Monday, January 30, 2017

கண்களை

'நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்' (எபி 12:2)

'நம்பிக்கை' என்றால் என்ன என்பது பற்றி விரிவான விளக்கம் கொடுத்து, அந்த விளக்கத்திற்கு எண்ணிறந்த எடுத்துக்காட்டுகளையும் காட்டிய ஆசிரியர் தொடர்ந்து அந்த நம்பிக்கையை எப்படிப் பெற்றுக்கொள்வது என எழுதுகின்றார்.

நம்பிக்கை என்பது ஓர் ஓட்டப்பந்தயம் எனக் குறிப்பிடும் ஆசிரியர், அதற்கு இரண்டு பண்புகளை அடிப்படையாக வைக்கின்றார்:

அ. சுமைகளைத் தகர்த்தெறிதல்
ஆ. கண்களைப் பதியவைத்தல்

ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற ஒருவரின் மேல் இரண்டு மூன்று அரிசி மூடைகளைக் கட்டினால் என்ன நடக்கும்?

அல்லது

அவரின் கண்களில் இலக்கு பதியா வண்ணம் செய்துவிட்டால் என்ன நடக்கும்?

அவர் தோற்றுவிடுவார்.

ஆக, சுமைகள் குறைய வேண்டும். இலக்கு தெளிவாக வேண்டும்.

இந்த இரண்டும்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் தெரிகிறது.

இயேசுவிடம் குணம்பெற வந்த இரத்தப்போக்குடைய பெண்ணும், சிறுமியின் தந்தையும்

தங்கள் சுமைகளை இயேசுவின்மேல் இறக்கிவிடுகின்றனர்.

அவர்கள் தங்கள் கண்களை இயேசுவின்மேல் பதிக்கின்றனர்.

சிறுமியின் தந்தைக்கு இடையில் சோதனை வருகின்றது. அவரின் கண் பார்வை தடம் மாறுகின்றது.

ஆனால், இயேசு அவரின் நம்பிக்கைக்கு உரம் சேர்க்கிறார்.

ஆக, நம்பிக்கை - இதன் ஊற்று, தொடர்ச்சி, நிறைவு இயேசுவே.

1 comment:

  1. " நம்பிக்கை".... இந்நாட்களில் தன் அர்த்தத்தையும்,முக்கியத்துவத்தையும் இழந்து கொண்டிருக்கும் வார்த்தை.எப்பொழுது தேவைப்படுகிறது இந்த நம்பிக்கை? யார் மேல் வைப்பது இந்த நம்பிக்கையை? வாழ்வின் அர்த்தம் அத்தனையையும் இழந்து அடுத்து என்ன என்று தெரியாத நிலையில் இருக்கும் ஒருவர் தான் கடந்து போகத் தேடும் " தோணி'" தான் இந்த நம்பிக்கை.இன்றைய நற்செய்தியில் நாம் காணும் இரத்தப்போக்குடைய பெண் சுகம் பெற்றதைப்போல, சுகவீனமான அந்த சிறுமி நலமடைந்ததைப்போல ஏன் இன்றைய கால கட்டத்தில் இத்தகைய விஷயங்கள் நடப்பதில்லை?நம் மேல் சுமை ஏற்றப்பட்டிருப்பதும்,நம் பார்வை மறைக்கப்பட்டிருப்பதும் தான் இதற்குக் காரணமா? இதற்குப் பெயர்தான் 'நம்பிக்கையின்மையா?' என்ன செய்து இந்த நம்பிக்கைக்கு உரமேற்றுவது? " நம்பிக்கையின் ஊற்று,தொடர்ச்சி,நிறைவான இயேசுவில் நம் கண்களைப் பதிப்பதே அதற்கு ஒரே வழி என்கிறார் தந்தை.நம் நம்பிக்கையை உரமேற்றுவோம்; அடுத்திருப்போரின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றுவோம்.நெஞ்சில் வலிமை இழந்தோருக்கு ஒரு 'டானிக்' போன்றதொரு பதிவைத்தந்த தந்தைக்கு நன்றி!!!

    ReplyDelete