் மெட்ரோ ஸ்டேஷன்களின் பெயர்களை மனதில் வாசித்துக்கொண்டிருப்பர்.

சிலர் முத்தமிட்டுக்கொண்டிருப்பர்.

இந்த நேரத்தில் யாராவது ஒருவரின் செல்ஃபோன் அடிக்கும்.

செல்ஃபோன் சத்தம் வரும் இடத்தை நோக்கி எல்லார் கண்களும் திரும்பும்.

அலறுகின்ற செல்ஃபோனை அடக்க நினைக்காமல் அந்த நபர் எல்லாரையும் பார்த்து ஒரு புன்னகை செய்வார்.

அந்தப் புன்னகையின் அர்த்தம் இதுதான்:

'யாரோ ஒருவர் என்னைத் தேடுகிறார். உங்களை யாரும் தேடவில்லை!' என்பது அவருடைய பெருமிதமான மைன்ட் வாய்ஸாக இருக்கும்.
நமக்குப் பிடித்தவர்களிடமிருந்து ஃபோனோ, மெசேஜோ வரவில்லை என்றால் ஏன் நாம் கோபப்படுகிறோம்?

'நான் நாள் முழுவதும் இவனைத் தேடிக்கொண்டிருக்க, இவன் என்னைத் தேடாமல் இருக்கின்றானே!' என்ற எண்ணம்தான்.

யாரோ நம்மைத் தேடுகிறார்கள் என்ற உணர்வு நம்மை அறியாமல் நமக்கு ஒரு பெருமை உணர்வைத் தருகிறது. ஆனால், அப்படிப்பட்ட ஒரு உணர்வு மிகவும் டேன்ஜரான உணர்வு என்கிறார் இயேசு.

இயேசு சீமோன் வீட்டில் அவரது மாமியாரைக் குணமாக்கிவிட்டு வெளியே வருகின்றார். வருகின்றவரை மக்கள் மடக்குகின்றனர். கூட்டத்தில் ஒருவர் இயேசுவிடம், 'எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!' என்கிறார்.

ஆனால், இயேசு அதை சட்டை செய்யாமல், 'நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம் வாருங்கள்!' என்கிறார்.

இதுதான் பற்றிலும் பற்றற்ற நிலை.

எனக்கு அதிபராக இருந்த அருள்திரு. மைக்கேல் ஆலோசனை, சேச, அவர்கள் சொல்வார்: 'ஓர் அருள்பணியாளர் எங்கே தேவை என நினைக்கப்படுகிறாரோ, அந்த நிமிடமே அவர் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டுவிட வேண்டும்!' என்று.

ஏனெனில், 'நான் அவருக்குத் தேவை' என்ற உணர்வே நம் வாழ்வில் பற்றுக்களை உருவாக்கிவிடுகிறது.

பணியில் பற்றுக்கள் தேவையில்லை.

ஆனால், வாழ்வில் தேவை. இல்லையா?

குழம்புகிறது என் மனம்.

2 comments:

  1. அன்றாடம் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடியதொரு உணர்வைத் தன் அனுபவம் கலந்து கொடுத்திருக்கிறார் தந்தை." யாரோ நம்மைத் தேடுகிறார்கள் என்ற உணர்வு நம்மையறியாமல் நமக்குப் பெருமை உணர்வைத் தந்தாலும் அது மிகவும் டேன்ஜரான உணர்வு" என்கிறார் தந்தை.இது எல்லோருக்கும் எல்லா சமயங்களிலும் உண்மையாயிருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறது என் மனம்."யாரும் என்னைத்தேடவில்லை; நான் யாருக்கும் அவசியமில்லை" ..என்ற விரக்தியின் மேலீட்டால் வரும் உணர்வை விட நம் உடனிருப்பு ஒருவருக்குத் தேவை; என்னால் அவருக்கு நிறைவேற வேண்டிய காரியங்களும் இருக்கின்றன" எனும் உணர்வு நமக்குப் பெருமையை மட்டுமின்றி,ஒரு திருப்தி,மகிழ்ச்சி, சுய மரியாதை போன்ற உணர்வுகளையும் கூடவே கூட்டி வருகிறது என நினைக்கிறேன்."நம்மைப் பிறர் தேடுகிறார்கள்" எனும் உணர்வு மட்டுமே ஒரு தந்தையையோ,தாயையோ பணித்தளத்திலிருந்து விரைவில் வீடு வந்தடைய உதவும்.நாளெல்லாம் ஊரைச்சுற்றும் ஊதாரி மைந்தர்களுக்கும் கூட மாலையானால் ஒரு தாயோ,மனைவியோ தன்னைத்தேடிக்கொண்டிருப்பாள் எனும் உணர்வுதான் அவன் கால்களை அவன் இல்லம் நோக்கி நகர்த்தும்.ஒரு அருட் பணியாளருக்கு மட்டுமென்ன...அவரை அவர் பொறுப்பிலுள்ள இறை மக்கள் தேடுகிறார்கள் எனும் எண்ணம் அவருக்கு இருந்தால் மட்டுமே பிரச்சனை என்று வரும் தன் மக்களுக்கு குறித்த நேரத்தில் அவர்கள் இன்னல் போக்கும் ஒரு 'சஞ்சீவி'யாக அவர் இருக்க முடியும்.ஆகவே தந்தையே! குழப்பம் வேண்டாம்.பற்றுக்கள் பணியிலும் தேவை; வாழ்விலும் தேவைதான்.எங்கே...எவ்வளவு ....அதற்கு நீங்களே அதிபதி! இல்லையா? அன்றாடம் நம்மைப் பாதிக்கும் ஒரு விஷயத்தைப் பாங்குறத் தந்த தந்தைக்கு என் சல்யூட்!!!

    ReplyDelete
  2. Add... இயேசு இராயப்பரின் மாமியாரைக் குணப்படுத்தியபின் " நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம் வாருங்கள்" என்றதற்குக் காரணம் அவரது " பற்றிலும் பற்றற்ற நிலை"யாக இருக்கலாம்.ஆனாலும் அவரும் கூட ஒரு ஊரில் தன் கடமை முடித்து அடுத்த ஊரில் 'தனக்காகக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு' நற்செய்தியைப் பறைசாற்றவும்,பேய்களை ஓட்டவும் தானே சென்றார்? 'நமக்காக்க் காத்திருக்கிறார்கள்' என்ற கரிசனை உள்ள ஒருவரால் தான் இப்படி அடுத்தவரின் உணர்வுகளைப் புரிந்து செயல்பட முடியும்.இல்லையா தந்தையே!

    ReplyDelete