Wednesday, January 25, 2017

சின்னான்

நாளை தூய பவுலின் மனமாற்றத்தின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

'பவுல்' என்றால் கிரேக்கத்தில் 'சிறியது' என்பது பொருள். ஆகையால்தான், பழைய மொழிபெயர்ப்பில் நாம் இவரை 'சின்னப்பர்' என அழைக்கின்றோம்.

இந்த 'சின்னான்' கிறிஸ்தவத்தின் தடத்தையே மாற்றியவர்.

வரலாற்றின் இயேசுவுக்கும், நம்பிக்கையின் கிறிஸ்துவுக்கும் இணைப்புக்கோடாய் இருப்பவர் இவர்.

இவரின் மனமாற்றம் பற்றி நான்கு இடங்களில் வாசிக்கிறோம் (திப 9:1-9, 22:6-16, 26:12-18, கலா 1:15-19). இந்த நான்கு கதையாடல்களுக்கும் இடையே நிறைய வேற்றுமைகள் இருந்தாலும், இவைகள் கொண்டிருக்கும் ஒரே ஒற்றுமை 'மனமாற்றம்'.

சவுலாக இருந்தவர் பவுலாக மாறுகிறார்.

'ஒரு கிறிஸ்தவனைக் கூட விட்டுவைக்க மாட்டேன்' என வாளெடுத்துச் சென்றவர், 'வாழ்வது நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்' என்று பல்டியடிக்கின்றார்.

பவுலின் மனமாற்றம் எனக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடங்கள் இவை:

அ. நம் திட்டம் அல்ல. அவரின் திட்டமே.

ஒவ்வொரு பொழுதும் நாம் ப்ளானரில் எடுத்து ஏதோ ஒரு நிகழ்வைக் குறிக்கும்போதெல்லாம் கடவுள் சிரிப்பார் என்பது என் நம்பிக்கை. 'இவனுக்கு நான் ஒரு ப்ளானர் வைத்திருக்க இவன் ஏதோ எழுதுகிறானே!' என அவர் தனக்குள் சொல்லிக்கொள்வார். பவுலும் வாளெடுத்துச் சென்றபோது கடவுள் தனக்குள் சிரித்துக்கொள்வார்.

ஆ. அதிக ஆழம். அதிக அன்பு.

அதிக ஆழமாக பவுல் விழுந்ததால் கடவுளை அதிகமாக அன்பு செய்கிறார். இது அகுஸ்தினாருக்கும் பொருந்தும். ஒரு கயிறு அறுந்து கட்டப்படும்போது அதன் இரண்டு நுனிகளும் தங்களை அறியாமல் அருகில் வருகின்றனவே. அது போல! அருள் இறங்க முடியாத ஆழம் என்று நம் வாழ்வில் எதுவும் கிடையாது. நாம் ஆழமாகச் சென்று ஒளிந்து கொண்டாலும் அவர் நம்மைத் தேடி வருவார். பவுலைத் தேடி வந்ததுபோல.

இ. நோ டர்னிங் பேக்

புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கியவுடன் தன் பழையவற்றோடு உள்ள இணைப்பை முழுவதுமாக வெட்டிக்கொண்டார். ஆங்கிலத்தில் இதை, 'படகுகளை எரிப்பது' என்று சொல்வார்கள். தான் வந்த படகை எரித்துவிட்டு புதிய இடத்தில் காலடிகளைப் பதித்துக்கொள்வது.

குதிரையில் வந்த சின்னான், விழுந்தார், எழுந்தார்.

அவரின் மனமாற்றம் நம் மனமாற்றம்கூட.

அவர் மனம் மாறிடாவிடில் கிறிஸ்தவம் யூத மதத்தின் ஒரு சின்ன ஸெக்ட் ஆக நின்று போயிருக்கும்.

என் மனமாற்றம் கூட எங்கோ இருக்கும் யாருக்கும் பயன்படலாம்.

கொஞ்சம் மனமாறுங்க பாஸ்!

3 comments:

  1. Happy Feast to all...
    Apt and clean message for this feast..

    ReplyDelete
  2. சவுலாக இருந்தவர் பவுலாக மாறுகிறார்..' ஒரு கிறிஸ்துவனைக்கூட விட்டுவைக்க மாட்டேன்' என்று வாளெடுத்துச் சென்றவர் ' வீழ்வது நானல்ல..என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்' என்று பல்டி அடிக்கிறார். இந்த பல்டியும்,கீழே விழுதலுமே இயேசுவை பல சமயங்களில் நமக்கு அடையாளம் காட்டுகிறது. ' ஒவ்வொரு முறை கயிறு அறுந்து கட்டப்படும்போதும் அதன் நுனிகள் இன்னும் நெருக்கமாக வருகின்றன' எனும் புரிதலை இவ்வுலகுக்கு எடுத்துச்சொன்ன புனித அகுஸ்தினாரும்,குதிரையிலிருந்து விழுந்து எழுந்த ' சின்னான்' ஆகிய புனித சின்னப்பராகிய பவுலும், நானும் கூட என் படகை எரித்து விட்டுப் புதிய இடத்தில் காலடி தடம் பதிக்க எனக்கு உதவுவார்களாக! தபசு காலத்தை நோக்கி காத்திருக்கும் நமக்கு இன்றையப் பதிவு ஒரு ' need of the hour' .தந்தைக்கு என் நன்றிகள்! பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  3. " என் மனமாற்றம் கூட எங்கோ இருக்கும் யாருக்கும் பயன்படலாம்.".... அருமை!

    ReplyDelete