Wednesday, January 18, 2017

விழுந்துகொண்டிருந்தனர்

நாளைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 3:7-12) இயேசுவைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் இருக்கின்றது.

'கூட்டம்' என்ற வார்த்தை நற்செய்தி நூல்களில் வருகின்றது. பல நேரங்களில் கூட்டம் இயேசுவின் பணிக்குத் தடையாக இருந்தாலும், நாளைய நற்செய்தியில் அது நேர்முகமான ஒளியில் காட்டப்பட்டுள்ளது.

இயேசுவைச் சுற்றி பெருந்திரளான மக்கள் இருக்கின்றார்கள்.

அதாவது, அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு தாங்களாகவே வந்து கூடுகின்றனர்.

கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கூட்டங்கள் கூடுகின்றன.

மெரினா கடற்கரை, அலங்காநல்லூர், மதுரை தமுக்கம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் என பல இடங்களில் தாங்களாகவே இளைஞர்களும், மாணவர்களும், மக்களும் கூடுகின்றனர். அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை என்பதில் இந்தக் கூட்டங்கள் தெளிவாக இருக்கின்றன. தானாகவே சேரும் இந்தக்கூட்டம் அரசியல்வாதிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் எச்சரிக்கையாகவே இருக்கின்றது.

'ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும்' என்பதுதான் இந்தக்கூட்டத்தின் கோரிக்கையாக இருந்தாலும், இவர்களுக்கு நிறைய கோபம் இருக்கின்றது. 'செல்லாக்காசு,' 'ஜெயா இறப்பு,' 'ஜாதீய அடக்குமுறைகள்,' 'பாசிச திணிப்பு' என நிறைய விடயங்கள் பின்புலத்தில் இருக்கின்றன.

இன்று தனிப்பட்ட நபர்கள் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காதா என்று எண்ணி கூட்டங்களை நாடிச் செல்கின்றனர்.

அன்று கூட்டம் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டி தனிநபராம் இயேசுவிடம் செல்கின்றது.

'நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்துகொண்டிருந்தனர்' என பதிவு செய்கிறார் மாற்கு.

இதை வாசிக்கும்போது இயேசுவின்மேல் எனக்கு பொறாமை வருகின்றது.

நான் தெருவில் நடந்து செல்லும்போது என்னைத் தொட வேண்டுமென்று, என் மீது விழ வேண்டுமென்று, என் ஆடையையாவது தொட வேண்டுமென்று யாரும் என்மேல் விழுவதில்லை.

யாரும் என்னைத் தொடக்கூடாது என்பதில் பல நேரங்களில் நான் கருத்தாய் இருக்கிறேன்.

நானே ஒதுங்கிக்கொள்கிறேன்.

நான் கொண்டாடும் திருப்பலியும்கூட அப்படித்தான் இருக்கின்றது. பீடத்தின் கிராதிகளுக்குப் பின் அவர்களை நிற்க வைத்துவிட்டு, யாரையும் தொட்டுவிடாமல் நன்மையைக் கொடுத்துவிட்டு, வேகமாக திருவுடைகளைக் களைந்துவிட்டு, என் அறையை நோக்கி நகரும் திருப்பலிதான் நான் செய்யும் பெரிய வேலையாக இருக்கின்றது.

இன்று நான் என்னிடம் கேட்கும் கேள்விகள் இரண்டு:

அ. நான் இயேசுவிடம் போய் விழுகின்றேனா? அவரைத் தொட வேண்டும் என்ற ஆவல் கொண்டிருக்கின்றேனா?

ஆ. இயேசுவைப் போல என்னால் ஏன் மற்றவர்களை என் பக்கம் ஈர்க்க முடியவில்லை?

2 comments:

  1. ஆம்! நம் அருமை மண்ணில் சாதி,பணம்,பதவி,பட்டம்...இவற்றுக்காக பிறர் பின்னால் சென்ற கூட்டங்கள் மறைந்து நம் தேசம்,நம் மக்கள் என்ற விழிப்புணர்வை வேதவாக்காய்க் கொண்ட பல கூட்டங்கள் இன்று உதயமாகிக் கொண்டிருக்கின்றன. இப்படிக் கூடும் அனைவரின் எண்ணமும்,செயலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் பட்சத்தில் தான் அந்தக் கூட்டங்கள் சாதனைகளின் சங்கம்மாக இருக்க முடியும்.இயேசுவைத் தேடிச்சென்ற கூட்டத்திற்கு இருந்த ஒரே எதிர்பார்ப்பு அவரால் சுகம் பெறுவது மட்டுமே.அது கிடைத்தவுடன் அவரிடம் அவர்களுக்கு வேலை இல்லை.இங்கு தந்தை தன் நிலை குறித்து வெளிப்படுத்தும் எண்ணம் 'இவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிறாரே' என்று அவரை ஆச்சரியம் மேலிடப் பார்க்க வைத்தாலும் இறைவனும்,இறை மக்களும் ஒரே கோட்டில் இருப்பது எவ்வாறு சாத்தியம் என்றும் மனது கேட்கிறது.'தேடப்படுபவர்' இறைவன் எனில்,'தேடுபவன்' தானே மனிதன்?! இருவரும் தனித்தனியே இருந்தால் தானே அவரவர் தம் வேலையைச் செய்ய இயலும்? தந்தையின் முதல் கேள்வியை நாம் எல்லோருமே நம்மைப்பார்த்துக் கேட்டுக்கொள்ளலாம்.ஆனால் அதற்கான பதிலை அவரவர் தான் தேட வேண்டும்.தந்தையின் இரண்டாவது கேள்வி அர்த்தமற்றது. யார் சொன்னது உங்களால் மற்றவர்களை ஈர்க்க முடியவில்லை என்று? ஈர்ப்பு இல்லாமலா நாள் மாறாமல் திருப்பலிகளுக்கும்,தியானக்கூட்டங்களுக்கும், சுயபரிசோதனை( recollection) போன்ற காரியங்களுக்கும் அழைக்கப்படுகிறீர்கள்? இன்னும் காலம் இருக்கிறது தந்தையே! எவ்வளவோ சாதிக்க! தன்னடக்கம் தேவைதான்...அது குற்ற உணர்ச்சியாக மாறாதவரை. ஆனாலும் என்னையும் ஒருவகையான சுயதேடலுக்கு இட்டுச்சென்ற பதிவிற்காகத் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Good Morning Father.Excellent reflection.

    ReplyDelete