Monday, January 23, 2017

கடவுளின் தாயாக

வருகிற சனிக்கிழமை என் நண்பன் ஜெகன் இல்லத்தில் திருமணம்.

அதற்குச் செல்வது பற்றி என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

'உன் பெயர் ஜெகன் நாங்கள் நினைத்தோம்!' என்று சொன்னார்கள்.

இந்த தகவலை முதலில் கேட்பதால் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. என் அம்மா கருவுற்ற சில மாதங்களில் பிறக்கின்ற குழந்தைக்கு என்ன பெயர் வைக்கிறது என்ற டிஸ்கஷன் என் அப்பா-அம்மாவுக்கு இடையே நடந்ததாம். பிறக்கப்போவது பையன்தான் என்று எந்த கொக்கு என் அம்மாவின் காதில் சொன்னதோ தெரியவில்லை. பையன் பெயராக சீட்டு எழுதிப் போட்டிருக்கிறார்கள்.

'ஜெகன்'

'தயாளன்'

'தங்கம்'

'ஜேசு'

'தங்க ஜேசு'

'ஜேசு தங்கம்'

சீட்டில் 'ஜேசு' என்று வந்திருக்கிறது.

வெறும் 'ஜேசு' வேண்டாம் என்று திருமுழுக்கின்போது ஃபாதர் சொல்ல, 'ஜேசுதாஸ்' அல்லது 'ஜேசுராஜ்' என்ற ஆப்ஷன் கொடுத்துள்ளார் அவர்.

என் மகன் யாருக்கும் 'தாசன்' அல்ல, அவன் எப்போதும் 'ராஜன்' என நினைத்த என் அப்பா, 'ஜேசுராஜன்' என வைத்திருக்கிறார். பள்ளியில் சேர்ந்த போது அது சுருங்கி 'யேசு' என்று ஆகிவிட்டது.

நிற்க.

என் அப்பாவும், அம்மாவும் நாங்கள் இருந்த கூரை வீட்டில், மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில், கையில் கிடைத்த ஏதோ ஒரு பேப்பரில் பெயர்களைச் சுருட்டி, எழுதி, சாணி பூசிய அந்த வீட்டின் தரையில் குலுக்கிப் போட்டு, பெயரை செலக்ட் பண்ணிய காட்சியை கற்பனை செய்தாலே ஆச்சர்யமாக இருக்கிறது.

யார் குலுக்கியிருப்பார்கள்?

யார் போட்டிருப்பார்கள்?

யார் எடுத்திருப்பார்கள்?

யார் சீட்டைப் பிரித்திருப்பார்கள்?

யார் படித்திருப்பார்கள்?

அந்த இரவில் அவர்கள் இருவரும் என்ன பேசியிருப்பார்கள்?

'நான் எழுதியதுதான் வந்தது' என்ற ஊடல் இருந்திருக்குமா?

இவற்றை எல்லாம் என் அம்மாவிடம் கேட்க மறந்தேன்.

இறுதியில், 'இதுதான் கடவுளின் திருவுளம்' என்றார் என் அம்மா.

இந்த வார்த்தைகள் எனக்கு இன்னும் ஆச்சர்யமாக இருக்கின்றன.

தினமும் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, இறைமகனையே கைகளில் ஏந்தும் எனக்கு, அவரின் வார்த்தைகளை தியானிக்கும் எனக்கு, 'அவரின் திருவுளம் என்ன?' என அறிவது கஷ்டமாக இருக்கிறது.

ஆனால், என் அம்மாவுக்கு எப்படி சாத்தியமாகிறது?

'கடவுளின் திருவுளப்படி நடப்பவரே என் தாயும், சகோதரரும் ஆவார்' என நாளைய நற்செய்தியில் சொல்கிறார் இயேசு.

நாம் எல்லாரும் நம்மை கடவுளின் பிள்ளைகள், அல்லது மகன், அல்லது மகள் என்று சொல்கிறோம். மகனாக, மகளாக இருப்பது எளிது என நினைக்கிறேன்.

ஆனால், அவருக்கு தாயாக, சகோதரராக இருப்பதுதான் கடினம்.

துறவற வாக்குறுதிகளில் 'கீழ்ப்படிதல்' தான் மிகவும் கடினமானது என நான் சொல்வேன். ஏனெனில் இங்கேதான் இருவரின் சித்தங்கள் ஒன்றுக்கொன்று எதிராக நிற்கின்றன. என் சித்தமும், என் ஆயரின் அல்லது தலைவரின் சித்தமும். ஒருவேளை நான் நினைப்பது போல என் ஆயர் சொன்னால் அதை கடவுளின் திருவுளம் என நினைத்துக் கீழ்ப்படியும் எனக்கு, நான் நினைக்காததுபோல என் ஆயர் சொல்லும்போது, அது எனக்கு இழைக்கப்பட்ட அநீதி என மனம் சொல்ல ஆரம்பிக்கிறது.

அப்படியானால், கடவுளின் திருவுளத்தை நிர்ணயிப்பது எது? என் மன நிறைவா?

கடவுளின் திருவுளத்தை அறிய வேண்டுமானால் ஒருவர் தன் உடலை முற்றிலும் பலியாக்க வேண்டும் என்கிறது நாளைய முதல் வாசகம். என் உடல் நான் பேசும் மொழியாக, நான் பார்க்கும் வேலையாக, நான் பழகும் உறவாக இருக்கிறது. ஆக, என் உடலை அவருக்கு பலியாக்கிவிட்டால் எனக்கு கீழ்ப்படிதல் எளிதாகிவிடுகிறது.

பலியாக்குதல் ஒரு வித்தியாசமான சொல்.

பலியாகும் பொருள் முற்றிலும் மௌனமாக இருக்க வேண்டும்.
பலியாகும் பொருள் திரும்ப தன் இயல்பை அடைய முடியாது.

இப்படி இருத்தல் நம்மை கடவுளுக்கே தாயாக்கிவிடுகிறது. அல்லது உடன்பிறப்பாக்கிவிடுகிறது.

எப்படி?

எல்லாம் மறைந்துவிட்டால், எல்லாம் கரைந்துவிட்டால் அது கடவுள்தானே.

ஏனெனில் மறைவும், கரைவும் தானே இறைமை.

3 comments:

  1. மனத்தை உருக்கும்,கண்களைக் கசிய வைக்கும் ஒரு பதிவு.என்னுள் என்றும் போல் எழும் ஒரே கேள்வி....எப்படி..எப்படி இப்படி ஒரு பதிவு இவருக்கு மட்டும் சாத்தியமாகிறது? " என் மகன் யாருக்கும் தாசன் அல்ல; அவன் எப்போதும் ராஜன் தான்" என்று சொன்ன அப்பா," இதுதான் கடவுளின் திருவுளம்" என்று கூறிய அம்மா. "கண்டிப்பாக இவர்கள் தான் என் தாயும்,சகோதரரும்"..., தந்தை என்ன தான் தன் எளிமையான பின்புலத்தை வார்த்தைகளில் வடித்திடினும், மேற்கூறிய வரிகள் அவரையும்,அவரைப்பெற்றவர்களையும் அனைத்து ஆசீர்வாதங்களுக்கும், இறைவன் மட்டுமே அருளக்கூடிய அனைத்து செல்வங்களுக்கும் அருகதையானவர்களாக்கிவிடுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது." நான் நினைத்தது போல, என் ஆயர் சொன்னால் அதைக்கடவுளின் திருவுளம் என நினைத்துக் கீழ்ப்படியும் எனக்கு, நான் நினைக்காதது போல் என் ஆயர் சொல்லும்போது அது எனக்கு இழைக்கப்பட்ட அநீதியாக என் மனம் சொல்கிறது".... மனத்தின் அந்தரங்க நினைப்புகளையும் கூட இத்தனை அப்பட்டமாக ஒத்துக்கொள்ளும் தங்களின் தைரியம் ஒன்றே போதும் " பலியாகும் பொருள்" என்ற வார்த்தைக்குப் பொருள் என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள! "தன் இயல்பைத் திரும்ப அடைய முடியாத பலிப்பொருள் நம்மைக் கடவுளுக்கே தாயாக்கி விடுகிறது அல்லது உடன் பிறப்பாக்கி விடுகிறது" .எத்தனை அழகான உண்மை! பெருமையும்,பொறாமையும் ஒருசேர வருகிறது தங்களை நினைக்கையில்.தங்களின் தந்தையை அறியும் பேறு எனக்குக் கிட்ட வில்லை.அடுத்த முறை தங்களின் தாயைக்காணும் போது அவர்களின் பாதங்களைக் கண்ணில் ஒத்திக்கொள்ள வேண்டுமெனத் தோன்றுகிறது.பெற்றோரால் பெருமை பிள்ளைக்கா இல்லை பிள்ளையால் பெருமை பெற்றோருக்கா? துள்ளிக்குதித்தோடும் ஒரு நதியின் இரு கரைகளில் எது சிறந்தது? விடை தேடிக்கொண்டிருக்கிறேன். இந்தப்பின்னூட்டத்தின் முடிவில் என்னுள் எழும் நியாயமான கேள்வி....." இத்தகைய பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஒருவரின் பதிவுக்குப் பின்பாட்டுப் பாட எனக்கென்ன தகுதி இருக்கிறது?" இறைவனுக்கே வெளிச்சம்!!!

    ReplyDelete
  2. இன்று தந்தை ஏசுவின் திருமுழுக்கு விழாவுக்கு நத்தம்பட்டி சென்று திரும்பிய உணர்வு... அருமையான பெற்றோர்கள். இறைத்திருவுளம் பற்றிய எளிமையான விளக்கம் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete