Saturday, February 13, 2016

தமிழர் வாழ்வு

 கடந்த சனியன்று பட்டினத்தாரின் திருவேகம்பாலையின் முதல் பகுதியைப் பார்த்தோம். இன்று அதன் தொடர்ச்சியைக் காண்போம்:

14க்குப்பின் தொடர்ந்து வரும் பாடல்களில் ஈகை செய்யாதவரை, விருந்தோம்பல் அனுசரிக்காதவரை, இரக்கம் காட்டாதவரை, எதிர்பாலினத்தின்மேல் மயக்கம் கொள்வோரை, கல்லாதவரை, உண்மை சொல்லாதவரை, குருவின்போதனைபடி நில்லாதவரை என எண்ணற்றோரை சாடுகின்றார்.

ஆனால், இந்தப் பாடல்களில் 10ஆம் நூற்றாண்டு தமிழர் வாழ்வும், சிந்தனையும் அதிகமாகக் காணக்கிடக்கிறது:

அ. 'ஆற்றில் கரைத்த புளி' (22)

இந்த உருவகம் நமக்கு பரிச்சயமான உருவகம். இதன் பொருள் என்ன? ஆற்றில் புளியைக் கரைப்பதால் ஆற்றுக்கும் பயனில்லை. புளிக்கும் பயனில்லை. மேலும் புளியின் ருசியை ஆற்றுத்தண்ணீர் மிகவும் நீர்மமாக்கிவிடுகிறது. நம்ம வீட்டுல ரசம் வைக்கும்போதே, புளி அளவும், தண்ணீர் அளவும் சரிவிகதமாக இருந்தால்தான் ரசம் சுவையாக இருக்கும். இல்லையா?

தன்னிடம் இருக்கின்ற அன்பு என்ற புளியை தான் ஆற்றில் கலந்து - அதாவது, படைப்புப்பொருட்களின்மேல் - கலந்து நான் படைத்தவராகிய உன்னை மறந்துவிட்டேனே என சிவபெருமானிடம் புலம்புகின்றார் பட்டினத்தார்.

ஆ. பூவையரின் ஒப்பனை (29)

'முட்டற்ற மஞ்சளை எண்ணெயில்கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டு பொட்டிட்டு பித்தளையோலை விளக்கியிட்டு...'

மஞ்சள் மிக மேன்மையான கிருமிநாசினி. வியர்வை மற்றும் சோர்வால் நம் உடலில் உருவாகும் அழுக்கைக் களைகிறது. இது. மேலும், எண்ணெய் முகம் வறட்சியாவதைத் தடுக்கிறது. மெட்டி என்பது மோதிரம். இப்போது இதை நாம் திருமணத்திற்குப் பின் பெண்கள் காலில் அணியும் மோதிரமாக பொருள் கொள்கிறோம். பொட்டு, நம் இரண்டு புருவங்களுக்கும் இடையே இருக்கின்ற சிந்தனை சக்கரத்தை தூண்டி எழுப்புகிறது. பித்தளையோலை என்பது பித்தளை நகை. தங்கம் வெகு அரிதான உலோகமாக இருந்ததால், பெரும்பாலும் பித்தளை நகைகளையே அணிந்தனர். மேலும் பித்தளைக்கு பாசிட்டிவ் எனர்ஜியை இழுக்கும் ஆற்றல் உண்டு. ஆகையால்தான் சாமி சிலைகளும், கும்பங்களும் பித்தளை மற்றும் வெண்கலம் கலந்து செய்யப்படுகின்றன.

ஆக, பெண்களின் ஒப்பனை ஒவ்வொன்றுக்கும் மருத்துவ குணம் இருந்தது. இன்று எல்லாவற்றையும் நாம் விட்டுவிட்டு, கார்னியர், டவ், லாரியல், facial, bleach என மாறிவிட்டது வரலாற்று விபத்து.

இ. மறுபிறப்பு (42)

'அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சென்மமோ
மூடனாய் அடியயேனும் அறிந்திலேன்
இன்னும் எத்தனை எத்தனை சென்மமோ
என்செய்வேன் கச்சியேகம்பனே!'

பட்டினத்தார் மறுபிறப்புக் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர். இதற்கு முன் நாம் பிறந்திருப்போம். இன்னும் நாம் பிறப்போம். இறைவனின் திருச்சந்நிதியை அடையும் வரை, மோட்ச நிலையை அடையும் வரை நாம் தொடர்ந்து பிறந்துகொண்டே இருப்போம்.

'பார்த்திபன் கனவு' நூலில் கல்கி அழகாக பதிவு செய்கிறார்:

'நாம் இறக்கின்றோம் என நினைக்கிறாயா?
இல்லை.
இறப்பில் உடல்தான் மண்ணுக்குப் போகிறது.
உயிர் தான் இருந்த இடத்திலேயே இருந்துவிடுகிறது.
அது தன் சந்ததியைக் காக்கிறது. அதன் வளர்ச்சியில் பெருமை கொள்கிறது.'


2 comments:

  1. Dear Father,Very good writing on "தமிழர் வாழ்வு".

    You are the person who shows total dedication to Tamil language and Tamil Nadu.

    இறப்பில் உடல்தான் மண்ணுக்குப் போகிறது.
    உயிர் தான் இருந்த இடத்திலேயே இருந்துவிடுகிறது.
    அது தன் சந்ததியைக் காக்கிறது. அதன் வளர்ச்சியில் பெருமை கொள்கிறது.'Very excellent.Congrats!!!

    ReplyDelete
  2. ' பட்டினத்தார்'....பெயரளவில் மட்டுமே தெரிந்த ஒருவரைப்பற்றி ஒரு புதையலை அவிழ்த்துவிடும் செயலாக தந்தை தரும் கருத்துக்கள் என்னை வியப்பின் விளிம்பிற்கே கொண்டு செல்கின்றன.கிறிஸ்துவத்தைத் தவிர மற்ற மதங்களைக் கொஞ்சம் அந்நியமாகவே பார்த்துப் பழக்கப்பட்ட என்க்கு இன்று " மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" எனும் சொற்றொடருக்கான அர்த்தம் புரிகிறது. இன்று நம் குருக்களும் கூடத் தங்களின் மறையுரையில் பிற மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை முன்வைப்பதைப் பார்க்கிறோம்.வரவேற்க வேண்டிய விஷயமே! படைத்தவனிடம் காட்ட வேண்டிய அன்பைப் புறக்கணித்து அதைப் படைப்புக்களிடம் காட்டுவதைக் கடலில் கரைத்த புளியுடன் ஒப்பிடுவது அருமை.பாஸிட்டிவ் எனர்ஜியைத் தரக்கூடிய பெண்களின் அணிகலன்களான பொட்டு,மிஞ்சி, மஞ்சள் போன்றவற்றை நாம் தவற விட்டுவிட்டோம் என்பது இக்கால யுவதிகளுக்குப் போய்ச்சேர்ந்தால் நலமே! மற்றபடி 'மறுபிறப்பு' என்ற ஒன்றில் நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ '"நாம் மோட்ச நிலையை அடையும் வரைத் தொடர்ந்து பிறந்து கொண்டே இருப்போம்" எனும் விஷயம் கொஞ்சம் ஆறுதல் தருகிறது. இந்த நேரத்தில் ஏனோ " இரண்டாம் வாய்ப்புக்களின் இறைவன் நம் இறைவன்" என்ற தந்தையின் சொற்றொடரும் கூடவே ஞாபகத்திற்கு வருகிறது. கூட்டிக்கழித்துப் பார்த்தால் நல்லது எங்கிருப்பினும் அதைப்பற்றிக் கொள்வது உடலுக்கும், மனதுக்கும் நல்லது என்பதைச் சொல்ல வரும் இன்றையப் பதிவைத் தந்த தந்தையை எத்தனை பாராட்டினாலும் தகும்.அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete