Thursday, January 5, 2017

குட்டிப்பூக்கள்

இன்று என் நண்பருடன் தமுக்கம் மைதானத்தில் உள்ள 'ஏழு அதிசயங்கள்' பொருள்காட்சிக்குச் சென்றேன்.

முகப்பில் ஏழு அதிசயங்கள். உள்ளே நிறைய விளையாட்டுக்கள். கடைகள். உணவகங்கள்.

வார நாட்கள் என்பதாலும், பின்நேரம் என்பதாலும் கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது.

வந்திருந்த சின்னக்குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நண்பர் சாப்பிட்டுக்கொண்டிருந்த பஞ்சுமிட்டாயை நோக்கி கை நீட்டி அழுதது மஞ்சள் கலர் கவுன் போட்ட ஒரு கைக்குழந்தை.

'அங்கிளுக்கு டாட்டா சொல்லு!' என்று அந்தக் குழந்தையின் அப்பா வேகமாக விடைபெற்றார் தன் மனைவியோடு.

தன் மனைவியோடு வரும் கணவர்களைப் பார்ப்பதைவிட, தன் பிள்ளையோடு வரும் கணவர்கள்தாம் அதிகம் பொறாமை உணர்வை என்னில் தூண்டுகின்றனர்.

குழந்தைகளோடு வித விதமாக ஃபோட்டோ எடுத்து கடுப்பேத்துகிறார் மை லார்ட்.

ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் வைத்து அதில் பொம்மைகளைப் போட்டு பல்டி அடிக்க வைத்துக்கொண்டிருந்தார் கடைக்காரர். அங்கு வந்த குழந்தை ஒன்று அப்படியே அனைத்தையும் அள்ளி எடுத்தது.

குழந்தைகள் தங்கள் கண்களுக்குத் தெரிவதை அப்படியே வாரிக்கொள்கின்றனர்.

வயது வந்தவர்கள்தாம் அது யாருக்கு உரிமையானது என்று ஆராய்கின்றனர்.
கொஞ்ச தூரம் தள்ளி இரண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

ஒரு குழந்தை சோப்பில் முட்டை விட்டுக்கொண்டிருந்தது.

மற்றொரு குழந்தை அதை ஓடி ஓடி உடைத்தது.

குமிழிகள் கொஞ்ச நேரமே வாழக்கூடியவை என்பதை உணர்ந்தவை குழந்தைகள் மட்டுமே.

வாழ்க்கையும் ஒரு குமிழ்தானே என்பதை இந்தக் குழந்தைகள் போகிற போக்கில் கற்றுக்கொடுத்துவிடுகின்றனர்.

இறுதியாக, கைரேகை ஜோசியம் பார்த்தோம்.

'நீங்கள் உங்கள் குழந்தைகளோடு சந்தோஷமாக இருப்பீர்கள்!' என்று ஒரு வரி வந்தது.

அப்படியே அதைக் கிழித்துப் போட்டுவிட்டு, ஷேர் ஆட்டோ பிடித்து வீடு திரும்பினோம்.

3 comments:

  1. நீங்கள் உங்கள் குழந்தைகளோடு சந்தோஷமாக இருப்பீர்கள்!,😁😁😁

    ReplyDelete
  2. சமீப காலங்களில் தமுக்கம் பக்கம் போகும் போதெல்லாம் ஒரு வித்தியாசத்தை உணர முடிகிறது.அது ஏழு அதிசயங்களின் பொருட்காட்சி என்பது இன்று தான் தெரிந்தது.தன்னைக் கவர்ந்த சிறுவர்களின் செய்கைகளை இரசித்து மகிழ்ந்த ரிலாக்ஸ்டான மூடிலும் கூட "வாழ்க்கை ஒரு குமிழ்தான்" போன்ற தத்துவங்களைக் கோர்க்க முடிந்த சீரியசான தந்தையையும் பார்க்க முடிகிறது.எல்லாம் சரிதான். ...அதென்ன? " நீங்கள் உங்கள் குழந்தைகளோடு சந்தோஷமாக இருப்பீர்கள்" எனபது நல்ல விஷயம் தானே! எதற்காக சீட்டைக் கிழிக்கணும்? பெற்றவர்களுக்கு ஒரு பிள்ளையெனில் பெறாமலே அனைத்து உலகிற்கும் தந்தையான ஆண்டவனுக்குச் சமமானவர்தகள் தங்களைப் போன்றவர்கள் என்பதை என்னைப் போன்றவர்கள் நினைவூட்ட வேண்டுமா என்ன? எப்புடி என் சாமர்த்தியம்!? "குட்டிப்பூக்களும்" கூட சமயத்தில் நமக்கு ஆசிரியராக மாறலாம். ..சொல்லாமல் சொல்லிய தந்தைக்கு ஓரு சபாஷ்!!!

    ReplyDelete