Monday, February 29, 2016

யூதித்து - கதையாடல்

யூதித்து நூலின் உட்புகுமுன், 'கதையாடல்' என்ற இலக்கிய நடையின் சில முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

நாம் வாசிக்கும் ஒரு சிறுகதை, நீண்ட நாவல், குறும்படம், திரைப்படம் எல்லாவற்றிலும் கதை இருக்கின்றது.

கதை ஐந்து கூறுகளைக் கொண்டிருக்கின்றது:

1. தொடக்கச் சூழல் (initial situation): 'ஒரு ஊர்ல...' என்று தொடங்கும்; இந்த சூழல் நமக்கு கதை நிகழும் இடம், நேரம், கதை மாந்தரின் அறிமுகம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

யூதித்து நூலின் முதல் இரண்டு பிரிவுகள் நமக்கு வரலாற்று பின்புலத்தை முன்வைக்கின்றன.

2. இறுக்கம் (rising action): கதையில் நிறைய பிரச்சினைகள் அல்லது முடிச்சுகள் முன்வைக்கப்படும்.

அசீரியப் படையெடுப்பு, நெபுகத்னேசரின் ஆர்வம், கோபம், புதிய படைத்தலைவன், படையின் பலம் என பல பிரச்சினைகள் வரிசையாகச் சொல்லப்படுகின்றன. இவற்றை வாசிக்கும்போதே வாசகரின் மனத்தில் கேள்வியும் எழுகின்றது: 'இந்த பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்படுமா?' 'யார் தீர்வாக வருவார்?' 'எதிரிகள் அழிந்துவிடுவார்களா?'

3. திருப்பம் (turing point): இதுதான் கதையின் முக்கிய பகுதி. பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒருவரின் எழுச்சி இங்கே சுட்டிக்காட்டப்படும். எடுத்துக்காட்டாக, 'ஊதாரி மைந்தன்' (லூக்கா 15) கதையில் திருப்பம் இளைய மைந்தனின் உள்மன உரையாடலாக இருக்கின்றது: 'நான் எழுந்து செல்வேன்...' இந்த எண்ணம் வந்தவுடன் இளமைந்தன் எழுகின்றான். தன் தந்தையின் இல்லம் நோக்கி புறப்படுகின்றான்.

யூதித்து தன் கைம்பெண் கோலத்தைக் கலைந்துவிட்டு, ஓர் அரசமகள் போல ஆடையணிந்து புறப்படும் நிகழ்வுதான் யூதித்துநூலின் திருப்பம்.

4. தளர்வு (falling action): திருப்பத்திற்கு முன் சொல்லப்பட்ட அடுக்கடுக்கான பிரச்சினைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தீர்க்கப்படும். முடிச்சுகள் அவிழ்க்கப்படும்.

யூதித்தின் அழகைக் கண்டு வீரர்கள் வியக்கின்றனர். யூதித்துக்கு எல்லார் பார்வையிலும் தயவு கிடைக்கின்றது. யூதித்து படைத்தலைவனை அணுகும் வாய்ப்பு பெறுகிறார்.

5. இறுதிச்சூழல் (final situation): பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு எல்லாரும் மகிழ்ந்திருக்கும் இனிய சூழல்.

எதிரிகளின் படை தலைவன் இல்லாமல் அழிந்து போகிறது. யூதர்களுக்கு வெற்றி கிடைக்கின்றது.

இந்த ஐந்து கூறுகளையும், தொடக்கம் (introduction), உச்சம் (climax), இறுதி (conclusion) என்னும் மூன்று கூறுகளாகச் சுருக்குகின்றார் அரிஸ்டாட்டில்.

அடுத்ததாக, கதையில் இருவகை மாற்றங்கள் நிகழ்கின்றன.

ஒன்று, துன்பம் மறைந்து இன்பம் வருகின்றது. எதிரிகள் அழிந்துவிடுகின்றனர். பிரிந்தவர்கள் சேர்ந்து விடுகிறார்கள்.

இரண்டு, அறியாமை மறைந்து அறிவு பிறக்கின்றது. யார் நல்லவர், யார் கெட்டவர், யார் சரியாகப் புரிந்து கொண்டார், யார் தவறாகப் புரிந்து கொண்டார் என வாசிப்பவருக்கு தெளிவு பிறக்கிறது.



2 comments:

  1. ஏதோ ஒரு ஆசிரியர் ஒரு சுற்றுலாவிற்குத் தன் மாணவர்களை அழைத்துச் செல்லுமுன் அவர்கள் எங்கெல்லாம் போகவிருக்கின்றனர், என்னவெல்லாம் பார்க்க்விருக்கின்றனர் என ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது போல் தந்தையும் இங்கு ஒரு புதினத்தை...'யூதித்து' நூலின் கட்டமைப்பைக்கூறி, அதைச் சரியாகப் புரிந்து கொள்ள வாசகர்களாகிய நம்மைத் தயார் செய்கிறார்.கண்டிப்பாக தாங்கள் விளக்கியுள்ள இந்த நூலின் ஐந்து கூறுகளும்,அவை தம்முள் அடக்கியுள்ள தொடக்கம்,உச்சி,இறுதி என்ற கூறுகளும் கண்டிப்பாக வாசகர்களை சரியாக வழி நடத்திச் செல்லும் என எதிர்பார்க்கலாம்.துன்பம் மறைந்து இன்பம் பிறப்பதும்,அறியாமை களையப்பட்டு அறிவு பிறப்பதும் பகல் மறைந்து இரவு வருவது போன்ற நியதிக்குட்டதுதானே! ட்ரெய்லர் போதும்....மெய்ன் பிக்ச்சருக்கு வரும் நேரம் வந்துவிட்டது எனத் தந்தையிடம் சொல்லிக்கொள்ள விழைகிறேன்.நாளை பிறக்கவிருக்கும் புதிய மாதம் நம்மை இறைவனுக்கருகில் கொண்டு சேர்க்கட்டும். தந்தைக்கும்,மற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Dear Father,Congrats!

    ReplyDelete