Tuesday, January 31, 2017

அவர் வியப்புற்றார்!

'அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார்!' (காண். மாற்கு 6:1-6)

ஜனவரி 1 இப்போதுதான் தொடங்கியது போல இருந்தது. ஒரு மாதம் ஓடிவிட்டது.

இந்த வருடம் ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு புனிதரைப் பற்றி யோசிப்பது என நினைத்திருந்தேன். இன்றுடன் செபஸ்தியார் விடைபெறுகிறார்.

பிப்ரவரிக்கு நான் எடுத்திருக்கும் புனிதர் தூய அருளானந்தர்.
அருளும் ஆனந்தமும் இந்த மாதம் நமக்கு நிறைவாக கிடைப்பதாக.

நிற்க.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சொந்த ஊருக்கு வருகிறார். அவர் அப்படியாக்கும், இப்படியாக்கும் என்று கேள்விப்பட்ட அவரின் சொந்த ஊர்க்காரர்கள் ரொம்ப சிம்ப்பிளா,

'அவரைப் பற்றி எங்களுக்கு தெரியாதாக்கும்!' 'அவர் குடும்பம், கோத்திரம் எங்களுக்குத் தெரியாதாக்கும்!' என்கின்றனர்.

அவர்கள் அவரை நம்பவில்லை.

ஆனால் அதனால் இயேசுவுக்கு கோபம் வரவில்லை.

கோபம் நமக்கு எப்போது வருகிறது?

ஒன்றை எதிர்பார்க்கிறோம். எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது கோபம் வருகிறது.

தன்னை நம்புவார்கள் என எதிர்பார்க்கிறார் இயேசு. ஆனால் மக்கள் அவரை நம்பவில்லை. அப்படின்னா அவருக்கு கோபம்தானே வரணும்.

ஆனால், 'அவர் ஆச்சர்யப்பட்டார்' 'வியந்தார்' என பதிவு செய்கிறார் மாற்கு.

'என்ன இப்படி இருக்காங்களே!' என ஆச்சர்யப்படுவது கோபத்தைவிட நல்லது என நினைக்கிறேன். இந்த ஆச்சர்யத்தின்போது இயேசுவின் உதட்டில் கண்டிப்பாக ஒரு புன்னதை நின்றிருக்கும்.

நம் உள்ளத்தில் எழும் கோப உணர்வை ஆச்சர்ய உணர்வாக மாற்றிப் பார்க்கலாமே!

நாம் நினைப்பதுபோலவே எல்லாம் அல்லது எல்லாரும் நடக்க வேண்டும் என நினைப்பது தவறு. அப்படி மற்றது அல்லது மற்றவர் மாறி நடக்கும்போது கொஞ்சம் புன்முறுவல் மற்றும் வியப்பு இருந்தால் போதும்.

நாளைய முதல் வாசகத்திலும் 'நச்சுவேர் எதுவும் உங்களுக்குள் முளைத்து, தொல்லை கொடுக்காதபடியும் அதனால் பலர் கெட்டுப்போகாதபடியும் பார்த்துக் கொள்ளுங்கள்' என்கிறார் எபிரேயர் திருமடலின் ஆசிரியர்.

அடுத்தவரை நம்பாததும் (நாசரேத்தூர் மக்கள் போல) ஒரு நச்சுவேரே.

இத்தகையை நச்சு வேர்களை முறிக்கும் இயேசுவின் மருந்து குறு புன்னகையும், நிறைய வியப்பும்.

புதிய மாதம் இனிய மாதமாகட்டும்.

Monday, January 30, 2017

கண்களை

'நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்' (எபி 12:2)

'நம்பிக்கை' என்றால் என்ன என்பது பற்றி விரிவான விளக்கம் கொடுத்து, அந்த விளக்கத்திற்கு எண்ணிறந்த எடுத்துக்காட்டுகளையும் காட்டிய ஆசிரியர் தொடர்ந்து அந்த நம்பிக்கையை எப்படிப் பெற்றுக்கொள்வது என எழுதுகின்றார்.

நம்பிக்கை என்பது ஓர் ஓட்டப்பந்தயம் எனக் குறிப்பிடும் ஆசிரியர், அதற்கு இரண்டு பண்புகளை அடிப்படையாக வைக்கின்றார்:

அ. சுமைகளைத் தகர்த்தெறிதல்
ஆ. கண்களைப் பதியவைத்தல்

ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற ஒருவரின் மேல் இரண்டு மூன்று அரிசி மூடைகளைக் கட்டினால் என்ன நடக்கும்?

அல்லது

அவரின் கண்களில் இலக்கு பதியா வண்ணம் செய்துவிட்டால் என்ன நடக்கும்?

அவர் தோற்றுவிடுவார்.

ஆக, சுமைகள் குறைய வேண்டும். இலக்கு தெளிவாக வேண்டும்.

இந்த இரண்டும்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் தெரிகிறது.

இயேசுவிடம் குணம்பெற வந்த இரத்தப்போக்குடைய பெண்ணும், சிறுமியின் தந்தையும்

தங்கள் சுமைகளை இயேசுவின்மேல் இறக்கிவிடுகின்றனர்.

அவர்கள் தங்கள் கண்களை இயேசுவின்மேல் பதிக்கின்றனர்.

சிறுமியின் தந்தைக்கு இடையில் சோதனை வருகின்றது. அவரின் கண் பார்வை தடம் மாறுகின்றது.

ஆனால், இயேசு அவரின் நம்பிக்கைக்கு உரம் சேர்க்கிறார்.

ஆக, நம்பிக்கை - இதன் ஊற்று, தொடர்ச்சி, நிறைவு இயேசுவே.

Friday, January 27, 2017

தண்ணீர் படாத தலையணை

'படகின்மீது தொடர்ந்து அலைகள் மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது.
அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்.'

நாளைய நற்செய்திப் பகுதியும் (காண். மாற்கு 4:35-41), முதல் வாசகப் பகுதியும் (காண். எபிரேயர் 11:1-2,8-19) மிக அழகாகப் பொருந்திச் செல்கிறது.

'நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை' என்கிறது முதல் வாசகம்.

'உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?' எனக் கேட்கிறது நற்செய்தி வாசகம்.

தலையணையிலிருந்து தொடங்குவோம்.

படகு எல்லாம் தண்ணீர் வந்து விட்டது. ஆனால், இயேசுவின் தலையணை நனையவில்லை.

அவருக்கு அந்த நேரத்தில் தூக்கம் எப்படி வந்தது?

தூக்கம் ஒரு கொடை.

'பிணம்போல் தூங்கி' என வர்ணிக்கிறார் பட்டினத்தார். அதாவது, ஒருவருக்கு கிடைக்கும் பெரிய ஆசி பிணம்போல் தூங்குவதாம். அதிக வேலை, அதிக பயணம், அதிக அழுத்தம், அதிக இறுக்கம் தூக்கத்தைக் கொடுக்கும் என்று சொல்கின்றனர் சிலர். ஆனால், பல நேரங்களில் தூக்கம் இல்லாமல் போய்விடும்.

'அவன் அன்பு செய்யப்படுகிறான். அதனால் தூங்குகிறான். நான் இங்கே அலைக்கழிக்கப்படுகிறேன் தூக்கமின்றி' என்பான் கிளேடியேட்டர் திரைப்பட வில்லன்.

ஆக, நம்மை அன்பு செய்ய ஒருவர் இருக்கிறார் என்றால் நல்லா தூக்கம் வரும்.

ஆனால், சில நேரங்களில் நம் அன்புக்குரியவர்கள் பேசிய சில சொற்களோ, அன்றைய நாளில் நடந்து கொண்ட விதமோ கூட நம் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது.

ஆக,
வேலையினாலும் தூக்கம் இல்லை.

அன்பினாலும் தூக்கம் இல்லை.

ஆனால், இயேசு எப்படி தூங்கினார்?

காரணம், 'நம்பிக்கை' என்ற ஒற்றைச் சொல்.

'கண்ணுக்குப் புலப்படாத இறைவனின் பாதுகாப்பைப் பற்றிய ஐயமற்ற நிலையில் அவர் இருந்தார்.' அந்த ஐயமற்ற நிலையே நம்பிக்கை.

நம்பிக்கை எப்போதும் மனதால் பார்க்கும்.

கண்களுக்குப் புலப்படுவதைத் தாண்டி மனத்தால் பார்ப்பதே நம்பிக்கை.

எப்படி?

நான் எனக்குரியவருக்கு ஃபோன் அடிக்கிறேன். ஃபோன் நிச்சயதார்த்தமாக (என்கேஜ்ட்) இருக்கிறது. உடனே, 'அவர் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறார்?' என்ற சந்தேகம் எழுகிறது. அவர் அதைப்பற்றி என்னிடம் சொல்லாதபோது என் ஐயம் வலுக்கிறது. உடனே என் பாதுகாப்பின்மை உணர்வு என்னும் அலை என் படகை அலைக்கழிக்கிறது. நான் அவர்மேல் கோபம் கொள்ள அல்லது மௌனம் கொள்ள ஆரம்பிக்கிறேன்.

ஆனால், காதுகள் கேட்ட என்கேஜ்ட் ஒலியையும் தாண்டி நான் அவரின் இதயத்துடிப்பை கேட்க முடிந்தது என்றால் அதுதான் நம்பிக்கை. அந்த இடத்தில் தவறான புரிதல் வர வாய்ப்பில்லை.

இயேசு மட்டும்தான் படகையும், அலைகளையும், கடலையும் தாண்டிப் பார்த்தார்.

கண்களால் பார்ப்பது குறுகியது. மனத்தால் பார்ப்பது அகலமானது.

என் அன்பிற்குரியவர் என்ன சேலை அணிந்திருப்பார், எப்படி முகத்தை திருப்பி பேசிக்கொண்டிருப்பார், எந்த வெங்காயத்தை எப்படி அறுத்துக் கொண்டிருப்பார், எந்தக் காரில் எப்படி இறங்குவார் என நான் இங்கிருந்தே பார்க்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் நம்பிக்கை.

'என் தந்தை என்னை எப்படி தாங்கியிருக்கிறார்!' என இயேசு நினைத்ததால் தான் அலைக்கழிக்கப்படும் படகிலும் அமைதியாகத் தூங்க முடிந்தது.

நிற்க.

இரண்டு நாட்களுக்கு முன் மதுரை இரயில் சந்திப்பில் சின்னத்தாயம்மாள் என்ற பாட்டியைப் பார்த்தேன். சிறப்பு என்னவென்றால் அவரின் முடி சடையாக இருந்தது. அம்மனின் அருள் இருந்தால் தான் சடை விழும் என்பது என் அய்யாமை சின்ன வயதில் சொன்ன ஒன்று. சும்மா அந்த தாயம்மாவிடம் பேச்சுக்கொடுத்தேன். அம்மனின் அருள்கேட்க இருக்கன்குடி செல்வதாகச் சொன்னார்.

கரூரில் இருந்த புறப்பட்ட அவர் கைகளில் இருந்தது பயணச்சீட்டு மட்டுமே.

'ஏதாவது வாங்கித் தரவா?' என்று கேட்டேன்.

'வேண்டாம். அம்மா பார்த்துக்கொள்வாள்!' என்றார்.

அவர் கண்களில் தெரிந்தது நம்பிக்கை.

ரயில்கள் ஓடும் சத்தத்திலும் கொஞ்ச நேரத்தில் பிளாட்பாரத்து நாற்காலியில் தூங்கிப் போனார்.

தன் கைகளையே தலையணையாக வைத்துக்கொண்ட இந்த தாயம்மா இயேசுவையும் மிஞ்சிவிட்டார்.


Wednesday, January 25, 2017

சின்னான்

நாளை தூய பவுலின் மனமாற்றத்தின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

'பவுல்' என்றால் கிரேக்கத்தில் 'சிறியது' என்பது பொருள். ஆகையால்தான், பழைய மொழிபெயர்ப்பில் நாம் இவரை 'சின்னப்பர்' என அழைக்கின்றோம்.

இந்த 'சின்னான்' கிறிஸ்தவத்தின் தடத்தையே மாற்றியவர்.

வரலாற்றின் இயேசுவுக்கும், நம்பிக்கையின் கிறிஸ்துவுக்கும் இணைப்புக்கோடாய் இருப்பவர் இவர்.

இவரின் மனமாற்றம் பற்றி நான்கு இடங்களில் வாசிக்கிறோம் (திப 9:1-9, 22:6-16, 26:12-18, கலா 1:15-19). இந்த நான்கு கதையாடல்களுக்கும் இடையே நிறைய வேற்றுமைகள் இருந்தாலும், இவைகள் கொண்டிருக்கும் ஒரே ஒற்றுமை 'மனமாற்றம்'.

சவுலாக இருந்தவர் பவுலாக மாறுகிறார்.

'ஒரு கிறிஸ்தவனைக் கூட விட்டுவைக்க மாட்டேன்' என வாளெடுத்துச் சென்றவர், 'வாழ்வது நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்' என்று பல்டியடிக்கின்றார்.

பவுலின் மனமாற்றம் எனக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடங்கள் இவை:

அ. நம் திட்டம் அல்ல. அவரின் திட்டமே.

ஒவ்வொரு பொழுதும் நாம் ப்ளானரில் எடுத்து ஏதோ ஒரு நிகழ்வைக் குறிக்கும்போதெல்லாம் கடவுள் சிரிப்பார் என்பது என் நம்பிக்கை. 'இவனுக்கு நான் ஒரு ப்ளானர் வைத்திருக்க இவன் ஏதோ எழுதுகிறானே!' என அவர் தனக்குள் சொல்லிக்கொள்வார். பவுலும் வாளெடுத்துச் சென்றபோது கடவுள் தனக்குள் சிரித்துக்கொள்வார்.

ஆ. அதிக ஆழம். அதிக அன்பு.

அதிக ஆழமாக பவுல் விழுந்ததால் கடவுளை அதிகமாக அன்பு செய்கிறார். இது அகுஸ்தினாருக்கும் பொருந்தும். ஒரு கயிறு அறுந்து கட்டப்படும்போது அதன் இரண்டு நுனிகளும் தங்களை அறியாமல் அருகில் வருகின்றனவே. அது போல! அருள் இறங்க முடியாத ஆழம் என்று நம் வாழ்வில் எதுவும் கிடையாது. நாம் ஆழமாகச் சென்று ஒளிந்து கொண்டாலும் அவர் நம்மைத் தேடி வருவார். பவுலைத் தேடி வந்ததுபோல.

இ. நோ டர்னிங் பேக்

புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கியவுடன் தன் பழையவற்றோடு உள்ள இணைப்பை முழுவதுமாக வெட்டிக்கொண்டார். ஆங்கிலத்தில் இதை, 'படகுகளை எரிப்பது' என்று சொல்வார்கள். தான் வந்த படகை எரித்துவிட்டு புதிய இடத்தில் காலடிகளைப் பதித்துக்கொள்வது.

குதிரையில் வந்த சின்னான், விழுந்தார், எழுந்தார்.

அவரின் மனமாற்றம் நம் மனமாற்றம்கூட.

அவர் மனம் மாறிடாவிடில் கிறிஸ்தவம் யூத மதத்தின் ஒரு சின்ன ஸெக்ட் ஆக நின்று போயிருக்கும்.

என் மனமாற்றம் கூட எங்கோ இருக்கும் யாருக்கும் பயன்படலாம்.

கொஞ்சம் மனமாறுங்க பாஸ்!

Monday, January 23, 2017

கடவுளின் தாயாக

வருகிற சனிக்கிழமை என் நண்பன் ஜெகன் இல்லத்தில் திருமணம்.

அதற்குச் செல்வது பற்றி என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

'உன் பெயர் ஜெகன் நாங்கள் நினைத்தோம்!' என்று சொன்னார்கள்.

இந்த தகவலை முதலில் கேட்பதால் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. என் அம்மா கருவுற்ற சில மாதங்களில் பிறக்கின்ற குழந்தைக்கு என்ன பெயர் வைக்கிறது என்ற டிஸ்கஷன் என் அப்பா-அம்மாவுக்கு இடையே நடந்ததாம். பிறக்கப்போவது பையன்தான் என்று எந்த கொக்கு என் அம்மாவின் காதில் சொன்னதோ தெரியவில்லை. பையன் பெயராக சீட்டு எழுதிப் போட்டிருக்கிறார்கள்.

'ஜெகன்'

'தயாளன்'

'தங்கம்'

'ஜேசு'

'தங்க ஜேசு'

'ஜேசு தங்கம்'

சீட்டில் 'ஜேசு' என்று வந்திருக்கிறது.

வெறும் 'ஜேசு' வேண்டாம் என்று திருமுழுக்கின்போது ஃபாதர் சொல்ல, 'ஜேசுதாஸ்' அல்லது 'ஜேசுராஜ்' என்ற ஆப்ஷன் கொடுத்துள்ளார் அவர்.

என் மகன் யாருக்கும் 'தாசன்' அல்ல, அவன் எப்போதும் 'ராஜன்' என நினைத்த என் அப்பா, 'ஜேசுராஜன்' என வைத்திருக்கிறார். பள்ளியில் சேர்ந்த போது அது சுருங்கி 'யேசு' என்று ஆகிவிட்டது.

நிற்க.

என் அப்பாவும், அம்மாவும் நாங்கள் இருந்த கூரை வீட்டில், மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில், கையில் கிடைத்த ஏதோ ஒரு பேப்பரில் பெயர்களைச் சுருட்டி, எழுதி, சாணி பூசிய அந்த வீட்டின் தரையில் குலுக்கிப் போட்டு, பெயரை செலக்ட் பண்ணிய காட்சியை கற்பனை செய்தாலே ஆச்சர்யமாக இருக்கிறது.

யார் குலுக்கியிருப்பார்கள்?

யார் போட்டிருப்பார்கள்?

யார் எடுத்திருப்பார்கள்?

யார் சீட்டைப் பிரித்திருப்பார்கள்?

யார் படித்திருப்பார்கள்?

அந்த இரவில் அவர்கள் இருவரும் என்ன பேசியிருப்பார்கள்?

'நான் எழுதியதுதான் வந்தது' என்ற ஊடல் இருந்திருக்குமா?

இவற்றை எல்லாம் என் அம்மாவிடம் கேட்க மறந்தேன்.

இறுதியில், 'இதுதான் கடவுளின் திருவுளம்' என்றார் என் அம்மா.

இந்த வார்த்தைகள் எனக்கு இன்னும் ஆச்சர்யமாக இருக்கின்றன.

தினமும் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, இறைமகனையே கைகளில் ஏந்தும் எனக்கு, அவரின் வார்த்தைகளை தியானிக்கும் எனக்கு, 'அவரின் திருவுளம் என்ன?' என அறிவது கஷ்டமாக இருக்கிறது.

ஆனால், என் அம்மாவுக்கு எப்படி சாத்தியமாகிறது?

'கடவுளின் திருவுளப்படி நடப்பவரே என் தாயும், சகோதரரும் ஆவார்' என நாளைய நற்செய்தியில் சொல்கிறார் இயேசு.

நாம் எல்லாரும் நம்மை கடவுளின் பிள்ளைகள், அல்லது மகன், அல்லது மகள் என்று சொல்கிறோம். மகனாக, மகளாக இருப்பது எளிது என நினைக்கிறேன்.

ஆனால், அவருக்கு தாயாக, சகோதரராக இருப்பதுதான் கடினம்.

துறவற வாக்குறுதிகளில் 'கீழ்ப்படிதல்' தான் மிகவும் கடினமானது என நான் சொல்வேன். ஏனெனில் இங்கேதான் இருவரின் சித்தங்கள் ஒன்றுக்கொன்று எதிராக நிற்கின்றன. என் சித்தமும், என் ஆயரின் அல்லது தலைவரின் சித்தமும். ஒருவேளை நான் நினைப்பது போல என் ஆயர் சொன்னால் அதை கடவுளின் திருவுளம் என நினைத்துக் கீழ்ப்படியும் எனக்கு, நான் நினைக்காததுபோல என் ஆயர் சொல்லும்போது, அது எனக்கு இழைக்கப்பட்ட அநீதி என மனம் சொல்ல ஆரம்பிக்கிறது.

அப்படியானால், கடவுளின் திருவுளத்தை நிர்ணயிப்பது எது? என் மன நிறைவா?

கடவுளின் திருவுளத்தை அறிய வேண்டுமானால் ஒருவர் தன் உடலை முற்றிலும் பலியாக்க வேண்டும் என்கிறது நாளைய முதல் வாசகம். என் உடல் நான் பேசும் மொழியாக, நான் பார்க்கும் வேலையாக, நான் பழகும் உறவாக இருக்கிறது. ஆக, என் உடலை அவருக்கு பலியாக்கிவிட்டால் எனக்கு கீழ்ப்படிதல் எளிதாகிவிடுகிறது.

பலியாக்குதல் ஒரு வித்தியாசமான சொல்.

பலியாகும் பொருள் முற்றிலும் மௌனமாக இருக்க வேண்டும்.
பலியாகும் பொருள் திரும்ப தன் இயல்பை அடைய முடியாது.

இப்படி இருத்தல் நம்மை கடவுளுக்கே தாயாக்கிவிடுகிறது. அல்லது உடன்பிறப்பாக்கிவிடுகிறது.

எப்படி?

எல்லாம் மறைந்துவிட்டால், எல்லாம் கரைந்துவிட்டால் அது கடவுள்தானே.

ஏனெனில் மறைவும், கரைவும் தானே இறைமை.

Friday, January 20, 2017

மதிமயங்கி

நாளை நற்செய்தியில் (காண். மாற்கு 3:20-21) வரும் இயேசுவைப் பார்க்க பாவமாக இருக்கிறது.

அவருக்கு சாப்பிடக்கூட நேரமில்லை. அந்த அளவுக்கு வீட்டில் மக்கள் கூட்டம்.

கொஞ்ச நாளைக்கு முன்னால் வரும் ஃபைவ் ஸ்டார் விளம்பரத்தில்,

'ஃபைவ் ஸ்டார் சாப்பிடுங்க. மெய்ம்மறந்து போயிடுங்க!' என்ற வாசகம் வரும்.

இயேசுவை 'மதிமயங்கி இருக்கிறார்' என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர். இங்கே பயன்படுத்தப்படும் கிரேக்க வார்த்தை, 'இயேசு தனக்கு வெளியே இருக்கிறார்' என்பதுதான்.

எனக்கு வெளியே இருக்கும்போது நான் மதிமயங்குகிறேன்.

காதலில் இருப்பவர்களை மதிமயங்கியவர்கள் என்று சொல்ல நான் கேட்டதுண்டு.

இதன் லாஜிக் ரொம்ப சிம்பிள்: 'ஒருவர் தனக்கு வெளியே சென்றுவிடுகின்றார். அடுத்தவர் உள்ளே வந்து குட்டி சேர் போட்டு அமர்ந்து கொள்கின்றார்.'

இயேசுவைப் பொறுத்தவரையில் அவரது பணிதான் அவரின் முழு எண்ணத்தையும் ஆக்கிரமித்துக்கொள்கிறது.

ஆனால், இயேசுவோட உறவினர்கள் எல்லா உறவினர்கள் போல இருக்கிறார்கள்.

இயேசுவுக்கு ஏதாவது ஆகுமா என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பதை' மெய்ப்பொருள் என நினைத்துக்கொள்கிறார்கள்.

Thursday, January 19, 2017

அவரோடு

எனது குருத்துவ அருள்பொழிவு விருதுவாக்கு இதுதான்: 'அவரோடு'

நாளை நாம் வாசிக்கும் நற்செய்தியில் (காண். மாற்கு 3:13-19) தான் இருக்கிறது இந்த வார்த்தை.

'தம்மோடு இருக்கவும் ... அவர் பன்னிருவரை நியமித்தார்' என வாசிக்கிறோம்.

'அவரோடு,' 'அவளோடு,' 'அவனோடு,' 'அதோடு' என நிறைய கிண்டல்கள் வந்தன விருதுவாக்கைப் பற்றி.

ஒற்றை வார்த்தையில் விருதுவாக்கு எடுக்க வேண்டும் என்ற வேட்கையில் தோன்றியதே இது.

நாம் நம் வேலைகளை 'அவருக்காக' செய்ய முடியாது.

ஏனெனில், நாம் செய்யும் எதுவும் அவருக்குத் தேவையில்லை.

'அவரில்' செய்ய முடியாது.

ஏனெனில் அவரின் இயல்பு என்பது நமக்கு முழுமையாகத் தெரியாது.

ஆனால், நாம் அவரோடு செய்யலாம். அவருடைய உடனிருப்பை பல்வேறு நிலைகளில், பல்வேறு நபர்கள் வழியாக நாம் அனுபவிக்க முடியும்.

இன்று பல நேரங்களில் நாம் அனுப்பப்படவும், நிறைய செய்யவும் ஆசைப்படுகிறோம்.

ஆனால், 'அவரோடு' இருந்தாலன்றி, 'அனுப்பப்படுதல்' சாத்தியமில்லைதானே.

அதே நேரத்தில், 'அவரோடு' இருந்துகொள்வதும் ஆபத்து. அது தேக்கநிலையை உருவாக்கிவிடும்.

Wednesday, January 18, 2017

விழுந்துகொண்டிருந்தனர்

நாளைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 3:7-12) இயேசுவைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் இருக்கின்றது.

'கூட்டம்' என்ற வார்த்தை நற்செய்தி நூல்களில் வருகின்றது. பல நேரங்களில் கூட்டம் இயேசுவின் பணிக்குத் தடையாக இருந்தாலும், நாளைய நற்செய்தியில் அது நேர்முகமான ஒளியில் காட்டப்பட்டுள்ளது.

இயேசுவைச் சுற்றி பெருந்திரளான மக்கள் இருக்கின்றார்கள்.

அதாவது, அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு தாங்களாகவே வந்து கூடுகின்றனர்.

கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கூட்டங்கள் கூடுகின்றன.

மெரினா கடற்கரை, அலங்காநல்லூர், மதுரை தமுக்கம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் என பல இடங்களில் தாங்களாகவே இளைஞர்களும், மாணவர்களும், மக்களும் கூடுகின்றனர். அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை என்பதில் இந்தக் கூட்டங்கள் தெளிவாக இருக்கின்றன. தானாகவே சேரும் இந்தக்கூட்டம் அரசியல்வாதிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் எச்சரிக்கையாகவே இருக்கின்றது.

'ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும்' என்பதுதான் இந்தக்கூட்டத்தின் கோரிக்கையாக இருந்தாலும், இவர்களுக்கு நிறைய கோபம் இருக்கின்றது. 'செல்லாக்காசு,' 'ஜெயா இறப்பு,' 'ஜாதீய அடக்குமுறைகள்,' 'பாசிச திணிப்பு' என நிறைய விடயங்கள் பின்புலத்தில் இருக்கின்றன.

இன்று தனிப்பட்ட நபர்கள் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காதா என்று எண்ணி கூட்டங்களை நாடிச் செல்கின்றனர்.

அன்று கூட்டம் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டி தனிநபராம் இயேசுவிடம் செல்கின்றது.

'நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்துகொண்டிருந்தனர்' என பதிவு செய்கிறார் மாற்கு.

இதை வாசிக்கும்போது இயேசுவின்மேல் எனக்கு பொறாமை வருகின்றது.

நான் தெருவில் நடந்து செல்லும்போது என்னைத் தொட வேண்டுமென்று, என் மீது விழ வேண்டுமென்று, என் ஆடையையாவது தொட வேண்டுமென்று யாரும் என்மேல் விழுவதில்லை.

யாரும் என்னைத் தொடக்கூடாது என்பதில் பல நேரங்களில் நான் கருத்தாய் இருக்கிறேன்.

நானே ஒதுங்கிக்கொள்கிறேன்.

நான் கொண்டாடும் திருப்பலியும்கூட அப்படித்தான் இருக்கின்றது. பீடத்தின் கிராதிகளுக்குப் பின் அவர்களை நிற்க வைத்துவிட்டு, யாரையும் தொட்டுவிடாமல் நன்மையைக் கொடுத்துவிட்டு, வேகமாக திருவுடைகளைக் களைந்துவிட்டு, என் அறையை நோக்கி நகரும் திருப்பலிதான் நான் செய்யும் பெரிய வேலையாக இருக்கின்றது.

இன்று நான் என்னிடம் கேட்கும் கேள்விகள் இரண்டு:

அ. நான் இயேசுவிடம் போய் விழுகின்றேனா? அவரைத் தொட வேண்டும் என்ற ஆவல் கொண்டிருக்கின்றேனா?

ஆ. இயேசுவைப் போல என்னால் ஏன் மற்றவர்களை என் பக்கம் ஈர்க்க முடியவில்லை?

Tuesday, January 17, 2017

எது முறை?

ஓய்வுநாள் பற்றிய மற்றொரு சர்ச்சை நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். 3:1-6) வருகிறது.

தொழுகைக்கூடத்தில் சூம்பிய கை உடையவர் ஒருவர் இருக்கிறார்.

'சூம்பிய கை' உடையவரை நீங்க பார்த்திருக்கிறீர்களா?

தேனியில் வலது கை சூம்பிய ஒரு பாட்டி உண்டு. என்மேல் அலாதி பிரியம் உண்டு அந்தப்பாட்டிக்கு. அந்தப் பாட்டியைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு என் அய்யாமை நினைவு வரும். ஒருமுறை அவரின் வீட்டிற்குச் சென்றேன். ஒரு பாய், ஒரு தண்ணீர் குடம், சிறிய பையில் 4 சேலைகள், ஒரு மாதா படம், ஒரு செபமாலை - இதுதான் இந்தப் பாட்டியின் சொத்து. அந்த வீட்டிலிருந்த சொத்து. மற்றபடி மற்ற சொத்துக்களை எல்லாம் வங்கியில் வைத்திருக்கிறது இந்த அறிவாளிப் பாட்டி. இவரின் பிள்ளைகள் இவருக்கு கை சூம்பிய நாள்முதல் இவரைக் கவனிக்க வருவதில்லை. ஆனால் இவரிடம் நிலம் மற்றும் சொத்துக்கள் நிறைய இருப்பதால் இவரோடு டச்சில் இருக்கிறார்கள்.

விபத்து ஒன்றில் தன் பாதிக்கையை (பாதிக்கை அல்ல, கால் பகுதி கையை!) இழந்ததாகச் சொன்னார். ஆனாலும், அந்த இழப்போடு வாழப் பழகிக்கொண்டார்.

சூம்பிய கை மிகவும் கொடுமையானது. கை இல்லை என்றால், 'கை இல்லை' என்று சொல்லிவிடலாம். ஆனால், கை இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாத நிலைததன் சூம்பிய கை.

இப்படிப்பட்ட ஒருவரை நடுவில் நிறுத்தி மற்றவர்களிடம் கேள்வி கேட்கிறார் இயேசு:

'ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா?
உயிரைக் காப்பதா? அழிப்பதா?
எது முறை?'

நன்மை-தீமை, உயிர்-அழிப்பு - முதல் கேள்வியை இரண்டாவதாகவும் கேட்கிறார் இயேசு.

இந்த இரண்டோடு கேள்வி முடிந்திருந்தால் ஒருவேளை மக்கள் பதில் சொல்லியிருப்பார்கள்.

ஆனால், 'எது முறை?' என்ற கேள்வி அவர்களை மௌனமாக்குகிறது.

எது முறை? ஓய்வுநாளா? மனிதரின் நலமா?

ஒரு ஆசிரியையின் ஒரே குழந்தை காய்ச்சலாய்க் கிடக்கிறது. அந்த ஆசிரியை பள்ளிக்கு வர வேண்டும் என நிர்பந்திக்கிறது பள்ளி. இதில் எதை அவர் தேர்ந்து கொள்வார்?

பல நேரங்களில் நம் வாழ்விலும், 'எது முறை?' என்ற கேள்விக்கு நம்மால் பதில் சொல்ல முடிவதில்லை.

'எது முறை?' என்பதை ஒவ்வொருவரும்தான் தீர்மானிக்க வேண்டும் என்பர் சிலர்.

அப்படி என்றால் ஒட்டுமொத்தமாக, 'இதுதான் முறை' என்று எதுவும் நமக்கு இல்லையா?

ஆனால், இயேசுவுக்கு தெரிந்திருந்தது.

அதனால்தான், 'கையை நீட்டும்!' என்கிறார். கை நலமடைகிறது.

பதில் சொல்ல முடியாத நிலையில் இருந்தவர்களே சூம்பிய கையர்கள்.


Monday, January 16, 2017

கண்களால் பார்க்க

'அடைக்கலம் தேடும் நாம், நம் கண்முன் எதிர்நோக்கியுள்ளதை விடாமல் பற்றிக்கொள்வதற்குத் தளரா ஊக்கம் கொண்டிருக்க வேண்டும். இந்த எதிர்நோக்கே நம் உள்ளத்திற்குப் பாதுகாப்பான, உறுதியான நங்கூரம் போன்றுள்ளது.' (எபி 6:18-19)

'கண்களால் பார்க்க வேண்டாம் - மனதால் பாருங்கள்!' என அர்ப்பண வெள்ளிவிழா நன்றித்திருப்பலியில் மறையுரை வைத்தேன்.

இன்று மாலை மேற்காணும் எபிரேயர் இறைவாக்குப் பகுதியை வாசித்தபோது நான் சொன்னது சரியா என்று என்னையே திரும்பக் கேட்டுக்கொண்டேன்.

ஏன்?

என் நண்பன் அழகான தங்க மோதிரம் வைத்திருக்கிறான். அவனது விரலும் என் விரலும் ஒன்றுபோல இருக்கிறது. அந்த மோதிரத்தின் மேல் எனக்கு ஓர் ஈர்ப்பு. அதை எடுத்து எனதாக்கிவிடவேண்டும் என்ற சோதனையை மேற்கொள்ள முடியாமல் ஒரு நாள் நான் மோதிரத்தை எடுத்து விடுகிறேன்.

தன் மோதிரம் தொலைந்துவிட்டதாக அவன் அடுத்த நாள் என்னிடம் சொல்கிறான்.

அதை நான் எடுத்தேன் என்பது எனக்குத் தெரியும். என் மனச்சான்றுக்குத் தெரியும்.

ஆனால் அவனுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை.

இருந்தாலும் அவன் என்னை எப்போதும் போல அன்பு செய்துகொண்டிருக்கிறான். நட்பு பாராட்டுகிறான்.

இப்போது...இவன் என்னை கண்களால் பார்க்கிறானா? அல்லது மனத்தால் பார்க்கிறானா?

மனத்தால் பார்த்தான் இவன் என்னையும் சந்தேகப்படுவான் அல்லவா?

கண்களால் பார்ப்பதால் மட்டும்தானே அவனுக்கு சந்தேகம் வரவில்லை.

ஆக, மனத்தால் பார்ப்பது நமக்கு சந்தேகத்தை வரவைக்கலாம்.

கண்முன் இருப்பதை நாம் சந்தேகப்படுவதில்லை.

ஆனால், கண்முன் உள்ளதைப் பார்ப்பதற்கும் தொடர் ஊக்கம் வேண்டும் என்கிறது நாளைய முதல் வாசகம்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற்கு 2:23-28) இயேசுவின் சீடர்கள் ஓய்வு நாள்களில் கதிர்களைக் கொய்து உண்கின்றனர்.

இதைப் பார்த்த பரிசேயர்கள் அவரையும், அவர்களையும் கடிந்து கொள்கின்றனர்.

கண்களால் பார்த்தால் அவர்கள் கடிந்த கொள்ள வாய்ப்பில்லை.

ஏனெனில், பசிக்கிறது. சாப்பிடுகிறார்கள். அவ்வளவுதான்!

மனத்தால் பார்க்கும்போதுதான் ஓய்வுநாள், பாவம், பரிசுத்தம், கடவுள், கடலை மிட்டாய், கமர் கட்டு என எல்லாம் வந்துவிடுகிறது.

ஆக, மனத்தால் பார்க்க வேண்டாம். கண்களால் பார்ப்போம்.

Sunday, January 15, 2017

தடுக்கி விழுந்த பாப்பா

இன்று மாலை நண்பர்களுடன் மால் ஒன்றுக்குச் சென்றிருந்தேன்.

பொங்கல் விடுமுறை நாள்கள் என்பதால் மாலின் உணவகப்பகுதி பொங்கி வழிந்தது.

நாற்காலிகளைக் கண்டுபிடித்து அமர்வதற்குள் நாழிகைகள் நகர்ந்துவிட்டன.

'இந்தச் சேரை எடுத்துக்கவா?'

'இல்ல...ஆள் வர்றாங்க!'

'அந்தச் சேரை?'

'இல்ல...அங்கயும் வர்றாங்க!'

தமிழனுக்கு சேர் கிடைக்கிறதுதான் சட்டசபை வரையிலும் பிரச்சினை என நினைத்துக்கொண்டு, கொஞ்ச தூரம் தள்ளி அமர்ந்த மேசை நோக்கிச் சென்றேன்.

'தம்பி...சேர் வேணுமா? இதை எடுத்துக்கோங்க!' என்ற ஒரு குரல்.

கண்ணாடி அணிந்த ஒரு மாமி தாராள உள்ளம் காட்டினார்.

அவருடன் வந்திருந்த இளவல்கள் எல்லாம் தங்கள் மொபைல் ஃபோன்களில் பிஸியாக இருக்க இவர் மட்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அதனால்தான் என் தேவையைக் கண்டுகொண்டார்.

'நன்றி மாமி!' என்று நான் சொல்ல, 'சரி சாமி!' என்று அவர் சொல்லிவிடுவாரோ என பயந்து, 'நன்றி' என்று சொல்லிவிட்டு நாற்காலியுடன் நகர்ந்தேன்.

'தோசை' ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தோம்.

கோனார் கடை தோசையும் வந்து சேர்ந்தது.

சாப்பிட்டுக்கொண்டே நானும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன்.

தாடி வைத்த ஒரு 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் என்னைப் போலவே நாற்காலிகளைத் தேடிக்கொண்டு வந்தார். அவரைக் சுற்றி நான்கு குழந்தைகள்.

இவரின் மனைவி வரவில்லையா? அவருக்கு உடல்நலம் சரியில்லையா? அல்லது இவர் என்னைப்போல பேச்சிலரா? குழந்தைகளை எடுத்து வளர்க்கிறாரா?

தெரியவில்லை.

ஒரு மேசை காலியாக, அந்த மேசையை அடையாளம் காட்டியது குழந்தை.

நான்கு குழந்தைகளும், அவரும் ஒருசேர அந்த மேசை நோக்கி நகர்ந்தனர். மூன்று குழந்தைகள் ஓடிவிட, நான்காவது வந்த மஞ்சள் பாப்பா எனக்குப் பின்னால் இருந்த நாற்காலி தட்டிக் கீழே விழுந்தார். தூக்கிவிட நான் எழுமுன், அவர் அந்தக் குழந்தையைப் பிடித்து தூக்கிவிட்டார்.

விழுந்தவுடன் அழாமல் இருந்த குழந்தை, எல்லாரும் தன்னைப் பார்க்கிறார்கள் என்று தெரிந்தவுடன் அழ ஆரம்பித்துவிட்டது.

அவர் அதன் அழுகையை நிறுத்த சேரை இரண்டு அடி அடித்தார். அழுகை நின்றது.

இவர்களை அமர வைத்துவிட்டு, அவர் மேரிபிரவுன் சிக்கன் வாங்கிவந்து கொடுத்தார்.

ஆளுக்கு இரண்டு பீஸ்கள் வந்திருக்கும் என நினைக்கிறேன்.

எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு இவர் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டார்.

அந்தக் குழந்தைகள் சாப்பிட்டுவிட்டு, அதிலிருந்த கெட்ச் அப்பையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

'இன்னும் வேணும்!' என்பது போல இருந்தது அவர்களது செயல்.

நிற்க.

தங்கள் குழந்தைகள் ஒருமுறையேனும் பெரிய மாலில் சிக்கன் சாப்பிட வேண்டும் என்று நினைத்த அந்த இளைஞரை அல்லது அந்த தந்தையை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது.

நிறையப்பேர் அந்த மாலின் உணவகத்தில் இருந்தாலும் அந்த நான்கு குழந்தைகளுக்கு தங்கள் அப்பா மட்டுமே தெரிந்தார்!

அந்த அப்பாவுக்கு அந்தக் குழந்தைகள் மட்டுமே தெரிந்தனர்!

ஆக, கூட்டமான உலகத்தில் நமக்கு நெருக்கமானவர்களைக் கண்டுகொள்வதே நாளை நாம் கொண்டாடும் காணும் பொங்கல்!

'என்னைக் காண்கிறவரை நான் இங்கே கண்டேன்!' என்றார் ஆபிரகாமின் பணிப்பெண் ஆகார்.

'என்னைக் காண்கிறவரை நான் எங்கும் காண்கிறேன்...என் உறவுகளில்...'

காணும் பொங்கல் வாழ்த்துக்கள்...

வாங்க கண்டுக்குவோம்!

Friday, January 13, 2017

பொங்கல்

'என்னால் கரும்பை கடிக்க முடியுமா?'

இந்தக் கேள்வியுடன் இன்று காலை திருப்பலி முடிந்து வண்டியில் திரும்பிக் கொண்டிருந்தேன்.

கரும்பு கடித்து ஏறக்குறைய 12 ஆண்டுகள் ஆகிவிட்டன.

கடைசியாக விரகனூர் ஆன்மீக பயிற்சியகத்தில் கடித்தது நன்றாக நினைவில் நிற்கிறது.

அதற்குப் பின் பொங்கல் கொண்டாட்டங்கள் இல்லை. மதுரையில் பங்குத்தளங்களில் இருந்தபோதும் சாப்பிடவில்லை. கரும்புச்சாறு ஒவ்வாமையை உருவாக்கியது ஒரு காரணம்.

கரும்பு - மிகவும் வித்தியாசமான தாவரம்.

கரும்பு ஒரு நீண்ட தண்டுடைய தாவரம்.

வெகு சில தாவரங்களின் தண்டுகளையே நாம் சாப்பிடுகிறோம். பனை மரம் மற்றும் தென்னை மரம் போன்ற மரங்களும் தண்டுகள் நீண்டிருக்கும் தாவரங்களே.

கரும்பில் நுனிக்கரும்பு இனிக்காது.

அடிக்கரும்பு வேர்களாக இருக்கும்.

நடுவில் இருக்கும் கரும்பிலும், கணுக்கள் அகன்று இருந்தால்தான் சாப்பிட நன்றாக இருக்கும்.

கணுக்களே இல்லாமல் கரும்பு இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்ததுண்டு.

ஒரு கணுவிலிருந்து மற்றொரு கணுவிற்கு மாறும்போது அங்கே எத்திக்கொண்டிருக்கும் ஒரு பூவோ எதுவோ ஒன்று கசப்பைத் தரும்.

ஆக, இனிப்பு தரும் கரும்பிலும் கசப்பு உண்டு.

பொங்கல், கரும்பு - இனிமை!

மஞ்சள், சந்தனம் - மங்களம்!

பொங்கட்டும் பொங்கல் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும்!

Thursday, January 12, 2017

நாலு பேரும், நாற்பது பேரும்

'நாலு பேரு நம்மள என்ன நினைப்பாங்க?'

'நாலு பேரு நாலுவிதமா பேசுவாங்க! கவனமாக இரு!'

என்னும் சொல்லாடல்கள் நம் வழக்கில் உண்டு. இந்த நான்கு பேர் யார் என்பதற்கு விளக்கம் சொல்லும் கவியரசு கண்ணதாசன், நாம் இறந்தபின் நம்மைச் சுமந்து செல்லும் நாலு பேரே அவர்கள் என்கிறார். அதாவது, நம் இறுதியை நினைத்து ஒவ்வொரு நாளும் வாழ்ந்தால் நாம் நன்றாக வாழ்வோம் என்பது கண்ணதாசன் தரும் பொருள்.

நாளைய நற்செய்தியிலும் (காண். மாற்கு 2:1-12) ஒரு நாலு பேரை நாம் பார்க்கிறோம்.

முடக்குவாதமுற்ற ஒருவரை இந்த நான்கு பேர் இயேசுவிடம் தூக்கிக்கொண்டு வருகின்றனர். இவர்கள் என்னை ஆச்சர்யப்பட வைக்கிறார்கள். எப்படி?

முடக்குவாதமுற்ற நபர் விண்ணப்பம் செய்யாமலேயே இவர்கள் அவர்மேல் அக்கறை கொண்டு அவரைத் தூக்கி வருகின்றனர். கட்டிலில் நான்கு பேர் சுமந்து வருவதைப் பார்த்தவர்கள் கண்டிப்பாக இவர்களைக் கேலி செய்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.

மேலும், இயேசுவைச் சுற்றி கூட்டம் அமர்ந்திருந்தாலும் ஒரு மாற்று வழியை யோசிக்கின்றனர். யார் வீட்டுக் கூரையோ, இவர்கள் வேகமாக பிரித்து விடுகின்றனர். இயேசு போதனையை முடிக்கும் வரை காத்திருக்கும் பொறுமையும் இவர்களிடம் இல்லை. தாங்கள் நினைத்ததை தெளிவாகவும், வேகமாகவும் செய்து முடிக்கின்றனர்.

இந்த நான்கு பேருக்கு எதர்பதமாக அந்த வீட்டில் நாற்பது பேர் இருக்கின்றனர்.

முணுமுணுக்கின்றனர். கேள்வி கேட்கின்றனர். கடின உள்ளம் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் இயேசுவையோ, முடக்குவாதமுற்றவரையோ, தூக்கி வந்தவர்களையோ பாராட்டவில்லை. இவர்கள் பார்வை எல்லாம் எதிர்மறையாகவே இருக்கின்றது.

ஆக, ஒரே ஊரில், ஒரே குழுமத்தில், ஒரே சமூகத்தில் இரண்டு வகையான மக்களும் நம்மைச் சுற்றி இருக்கின்றார்கள்.

நாம் கூப்பிடாமலேயே நமக்கு உதவி செய்பவர்களும் இருக்கிறார்கள்.

நாம் கூப்பிடாமலேயே நமக்கு எதிரிகளாக வருபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், தனி மனிதர் என்ன செய்ய வேண்டும்?

'தன் கட்டிலைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு நடக்க வேண்டும்'

ஆக, குழுமம் என்பது நாம் உயரம் தாண்டுதல் விளையாட்டில் பிடித்திருக்கும் குச்சி போன்றது. குச்சியைப் பிடித்துக்கொண்டே இருந்தால் நாம் அந்தப் பக்கம் தாண்ட முடியாது. குச்சியை விட வேண்டிய இடத்தில் விட்டு அடுத்த கட்டத்திற்கு நகல வேண்டும்.

இன்று நான் என் குச்சியை விட்டுவிட தயரா?

குழுமத்தில் நான் யார்? நான்கில் ஒருவரா? நாற்பதில் ஒருவரா?

Wednesday, January 11, 2017

நீர் விரும்பினால்

'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க முடியும்!' என இயேசுவிடம் தொழுநோய் பிடித்த ஒருவர் வருகிறார்.

'நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக!' என இயேசுவும் நலம் தருகிறார்.

ஆனால்,

'யாருக்கும் சொல்ல வேண்டாம்!' என இயேசு சொல்ல,

அவர் 'எல்லாரிடமும் போய் சொல்கின்றார்.'

இதில் என்ன முரண் என்றால்,

இதுவரை ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டிருந்த அந்த நோயுற்றவர் ஊருக்குள் நுழைகின்றார்.

இதுவரை ஊருக்குள் இருந்த இயேசு வெளியேறுகின்றார்.

நாம் நினைப்பதை கடவுள் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்.

கடவுளும் அதை அதனதன் நேரத்தில் செய்கின்றார்.

ஆனால், கடவுள் என்னிடம் சொல்வதை நான் செய்ய மறுக்கிறேன்.

தொழுநோய் பிடித்தவர் செய்தது பெரிய பாவம் இல்லைதான்.

ஊருக்குள் வந்திருப்பார். என்னப்பா நீ இங்க! என்று கேட்டிருப்பார்கள். 'இப்படி இப்படி நடந்துச்சு!' என அவரும் சொல்லியிருப்பார்.

தன்னை அறியாமலேயே இயேசுவை வெளியேற்றிவிட்டார்.

என்னை அறியாமல் நான் செய்யும் சிறு சிறு செயல்கள்கூட சில நேரங்களில் கடவுளை என் ஊரை விட்டு வெளியேற்றிவிடலாம்.

முதல் வாசகத்தில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வைக் குறித்தே வாசிக்கின்றோம்.

எகிப்தில் கொள்ளை நோய்களினின்று தங்களை விடுவித்து, செங்கடல் வழியே கால் நனையாமல் கடத்தி வந்த கடவுளையும், அவரின் அரும்பெரும் செயல்களையும் நொடிப்பொழுதில் மறந்த இஸ்ரயேல் மக்கள்,

'ஐயோ! இங்க தண்ணி இல்லயே! சாப்பாடு இல்லயே! மட்டன், சிக்கன், ஃபிஷ் இல்லையே!' என புலம்புகின்றனர்.

அவர்களின் கடின உள்ளத்தைக் கடிந்து கொண்டு நொடிப்பொழுதில் அவர்களைவிட்டு தூரமாகின்றார் கடவுள்.

ஆக, அவர் சொல்வதைக் கேட்காததுதம், அவர் செய்வதை மறத்தலும்

இறைவனை என்னிடமிருந்து அந்நியமாக்கிவிடுகின்றன!

Tuesday, January 10, 2017

உம்மைத் தேடி

ரோம் நகரில் மெட்ரோவில் பயணம் செய்யும்போதெல்லாம் ஒரு விநோதமான நிகழ்வைக் கண்டிருக்கிறேன்.

அமைதியான மெட்ரோ பெட்டி.

சிலர் பேப்பர் படித்துக்கொண்டிருப்பர்.

சிலர் புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பர்.

சிலர் ம்யூசிக் கேட்டுக்கொண்டிருப்பர்.

சிலர் வெளியே தெரியும் இருட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பர்.

சிலர் மெட்ரோ ஸ்டேஷன்களின் பெயர்களை மனதில் வாசித்துக்கொண்டிருப்பர்.

சிலர் முத்தமிட்டுக்கொண்டிருப்பர்.

இந்த நேரத்தில் யாராவது ஒருவரின் செல்ஃபோன் அடிக்கும்.

செல்ஃபோன் சத்தம் வரும் இடத்தை நோக்கி எல்லார் கண்களும் திரும்பும்.

அலறுகின்ற செல்ஃபோனை அடக்க நினைக்காமல் அந்த நபர் எல்லாரையும் பார்த்து ஒரு புன்னகை செய்வார்.

அந்தப் புன்னகையின் அர்த்தம் இதுதான்:

'யாரோ ஒருவர் என்னைத் தேடுகிறார். உங்களை யாரும் தேடவில்லை!' என்பது அவருடைய பெருமிதமான மைன்ட் வாய்ஸாக இருக்கும்.
நமக்குப் பிடித்தவர்களிடமிருந்து ஃபோனோ, மெசேஜோ வரவில்லை என்றால் ஏன் நாம் கோபப்படுகிறோம்?

'நான் நாள் முழுவதும் இவனைத் தேடிக்கொண்டிருக்க, இவன் என்னைத் தேடாமல் இருக்கின்றானே!' என்ற எண்ணம்தான்.

யாரோ நம்மைத் தேடுகிறார்கள் என்ற உணர்வு நம்மை அறியாமல் நமக்கு ஒரு பெருமை உணர்வைத் தருகிறது. ஆனால், அப்படிப்பட்ட ஒரு உணர்வு மிகவும் டேன்ஜரான உணர்வு என்கிறார் இயேசு.

இயேசு சீமோன் வீட்டில் அவரது மாமியாரைக் குணமாக்கிவிட்டு வெளியே வருகின்றார். வருகின்றவரை மக்கள் மடக்குகின்றனர். கூட்டத்தில் ஒருவர் இயேசுவிடம், 'எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!' என்கிறார்.

ஆனால், இயேசு அதை சட்டை செய்யாமல், 'நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம் வாருங்கள்!' என்கிறார்.

இதுதான் பற்றிலும் பற்றற்ற நிலை.

எனக்கு அதிபராக இருந்த அருள்திரு. மைக்கேல் ஆலோசனை, சேச, அவர்கள் சொல்வார்: 'ஓர் அருள்பணியாளர் எங்கே தேவை என நினைக்கப்படுகிறாரோ, அந்த நிமிடமே அவர் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டுவிட வேண்டும்!' என்று.

ஏனெனில், 'நான் அவருக்குத் தேவை' என்ற உணர்வே நம் வாழ்வில் பற்றுக்களை உருவாக்கிவிடுகிறது.

பணியில் பற்றுக்கள் தேவையில்லை.

ஆனால், வாழ்வில் தேவை. இல்லையா?

குழம்புகிறது என் மனம்.

Monday, January 9, 2017

விளித்தல்

'என்னங்க! உங்களத்தான்!' என்று என்னிடம் பேசிக்கொண்டிருந்த தன் கணவரைத் தன் பக்கம் அழைத்தார் அந்த மனைவி.

ஒருவேளை கணவர் தூரத்தில் நின்றுகொண்டிருந்தால் இந்த மனைவி அவரை எப்படி அழைப்பார்?

'பக்கத்துல போய் அழைக்கணும் ஃபாதர்!'

இல்லையா?

நாம் ஒருவர் மற்றவரை விளிக்கிறோம்.

'அழைப்பது' என்பது சரியான வார்த்தை அல்ல.

நாளைய முதல் வாசகத்தில் (காண். எபி 2:5-12) இயேசு மனிதர்களை 'சகோதரர், சகோதரிகள்' என்று விளிக்கிறார். நாளைய நற்செய்தி வாசகத்தில், பேய்க்குட்டி ஒன்று இயேசுவை 'நாசரேத்து இயேசுவே!' என விளிக்கின்றது.

மனிதர்களைக் கடவுள் படைத்தபோது, 'அவர்களை வானதூதர்களைவிட சிறியவர்களாவும், மற்ற விலங்குகளை விட மேன்மையானவர்களாகவும் படைத்திருக்கிறார்' என்று சொல்கிற ஆசிரியர், இயேசு அவர்களை 'சகோ' என அழைக்க வெட்கப்படவில்லை என எழுதுகிறார்.

நாம் யாரையாவது பெயர் சொல்லி அல்லது செல்லப்பெயர் சொல்லி விளிக்கிறோம் என்றால் அவர் மேல் நமக்கு உரிமை இருக்கிறது என்று பொருள்.

முதல் வாசகத்தில் இயேசுவுக்கு மனுக்குலத்தின்மேல் உரிமை உள்ளதைப் பார்க்கிறோம்.

ஆனால், பேய்க்குட்டி தன்னைப் பெயர் சொல்லி அழைத்தவுடன் அதைக் கடிந்து கொள்கிறார் இயேசு. ஆக, சாத்தான் இயேசுவின்மேல் உரிமை கொண்டாட முடியாது. மேலும், தீமைக்கு இயேசுவிடம் இடமில்லை.

இன்று நான் என்னை எப்படி விளிக்கிறேன்?

எனக்கென்று நான் என்ன செல்லப் பெயர் வைத்திருக்கிறேன்?

என் உற்றவர்கள் என்னை எப்படி விளிக்கிறார்கள்?

என் மற்றவர்கள் என்னை எப்படி விளக்கிறார்கள்?

என் இறைவனை நான் எப்படி விளிக்கிறேன்?

விளிக்கின்ற உரிமையை நான் என் வாழ்வில் உறுதி செய்கிறேனா?

Sunday, January 8, 2017

சுவரொட்டிகள்

இன்று பெரியகுளம் திருப்பலிக்குச் சென்றுவிட்டு மதுரை திரும்பிக்கொண்டிருந்தேன்.

வரும் வழியில் நிறைய சுவரொட்டிகள்.

தமிழகத்தின் சுவரொட்டிகளை அரசியல், சினிமா, திருமணம், இறப்பு என்ற நான்கு வரையறைகளுக்குள் வைத்துவிடலாம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், சின்னம்மாவாக, சின்ன அம்மாவாக நிற்க ஆவல் கொண்டிருப்பவர்களின் போஸ்டர்கள்தாம் அதிகம் இருந்தது.

ஒரு போஸ்டர் வித்தியாசமாக இருந்தது:

ஜெயாவின் அண்ணன் மகள் தீபாவின் படத்துடன் இருந்தது.

'அம்மாவைப் போல கொண்டை.

அம்மாவைப் போல சேலை.

அம்மாவைப் போல கைகள்.

அம்மாவைப் போல ஆங்கிலம்.

அம்மாவைப் போல ஆட்சி செய்ய வா!' என அழைத்தது இந்த போஸ்டர்.

தீபாவின் முகத்தை எனக்கு முதல் நாளிலிருந்தே பிடிக்கவில்லை.

ஆங்கிலத்தில் 'கான்ஸ்டிபேடட் லுக்' என்ற ஒரு வார்த்தை உண்டு. அப்படித்தான் இருக்கிறது இவரது லுக்.

மற்றொரு பக்கம் சசியின் அலும்பு தாங்க முடியவில்லை.

இவ்வளவு நாள்களாக ஜெயாதான் இரும்பு பெண்மணி என நினைத்திருந்தேன். ஆனால், அவரையே மடக்கி மர்ம அறைக்குள் வைத்துவிட்ட சசிதான் இரும்பி.

வெறும் லுக்கை மட்டும் வைத்து ஆட்சி செய்ய முடியும் என்று என் நாட்டு மக்களுக்கு ஒருத்தி அல்லது ஒரு கூட்டம் சொல்கிறது என்றால், அதை எதிர்த்து கேட்க என்னால் ஏன் முடியவில்லை?

நேற்று வரை யாராக இருந்த ஒருவர் இன்று என்னை ஆட்சி செய்ய வருகிறார் என்றால்,

அவருக்கு எந்தவித தகுதியும், திறமையும் இல்லை என்றாலும் என்னால் ஏன் ஏற்றுக்கொள்ள முடிகிறது?

என் மௌனம் என் இயலாமையா?

அல்லது சகிப்புத்தன்மையா?

அல்லது கண்டுகொள்ளாத்தன்மையா?

நாளை ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழாவை கொண்டாடுகிறோம்.

திருமுழுக்கில் ஆண்டவரும் 'மகன்' 'செல்ல மகன்' 'சின்ன மகன்' என்று பெயர் பெறுகிறார்.

ஆனால், அவர் பெயருக்கேற்ப வாழ்ந்தார்.


Saturday, January 7, 2017

திருக்காட்சி பெருவிழா

நாளை நாம் திருக்காட்சி பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

முன்பின் தெரியாத மூவர் குழந்தை இயேசுவைச் சந்திக்கின்றனர்.

'இவர்கள் நட்சத்திரத்தைக் கண்டதால் இறைவனைத் தேடிச் செல்லவில்லை.
மாறாக, இறைவனைத் தேடிச் சென்றதால் நட்சத்திரம் இவர்கள் கண்களுக்குப் பட்டது!' என்கிறார் பொன்வாய் அருளப்பர்.

இன்று மாலை வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.

ஏறக்குறைய 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஒரு ஆட்டை தன் மடியில் கிடத்தி அதன் உடம்பில் ஒட்டியிருந்த பூச்சிகளையும், முட்களையும் அகற்றிக்கொண்டிருந்தார்.

அந்த ஆட்டுக்குட்டி படுத்திருந்த விதமும், அவர் அதைத் தடவிக்கொடுத்த விதமும், ஏதோ, இவர்கள் இருவரும் ஒருவர் மற்றவருக்காய் பிறந்தவர்போல இருந்தது.
அழகர்கோயில்-புதூர் ரோட்டில் வசிக்கும் இவர் இந்த ரோட்டைத் தாண்டி வெகுதூரம் சென்றிருக்க வாய்ப்பில்லை.

அமெரிக்காவின் புதிய அதிபர், இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கை, ஏடிஎம்மில் எவ்வளவு பணம் எடுக்கலாம், பான் கார்ட், மைக்ரோசாப்ட், ஆன்ட்ராய்ட் ஃபோன், வாட்ஸ்ஆப் டி.பி., டுவிட்டர் செய்திகள் எதுவும் இவரிடம் பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை.

காலையில் சூரியன் பார்த்து எழுகிறார். இரவில் நிலவு பார்த்து தூங்கச் செல்கிறார்.

நடுவில் எழுந்தால் சில நட்சத்திரங்கள் இவர் கண்களில் படும்.

எந்த நட்சத்திரத்தையும் பின்பற்றி இவர் நீண்ட பயணம் செய்யத் தேவையில்லை.

எந்த அரண்மனையின் பளிங்குக் கற்களையும் மிதிக்கத் தேவையில்லை.

யாரிடமும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

இவரின் ஆழ்ந்த உறக்கத்தில் கனவும் வரப்போவதில்லை.

ஆனால், இவரும் ஞானியே.

ஞானம் என்பது நிறைய அறிவதிலும், நிறைய தேடுவதிலும், நிறைய அனுபவிப்பதிலும் இல்லை.

இல்லையா?

Friday, January 6, 2017

கானாவூர்த் திருமணம்

நான் புண்ணிய பூமி சென்றபோது கானாவூர்த் திருமண நிகழ்வு நடந்ததாகச் சொல்லப்படும் ஆலயத்திற்குச் சென்றிருந்தேன்.

சென்ற நேரம் மாலை 5 மணி. மிகவும் சோர்வாக இருந்தது.

ஒரு ஓரமான நாற்காலியைப் பிடித்து அமர்ந்து கொண்டேன். திருப்பலி ஆடை அணியவும் துணியாத சோர்வு. இருந்தாலும் அணிந்து கொண்டு அமர்ந்தேன்.

எங்களோடு வந்திருந்த தம்பதியினர் தங்கள் திருமண வாக்குறுதிகளைப் புதுப்பித்துக்கொண்டனர்.

மற்றவர்கள் எங்கே ஒயின் வாங்கலாம் என்றும், எப்படி கொண்டு செல்வது என்றும் பேசிக்கொண்டனர்.

நாளைய நற்செய்தியில் நாம் கானாவூர் திருமண நிகழ்வை வாசிக்கின்றோம் (யோவான் 2:1-12).

யோவான் நற்செய்தி நிகழ்வுகளில் எப்போதும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று மேலானது. மற்றொன்று ஆழமானது.

யோவான் எழுதும் நிகழ்வில் என்ன விந்தை என்றால், எல்லாரும் இருக்கிறார்கள். ஆனால் மணமக்கள் இல்லை. மணமக்கள் இல்லாத திருமண நிகழ்வா? என்று நாம் கேட்கலாம்.

'தன்னைப் படைத்தவரைக் கண்ட தண்ணீர் வெட்கத்தால் சிவந்தது'

என புதுக்கவிதையில் நிகழ்வை எழுதுகிறார் ஜெர்மானியக் கவிஞர் ஒருவர்.

திராட்சை ரசம் குடித்த பலர் திருப்தி கண்டனர்.

சிலர் இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்கின்றனர்.

எனக்கு இந்த நிகழ்வில் ஆச்சர்யமான நபர் வேலைக்காரர். இவர்தான் அறிகுறியை முதலில் அனுபவிக்கின்றார். வாழ்வின் அற்புதங்கள் மிக சாதாரண நபர்களுக்கே கிடைக்கின்றன.

Thursday, January 5, 2017

முதல் வெள்ளி

நாளை ஆண்டின் முதல் வெள்ளி.

மாதத்தின் முதல் வெள்ளியே நமக்கு முக்கியமாகத் தெரியும்போது ஆண்டின் முதல் வெள்ளி இன்னும் முக்கியம் அல்லவா?

எல்லா நாளும் ஒன்றுதானே. அதில் என்ன வெள்ளி - சனி?

ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு இருக்கவே செய்கிறது.

எல்லாரும் மனிதர்கள்தாம். ஆனால் நாம் எல்லாரோடும் ஒன்றுபோல பேசுவதோ அல்லது பழகுவதோ இல்லையே?

'வெள்ளி' என்ற கிழமை உரோமை கடவுள் வீனஸ் என்பவரின் பெயர்.

வீனஸ் என்ற கிரகம்தான் வெறும் கண்களுடன் நம் கண்களுக்குத் தெரிகின்ற கிரகம்.

இந்து மதத்தில் வெள்ளி லட்சுமி அல்லது துர்க்கை அம்மனுடனும், இசுலாம் மதத்தில் வெள்ளி ஓய்வு நாளாகவும் கருதப்படுகின்றது.

புனித வெள்ளியைத் தொடர்ந்து எல்லா வெள்ளிக்கிழமைகளும் புனிதம் பெறுகின்றன கிறிஸ்தவத்தில். வெள்ளி இல்லையேல் ஞாயிறும் உயிர்ப்பும் இல்லை.

17ஆம் நூற்றாண்டில் மார்கரெட் மேரி அலகாக் அவர்களுக்குத் தன் இதயத்தை திறந்து காட்டிய இயேசு வெள்ளிக்கிழமை பக்தியை தொடங்கி வைத்தார் என்கிறது அலகாக் அவர்களின் தன்வரலாற்று நூல்.

வெள்ளிக்கிழமை வரை வேலை பார்த்து சளைத்தவுடன் அந்த வாரத்தை எண்ணிப்பார்த்து நன்றி கூறவும், தவறிய வாய்ப்புக்களுக்கு மன்னிப்பு வேண்டவும்தான் திருச்சபையின் கட்டளை செபத்தில் ஒவ்வொரு வெள்ளி காலை வழிபாட்டிலும் திபா 51 இடம் பெறுகிறது.

ஆக, வெள்ளிக்கிழமை நம்மை வீக்எண்ட் ஓய்விற்கும், உற்சாகத்திற்கும் தயாரிக்கிறது.

இறைவனின் அன்பை எண்ணிப்பார்த்து அவரின் இதய நிழலில் குடிகொள்ள நம்மை அழைப்பது ஆண்டின் முதல் வெள்ளியோ, மாதத்தின் முதல் வெள்ளியோ மட்டுமல்ல. ஒவ்வொரு நாளுமே!

குட்டிப்பூக்கள்

இன்று என் நண்பருடன் தமுக்கம் மைதானத்தில் உள்ள 'ஏழு அதிசயங்கள்' பொருள்காட்சிக்குச் சென்றேன்.

முகப்பில் ஏழு அதிசயங்கள். உள்ளே நிறைய விளையாட்டுக்கள். கடைகள். உணவகங்கள்.

வார நாட்கள் என்பதாலும், பின்நேரம் என்பதாலும் கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது.

வந்திருந்த சின்னக்குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நண்பர் சாப்பிட்டுக்கொண்டிருந்த பஞ்சுமிட்டாயை நோக்கி கை நீட்டி அழுதது மஞ்சள் கலர் கவுன் போட்ட ஒரு கைக்குழந்தை.

'அங்கிளுக்கு டாட்டா சொல்லு!' என்று அந்தக் குழந்தையின் அப்பா வேகமாக விடைபெற்றார் தன் மனைவியோடு.

தன் மனைவியோடு வரும் கணவர்களைப் பார்ப்பதைவிட, தன் பிள்ளையோடு வரும் கணவர்கள்தாம் அதிகம் பொறாமை உணர்வை என்னில் தூண்டுகின்றனர்.

குழந்தைகளோடு வித விதமாக ஃபோட்டோ எடுத்து கடுப்பேத்துகிறார் மை லார்ட்.

ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் வைத்து அதில் பொம்மைகளைப் போட்டு பல்டி அடிக்க வைத்துக்கொண்டிருந்தார் கடைக்காரர். அங்கு வந்த குழந்தை ஒன்று அப்படியே அனைத்தையும் அள்ளி எடுத்தது.

குழந்தைகள் தங்கள் கண்களுக்குத் தெரிவதை அப்படியே வாரிக்கொள்கின்றனர்.

வயது வந்தவர்கள்தாம் அது யாருக்கு உரிமையானது என்று ஆராய்கின்றனர்.
கொஞ்ச தூரம் தள்ளி இரண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

ஒரு குழந்தை சோப்பில் முட்டை விட்டுக்கொண்டிருந்தது.

மற்றொரு குழந்தை அதை ஓடி ஓடி உடைத்தது.

குமிழிகள் கொஞ்ச நேரமே வாழக்கூடியவை என்பதை உணர்ந்தவை குழந்தைகள் மட்டுமே.

வாழ்க்கையும் ஒரு குமிழ்தானே என்பதை இந்தக் குழந்தைகள் போகிற போக்கில் கற்றுக்கொடுத்துவிடுகின்றனர்.

இறுதியாக, கைரேகை ஜோசியம் பார்த்தோம்.

'நீங்கள் உங்கள் குழந்தைகளோடு சந்தோஷமாக இருப்பீர்கள்!' என்று ஒரு வரி வந்தது.

அப்படியே அதைக் கிழித்துப் போட்டுவிட்டு, ஷேர் ஆட்டோ பிடித்து வீடு திரும்பினோம்.

Tuesday, January 3, 2017

நினைவில்

பங்குந்தந்தை ஒருவர் தன் ஆண்டு தியானம் பற்றிய நினைவில் இப்படி எழுதினார்:

'ஒருநாள் இரவில் நான் ஆலயத்தில் அமைதியாய் இருந்தேன்
யாருக்கும் நான் எங்கிருங்கிறேன் என்பது
கடவுளுக்கு மட்டுமே தெரியும்...

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது -
கடவுளுக்கு மட்டுமே தெரியும்...

அந்த நேரத்தில் என் மனத்திலும், என் உள்ளத்திலும்
என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பது -
கடவுளுக்கு மட்டுமே தெரியும்...

நான் செபித்துக் கொண்டிருந்ததும்,
என் செபத்தின் கருப்பொருளும் -
கடவுளுக்கு மட்டுமே தெரியும்...
மெய்யாகவே
நான் கடவுளோடு இருந்தேன்
கடவுள் என்னோடு இருந்தார்

அப்படிப்பட்டதொரு அனுபவத்திற்கு நான் அடிக்கடி சென்றிருக்கிறேன்
செபிக்க முடியாதபோது
என்ன செபிப்பது என்று தெரியாத போது
நிறைய அலைக்கழிக்கப்படும்போது
என்னுள்ளே வெளியே

தியானத்தில் இருக்கும் இன்று
இந்த அனுபவம் எளிதாக இருக்கிறது

ஆனால் தினமும் என்னால் இப்படி இருக்க முடியுமா?
கடவுளோடு இருக்க நேரம் கண்டுபிடிக்க முடியுமா?
அவரின் தோழமையை உணரும் இடம் கண்டுபிடிக்க முடியுமா?

என் இனிய இறைவா?
உனக்கென கொஞ்ச நேரமும்
உனக்கென அமைதியான இடமும்
உன்னோடு இருக்க
நான் கண்டுபிடிக்க எனக்கு அருளும்...

என்னைப் பற்றி உனக்கு மட்டுமே தெரியும்...

ஆமென்.